திங்கள், 15 ஆகஸ்ட், 2011

செம்மொழி


செம்மொழிகளில் தமிழின் தொன்மையும் சங்க இலக்கியங்களில் வாழ்வியல் நெறிகளும்
-கோ. புண்ணியமூர்த்தி.
http://www.muthukamalam.com/picture/oldman3.JPG
முன்னுரை
முதலாவதாக மேற்குறிப்பிட்ட தலைப்பை இருபெரும் பிரிவுகளாக பிரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளன, அவை
1. செம்மொழிகளில் தமிழின் தொன்மை
2.
சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள்
என்பதே அவ்விரு பெரும் பிரிவுகள். இதில் எண் ஒன்றில் குறிப்பிட்டுள்ள தலைப்பான செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்றத் தலைப்பை மேலும் இரு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளன. அவை செம்மொழிகளில் தமிழின் தொன்மை என்பதில் செம்மொழிகளில்என்றச் சொல்லின் பொருண்மை தமிழுடன் பிற மொழிகளும் செம்மொழிகளாக கருதப்படுகின்றன என்பதேயாகும். தமிழைப் போன்றே உலக மொழிகளில் செம்மொழிகள் என்ற ஒரு தனிப்பிரிவு உள்ளன என்பதை தலைப்பே உணர்த்துவதாக உள்ளன. அப்படியாயின் தமிழுக்கு இணையாக இன்னும் பிற செம்மொழிகளின் தொன்மையை தமிழுடன் ஒப்பு நோக்க வேண்டியதாக உள்ளன. மேலும் அவற்றில் எவையெவை செம்மொழித் தர வரிசையில் இடம் பெறுகின்றன. அத்துடன் அவற்றின் தொன்மையையும் தமிழின் தொன்மையையும் ஒப்பாய்வு செய்ய வேண்டியுள்ளன. ஒப்பியல் நோக்கு வாயிலாகத்தான் ஒரு மொழியின் செம்மொழித் தொன்மை குறித்தான முடிவிற்கு வரஇயலும். உலகச் செம்மொழிகளில் எந்தெந்த மொழிகள் செம்மொழிகள், அவ்வரிசையில் தமிழிற்கான இடம் எவ்விடத்தில் இடம் பெற்றுள்ளன என்பதை நோக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். இவற்றில் விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி பொது நோக்குடன் நிறைகள் மற்றும் குறைகளையும் சீர்தூக்கி ஆய்வது ஒரு உண்மையான ஆய்வின் நோக்கமாக இருக்குமென்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் பரந்த நோக்கமாகும்.
மேலும் தலைப்பின் இரண்டாம் பகுதியான சங்க இலக்கியங்களின் வாழ்வியல் நெறிகள் (Ethics in Sangam Literature) என்றப் பொருண்மையில் சங்க இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் அறநெறிகள்’, ‘அறவியல்’, ‘நன்னெறிக்கோட்பாடுகள்’, ‘ஒழுக்கவியல்’, ‘நீதிநெறி’, ‘வாழ்வியல் ஒழுகலாறுகள்போன்ற பல்வேறு பொருண்மைகளை தாங்கி நிற்கின்றன.
1. உலகச் செம்மொழிகள் வரிசையில் தமிழின் தொன்மை
அ. செம்மொழி என்றால் என்ன?
ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம்பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில் வருகிறது. முதலில் அடையாளம் காணப்படுவது செம்மொழி இலக்கியம். அவ்விலக்கியத்தைக் கொண்ட மொழி செம்மொழி எனப்படுகிறது.
ஆ. செம்மொழிக்கான பிற அடிப்படைத் தகுதிக் கூறுகள் யாவை?
ஒரு மொழி செம்மொழித் தன்மை கொண்டது என்பது அம்மொழியின் 1. தொன்மை (Antiquity) 2. ஒத்திசைவு (Harmony) 3. தெளிவு (Clarity) 4. தன்னடக்கம் (Restraint) 5. கண்ணியம் (Serenity) 6. இலட்சியம் (Idealism) 7. பொதுமை (Universality) 8. பகுத்தறிவு (Reason) 9. ஒழுங்கு (Order) 10. கண்ணோட்டம் (Humanism) போன்ற கூறுபாடுகளின் தொகுப்பாக கருதப்படுகிறது. அதோடல்லாமல் ஒரு மொழியின் செம்மொழித் தன்மையை அம்மொழியில் இடம்பெற்றுள்ள இருபெரும் சிறப்புகள் சுட்டுகின்றன. அவை ஒன்று அம்மொழியில் இடம்பெற்றுள்ள கருத்துப்பொருட்கள்’ (Incorporeal objects) அதாவது இலக்கியப் படைப்புகள், இரண்டாவது காட்சிப்பொருட்கள்’ (Corporeal objects). அவை பண்டையக் கலைப்படைப்புகள் என்பவையாகும். ஒரு மொழியின் செம்மொழிச் சிறப்புகளில் தலையாய சிறப்பிற்கு சான்றாக இருப்பவை கலைப்படைப்புகளேஅவற்றுள் குறிப்பாக பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலையின் பங்கு இன்றியமையாததாகும். இவ்விரு கலைப்படைப்புகள் எந்தெந்த மொழிப் பகுதிகளில் மிகுதியாக இடம் பெற்றுள்ளனவோ அவையே உலகச் செம்மொழி வரிசையில் முன்னணியில் உள்ளன என்பதே அறிஞர்கள் உலகம் ஏற்றுக் கொண்ட உண்மையாகும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கிரேக்க இலக்கியங்களாகும்.
இ. உலகச் செம்மொழி வரிசையில் இடம்பெற்றுள்ள மொழிகள் எவையெவை அவற்றின் தனிச்சிறப்புகள் யாவை?
இன்றைய உலகச் செம்மொழிகளாக கருதப்படுவன
1. கிரேக்கம் (Greek) 2. இலத்தீன் (Latin) 3. அரேபியம் (Arabic) 4. சீனம் (China) 5. ஹீப்ரு (Hebrew) 6. பாரசீகம் (Persian) 7. சமஸ்கிருதம் (Sanskrit) 8. தமிழ் (Tamil) போன்ற மொழிகளாகும். செம்மொழி (Classical Language) என்ற கருத்துரு (Concept) முதன் முதலாக கருப்பெற்றது ஐரோப்பாவில்தான் Classicus என்ற இலத்தீன் வேர்ச்சொல்லைக் கொண்ட இந்தச் சொல்லாட்சி கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருப்பெற்றது.
ஈ. உலகச் செம்மொழிகள்
1. கிரேக்கம் (Greek)
http://www.muthukamalam.com/picture/Greek.jpg
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்கக் கட்டிடக் கலை
கிரேக்க மொழி நீண்ட பாரம்பரியம் உடையது. மேலைநாட்டு இலக்கிய மரபை உருவாக்கியவர்களே கிரேக்கர்கள்தான். ஹோமர் என்ற மகா கவியின் காப்பியங்களை இலியது (Iliad) மற்றும் ஒடிசி (Odyssey) ஆகியன செவி வழி மரபினவாக கிரேக்க இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்தின. ஏறத்தாழ கி.மு.700 போல அவை வரிவடிவம் பெற்றிருக்க கூடும் என கருதப்படுகிறது. பின்னர் ஹெரடோட்டஸ் (Herodotus) போன்றவரின் வரலாற்றுப்பதிவுகள், டெமாஸ் தனிசின் சொற்பொழிவுகள், பிளேட்டோ (Plato), அரிஸ்ட்டாடில் (Aristotle) ஆகியோரின் தத்துவ நூல்கள் போன்றவை செம்மொழி இலக்கியங்களாக திகழ்ந்தன. கி.மு.500 முதல் கி.மு.320 வரையிலான காலப்பகுதி கிரேக்கத்தின் செம்மொழி இலக்கியக் காலமாகத் கருதப்பட்டது. இலக்கியத்தில் செம்மொழித் தன்மை என்பதே கிரேக்க இலக்கியங்களில் அமைந்த கூறுபாடுகளின் அடிப்படையில் இடம் பெற்றதேயாகும். அத்தோடு அல்லாமல் கிரேக்க செம்மொழி இலக்கியத்தின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அந்நாட்டில் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரமிடுகளின் (Pyramids) பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்பு உலக மக்களின் தனி கவனத்தை ஈர்த்தது என்றால் அது மிகையாகாது, இவை கிரேக்க செம்மொழி இலக்கியத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
2. இலத்தீன் (Latin)
http://www.muthukamalam.com/picture/lathin.jpg
1900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தீன் கட்டிடக் கலை
ஐரோப்பாவைப் பொருத்தவரை அடுத்து இடம்பெறுவது இலத்தீன் இலக்கியம். இலத்தீன் மொழியில் செம்மொழி இலக்கியப் பாரம்பரியம் வர்ஜில் (Vergil) படைத்த இனீட் (Aeneid) என்ற காவியத்திலிருந்து தொடங்குவதாக கொள்ளலாம். அம்மொழியின் மேம்பாட்டிற்கும் வளத்திற்கும் பெரும் பங்களித்தவர்கள் சிறந்த சொற்பொழிவாளரும் தத்துவ அறிஞருமான சிசிரோ (Cicero), சேலஸ்ட் (Sallust), டேசிட்டஸ் (Tacitus), செனகா (Seneca) போன்றோராவர். கி.மு.70 முதல் கி.பி.18 வரையிலான காலப்பகுதி இலத்தீன் இலக்கியத்தின் பொற்காலமாக கருதப்படுகிறது. அத்தோடு அல்லாமல் இலத்தீன் செம்மொழி இலக்கியத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் அந்நாட்டில் 1900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட, உலக அதிசயங்களில் ஒன்றான இத்தாலிய நாட்டு கோலோசியம் (The Roman Colosseum Built in 78 – 80 A.D.) எனப்படும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் இன்றைய உலக அதிசயங்களில் ஒன்றாகும்.
3. அரேபியம் (Arabic)
http://www.muthukamalam.com/picture/Arabian.jpg
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரேபியக் கட்டிடக் கலை
அரேபிய மொழியில் முதன் முதலாக எழுத்துவடிவம் கி.மு.328-இல் அரச குடும்பத்தினரின் ஈமச்சடங்கில் பொறிக்கப்பட்டவை எனக் கருதப்படுகிறது. அரேபிய மொழியில் முதல் செம்மொழி இலக்கியம் குரான்என்றே கூறப்படுகிறது. இது ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்தாகவும், செவி வழி வந்த அரேபியப் பழமொழிகள், கவிதைகள் போன்றவை ஆறாவது நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் பின்னர் அவை ஏழாவது, எட்டாவது நூற்றாண்டுகளில் எழுத்துவடிவம் பெற்றன. பொதுவாகத் தமிழின் பண்டைய இலக்கியத்தோடு ஒப்பிடும்பொழுது அரேபிய இலக்கியங்கள் தொன்மை என்ற பண்பில் மிகவும் பிந்தியவை. இருப்பினும் முகலாயர்களின் பண்டையக் கட்டடக்கலையின் சிறப்புத் தன்மைகள் அரேபிய செம்மொழியை உலகம் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.
4. சீனம் (China)
http://www.muthukamalam.com/picture/China.jpg
3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கட்டிடக் கலை
சீன இலக்கியம் 5000 ஆண்டுப் பாரம்பரியம் மிக்கது. சீன இலக்கிய வரலாற்றில் கி.மு.3000 முதல் கி.மு.600 உள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகிறது. கி.மு.600 முதல் கி.பி.200 வரை தொன்மைக்காலம். சீன இலக்கிய வரலாற்றில் தொடக்கக் காலத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் இருவர் கி.மு.600 போன்ற காலப் பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் (Confucious) மற்றும் லாவுட்சு (Laotse) என்போர் ஆவர். சீன மொழியில் கி.மு. 3000 முதல் கி.மு.600 வரையிலான இலக்கியங்களை கன்ஃபூசியஸ் நான்கு தொகுதிகளாக தொகுத்தார். ஐந்தாவது தொகுதியாகத் தனது படைப்பான தென்றலும் வாடையும் என்ற நூலை வெளியிட்டார். கன்பூசியஸ் தொகுத்த நான்கு தொகுதிகளில் சீன இலக்கியத்திற்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பு பழம்பாடல் தொகுதியே ஆகும். கன்ஃபூசியசுக்கு சற்று முந்தியவராகவும், அவருக்கு சமகாலத்தவராக கருதப்படுவருமான லாவுட்சு என்ற அறிஞர் தாவ் என்ற நெறியைக் கண்டவர்.
மிகப்பெரிய இலக்கியப் பாரம்பரியம் கொண்ட சீன செம்மொழி இலக்கியத்திற்கு உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் (The great wall of China) பங்கு இன்றியமையாத ஒன்றாகும். சீனப் பெருஞ்சுவரின் சிறப்பு வாயிலாக சீன மொழியின் செம்மொழி இலக்கியச் செல்வங்கள் உலகப் பார்வைக்கு வந்தது என்றால் அது மிகையாகாது.
5. ஹீப்ரு (Hebrew)
http://www.muthukamalam.com/picture/hebrue.jpg
3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹீப்ரு கட்டிடக் கலை
ஹீப்ரு மொழிக்கு கி.மு.12-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரையிலான இலக்கியப் பாரம்பரியம் உண்டு. ஹீப்ரு மொழியின் வரலாறு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் செம்மொழிக்காலம் அல்லது விவிலிய காலம் என்பது கி.மு.3-ஆம் நூற்றாண்டு வரை இது முதல் பகுதியாகும். இந்தக் காலப்பகுதியில்தான் பழைய ஏற்பாடு (Old Testament) எழுதப்பட்டது. அடுத்தது யூதர்களின் நீதி நெறி முறைகள், சட்டங்கள் ஆகியவை மிஷனா (Mishna) என்ற பெயரில் ஜூடா-ஹா-நசி (Juda-ha-Nasi) என்பவரால் ஏறத்தாழ கி.பி.200 போன்ற காலப்பகுதியில் தொகுக்கப்பட்டது. இது ஹீப்ரு மொழியில் இரண்டாவது காலம் அதாவது மிஷனா காலம். இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் விளக்கம் எழுதினர். இது கெமாரா (Gemera) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலான டாலமுட் (Talmud) என்ற பதிப்பாக போற்றப்படுகிறது. மூன்றாவதாக கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். விவிலிய காலம் ஹீப்ரு மொழியின் செம்மொழிக் காலமாக கருதப்படுகிறது. ஹீப்ரு மொழியின் செம்மொழித் தொன்மையை உலகறியச் செய்ய 3000 ஆண்டுகளுக்கு முன்பாக அரசர் சாலமன் என்பவரால் ஜெருசலேம் என்ற பகுதியில் எழுப்பிய சாலமன் கோயிலின் (Solomon’s Temple) சிறப்பேயாகும்.
6. பாரசீகம் (Persian)
http://www.muthukamalam.com/picture/Paraseegam.jpg
2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகக் கட்டிடக் கலை
பாரசீகம், ஈரான் நாட்டின் ஆட்சிமொழி அரேபிய வரிவடிவத்தில் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரிகங்கள், அறிவியல் முதலிவற்றிற்குத் தக்க கொடைகள் வழங்கிய நாடுதான் பண்டைய பாரசீகம். இன்று உலகம் முழுவதிலும் வழக்கத்தில் உள்ள எண்கள் உலகிற்கு கொடையாக வழங்கியதும் இம்மொழிதான். அழகுணர்ச்சி, வாழ்வின் இன்பங்கள் மீது நாட்டம், அறிவின் மீது ஈடுபாடு, முதலிய கூறுகளால் சிறப்புற்று விளங்குவது பாரசீக இலக்கியம். உமர் கய்யாம் என்ற கவிஞரின் மூலமாக உலகத்திற்கே தன்னையறிவித்துக் கொண்ட இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி பாரசீகம், பாரசீக மக்கள் அறிவின் சிறப்பினைக் குறிக்க ஒளியை குறியீடாகக் கொண்டனர். இந்த அடிப்படையில் பாரசீக இலக்கியம் தமிழ் இலக்கியத்தை ஒத்துக் காணப்படுகிறது. சான்றாக தூய்மை என்பது குறித்து
பொருள்கள் அனைத்திலும் தூய்மையே 
மிக்க அழகும் பெருமையும் வாய்ந்தது”.
- என்று கூறப்படும் கருத்து
மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
- என்ற குறட்பாவின் கருத்துடன் இயைந்து செல்வதை காணலாம். பாரசீக செம்மொழியின் தொன்மையை உலகறிய செய்வதில் அதனுடைய பண்டையக் கட்டடக் கலையான பெரிசிபோலிசு (Persepolis) 2500 ஆண்டு பழமை வாய்ந்ததென்றால் அது மிகையாகாது.
7. சமஸ்கிருதம் (வடமொழி)
கிரேக்க, இலத்தீன் இலக்கியம் போன்று செம்மொழி இலக்கியமென மேலை நாட்டினரால் மதிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது, பரவலாகப் படிக்கப்பட்டது. வடமொழி இலக்கியம். வடமொழி இலக்கியத்தை இரு பிரிவுகளாக காணலாம் வேதகால இலக்கியம் கி.மு.1500 முதல் கி.மு.200 மற்றும் செம்மொழி கால இலக்கியம் கி.மு.500 முதல் கி.பி.1000. வேதகால இலக்கியத்திற்கும் செம்மொழி கால இலக்கியத்திற்கும் பொதுவாக ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் கணக்கிடப்படலாம். வடமொழியில் செம்மொழிக்கால இலக்கியம் இராமயண, மகாபாரதக் காப்பியங்களில் தொடங்குகிறது. இச்செம்மொழியே சமஸ்கிருதம் (Sanskrit) எனப் பாணிணியால் அழைக்கப்பட்டது. அதற்கான இலக்கணத்தையும் அவர் வகுத்தார். ஹோமரின் இரு பெருங்காப்பியங்களான இலியது, ஒடிசி இரண்டும் சேர்ந்த தொகுதிபோல் எட்டு மடங்கு பெரியது இராமயணம், மகாபாரதம் என்ற காப்பியங்கள் வடமொழியான சமஸ்கிருதத்தை செம்மொழி என கிரேக்க இலத்தீன் மொழிகளோடு சேர்த்து உருவகபடுத்திய பணியை நாம் செய்யவில்லை. இந்தப் பெருமை ஐரோப்பியர்களையே சாரும். சர். வில்லியம் ஜோன்ஸ் என்பவர் 1784-இல் ஆசியக் கல்விச் சங்கம் (Asiatic Society) என்ற நிறுவனத்தை கல்கத்தாவில் உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மூலமும், மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோரும் வடமொழி நூல்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் (Sacred Books of the East) என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும்.
இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் பெரும்பாலும் கிரேக்க, ரோம பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம், உபநிடதம் தொடங்கி வடமொழியின் இதிகாசங்கள், காப்பியங்கள், நாடகங்கள் தத்துவ நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றின் வரவு ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு அறிமுகபடுத்தியது. வடமொழி இலக்கியம் கிரேக்க, இலத்தீன் போன்று செம்மொழி இலக்கியமாக கருதப்பட்டது. வடமொழி செம்மொழியாக ஏற்கப்பட்டது.
http://www.muthukamalam.com/picture/Mohansatharo.jpg
5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரையில் புதையுண்டு போன மொஹஞ்சாதரோ, ஹரப்பா கட்டிடக் கலை
8. தமிழ்
எப்படி ஆரியம் சார்ந்த இந்தியப் பண்பாட்டிற்கு வடமொழி கொள்கலனாக (Container) விளங்குகிறதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் மூத்ததும், ஏறத்தாழ 2500 ஆண்டு இலக்கிய பாரம்பரியம் கொண்டதுமான தமிழ் மொழி கொள்கலன் ஆகும். எப்படி ஐரோப்பிய நாகரிகத்தை அறிந்து கொள்வதற்கு கிரேக்கமும், இலத்தீன் மொழியும் தேவையோ அதுபோலவே இந்திய வரலாற்றை, இந்தியப் பண்பாட்டை, அதன் ஆன்மிக தத்துவ மரபுகளை முழுமையாக உணர்ந்து கொள்ள வடமொழி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் தேவை. தமிழின் தொன்மை என்பது தமிழ் செம்மொழித் தகுதிக்குத் தொன்மை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதப்படுகிறது. தமிழின் தொன்மை உலகு அளாவிய ஒன்று. பிரிட்டானிய கலைகளஞ்சியம் கீழ்க் கண்டவாறு கூறுகிறது.
“Apart from literature written in classical (Indo-Aryan) Sanskrit, Tamil is the oldest literature in India”
Encyclopedia Britannica. Vol.II.P.350
- என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (Encyclopedia Britannica) தமிழையும், சமஸ்கிருதத்தையும் தொன்மையான மொழிகள், செம்மொழிகள் என கூறியிருப்பினும், பன்னாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) தமிழையும், சமஸ்கிருதத்தையும் செம்மொழிகள் என ஒப்புதல் அளித்ததாக தெரியவில்லை.
தமிழின் செம்மொழித் தகுதியை உலகு அறிய செய்யத் தக்கவல்ல சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்றவை ஐரோப்பிய செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீனம், ஹீப்ரு, பாரசீகம், அரேபியம் ஆகியவற்றை காட்டிலும் இலக்கியச் செறிவு மிக்கது.
இருப்பினும், ஐரோப்பிய நாடுகளை சார்ந்த கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு, அரேபியம் மற்றும் கிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த சீனம் செம்மொழிகளுக்கென்றே தனிச் சிறப்பு வாய்ந்த உலகை கவர்ந்து இழுக்கும் வல்லமை மிக்க பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகள் போன்று உயர்தனி செம்மொழியாம் தமிழ் மொழிக்கு கட்டியம் கூறும் வகையில் பண்டையக் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைகள் இருந்ததாக கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக திராவிட நாகரிகத்தை சார்ந்த மொஹஞ்தாரோ, ஹராப்பா போன்ற பண்டையக் கலைகள் இயற்கை சீற்றங்களினாலும், அந்நியர் படையெடுப்பினாலும் தரையில் புதையுண்டு போயின. இது ஆரியக் கட்டடக்கலையை சார்ந்தனவா? அல்லது திராவிடக் கட்டடக்கலையை சார்ந்தனவா? என்ற வரலாற்று அடிப்படையிலான கருத்துவேற்றுமை இருதரப்பினரிடமும் இன்றளவும் நிலவிவருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. ஆதலினால் தமிழின் தொன்மையை உலகறிய செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்பதே இக்கட்டுரையின் மிக முக்கிய அம்சமாகும்.

மேற்குறிப்பிட்ட மேலைநாட்டு செம்மொழிகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடான சீன செம்மொழிக்கு 3500 முதல் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட உலக அதிசயங்களாக கருதப்படுகின்ற பண்டையக் கட்டடக்கலைகள் மற்றும் சிற்பக்கலைகளை படைப்பதற்கான மொழிச்செறிவுமிக்க, கலைகள் குறித்தான சொல்லாட்சிகள்’, ‘அளவீடுகள்’, ‘குறியீடுகள்’, ‘எண்கணக்கு’, ‘வரைபடங்கள்’, ‘கருவிகள்’, மற்றும் வேதி மூலப்பொருட்கள்போன்ற அடிப்படைத் தொழில்நுட்ப நுணுக்கம்இருந்திருந்தால் மட்டுமே மேற்படி பண்டைய உலக அதிசயங்களை வடிவமைத்திருக்க கூடும் என்பதே இக்கட்டுரையின் மிக முக்கியக் கண்ணோட்டம் (அ) நோக்காகும், இதில் ஒரு மொழியின் பங்குமிகப் பெரியதெனக் கருதப்படுகிறது என்பதே மேலும் இக்கட்டுரையின் தலையாய கருத்தாகும்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக