புதன், 7 ஜனவரி, 2015

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி…(I)
கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன்
(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக பணிபுரிந்தவர்)
அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…’(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு சிறு திருத்தம். நாங்கில் மரம் என்பது சில்வர் ஓக்மரம் என்று குறிப்பிட்டிருந்தேன். தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த திரு. மு. நவநீதகிருஷ்ணன் என்ற நண்பர் நாங்கில் மரம் என்பது ஆசினி அல்லது ஆயினி எனப்படும் பலா மரம் எனத் தெரிவித்தார். இம் மரம் கேரளத்தில் மிகுதியாக உள்ளது என்றும், எளிதில் தீப்பிடிக்காது என்றும், எடை குறைவானது என்றும் தெரிவித்தார். சில்வர் ஓக் மரம் எடை குறைந்ததே ஆயினும், ஆசினி மரம் போல் வலிமையானது அன்று என்றும், சில்வர் ஓக் மரம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமாக வளர்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஆசினி மரம் படகு செய்வதற்கு உகந்தது என்றும் தண்ணீரில் நீண்ட காலம் கிடந்தாலும் சிதைவுறாது என்றும், சில்வர் ஓக் மரமோ எளிதில் சிதைந்துவிடக் கூடியது என்றும் தெரிவித்தார். நாங்கில் என்ற ஆசினி மரம் தற்போது கேரள மாநிலத்தில் அதிகமாக வளர்க்கவும், பயன்படுத்தவும் படுகிறது என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கும்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றதன் காரணம், நாங்கில் மரம் எனப்பட்ட ஆசினி மரம் அங்கு இயற்கையாகப் பெருமளவில் வளர்ந்தமையால் ஆகலாம்.
ஆசினி மரம் தண்ணீரில் நீண்ட காலம் இருந்தாலும் சிதைவுறாது என்று நண்பர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் யோசித்த போது ஒரு வரலாற்றுக் குறிப்பு நினைவுக்கு வந்தது. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார் தமது நாட்டில் ஓக் மரத்தை முதன்மையாகப் பயன்படுத்திக் கப்பல்கள் கட்டுவித்து வந்தனர். அக் கப்பல்கள் 10 ஆண்டுகள் கூடத் தாக்குப்பிடிக்காமல் கடல் நீரினால் பாதிப்படைந்து சிதைந்து வந்தன. அதன் விளைவாக, குஜராத் பகுதியிலுள்ள சூரத் நகரில், பாரம்பரியக் கப்பல் கட்டுமான நிபுணர்களான பார்ஸி இனத்தைச் சேர்ந்த கப்பல் கட்டும் தொழிற்கூட முதலாளிகளின் உதவியுடன் கப்பல் கட்டும் தளங்களில் கட்டுவிக்கப்பட்ட கப்பல்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாருக்காக சூரத் நகரில் வடிவமைத்துக் கட்டுவிக்கப்பட்ட ஒரு கப்பல் அமெரிக்க சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேலும் பல போர்களிலும் பங்கேற்று ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் பொருத்திப் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின்னர்தான் அக் கப்பல் பழுதடைந்து பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டது. இந்த வரலாற்றுக் குறிப்பு பாரதிய வித்யா பவனால் வெளியிடப்பட்டுள்ள ‘India – Its culture and its people’ என்ற தலைப்புடைய இந்திய வரலாற்றுத் தொகுதிகளுள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் பற்றிய தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
தேக்கு, ஆசினி, மலை வேம்பு போன்ற மரங்கள் இத்தகைய கப்பல் கட்டும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன எனத் தெரிகிறது. இந்திய நாட்டின் பாரம்பரியக் கப்பல் கட்டுமானத் தொழிற்கல்வி தச்சர்களில் ஒரு பிரிவினரால் பயிலப்பட்டு வந்துள்ளது. இத் தச்சர்களை மாந்தையர்என ஐவர் ராஜாக்கள் கதைபோன்ற தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இச் சொல் மா வித்தையர் அல்லது மா விந்தையர் என்ற தொடரின் திரிபாகத் தோன்றுகிறது. இந்தியர்களின் கப்பல் கட்டும் வித்தை பற்றிக் கி.பி. 13ஆம் நூற்றாண்டைய வெனிஸ் பயணியான மார்கோ போலோ மிகவும் புகழ்ந்துள்ளார். சுமத்ரா நாட்டின் பாரோஸ் துறைமுகத்தில் உள்ள கி.பி. 1088ஆம் ஆண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்றில் மாவேத்துகள்’ (மகாவித் என்பதன் திரிபு) என்று இக் கப்பல் கட்டும் தச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுவாக விஸ்வகர்ம சமூகத்தவரே பண்டைக் காலப் பொறியியல் நிபுணர்களாதலால், தமிழ் நிகண்டுகள் அவர்களை அறிவர், வித்யர் என்று குறிப்பிடுகின்றன. ஆசாரி என்ற சாதிப் பட்டப் பெயரும், வித்யை கற்பிக்கும் ஆசார்ய பதவி தொடர்பானதே. கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து நாட்டில் நிகழ்ந்த தொழிற்புரட்சியின் விளைவாகத் தொழில் துறையில் இயந்திரமயமாதல் அறிமுகப்படுத்தப்பட்டதால் நம் நாட்டின் பாரம்பரியத் தொழில் நுட்பங்கள் ஆங்கிலேயரால் உறிஞ்சி சீரணிக்கப்பட்டன. நம் நாட்டுப் பாரம்பரியத் தொழில்நுட்ப வல்லுனர்கள் காலனி ஆதிக்கத்தாலும், கனரக இயந்திரங்களாலும் நசுக்கப்பட்டுச் சிதைந்து போயினர். இது பற்றி விரிவாக ஆராயப்பட வேண்டும். சந்தைப் பொருளாதாரத் தொடர்புகளுக்குப் பெருமளவில் வழியின்றிச் செய்து விட்ட இந்திய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு நம் நாட்டின் தொழில்நுட்ப விஞ்ஞானச் சூழலின் பின் தங்கிய நிலைமைக்கு முதன்மையான ஒரு காரணமே என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்தியச் சமூக அமைப்பும், பாரம்பரியக் கல்வி முறையும் ஒட்டு மொத்த அநீதியின் வடிவம் என்ற தவறான கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்தத் தவறான கருத்தினை மாற்றுவதற்கு இத்தகைய ஆய்வு உதவக் கூடும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள் தமது அக்கினிச் சிறகுகள்நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி நம்மைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகும். கி.பி. 1799ஆம் ஆண்டில் திப்பு சுல்தானைச் சுட்டுக் கொன்று, கர்நாடக மாநிலத்திலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அப்போது திப்புவின் படைக்கலக் கொட்டிலிலிருந்து இரண்டு ராக்கெட்டுகள் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டன. அவை தற்போது லண்டன் அருகிலுள்ள உல்ரிச் நகரில் ராதண்டோர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலக அளவில் ராக்கெட் உருவாக்கும் தொழில்நுட்பம் முதலானவை 1806ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தொடங்கின என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். அவ்வாறிருக்கும் போது, ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் இந்தியாவில் அப்போதே இருந்திருக்கிறார்கள் என்பதே மிகவும் வியக்கத்தக்க ஒரு செய்தியாகும். இந்த ஆய்வுக் களத்தில் ஈடிணையற்ற அறிஞர் என ஏற்றுக்கொள்ளப்படுள்ள அப்துல் கலாம் அவர்களே இந்த உண்மைக்குச் சான்றளித்துள்ளார். இது மட்டுமின்றி, வேறொரு வரலாற்றுக் குறிப்பும் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. கர்னல் வெல்ஷ் என்பவர் 1800-01ஆம் ஆண்டளவில் மருது சகோதரர்களுடன் போரிட்ட ஆங்கிலேயப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவராவார். இவர் தமது Military Reminiscenses என்ற நூலில் மருது சகோதரர்கள் ஆங்கிலேயப் படைப்பிரிவுகளை நோக்கிச் செலுத்துவதற்காக ராக்கெட்டுகளைப் பொருத்திக் கொண்டிந்ததைத் தாம் கவனித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மருது சகோதரர்களுக்குத் திப்பு சுல்தானுடன் தொடர்பு இருந்தது என்பது உண்மையாயினும், திப்புவின் உதவியுடன்தான் ராக்கெட் தயாரித்தனரோ என்று நாம் ஐயுறத் தேவையில்லை. ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் அப்போது தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க வாய்ப்புண்டு. தூத்துக்குடியைச் சேர்ந்த பரதவர் சமூக சாதித் தலைவர் தொன் கபரியேல் தக்ரூஸ் வாஸ் கோம்ஸ் என்பவர் மூலமே மருது சகோதரர்களுக்கு வெடி மருந்துகள் கிடைத்து வந்தன என்றும், திருநெல்வேலியைச் சேர்ந்த நாகராஜ மணியக்காரர் என்பவரும் ஆப்பனூர் மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவரும் தூத்துக்குடி பரதவர் சாதித் தலைவரைச் சந்தித்துச் சதி ஆலோசனையில் ஈடுபட்டனர் என்றும் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் ஆவணங்கள் தற்போது தமிழ்நாடு அரசின் வரலாற்றாய்வு மற்றும் ஆவணக் காப்பகத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேற்குறித்த பரதவர் சாதித் தலைவரைப் பற்றிய சில கள ஆய்வுகளை மேற்கொண்டவன் என்ற வகையில் ஓரிரு ஊகங்களை என்னால் குறிப்பிட முடியும். தூத்துக்குடி நகரில் மாந்தையர்கள் எனப்பட்ட கப்பல் கட்டும் தச்சர்கள் பெருமளவில் இருந்துள்ளனர். தற்போது கூட, படகுகள் செய்யும் தச்சர்களுக்கான சங்கம் தூத்துக்குடியில் உள்ளது. இத்தகைய விஸ்வகர்ம சமூகத்தவரின் துணையுடனும், பல்வேறு ரசாயனங்களைத் தயாரிக்கின்ற அறிவுடைய (நாவிதர் குலத்தவராகக் கருதப்படுகிற) மருத்துவர் குலத்தவரின் துணையுடனும், கோயில் திருவிழாக்களில் வாண வேடிக்கை நிகழ்த்தும் வாணக்காரர்கள், கர்ப்பூரச் செட்டிகள் போன்றவர் துணையுடனும் ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கவும், செலுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. கர்ப்பூரம் என்பது வெடி மருந்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்போது, அதன் எரிதிறன் அதிகரிக்கும் என்பதால் கர்ப்பூரம் மிக உயர்ந்த விலையுடைய அரும் பொருளாக மதிக்கப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளுள் சுமத்ராவிலுள்ள பாரோஸ், •பன்சூர் போன்றவை கர்ப்பூரம் அதிகமாகக் கிடைத்த இடங்களாகும். பன்சூர் கர்ப்பூரம் எடைக்கு எடை தங்கத்திற்குச் சமமாக மதிப்பிடப்பட்டு விற்கப்பட்டதாக மார்கோ போலோ குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வாறோசு சூடன் (பாரோஸ் நகரக் கர்ப்பூரம்) என்பது முதன்மையான ஒரு இறக்குமதிப் பொருளாகச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரால் (சிலம்பு. 14:109க்கான உரை, பக்கம் 375, சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. பதிப்பு, 1978) குறிப்பிடப்படுகிறது. கர்ப்பூரச் செட்டிகள் என்ற பிரிவினர் துறைமுக நகரங்களில் அதிகமான அளவில் குடியேற்றப்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் ஆவர். இவர்களிடையே வெடிரங்கச் செட்டியார் போன்ற பட்டப் பெயர்களும் வழங்கி வந்துள்ளன. வெடியுப்பு சீன நாட்டிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெடியுப்பு போன்றவற்றில் வாணிகம் செய்கின்ற அதிகாரம் எளிதில் பிறருக்குக் கிட்டிவிடாத வண்ணம் அரசர்களால் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டது. வெடிமருந்து தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவும் இவ்வாறே பாதுகாக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆதிச்சநல்லூர்ப் பறம்பு போன்ற இடங்களிலும், ஆழ்வார் கற்குளம் என வழங்கப்படுகின்ற ஆழ்வார் கற்களத்திலும், ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள கடம்பூர்ப் பறம்பிலும் சீனிக்கல் எனப்படும் வெங்கச்சங்கற்கள் (Quartzite) அதிகமாகக் காணப்படுகின்றன. இக் கற்கள் உலையில் சூடு அதிகரிப்பதற்கும், நெடுநேரம் சூடு தணியாமல் இருப்பதற்கும் உதவக் கூடியவையாதலால், இவை தொல்பழங்காலம் முதற்கொண்டு இரும்பு உருக்குதல் போன்றவற்றுக்காகக் கொல்லர் உலைக் களங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இத்தகைய சீனிக்கற்கள் கிடைத்த இடங்கள் கற்களங்கள் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் குறித்த பழம் பாடல் நூல் வெடிமருந்தினைச் சீனி என்று குறிப்பிடுகிறது (பக்கம் 83-88, கட்டபொம்மன் வரலாறு அல்லது சண்டைக் கும்மி, அரசினர் கீழ்த் திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பு, சென்னை, 1960). வீர பாண்டிய கட்டபொம்மன் காலத்தில் (1790-99), கட்டபொம்மன் படையினராலும் வெடி மருந்து தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. இந்துப்பு போன்ற வெடியுப்புகளுடன் சீனிக்கற்களும் அரைத்துப் பொடித்துக் கலந்து பயன்படுத்தப்பட்டன. சீனிக்கல் சூட்டினை மிகுவிப்பது மட்டுமின்றி வெடிகுண்டு வெடித்துச் சிதறும் போது கண்ணாடித் தூள் ஏற்படுத்துவது போன்ற பாதிப்பை விளைவிக்கக் கூடியது என்பதாலும் இவ்வாறு கலக்கப்பட்டது. அதற்கு, இப் பகுதியில் எளிதில் கிடைத்த சீனிக்கற்கள் மிகவும் பயன்பட்டன. பாஞ்சாலங்குறிச்சி அருகில் கவர்னகிரிப் பகுதியில் வெடிமருந்துக் கிடங்கு எனக் குறிப்பிடப்படும் இடிபாடான செங்கல் கட்டுமானம் ஒன்றுள்ளது. இது வீரன் சுந்தரலிங்கம் தற்கொலை செய்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுத்த வெள்ளையர்களின் வெடிமருந்துக் கிடங்கு எனச் சிலரால் கருதப்படுகிறது. (தளபதி சுந்தரலிங்கம், ஆ. மோகன்தாசு, விடுதலை வேள்வியில் தமிழகம், பாகம் – 1.) ஆனால், அவ்வாறிருந்திருக்க வாய்ப்பில்லை. இது புரட்சி அணியைச் சேர்ந்த பாளையக்காரர் படையினரின் வெடிமருந்துக் கிடங்காகவே இருந்திருக்க வேண்டும். (கவர்னகிரி என்ற பெயரே கவுனிகிரி என்ற பெயரின் திரிபாக இருக்கக்கூடும். கவுனி என்ற சொல் கட்டபொம்மன் குறித்த பழம்பாடலில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு கோட்டை வாயில் என்றும், ஒரு வகைப் பாஷாணம் என்றும் பொருளுண்டு. கவுனிகிரி என்ற பெயரேவெடிமருந்துக் கூடம்என்று பொருள் படக்கூடும். இது மேலும் ஆராய்வதற்குரியது.) கட்டபொம்மனைத் தூக்கிலிட்டபின், ஆங்கிலேயத் தளபதி பானர்மனால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1799ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதியன்று அந்த அறிவிப்பு செப்புப் பட்டயங்களில் பொறிக்கப்பட்டு எட்டயபுரம் சிவன் கோயில் வாயில் முதலிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்குப் படும்படி சுவரில் பதிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில், சேவகர், சேர்வைக்காரர் முதலான பாளையக்காரப் படை வீரர்கள் வெடிகுண்டு முதலிய ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது நம் கருத்துக்கு ஓர் ஆதாரமாக அமைகிறது.[1] கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகு, ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியையே அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்தனர். அப்படி ஓர் ஊர் இருந்த சுவடே இல்லா வண்ணம், நில வருவாய்க் குறிப்பேடுகளிலிருந்து அவ்வூர்ப் பெயர் நீக்கப்பட்டது. கட்டபொம்மனின் ஆளுகையிலிருந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிர்வாக அதிகாரம் எட்டயபுரம் எட்டப்ப நாயக்கர், மேல்மாந்தை விஜய குஞ்சைய நாயக்கர், கடம்பூரிலிருந்த மறவர் குலத் தலைவர் ஆகிய ஆங்கிலேய ஆதரவாளர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு வெடி மருந்து தயாரிப்பதற்குப் பயன்படக்கூடிய சீனிக்கற்கள் வழங்கும் பொறுப்பு கடம்பூரிலிருந்த மறவர் குலத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அவருக்கு சீனி வேளாளர்என்ற பட்டமும் வழங்கப்பட்டது. சீனிக்கற்களை விளைவிப்பவர் என்பது போலப் பொருள்படும் ஒரு கெளரவப் பட்டம் இதுவாகும்.
துறைமுக நகராகிய தூத்துக்குடியில் பரதவர் சமுகத்தவருக்குச் சமமாக அதிக எண்ணிக்கையில் வாழும் மற்றொரு சமூகத்தவரான சான்றோர் குலத்தவர் (நாடார்கள்) தீப்பெட்டி, பட்டாசு போன்றவை தயாரிக்கும் தொழில்களில் ஈடுபட்ட முன்னோடியான ஒரு சமூகத்தவராவர். 1870ஆம் ஆண்டளவில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை அடுத்த உமரிக்காட்டைச் சேர்ந்த நாராயணன் நாடார் என்பவர் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குக் கப்பல் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். சென்னைப் பட்டினத்தில் இருந்த லெவிச்சி துரை, பவிச்சி துரை முதலிய பரங்கித் துரைமார்கள் இவரிடமிருந்து சரக்குகளை விலை பேசி வாங்கினர் என்றும், சாதிலிங்கக் கட்டி, கட்டிப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், கெளரிப் பாஷாணம், பச்சைக் கர்ப்பூரம், பவளக் கர்ப்பூரம், ஈயச் செந்தூரம், இந்துப்பு, வெடியுப்பு, பொரி காரம், நவச்சாரம், சீனக் காரம் முதலான பல சரக்குகள் விற்கப்பட்டன என்றும் கப்பல் பாட்டு (பக்கம் 61-75, உமரிமாநகர் தல வரலாறு, ஆசிரியர்: காசிப்பழம் என்கிற சின்னாடார், உமரிமாநகர் அஞ்சல், ஆத்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம், 1987) என்ற ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது. இந்தக் கப்பல் வாணிகம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்ததாகப் பாடல் மூலம் தெரிய வந்தால் கூட, இது ஒரு பழம் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே என நாம் ஊகிப்பது தவறாகாது. மேலும், இப்பகுதியிலுள்ள சான்றோர் சமூகத்தவர் கட்டபொம்மனுடன் விரோதம் பாராட்டினர் என்பது உண்மையே ஆயினும், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் ஊமைத்துரை மற்றும் மருது சகோதரர்கள் இணைந்து உருவாக்கிய புரட்சி அணிப் படைகளில் சான்றோர் சமூகத்தவரும் பெருமளவில் கலந்து கொண்டனர் என முனைவர் ராஜய்யன் (South Indian Rebellian, K. Rajayyan, Page 201, Rao and Raghavan Publishers, Mysore-4, 1971) எழுதியுள்ளார்.
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கணிக்கப்படும் போகர், சித்த மருத்துவத் துறையிலும் பெரும் பங்கு நிகழ்த்தியுள்ள ஒரு சித்தராகக் கருதப்படுகிறார். பழனி மலையில் இவர் அடக்கமானதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இவர் விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்தவர்[2] என்றும், ககன குளிகை (ஆகாய மார்க்கம்)யின் மூலம் சீன நாட்டுக்குச் சென்று வந்தவர் என்றும் கதைகள் வழங்குகின்றன. இக் கதைகளுள் பல மிகைப்படுத்தப்படவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆயினும், போகருடைய ஆய்வுக் களம் என்பது வானூர்தி, ராக்கெட் செலுத்துதல் போன்ற தொழில்நுட்பக் களங்களாக இருந்திருக்கக் கூடும். கட்டுத் திட்டமான ஆய்வு நெறிமுறையுடன் இந்த விஷயத்தை அணுகினால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அடிக்குறிப்புகள்:
[1] இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல இடங்களில் என்னால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பானர்மனின் அறிவிப்புப் பொறிக்கப்பட்டுள்ள செப்பேடு எட்டயபுரம் சிவன் கோயில் வாயில் தூண் ஒன்றில் பொருத்தப்பட்ட நிலையில் தற்போதும் உள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள இச் செப்பேட்டில் பானர்மன் என்ற பெயர் மட்டும் ஆங்கிலத்தில் உள்ளது. இது தொடர்பான ஒரு சுவையான செய்தி அறிந்துகொள்ளத் தக்கது. பாஞ்சாலங்குறிச்சியை அடுத்த வெள்ளாரம் என்ற ஊரில் எட்டயபுரம் ஜமீந்தாருக்குச் சொந்தமான மாளிகை ஒன்று இடிபாடான நிலையில் காட்சியளிக்கிறது. இம் மாளிகைக்கு அருகில் தரையில் பதித்து நிறுத்தப்பட்டுள்ள பலகைக் கல் ஒன்றில் கொல்லம் 1074ஆம் ஆண்டுக்குரிய (கி.பி. 1899) கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் ஜமீனின் காவல்காரரான ஜகவீரெட்டு மணியக்காரன் மகன் உமையண்ண மணியக்காரன் என்பவர் சாலிக்குளம் சிறைக்காடு காவலுக்குப் போயிருந்தபோது, வெடிகுண்டினால் இறந்து சிவலோக பதவி அடைந்தார் என்று அக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு தொடர்பாகக் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்றுண்டு. இதற்குச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாலிக்குளம் சிறைக்காடு பகுதியில் கட்டபொம்மன் ஓய்வெடுக்கச் சென்றிருந்தபோதுதான் ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படை நடத்தி வந்தனர். கட்டபொம்மன் முதலான புரட்சியணி வீரர்களைத் தூக்கிலிட்டு, புரட்சியணியின் படைவீரர்கள் வெடிகுண்டு போன்ற ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்து, எட்டயபுரம் கோயில் வாயிலில் செப்புப்பட்டயத்தில் பொறித்துப்பதித்து வைத்திருக்கும் நிலையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் எட்டயபுரம் ஜமீன்தார் மாளிகை முன்பு எட்டயபுரம் மணியக்காரன் வெடிகுண்டினால் இறந்த செய்தியையையும் கல்லில் பொறித்து நிறுத்தி வைக்க வேண்டிய அவலம் நேர்ந்ததன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. புரட்சி அணியினரின் வன்மம் தலைமுறைகள் கடந்தும் நீடித்து நின்றிருக்கிறது போலும். இவ்வாறு சிதறல்களாகக் கிடைக்கும் செய்திகள் சேகரித்துத் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டால்தான் இந்தியச் சுதந்திரப் போராட்டம் குறித்த முழுமையான பரிமாணம் கிட்டும்.

[2] கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் விளைவாக விஸ்வகர்ம சமூகத்தவர் பாதிக்கப்பட்டது குறித்தும், அரசியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் தொழிலாளர் சமூகத்தவராகிய விஸ்வகர்ம சமூகத்தவரின் வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த பிரக்ஞை அச் சமூகத்தவர் மத்தியில் நிலவிற்றா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது. கி.பி. 1887ஆம் ஆண்டில் காங்கிரஸ் இயக்கத்தின் மகாசபைக் கூட்டத்தில், கும்பகோணம் கைவினைஞர் சங்கத்தின் சார்பில் காங்கிரஸ் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இரும்பு கொல்லுத் தொழில் பட்டறை நடத்தியவரும், தஞ்சை நகராட்சி மன்ற உறுப்பினருமான மூக்கன் ஆசாரி என்பவர் இந்தியர்கள் தொழில்நுட்பக் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் பற்றித் தமிழில் உரை நிகழ்த்தினார் என்று தெரிகிறது. (மூக்கன் ஆசாரி”, க.நா. பாலன், விடுதலை வேள்வியில் தமிழகம், பாகம் – 1, தொகுப்பாசிரியர்: த. ஸ்டாலின் குணசேகரன், நிவேதிதா பதிப்பகம், ஈரோடு – 4.) சுப்பிரமணிய பாரதியார் மூக்கன் ஆசாரியைப் பற்றிப் பாராட்டி எழுதியுள்ளார் என்று தெரிய வருகிறது. இந்தியச் சிந்தனை மரபின் தலைசிறந்த பிரதிநிதியாகக் கருதத்தக்க சுப்பிரமணிய பாரதியார் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்என்று பாடியுள்ளார். சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் என்ற புதுமையான சொல்லாட்சியே ஆழமானது. நகர சுத்தித் தொழிலாளர்களாக உள்ள தாழ்த்தப்பட்ட குலத்தவர்கள் மேற்கொண்டுள்ள தொழில் தொடர்பான அறிவும் பயிற்சியும் ஒரு சாஸ்திரமே. அவர்களும் சாஸ்திரிகளே என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் சுப்பிரமணிய பாரதியார். உலகத் தொழிலனைத்தும் உவந்து கற்றுக் கொண்டால்தான், இந்தியச் சமூகம் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற இயலும் என்ற கருத்துடைய பாரதியார் தொழிலாளர் சமூகத்தின் பிரதிநிதியான மூக்கன் ஆசாரியின் முழக்கத்தை உணர்ந்து பாராட்டியுள்ளார் என்பதில் வியப்பில்லை.
maanilavan@gmail.com
Courtesy : thinnai.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக