திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தூங்கா நகரம் மதுரை


தூங்கா நகரம் மதுரை மக்களின் வாழ்க்கைமுறை.
-முனைவர்.  சி. சேதுராமன்.
ஒவ்வொரு நாளும் மக்கள் துயில் எழுந்ததிலிருந்து மீண்டும் படுக்கைக்குச் செல்வது வரையிலும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்ச்சிகளும் அவரவர் வாழும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற் போல் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுவன. தமிழகத்தில் மதுரையைதூங்காநகரம் என்று சிறப்பித்துக் கூறுவர். அந்த அளவுக்கு மதுரை நகரம் இரவில் கூட பல தொழில்களுடன் விழித்துக் கொண்டிருக்கும். தூங்கா நகரமாகிய மதுரை மிகப் பழமை வாய்ந்த நகரமாகவும் திகழ்கின்றது. செம்மொழி இலக்கியங்களில் அதிகம் இடம் பெறுவதும் மதுரை மாநகரமே என்பது இங்கு நோக்கத்தக்கது. பழங்காலத்தில் மதுரை நகர மக்களின் வாழ்க்கை முறை வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது.
ஐவகை நிலவருணனை
தொல்காப்பியர்,
‘‘நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே’’  (தொல்., அகத்திணையியல், நூற்பா, 2)
- என நிலங்களை ஐவகைப்படுத்துவர். ‘‘குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்பனவாம். எற்றுக்கு? இந்நூலகத்து அகமும் புறமும் ஆகிய உரிப்பொருள் கூறுகின்றாராதலான் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என அமையும்’’ (தொல்., அகத்திணையியல், இளம்பூரணர் உரை, ப.,8)என்றார்.
மருதவளம்
மதுரைக்காஞ்சியில் முதற்பகுதியாக மருதநில வளமானது,
‘‘அதனால் குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,
...................................................................................
மருதம் சான்ற தண்பனை சுற்றி, ஒருசார்’’ (மதுரைக்கா - 238 -270)
- என்று எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. குணகடலில் நீர் முகந்து குடகடலின் அருகிலிருக்கும் மலைமீது மேகங்கள் இடித்து ஒலிக்கும் ஓசைகேட்டுக் களிறுகள் அஞ்சி நடுங்கும்; பெருமழை பெய்து பள்ளங்கள் நிறைந்து மேடுகள் மறையும்; வானம் கருநிறம் கொண்டு பொழுது பகலா இரவா என அறியாத அளவு மயக்கநிலை உண்டாக்கும்.
ஆறுகளில் நீர்நிரம்பி அவை கடல் நோக்கிப்பாய நிரம்பி வழியும் நீரின் மிகையால் குளங்களும் ஏரிகளும் நிறையும். கழனிகளில் பயிர்கள் செழிப்புடன் வளரும்; கதிர்களின் உயரம் களிறுகளை மறைக்கும் மடுக்களில் தாமரை, நெய்தல் பொய்கைகளில் நீலம், ஆம்பல் மலர்கள் பூத்து மணக்கும். அங்கே நீந்தித் திரியும் மீன்களை வலைஞர் பிடித்துக் கவித்துக் களிப்பால் ஓசை எழுப்புவர் கரும்பு ஆலைகளில் மிகுஓசை எழும்; களைபறிப்பார் ஓசையும் நிறைந்திருக்கும். திருப்பரங்குன்றில் மக்கள் கொண்டாடும் விழா ஓசை மிகும். மகளிர் கணவருடன் மாலை பூண்டு நீராடும் ஓசை அங்கே ஒலிக்கும். இத்தகு ஓசைகளோடு பாணர்கள் சேரியில் ஆடிப்பாடும் ஓசையும் இணைந்து பாண்டிய நாட்டு மருதநிலம் சிறந்து விளங்கும் வளம் கொழிக்கும் என்கிறார் மாங்குடிமருதனார்.
பட்டினப் பாலையில் இடம் பெற்றுள்ள,
‘‘விளைவு அறா வியன் கழனி,
களர்க் கரும்பின் கமழ் ஆலைத்
தீத்தெறுவின், கவின்வாடி,
நீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்
காய்ச் செந்நெல் கதிர் அருந்தி
மோட்டு எருமை முழுக் குழவி
கூட்டு நிழல், துயில் வதியும்’’ (பட்டினப் பாலை, 8-15)
என்னும் வரிகள் ஒப்புநோக்கத்தக்கது.
முல்லை, குறிஞ்சி நிலக்காட்சிகள்
மருதநிலக் காட்சிகளையடுத்து முல்லை, குறிஞ்சி நிலங்களின் தன்மை சுட்டப்படுகிறது. முல்லை நில மக்கள் சிறுதினை கொய்கின்றனர். எள்ளின் காய் முற்றி உள்ளது, வரகு காய்ந்து குழிகளில் மணிகள் விழுந்துள்ளன. சிறிய தலையுடை ஈக்கும் அழகு கொண்ட மானும் பிணைமானும் ஓடித் துள்ளித் திரிகின்றன. கொன்றை மரங்களின் பொன்னிறப் பூக்கள் பாறைகள் மீது உதிர்ந்து அழகு சேர்த்தன. வயல்களில் முசுண்டைப் பூக்களும் முல்லைப் பூக்களும் சிதறிக் கிடக்கும் தோற்றம் வெறியாடும் களம்போல் தோன்றியது. தாழ்ந்த இடங்களில் நெய்தலும் தொய்யிலும் மலர்களைச் சொரிந்து அழகு சேர்க்கும். இத்தகைய அழகிய காட்சிகளை வழங்குவது பாண்டிய நாட்டு முல்லைநிலம்.
குறிஞ்சி நிலத்தில் அகிலும் சந்தனமும் வெட்டப்படும்; பின் அவை மேட்டு நிலத்தில் விதைக்கப்படும் தோனா எனப்படும் நெல்லும் வெண்சிறுகடுகும், வெண்ணெல்லும் விளைந்து நிறையும் மலைச்சாரில், கிளியை ஓட்டும் ஓலியும் பயிரை மேயும் பசுக்களை விரட்டும் ஓசையும் பொய்க்குழியில் விழுந்த பன்றியைக் குறவர் கொல்லும் ஆராவாரமும், மகளிர் வேங்கை மலரைக் கொய்யும் போது புலி புலிஎனக் கத்தும் ஒலியும், பன்றியைக் கொல்லும் புலியின் உறுமல் ஒலியும், அருவி விழும் ஒலியும் எதிரொலிக்கும். இத்தகு செய்தியினை,
‘‘ சிறுதினை கொய்ய, கவ்வை கறுப்பு,
கருங்கால் வரகின் இருங்குரல் புலர,
................... ... .........
................. ... .....
அருங்கடி மாமலை தழீஇ, ஒருசார் - ( மதுரைக்கா - 271 - 301 )
- என்னும் பாடல் வரிகள் தெளிவுறுத்துகின்றன.
பாலை, நெய்தல் நிலங்களின் தோற்றம்
பாலை நிலத்தில் மூங்கில்கள் உராய உண்டாகும் தீ புதர்களை அழிக்கும். தினைப்புனங்களில் வெம்மையால் விளைவு இல்லை. எனவே, கிளிகளை ஓட்டும் தட்டைக் கருவிக்கும் வேலை இல்லை. யானைகளுக்கும் உணவில்லை. என்ன செய்யும்? இடம் பெயர்ந்து மேய்ச்சல் இடங்களை நாடிச் செல்லும். அருவிகள் வீழ்வதில்லை. அழகு குலைந்த மலை நிலத்தில் ஊகம்புல் உலர்ந்து காணப்படும். இத்தகைய பாலையில் சூறாவளிக் காற்று வீசி கடல் போல் ஒலிக்கும். நிழலே இல்லாத அக்காடகத்தே வேய்ந்த குடிசைகளில் தோல்படுக்கையும் தழைக்கண்ணியும் உடைய இளையோர் இருப்பர். அவர்கள் வில்லுடை கையராய் வழிகளைக் காத்து நிற்பர்.
 ‘‘பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறதர்ப் பட்ட ஆறுமயங் கருஞ்சுரம்’’ (கலி. பாலை.,4,1-3)
-என்றும்,
‘‘மரையா மரல் கவர மாரி வறப்ப
வரையோங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்
கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்’’ (கலி. பாலை.,5,1-6)
-என்றும் கலித்தொகைப் பாடல்கள் கூறும் வரிகள் மதுரைக்காஞ்சி கூறும் பாலை நிலக்காட்சிகளுடன் ஒப்புநோக்கற்பாலது.
நெய்தலங் கரையைச் சார்ந்த ஊர்களில் வணிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். அங்கே யவன வணிகர் குதிரைகள் வைத்திருப்பர். பாண்டிய நாட்டு வணிகர்கள் அணிகலன்கள் தந்து குதிரைகளை வாங்குவர். சிறந்த கடல் முத்து, சங்கு, பல்வகைக் கூலப் பொருள்கள், வெள்ளை உப்பு, புளி, மீன் வற்றல்கள் ஆகிய இவற்றை ஏற்றிய படகுகள் நெய்தல் கடற்கரையில் நிறைந்து நிற்கும். நெய்தல் வளங்களாவன இவ்வகையான் நிறைந்திருக்கும்.
இத்தகு காட்சியினை ஆசிரியர்,
‘‘முழங்கு கடல்தந்த விளங்கு கதிர் முத்தம்,
அரம்போழ்ந்து அறுத்த கண்நேர் இலங்குவளை,
பரதர் தந்த பல்வேறு கூலம்,
........................
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப,
நெய்தல் சான்ற வளம்பல பயின்று, ஆங்கு’’ (மதுரைக்கா : 315 - 325)
- என்று புலப்படுத்துகிறார்.
தெய்வ வழிபாடு
தெய்வக் கோட்பாடு தொன்றுதொட்டு மக்களிடையே வேரூன்றி வந்துள்ள ஒரு பண்பாகும். தங்களைச் சுற்றிலும் காணும் இயற்கைப் பொருள்களில் எண்ணற்ற தெய்வங்கள் உறைவதாக நம்பினர். இத்தெய்வங்கள் தீங்கிழைப்போரை வருத்தும் இயல்பினர் என்றும் கருதினர்.
தொல்காப்பியர்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்
எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
- என, நிலப்பாகுபாடுகளுக்குரிய தெய்வங்கள் பற்றிக் கூறுகின்றார்.
மதுரைக்காஞ்சியில்,
‘‘நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக,
மாசற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர்
வாடாப் பூவின் அமையா நாட்டத்து
நாற்ற உணவின், உருகெழு பெரியோர்’’ (மதுரைக்கா 453 - 458)
- என்ற வரிகளுள், ஐம்பெரும் பூதங்களுடன் படைத்த சிவபெருமான் முதல் கொண்டு ஏனைய தெய்வங்களுக்கும் மாலை நேரத்தில் உயர்ந்த பரிசுகளைப் படைத்தனர் மக்கள் இசைக்கருவிகளும் ஒலித்தன மதுரையில் என தெய்வ வழிபாடு பற்றி மாங்குடி மருதனார் படைத்துள்ளார்.
நாளங்காடி காட்சிகள்
அழகிய வட்டத்தட்டுகளில் வண்ண மலர்களைக் குவித்து விற்றனர். அந்தத் தட்டு வடிவாலும் அழகாலும் தேன்குழல் போன்றும், வீரர் முழங்கும் முழவின் கண் போன்றும் காணப்பட்டது. அங்கே வண்ணப் பூமாலை விற்பவரும், வாசனைச் சுண்ணம் விற்பவரும், பாக்குடன் வெற்றிலை விற்பவரும் நிரம்பி இருந்தனர். படைகளின் இயக்கத்தால் புழுதி பரவ அதற்கு அஞ்சி மாடங்களின் குளிர்நிழலில் விலைஞர் தங்கியிருந்தனர். என்பதை,
‘‘தீம்புழல் வல்சிக் கழற்கால் மழவர்
பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப,
......... ......... ......... .........
கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக’’ (மதுரைக்கா : 395-423)
- என்ற வரிகள் தெளிவுறுத்துகின்றன.
‘‘தமிழகத்திலிருந்து தேக்கு, அகில், சந்தன மரங்கள், தேங்காய், நெய், வாழை, அரிசி, சோளம், கம்பு, ஏலம், இலவங்கம், வெல்லப்பாகு, வெற்றிலை, மூலிகை, மருந்து வகைகள் முதலியவை ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றுக்குப் பதிலாகப் பொன்,வெள்ளி நாணயங்கள், மதுவகைகள், பவழம், ஈயம், எந்திரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றைத் தமிழ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர். பிளைநி, பெரிப்புலூஸ் ஆகிய மேனாட்டு யாத்திரிகர்களின் குறிப்புகள் இவற்றைத் தெளிவுறுத்துகின்றன’’ என்பர்.
மேலும், வாணிபம் வெளிநாட்டினருடன் தமிழ் நாட்டினர் கொண்டிருந்த தொடர்பை,
‘‘சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’’ (அகம். பா.எ.,149,8-10)
என்றும்,
‘‘மொழிபல பெருகிய பழிதீர் தேயத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்’’ (பட்டினப்பாலை, 216-218)
என்றும் கூறுவதிலிருந்து உள்நாட்டிலன்றி வெளிநாட்டிலிருந்தும் வந்து வாணிபம் செய்தமை நாம் நன்கறியக் கிடக்கின்றன.
சமுதாய வாழ்க்கை
சங்ககால சமுதாய வாழ்க்கை பற்றிக் கூறும் வரலாற்றறிஞர்கள் அது ஒரு இனக்குழு அமைப்பு என்றும் சாதிஅதன் அடிப்படை அம்சம் என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கூற்றைச் சங்க இலக்கியங்கள் உறுதி செய்கின்றன. சங்க காலத்தில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வருணங்கள் (சாதி) இருந்தன மற்றும் சில சாதிகளும் வழங்கப்பட்டன.
‘‘வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே’’(புறம்.,183,8-10)
- என்ற புறப்பாடற் பகுதியால் நால்வகைச் சாதிகள் இருந்தன என்பதும் அவற்றுள் மேற்குலம் கீழ்க்குலம் என்ற வேற்றுமை பாராட்டப்பட்டது என்றும் அறியலாம். மதுரைக் காஞ்சியிலும் நால்வகை வருணத்தாரும் இன்ன பிற இனத்தவரும் பின்வரும் வரிகளால் குறிக்கப்பட்டுள்ளனர்.
‘‘நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து,
ஆவுதி மண்ணி, அவிர்துகில் முடித்து,
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல,
.................. ....................... ...........................
பெருநாள் இருக்கை, விழுமியோர் குழீஇ,
விழைவுகொள் கம்பலை கடுப்ப -’’(மதுரைக்கா - 493 - 526)
மார்பில் சந்தனம் பூசி யாகம் செய்யும் அந்தணர் விண்ணுலகு பெற வழி கூறுவர். அதுபோல மன்னர்க்கு நல்லது கெட்டது ஆய்ந்து அன்பும் அறமும் காத்து பழி தவிர்த்து புகழ் சேர்க்கும் சான்றோர் காவிதி மக்கள் எனப்படுவர். அவர்கள் மதுரையில் வீற்றிருந்தனர். வணிகர்கள் உயர்ந்த மாளிகைகளில் வாழ்ந்து இல்லறத்தை இனிது இயற்றினர். அவர்கள் பிறநாட்டார் கொணர்ந்து கொடுத்த மணி, முத்து, பொன் முதலியன பெற்று, மலை படுபொருள்களையும் நிலம்படு பொருள்களையும் மாற்றாகத் தருவர். மழைவளம் பெருக்கும் பழையனின் மோகூரில் அவை யிருந்த நான்மொழிக் கோசரைப் போன்ற சான்றோர் மதுரையில் இருந்தனர். சங்கறுத்து வளை செய்வோர், மணிகளில் துளையிடுவோர், பொற்றொழில் செய்வோர் பொன் வணிகம் செய்வோர், ஆடைவிற்போர், செம்பு வாங்குவோர், பூவும் சாந்தும் விற்போர், சித்திரம் வரைவோர், பல அளவுள்ள புடவைகளை நெய்வோர் நால்வேறு தெருவிலும் கால்கடுக்க நின்று விற்கும் ஏனைய வணிகரும் எழுப்பும் பேரொலி கடல் நாடன் பேரவையில் விழுமிய சான்றோர் வாதிடும் ஒலியை ஒத்து அமைந்தது என்கிறார் மாங்குடிமருதனார்.
ஆசிரியரின் இக்கூற்று,
‘‘ நால்வேறு வருணப் பால்வேறு காட்டி ’’ (மணிமேகலை, காதை, 56-வது வரி)
- எனும் மணிமேகலை கூறும் வருண வகைப்பாட்டினரோடு ஒப்பு நோக்குதற்குரியதாகும்.
குடும்ப வாழ்க்கை
‘‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு’’ (திருக்குறள், கு.எ.,60)
- என்ற பொய்யில் புலவர் கூற்றுக்கு விளக்கமாய் மதுரைக்காஞ்சி கூறும் மதுரை மக்கள் வாழ்க்கை நடத்தியுள்ளனர். மாலைக் காலத்தில் ஞாயிறு மறைந்து நிலவு தோன்றும் வேளையில், மங்கல மகளிர் வீட்டில் விளக்கேற்றியுள்ளனர் அணிகலன்களும் அணிந்து மகிழ்ந்துள்ளனர்.
‘‘ஒண்சுடர் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற’’ (405)
என்கிறது ஐங்குறுநூறு.
வாசனைப்பொருட்கள் பயன்பாடு
ஆடவர் மார்பிடத்தே சந்தனம் பூசுதலும், மகளிர் கத்தூரி முதலியவற்றால் அரைக்கப் பெற்ற வாசனைக் குழம்பை மயிருக்கு அணிதலும் வழக்கமாயிருந்துள்ளது. இதனை,
‘‘நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப, நறுஞ்சாந்து மறுக,
மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப’’ (மதுரைக்கா:552-554)
- என்ற வரிகளால் நன்கு அறியலாம்.
இதேபோன்று நெடுநல்வாடையில்,
‘‘தென்புன மருங்கில் சாந்தொடு துறப்ப
கூந்தல், மகளிர் கோதை புனையார்,
தன்நறுந்தகர முளரி நெருப்பு அமைத்து
இருங்காழ் அகிலொடு வெள்அயிரி புகைப்ப’’ (வரிகள்:52-55)
- என்ற வரிகளாலும் மக்கள் வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.
பரத்தையரது வாழ்க்கை
பரத்தையரைப் பொருட்பெண்டிர் எனச் சங்க இலக்கியங்களெல்லாம் கூறுகின்றன. சிலப்பதிகாரம் பரத்தையர் ஒழுக்கம் பற்றி விரிவாகப் பேசுகின்றது. புறநானூற்றில்,
‘‘தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தன் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே’’ (புறம், 73)
- என்று சோழன் நலங்கிள்ளி கூறுவதன் வழி பரத்தையர் பற்றி அறியமுடிகிறது.
‘‘அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்’’ (குறள் எண்,911)
என்றும்,
‘‘பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்’’ (குறள் எண், 913)
என்றும் பரத்தையர் பற்றி வள்ளுவர் வரைவு கொடுத்துள்ளார். மதுரையிலும் பரத்தையர் கண்கவரும் கோலம் கொண்டு நீர்த்துறைகளில் யாழும் முழவும் இசைக்க நடனமாடுவர் வாசனை மிகும் மலர்களைத் தொடுத்து மாலைகளாக அணிவர் கொண்டைகளில் சூடுவர். அவர் அழகை விரும்பி வந்த இளையோரில் அறிந்தவரும் உண்டு; அறியாதவரும் உண்டு. அவர்களிடம் மாயப்பொய்பல கூறி முகம் மலர தம்மார்பகம்; இளையோரின் சந்தனம்பூசிய மார்பை வடுவாக்கும்படி முயங்குவர். செல்வமிக்க இளையோரின் செல்வத்தைப் பரத்தையர் கொள்வர். இதனை,
‘‘நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டினம் மான புணர்ந்தோர்’’ (மதுரைக்கா : 574-575)
- என உவமை கொண்டு விளங்குகின்றார் மதுரைக்காஞ்சி ஆசிரியர். கொழுங்குடிச் செல்வர் இன்பம் விரும்பி பரத்தையரை நாட இருவரும் இணைந்து மகிழ்ந்து வாழ்வர் வாசமலர்கள் பூண்ட இப்பெண்கள், நடக்க தெருவெல்லாம் மணம் வீசும்; வளையொலி கேட்க கைவீசி நடப்பர் பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகளைப் போல இந்தப் பரத்தை மகளிர் செல்வமிக்க இளையோர் வாழும் மனைகளை நாடிச் செல்வர்.
தமிழகத்தில் மிகப்பழங்காலந்தொட்டே இன்றளவும் நிகழ்ந்து வருவனவும், சமுதாயத்தீய ஒழுக்கமன்று என்பனவுமாகிய கருத்துப்பட தொல்காப்பியர் கூறும்,
‘‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே;
நிலத்திரி பன்றஃ தென்மனார் புலவர்’’  (தொல்., பொருள், பொருளியல், நூற்பா, 220)
- என்ற பொருளியல் நூற்பாவால் பரத்தையர் ஒழுக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை அறியலாம்.
முன்னோர் வழிநடத்தல்
பெரியோர்கள், கல்வி கேள்விகளில் சிறந்திருந்தனர் அருள் நிறைந்த கொள்கையராய், அன்புடை உள்ளத்தினராய் வாழ்ந்திருந்தனர். செய்யத் தகுவன உரைத்தும், தீயன கடிந்தும் உலகம் வாழ வழிகாட்டினர். மதுரையிலும் அத்தகு சான்றோர் வாழ்ந்தனர். அவர்தம் வழிநின்று மன்னர்கள் செங்கோலாட்சி நடத்தினர் என்பதை,
‘‘ பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது,
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழிச் சிறக்க, நின்வலம்படு கொற்றம் ’’ (மதுரைக்கா : 192-194)
-என்ற பாடல்வரிகள் கொண்டு அறியலாம். மேலும்,
‘‘நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றான்’’ (நற்றிணை : 233/7-9)
- என்ற நற்றிணைப்பாடல் வரிகளும், பதிற்றுப்பத்துள்,
‘‘வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்’’(பதிற்றுப்பத்து:70/20-22)
என, இடம் பெறும் வரிகளும் செயற்கரிய செய்கை உடையோராம் பெரியோர் பற்றிய சான்றினைத் தெளிவு கொள்ளச் செய்கின்றன. வள்ளுவரும்,
‘‘ அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்’’ (குறள், எண்,443)
- எனக் கூறி, பெரியாரை (சான்றோரைத்) துணை கொள்ளச் சொல்கிறார்.
திருவிழாக் காட்சிகள் காணவரும் மகளிர்
விழாவும் விருந்தும் எங்கும் சிறப்பாகப் போற்றப்பட்டன. கருமேகம் மிகுந்து பெருமழை பொழிகின்றது; ஆறுகளில் மிகு வெள்ளம் நிறைந்து புரண்டோடி கடலில் கலக்கிறது. வெள்ளத்தின் அளவு மிகுதிதான்; எனினும் கரையை மீறிக் கடல் நீர் வராமல் நிற்கின்றது. இதுபோல மதுரை அங்காடிகளில் பொருள்கள் கொடுக்கக் கொடுக்கக் குறையாது - பொருள்களைப் பெறப்பெற மிகாது. அங்காடித் தெருவில் எழும் ஒலி மதுரை விழாக்காலத்தில் எழும் ஆரவாரம் போல் இருந்தது. வளங்கெழு செல்வ மாந்தர் பூவாடை அணிந்து வாளோடு அழகாகத் தோன்றினர் உடலின் மேலே அழகு மிகுந்த மேலாடை, கால்களில் வீரக்கழல், மார்பில் வேம்பு மாலையும் செங்கழுநீர் மாலையும் அணிந்து காவலர் சூழ்ந்துவர தேரில் வேகமாகச் சென்றனர். பிறர்க்கு மழைபோல் வழங்கும் கொடைத் தன்மையும் அவர்களுக்கு உண்டு. மகளிர் நிலா முற்றத்திலிருந்து விழாக்காண கீழ் இறங்கினர் அவர்கள் பொற்சிலம்பணிந்து வானுறை தெய்வங்களெனத் தோன்றினர். அவர்கள் விழாக்கான தெருவில் வந்தபோது வாசனை தெருவெல்லாம் நிறைந்தது. இத்தகு காட்சியை,
‘‘நிறைநிலை மாடத்து அரமியம் தோறும்,
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய’’ (மதுரைக்கா : 451-452)
- என்ற உவமையால் ஆசிரியர் விளக்குகின்றார்.
முதல்சாம நிகழ்ச்சிகள்
அரக்கரை அழித்துப் பொன்மாலை அணிந்த திருமால் தோன்றிச் சிறப்பித்த நாள் ஓணமாகிய மங்கல நாள். அந்நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. சேரி மறவர் பூ அணிந்து விருப்புடன் கள் தெளிவைக் குடிப்பர் குடிவெறி ஏறஏற மகிழ்ச்சியுடன் தெருவில் அலைந்து திரிவார்கள். நற்குடி மகளிர் தம்கணவர் மகிழ புதல்வரைப் பெறுவர். இளஞ்சூல் கொண்ட மகளிர் மயில் போல் நடந்து சென்று தெய்வத்தை வணங்குவர் வெறியாடும் சாலினி பூசைப் பொருள்களுடன் சென்று கைதொழுது வணங்க யாழும் முழவும் இசைக்கப்படும். குறிஞ்சிமலர் சூடி முருகனை நினைந்து சிலர் ஆடுவர் இசைக்கருவிகள் முழங்கும். மகளிர் கைகோர்த்து குரவைக் கூத்து ஆடுவர் சேரிதோறும் பாட்டும் கூத்தும் என ஆரவாரம் மிகும். இவை நன்னனின் பிறந்தநாள் விழாவில் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் போல் காணப்படும். இவ்வாறு முதல்சாமம் கழிந்ததாக மதுரைக்காஞ்சி ஆசிரியர் கூறுகிறார்.

இரண்டாம், மூன்றாம் சாம நிகழ்வுகள்
சங்கொலி அடங்கியது. பண்டங்களைக் கூவி விற்று மகளிர் கடைகளை மூடிவிட்டுத் துயில்வர். அப்பவணிகர் அடையும் அப்பங்களும் அருகே கிடக்க ஆழ்ந்த உறக்கத்தில் திளைப்பர் விழாநாளில் கூத்து முடித்துவிட்டு வந்து படுத்துத் தூங்குவர். விழித்திருப்பவை பேயும் மோகினியும்தான், அவை பின்னிரவு நேரத்தில் சுழன்று திரியும், எல்லாரும் உறங்கிக் கிடக்க, கள்வர் கரியமேனியராய்ச் செருப்புடன் நடந்தனர். இடுப்பில் உடைவாள் செருகி மேலே ஆடையைக் கச்சாகக் கட்டியிருப்பர். மதிலேறும் நூல்ஏணி இடுப்பில் இருக்கும். தொழிலுக்கு வேண்டிய பிற கருவிகளையும் கைக்கொண்டு களவாடுவதற்கு ஏற்ற இடம் தேடி அலைந்தனர் கள்வர். ஊர்க்காவலரும் விழித்திருந்தனர். அவர் கண்கள் உறங்காது விளங்கின. கள்வர் செல்லும் இடங்களை விழிப்பாகப் பாதுகாத்தனர். காவலர் அஞ்சாத நெஞ்சுடன் அம்பெய்யும் திறன் கொண்டவர் மழைபெய்யும் போது காவலில் தவறார் நள்ளிரவிலும் காவலில் சற்றும் குன்றாமல் அங்கும் இங்கும் திரிந்து காத்ததால் மக்கள் இரண்டாம் சாமங்களிலும் கவலையற்றுத் தூங்கினர்’’ (மதுரைக்கா : 621 - 653) என இரண்டாம் மூன்றாம் சாம நிகழ்வுகளை ஆசிரியர் படைத்துக் காட்டுகிறார்.
விடியற்காலை - மதுரைமாநகர்
ஒவ்வொரு நாளும் மக்கள் துயிலெழுந்ததிலிருந்து மீண்டும் படுக்கைக்குச் செல்வது வரையில் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்ச்சிகளும் அவரவர் வாழும் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்பெற்றன. சூரியன் உதிப்பதற்கு சில நாழிகளுக்கு முன்பாகவே பெரும்பான்மை மக்களும் துயில் நீத்து எழுந்தனர். தூக்கத்தினின்றும் விழிப்பூட்டுவதற்குச் சேவலின் கூவலும், பிற பறவைகளின் ஒலியும் துணை செய்ததை,
‘‘ஒண்பொறிச் சேவல் எழுப்ப ஏற்றெழுந்து’’(38)
- என்ற புறநானூற்று வரியானது நமக்கு அறிவிக்கிறது. விடியற் காலத்தில் கீழ்த்திசையில் தோன்றும் விடிவெள்ளியும், ஒலியும் துணை செய்தன. விடியற்பொழுது நிகழ்வனவாகக் கூறும் மாங்குடி மருதனார் பின்வருமாறு உவமை கூறி விளக்குகின்றார்.
‘‘போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாது உண்தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட’’ (மதுரைக்கா : 654 - 656)
பூக்களின் தேன் உண்ணும் வண்டுகள் பாடுவது போல அந்தணர் வேதம் ஓதினர் யாழ்ப்பாணர் யாழின் நரம்பை வருடி மருதப்பண் இசைத்தனர் பாகர் களிறுகளுக்குக் கவளம் தந்து உண்பித்தனர் குதிரைகள் புல்லைத் தின்னும், வணிகர் தம் கடைகளைச் சுத்தம் செய்வர். கள் விற்பவர் விலைகூவி விற்றனர். கணவரின் அணைப்பில் துயின்ற இல்லற மகளிர் மெல்ல துயில் எழுவர். அம்மகளிர் தம் சிலம்பு ஒலிக்க வீட்டு வேலைகள் செய்வதற்காகக் கதவைத் திறக்கும் ஒலி கேட்கும். மக்களன்றி மாக்களும் விடியல் பொழுது உணர்வதனை,
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்பப்,
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணிமயில் அகவப்,
பிடிபுணர் பெருங்களிறு முழங்க, முழுவலிக்
கூட்டு உறைவயமாப் புலியொடு குழும’’ (மதுரைக்கா : 672 - 677)
- எனும் வரிகளில் ஆசிரியர் குறித்துள்ளார். மாணிழை மகளிர் நறவு உண்ட மயக்கத்தில் மகிழ்ந்தனர். கணவருடன் ஊடிக் கோபத்தால் அணிகளை வீசி எறிய, முத்துகளும் மாணிக்கமும் முற்றத்தில் கிடந்தன.பின்னர் காற்றால் புறம் தள்ளப்பட்டன. இப்படி இரவு முடிவுறும் வைகறையானது மதுரைக்காஞ்சியின்வழி மதுரை நகரே வந்துள்ளது. இதே போன்று,
‘‘வெள்ளியும் இருளிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோன் றினவே;
பொய்கையும் போதுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கிற்கு, ஒளியே; பாடு எழுந்து
இருங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
எஃகிருள் அகற்றும்... (புறம்,397)
- என்ற புறநானூற்றுப் பாடல் வரியும் விடியற்கால நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்கின்றது. இவ்வாறாக மதுரை மக்கள் வாழ்க்கையானது, ஐவகை நிலப்பாகுபாடும் அதன் உரிப்பொருளும் பிழையாது நாளும் நன்முறையே நடந்ததென்பதை மதுரைக்காஞ்சி வழி மாங்குடி மருதனார் நன்கு உணர்த்துகின்றார். மதுரைக்காஞ்சி மதுரை மாநகர வரலாற்றுத் தரவிற்கு முறையான நூல் எனில் பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக