Wednesday, 18 January 2012

வேதங்கள்-4

http://ujiladevi.blogspot.com_ மதத்திற்கு மட்டுமல்ல ஆசியப்பகுதி சிந்தனை மரபுகளுக்கே மூலகாரணமாக இருப்பது வேதங்கள் என்பது நாமறிந்த விஷயம் தான். நம்மில் பலருக்கு வேதங்களின் பெயர்கள் தெரிந்தளவிற்கு அவற்றில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் என்னவென்று முழுமையாக இன்று வரை தெரியாது. அதற்கு வேதங்கள் வடமொழியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியார் தவிர மற்றவர்களுக்கு படிக்க அனுமதி இல்லை என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட அவைகள் முற்றிலும் உண்மை என்று கருத இயலாது. வடமொழி அறிந்தவர் கூட வேதம் படிக்கும் தகுதியை பெற்றவர் கூட வேதத்தின் உண்மை பொருளை உணர்ந்தவர்களாக இல்லை என்பது தான் உண்மை. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளபடாமலிருக்கும் போது வேதகால மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறை எப்படியிருந்தது என அறிந்து கொள்வதும் கடினம். அறிய முயற்ச்சிப்பவர்களும் மிக குறைவு. அப்படியே தப்பி தவறி முயற்சி செய்பவர்கள் ஒன்று வேதங்களை திட்டுபவர்களாகவோ அல்லது அதீதமாக போற்றி புகழ்பவர்களாகவோ இருந்து விடுகிறார்கள். இதனால் உண்மையான நிலவரத்தை அறிய ஆர்வமுடையவர்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே இந்து மத வரலாற்றை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவாவது அறிந்து கொள்ள வேதகால சமுதாயம் எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படி அறிந்தால் தான் வேத கருத்துக்களையும் இந்து மத சிந்தனைகளையும் நம்மால் புரிந்து கொள்ள ஓரளவு முடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை குறிப்பிடும் போது அது இப்போது தோன்றி இந்த காலத்தில் முடிந்தது என காலவரையறை சொன்னால் தான் கேட்பவர்களுக்கு சரியான முறையில் கிரகித்து கொள்ள வசதியாக இருக்கும். ஆனால் வேத காலத்தை பற்றி சொல்லும் போது அது எப்போது துவங்கியது. எப்போது முடிவுக்கு வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வரலாற்று ஆய்வாளர்கள் எட்டிபார்க்க முடியாத மிக நீண்ட நெடிய காலத்திற்கு முன்பே வேதங்களின் காலம் துவங்கிவிட்டது என்று சொல்லலாம். இருப்பினும் ஒரு கணக்கு குறியீட்டுக்காக கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தை வேதகாலம் என்று சொல்கிறார்கள். நான்கு வேதங்களில் முதன்மையானது ரிக்வேதம் என்று நமக்கு தெரியும். ரிக்வேதம் தோன்றி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தான் மற்ற மூன்று வேதங்களும் தோன்றியிருக்கிறது. ஆனாலும் ஆச்சர்யம் என்னவென்றால் பல நூற்றாண்டுகளின் இடைவெளியில் வேதங்கள் தோன்றியிருந்தாலும் கூட அவற்றுகிடையில் மெல்லிய தொடர்ச்சி அவற்றை தனிதனியாக போகாமல் ஒருங்கிணைக்கிறது. பொதுவாக வேதகால சமுதாயத்தை ஆர்ய நாகரீகம் என்ற பெயரிலேயே பலர் அழைக்கிறார்கள். நாமும் அப்படி அழைத்தால் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது. ஆர்ய என்ற சொல்லிற்கு உயர்ந்த சிறந்த என்ற பொருட்கள் உண்டு. பொதுவாக சமஸ்கிருதத்தையும் அதை சார்ந்த மொழிகளையும் பேசும் மக்களை இந்தோ ஆரியர் என்று அழைப்பது வழக்கம். ஆரியர்கள் இந்தியாவிற்குள் எங்கிருந்து வந்தார்கள். எப்போது வந்தார்கள் என்ற குழப்பம் பல காலமாக இருந்து வருகிறது. காதல் கடவுளான மன்மதனை சிவபெருமான் நெற்றிகண் கொண்டு எரித்தாரா இல்லையாயென்று தொன்று தொட்டு லாவணி பாடல் இருந்து வருவது போல ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று ஒரு சாராரும் அல்ல அல்ல அவர்கள் இந்த நாட்டின் வந்தேரிகள் என்று வேறொரு சாராரும் தொடர்ந்து வாதம் செய்து வருகிறார்கள். இந்தவாத பிரதிவாத சிக்கலுக்குள் மூக்கை நுழைத்து கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியம் இப்போது நமக்கு இல்லை. நாம் நேரடியாக அக்கால மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என ஆராய போய்விடலாம். வேதகால குடும்பங்களின் தலைவராக தந்தையே இருந்தார். ஒரு குடும்பத்தின் வரம்பற்ற அதிகாரம் அவருக்கே இருந்தது. திருமணம் முடிந்து குழந்தை குட்டிகள் பெற்ற பிறகும் ஒரு மகன் தந்தைக்கு அடங்கியனாகவே இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு தீங்கிழைத்த ஒரு மகனை தந்தை குருடாக்கியதாக ரிக் வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அதே போல சூதாடியான ஒருவனை குடும்பமே வெறுத்து ஒதுக்கியதாகவும் அந்த வேதம் சொல்கிறது. இக்கருத்துக்களின் அடிபடையில் பார்க்கும் போது அக்கால சமுகத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் இணக்கமான உறவு முறை இல்லையென்று சொல்ல முடியாது. தந்தைக்கு பணிந்து நடப்பதை மரியாதை குறைவாக யாரும் கருதவில்லை. மேலும் குடும்பத்தில் ஏற்படும் நல்லது கெட்டதுகளை சமாளிக்க தலைக்கு தலை முடிவு எடுத்தால் சிக்கல்களே ஏற்படுமென்று ஒருவரையே முடிவு எடுக்க விட்டுவிட்டு மற்றவர்கள் சுற்று வேலைகளை கவனித்ததினால் குடும்பத்தின் நிலை என்பது குறைவில்லாத வண்ணமே இருந்தது. குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் செய்போவரையும் கௌரவ குறைவாக நடப்பவர்களையும் தண்டிக்கும் நிலை இருந்ததே தவிர மற்றப்படி குடும்ப ஒற்றுமையில் பாச பிணைப்புகளே அதிகம் இருந்தற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. தகப்பனாரின் மறைவுக்கு பின்பு அவரின் அடுத்த சகோதரரோ அல்லது மூத்த மகனோ குடும்ப தலைவனாக ஆக்கப்பட்டிருக்கிறார். மிகபெரிய கூட்டு குடும்பங்களாகவே அக்காலத்தில் இருந்ததினால் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயும் எல்லோருக்கும் சமமாகவே பங்கிடப்பட்டுள்ளது. பருவ வயதை அடைந்த பிறகே பெண்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது. இக்காலத்தை போலவே அப்போதும் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்பியிருக்கிறார்கள். ஆனால் பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கள்ளிபால் கொடுத்து சாகடிக்கும் கொடுமை அப்போது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். பிறந்த பெண் குழந்தைகள் பரிவும் பாசமும் காட்டி வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஆணுக்கு நிகரான கல்வி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேதகால கல்வி முறை கவிதை புணைபவர்களை மதிக்க தக்க முறையில் நடத்தி இருக்கிறது. சில வேத பாடல்களை ஆணுக்கு இணையாக பெண் கவிஞர்களும் புணைந்து இருக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமே போர்கலை கற்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ரிக்வேத காலத்தில் சமுகத்தில் ஆணுக்கு என்ன மரியாதை உண்டோ அதே மரியாதை பெண்ணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. பெண் அடிமைதனம் இருந்ததற்கான ஆதாரம் ரிக்வேதத்தில் இல்லை. ஆரிய பெண்கள் மிக கட்டாயமாக ஆரிய இளைஞர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நியதி இருந்ததே தவிர பெற்றோர்கள் பார்க்கும் மணமகனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை காதல் திருமணத்திற்கு பெரிய எதிர்ப்புகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை. தந்தைவழி உறவினர் சகோதர்களாக கருதப்பட்டதினால் உறவு முறைக்குள் திருமணம் செய்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. பலதார மணமும் அப்போது வழக்கத்தில் இருந்தது தெரிகிறது. இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க முறையே பலராலும் பின்பற்றப்பட்டது. ஆண்களுக்கு வழங்கப்பட்டிருந்த பலதார சலுகை பெண்களுக்கு இப்போது போலவே அப்போதும் வழங்கப்படவில்லை. ஆனாலும் கணவனை இழந்த இளம் பெண் கணவனின் சகோதரனோடு கூடி வாழ்வதை யாரும் குற்றமென கருதவில்லை. உடன்கட்டையேறும் பழக்கம் ரிக்வேத காலத்தில் எங்கும் காணப்படவில்லை. வரதட்சனை கொடுக்க வேண்டிய அவசியம் அக்கால பெண்களுக்கு இல்லை. மணமகனே அதாவது வரனே முன் வந்து தட்சணை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டான். மாப்பிள்ளை பணம் கொடுப்பதினால் தான் வரதட்சனை என்ற வார்த்தையே உருவாகி இருக்கிறது என்று பல அறிஞர்கள் சொல்கின்றன விருப்பம் இல்லாத பெண்ணை வலுகட்டாயமாக தூக்கி சென்று மண முடிக்கும் நிலையும் அப்போது இருந்திருக்கிறது. விமாதா என்பவன் பொருமித்ரா என்பவரின் மகளை இப்படி தூக்கி சென்று திருமணம் செய்ததாக ரிக்வேதம் சொல்கிறது. இத்தகைய திருமண முறைக்கு காந்தர்வ ராட்சஸ திருமணம் என்று ரிக்வேதம் பெயர் சூட்டுகிறது. ரிக்வேதம் பத்தாம் அத்தியாயம் எண்பத்தி ஐந்தாவது பாடல் ஒரு மண விழாவை அழகுற வர்ணிப்பதை சற்று பார்ப்போம். மணமகன் வீட்டார் ஊர்வலமாக கிளம்பி மணப்பெண்ணின் வீட்டை சென்றடைகிறார்கள். அங்கு அலங்கரிக்கப்பட்டு புதிய கணவனின் வருகைக்காக பெண் காத்து இருக்கிறாள். பெண் வீட்டார் பிள்ளைவீட்டாரை வரவேற்று உபசரித்து உட்கார வைக்கிறார்கள் அனைவருக்கும் விருந்து பரிமாரப்படுகிறது. விருந்து முடிந்த பிறகே திருமண சடங்குகள் ஆரம்பிக்கின்றன. மணமகனின் கைகளில் வயதில் மூத்தவர் பெண்ணின் கையை பிடித்து ஒப்படைக்கிறார். மணமக்கள் நெருப்பை வலம் வந்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெறுகிறார்கள். இத்தோடு சடங்குகள் முடிவுக்கு வருகிறது. இங்கு மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். திருமணம் முடித்து வைக்க புரோகிதர்கள் யாரும் இருப்பதாகவோ மந்திர முழக்கம் செய்வதாகவோ வேதத்தில் குறிப்பு இல்லை. இது மட்டுமல்ல மணமகன் மணமகளுக்கு திருமாங்கல்யாணம் பூட்டுவதாக கூட வேதம் சொல்லவில்லை. எனவே வேதகால திருமணம் என்பது இப்போதைய வைதீக திருமணங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாகவே இருந்து இருக்கிறது. காலபோக்கில் தான் திருமண சடங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. திருமண சடங்குகளை போலவே உபநயனம் விஷயத்திலும் அக்காலத்தில் மாறுபட்ட நடைமுறையே இருந்திருக்கிறது. தாலிகட்டும் முறை எப்படி பிற்காலத்தில் ஏற்பட்டதோ அப்படியே உபநயன சடங்கும் பிற்காலத்தில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதற்கு வேதங்களில் வலுவான ஆதாரங்கள் உண்டு. வேதகால மக்கள் எழுத்துக்களை பற்றிய அறிவை பெற்றிருந்தனரா என்பது விவாதத்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது ஒருவர் சொல்ல கேட்டு இன்னொருவர் மனபாடம் செய்து கொள்வது தான் அக்கால வேத கல்வி முறை என்பதினால் எழுத்துகளை அவர்கள் அறிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவுயென சிலர் சொல்கின்றனர். இந்தியாவில் ஆரிய நாகரிகம் ஏற்படுவதற்கு முன்பாக இருந்த திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிக படிவங்களில் பல வகையான எழுத்து உருவங்களை காண்கிறோம். திராவிடர்களுக்கு பிறகு தான் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்றாலும் அவர்களும் திராவிடர்களை போலவே பழமையான மரபை சார்ந்தவர்கள் என்பதினால் ஆரியர்களின் பூர்வீகம் வழிநடை பாதை என்று சொல்லப்படுகின்ற இடங்களில் பழமையான எழுத்து வடிவங்கள் கிடைத்திருப்பதினால் அவர்களும் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இதில் எது சரி, எது தவறு என்று நமக்கு தெரியவில்லை. சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை வேத காலத்தில் எழுத்துக்கள் இருந்தன என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே தொடரும். இதே போலவே ரிக்வேத கால பண்பாட்டில் ஜாதி முறையானது நடைமுறையில் இருந்ததா? இல்லையா? என்றும் நம்மால் உறுதியாக அறிந்த கொள்ள முடியவில்லை. ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் விராட் புருஷனின் அங்கங்களில் இருந்து பிராமண, ஷத்ரிய, வைசீக, சூத்திர ஜாதியினர் தோன்றினர் என சொல்லப்பட்டு இருப்பதினால் அக்கால சமூகத்தில் நிச்சயம் ஜாதி பாகுபாடு இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை. ரிக்வேதம் உட்பட மற்ற வேதங்களிலும் இது சகல மனிதருக்கும் பொதுவானது என்ற கருத்துக்கள் தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர மனிதர்களை பற்றிய ஏற்றதாழ்வு மிக்க கருத்துக்கள் எதுவும் இல்லை. மேலும் ரிக் வேதத்தின் முழுமையான மொழி நடைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. எனவே ரிக்வேதத்தில் புருஷ சூத்தகம் இடைசெருகலாக தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்வதோடு வேதகால சமூகத்தில் ஜாதி பாகுபாடு இல்லையென அழுத்தமாக சிலரும் சொல்கிறார்கள். மேலும் வேதகாலத்தில் ஜாதிகள் உண்டு என வாதிடுபவர்கள் தொழிலின் அடிபடையில் நிச்சயம் ஜாதிகள் இருந்திருக்க வேண்டும். அதவாது வேளாண்மை செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், போர் தொழில் புரிபவர்கள், சமய சடங்குகளை நடத்தி வைப்பவர்கள் என்ற பிரிவினர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இதற்கு ஜாதியின் அடிப்படையில் வேதகால தொழில்கள் இல்லை. உதாரணமாக பிராமணர் என்ற சொல் கடவுளை துதிபாடல்களால் மகிழ்விப்பவர்கள் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டதே தவிர தொழிலின் அடிப்படையில் அல்ல என்று மறுப்பும் சொல்லப்படுகிறது. பொதுவாக ஆரியர்களின் பண்டையகால வாழ்க்கை முறையை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்கள் நிரந்தரமாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அல்ல. கால்நடைகளை மேய்பதற்காக புல் உள்ள பகுதிகளை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பவர்கள் என்பது தெரியவரும். நாடோடிகளாக இருக்கும் மக்கள் கூட்டத்தில் உடல் உழைப்பு செய்பவர்களுக்கும் காவல் காக்கும் வீரர்களுக்கும் தான் மதிப்பு மரியாதை இருக்குமே தவிர சடங்குகள் புரியும் உடல் உழைப்பு இல்லாத மனிதர்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இராது. அதாவது அவர்கள் விரும்பதகாத சுமையாகவே கருதப்படுவார்கள். ஆரியர்கள் கால்நடைகளை நம்பி வாழ்க்கை ஓட்டியவர்கள் என்பதினால் நிரந்தரமான வேளாண்மையை நிச்சயம் அவர்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே குறைந்த பட்சம் ரிக்வேத காலத்தில் மட்டுமாவது ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்பட நடைமுறை சாத்தியமில்லை. என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது உணர முடிகிறது. கால்நடைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டிய ரிக்வேத கால மக்கள் அதிகப்படியான மாமிச உணவுகளையே கொண்டவர்களாக இருந்தார்கள். ரிக்வேத ஆதாரப்படி திருமண சடங்குகள் யாகங்கள் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளின் மாமிச விருந்துகளே அதிகம் இருந்ததை அறியமுடிகிறது. செல்வத்தின் இருப்பிடமான பசுவை கொல்வது பாவம் என்ற பொருளில் அகணியா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் மாட்டு இறச்சியானது அக்காலத்தில் ஒதுக்கப்பட இல்லை என்று பல இடங்களில் அறிய முடிகிறது. மாமிசம் தவிர பார்லி, அரிசி, யவம் போன்ற தானியங்கள் பிராதன உணவாகவும் இருந்து இருக்கிறது. பால், தயிர், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. போதை தருகின்ற சோம பானம், சுறா பானம் போன்றவைகள் விருந்து காலங்களில் ஏகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நகைகள் அணிவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு. இந்திய மண்ணின் தன்மையே பொன்னின் மீது ஆசையை வரவழைத்து விடும் போல. இதற்கு ஆரியர்கள் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன? ஆரிய ஆண்களும் பெண்களும் கழுத்திலும், காதிலும் கையிலும், மூக்கிலும் ஏன் தலைமுடியிலும் கூட தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள். தாடி, மீசை வைத்த ஆண்களும், மழுங்க சிரைத்த ஆண்களும் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கிறார்கள். பெண்கள் மலர்களால் தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். மெல்லிய ஆடைகளும், கம்பளி ஆடைகளும் அவர்களின் உடையாக இருந்திருக்கிறது. ரிக்வேதகால ஆண்களும், பெண்களும் நடனமாடுவதில் வல்லவர்கள். வீணை, புல்லாங்குழல், முரசு போன்ற இசை கருவிகள் அவர்களின் இனிமையான வாய்பாட்டிற்கு மெருகூட்டி இருக்கின்றன. தேரோட்டம், குதிரை சவாரி அவர்களின் பொழுது போக்கு. ரிக்வேதகால மக்கள் சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள். விஸ்பலா என்பவன் கால்கள் துண்டிக்கப் பெற்றபிறகு செயற்கை கால்கள் பொருத்தியதாக ரிக்வேத பாடல் ஒன்று சொல்வதை வைத்து பார்க்கும் போது நமக்கே ஆச்சர்யம் வருகிறது. அறுவை சிகிச்சை செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காவிட்டால் நிச்சயம் செயற்கை கால் பொருத்த முடியாது. மருத்துவ தேவதைகளான அஸ்வினி குமாரர்கள் பல நோய்களுக்கான அரிய மருந்து வகைகளை அடுக்கடுக்காக சொல்லியிருக்கிறார்கள். யசஷ்மா என்ற நோய் பற்றி வேதம் அடிக்கடி சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு என்பது நமக்கு முழுமையாக தெரியவில்லை. அவர்களின் மருத்துவத்தை பற்றி பேசப் போனால் ஏராளமான பக்கங்கள் செலவாகும். வழி நடை பயணத்திலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியையும் ஆரியர்கள் செலவிட்டாலும், ரிக்வேத காலத்தில் சில இடங்களில் தங்க நேரிடும் போது வேளாண்மை தொழிலையும் அவர்கள் செய்திருக்கிறார்கள். நிஷ்கா என்ற நாணயம் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட பெருவாரியான வியாபாரம் பண்டமாற்று முறையில் தான் நடந்திருக்கிறது. நங்கூரம், பாய்மரம் போன்ற சொற்களை அவர்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதினால் கடல் வாணிபம் அவர்கள் இடத்தில் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை பற்றி ரிக்வேதம் பேசுவதால் கடல் பயணத்திற்காக அல்ல என்றாலும் நதிகளில் பயணப்படவும் அதன் மூலம் அவர்கள் பொருட்களை ஈட்டவும் அதிக வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம். ரிக்வேதகால கிராமங்கள் அதிகப்படியான தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன. பொதுவாக வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு தாவர உப பொருட்களால் கூரை வேயப்பட்டாலும் கூட மரத்தால் ஆன மச்சு வீடுகளும் மூங்கில் வீடுகளும் இருந்திருக்கின்றன. ரிக்வேத காலத்தில் இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது. கடவுகளுக்கு அவர்கள் எந்த தனிப்பட்ட உருவத்தையும் கொடுத்தது இல்லை. இயற்கை சக்திகளை வருணன், அக்னி, வாயு, பிருத்வி என்று பல்வேறு பெயர்களில் துதி செய்து வழிபட்டனர். அப்படி வழிபட்ட தெய்வங்களில் ரிக்வேதத்தில் மட்டும் இருபத்தி மூன்று சக்திகளாகும். ஆரம்ப காலத்தில் வேதகால மக்களால் தீயஸ் என்னும் கடவுளும், பிருத்வி என்ற கடவுளும் பெரிதும் வழிப்படபட்டனர். காலம் செல்ல செல்ல இத்தெய்வங்கள் சிறப்பாக கொண்டாடப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியலில்லை. இடி இடித்து மழை பெய்விக்கும் வருணணும், மேக கடவுளான இந்திரனுமே நான்கு வேத காலங்களிலும் முதலிடம் பெற்றிருந்தனர். அதிலும் வருணனுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டது. திராவிடர்களிடமிருந்து திருமாலை பற்றிய அறிவை பெற்ற பிறகு எப்படி திருமாலானவன் பாவங்களை மன்னிப்பவனாக கருதப்பட்டானோ அப்படியே வருணனும் வேதகாலத்தில் கருதப்பட்டான். வருணன் இந்திரன் ஆகிய கடவுள்களை தவிர மருத்துகள் புயல் கடவுளாகவும் ருத்திரன் மின்னல் கடவுளாகவும் வணங்கப்பட்டான். சிவன், திருமால், விநாயகன், முருகன், பார்வதி மகாலஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றிய நேரடியான குறிப்புகள் வேதங்களில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய மறைமுகமான குறியீடுகள் வேதத்தில் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவை விதாத்,ஹிரன்யகர்ப்பன், பிரஜாபதி பிராமணஸ்பதி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவைகளையெல்லாம் பார்க்கும் போது வேதகாலத்தில் பல கடவுள் வழிபாடு இருந்ததாக நமக்கு தோன்றும். நான் பல சமயங்களில் இந்து மத சிறப்புகளை சொல்லுகின்ற போது சில பகுத்தறிவாத நண்பர்களும் மாற்றுமத சகோதர்களும் இந்து மத வேதங்கள் கடவுள் பல என சொல்லி தவறான பாதையை காட்டுகிறது என்று குறைபட்டவர்களும் உண்டு. குற்றம் சாட்டியவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் இந்து மதத்தில் பல கடவுள் பெயர்கள் உண்டு. அவைகள் கடவுளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உள்ள பெயரே தவிர அவரே பல அல்ல, என்பது தான். உதாரணமாக இயற்கை மழையாக கொட்டுகின்ற போது இந்திரன் என்று அழைக்கப்படுகிறது. மழை தண்ணீரே வெள்ளமாக பாயும் போது வருணன் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் இயற்கை ஒன்றே தான். இந்து மத தத்துவப்படி கடவுள் இயற்கையாகவும் இருக்கிறார். இயற்கைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறார். இயற்கையை வழிநடத்துபவராகவும் இருக்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடலை கீழே தருகிறேன். ‘இந்திரனென்றும், மித்திரனென்றும், வருணனென்றும், அக்கினியென்றும், தெய்விகம் பொருந்திய கருடமதன் என்றும் உன்னை வழங்குவர்.’ ‘ஒரு பொருளாம் உனக்குக் கவிஞர் பல பெயர்கள் அளிப்பார் அக்கினியும், யமனும் மாதிசுவனும் நீயே அன்றோ?’ இதை விட சிறந்த ஆதாரம் வேறு எதையும் தர இயலாது. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் இன்று கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்ற மதங்கள் கூட இந்திய வேதத்தில் இருந்து தான் ஒரு தெய்வ வழிபாட்டை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம். அதாவது பாரசீகத்தில் தோன்றிய சொராஸ்தியர் என்பவர் உபநிஷத ஞானியொருவரின் உபதேசத்தை கேட்ட பிறகே அஸ்சரமஸ்தா என்ற முழுமுதற் கடவுளை அறிந்து சொராஸ்திய மதத்தை ஸ்தாபித்தார். அவரின் அஸ்ரமஸ்தா தான் யுத மதத்தின் ஜெகோவா கடவுளானார். ஜெகோவா கடவுளே கிறிஸ்துவத்தில் பரிசுத்த ஆவியானார். இந்த பரிசுத்த ஆவிதான் இஸ்லாம் சொல்லும் அல்லா. எனவே உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் ஆதார தத்துவத்தை கொடுத்தது இந்து மத வேதங்கள் தான். வேதங்களை பற்றி பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் வேதங்களின் கருத்துகளை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறோம். அப்படி வருந்தியவர்களில் வருத்தங்களை போக்குவது நமது கடமையாகும். எனவே நான்கு வேதங்களும் எதை பற்றி பேசுகிறது என்பதை எடுத்து சொல்வது அவசியமாகிறது. அதனால் இந்த அத்யாயத்தில் ரிக் வேதத்தின் முழுமையான வடிவத்தை சுருக்கி காட்டுவது மிகவும் முக்கியமாகும். காரணம் என்னவென்றால் வேதங்களை புரிந்து கொண்டால்தான் இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் கொண்டு வரப்பட்டது இந்த வேதத்தின் மூலமாகத்தான் அதாவது உலகின் முதல் நூல் ரிக் வேதம் தான். நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும். இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது அதாவது நான்கு வேதங்களில் முக்கால் பங்கு பாடல்கள் ரிக் வேதத்திற்கு சொந்தமாகும். இந்த வேதம் பத்து மண்டலங்களாக அதாவது பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்தகமும் தனிதனியான விஷயங்களை எடுத்து சிறப்பாக பேசுகிறது. ரிக் வேதம் தனிமனிதனாலோ குழுக்களாகலோ உருவாக்கப்பட்டது அல்ல. சிந்து நதி தொடங்கி கங்கை நதி வரையிலும் பரவி கிடந்த பல ஞான புருஷர்களால் கண்டறியப்பட்டு பல தலை முறைகளால் உருவாக்கப்பட்டதே ஆகும். ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும், நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும், ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும், எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது. லட்சத்திற்கு மேல் பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தாலும் அவைகள் சமயப் பாடல்கள், வாழ்க்கை பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்று மூன்று வகையாக பிரித்துவிடலாம். இருப்பினும் இந்த பாடல்களில் வழிபாட்டு பாடல்களான சமய பாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது உடம்பும் மனதும் தனிதனியானவைகள் அல்ல. ஒன்றாகவே ஆனது என்று ஆதிமனிதர்கள் நம்பினார்கள். வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையை கண்டறிந்த பிறகு பண்பட்ட சிந்தனை வளர்ச்சி அதிகரித்த பிறகு உடல் வேறு உள்ளம் வேறு என்ற தெளிவை பெற்றார்கள். இந்த தெளிவான அறிவு மக்களிடம் எப்படி இருந்தது என்பதை ரிக் வேத தத்துவப் பாடல்கள் தெளிவுபடுத்துகிறது. அலை வீசும் கடலுக்கடியில் சில முத்துக்கள் தான் கிடைக்கும் என்பதை போல் சமயப் பாடல்கள் என்ற அலைகளுக்கிடையில் தத்துவப்பாடல்கள் என்ற சில முத்துக்கள் தான் ரிக் வேதத்தில் பின்னிக் கொண்டிருக்கின்றன. இனி ரிக் வேதத்தின் ராஜபாட்டைக்குள் பிரவேசித்து வேதக் கருத்துகளை தரிசனம் செய்வோம். மனிதன் என்பவன் யார் என்ற கேள்வியை ரிக்வேதம் முன் வைத்து மனிதன் உயிர், உடம்பு, ஆத்மா ஆகிய மூன்றின் கலவை என்ற பதிலை தருகிறது. இந்த மூன்றும் இல்லாத மனிதனை கற்பனையில் கூட பார்க்க முடியாதல்லவா. உயிர் தன்னை வெளிப்படுத்த உடம்பு என்பது அவசியம் அந்த உடம்பில் தான் ஆத்மா கொலுவிருக்க முடியும். அழகிய இந்த மூன்றையும் மனிதனுக்கு கொடுப்பது யார்? அழகான சரீரம் அமைய கருமுட்டையை கொடுப்பவள் தாய். அந்த சரீரம் உருவாக விந்துவான உயிரைக் கொடுப்பவன் தகப்பன். உயிரையும் உடலையும் இயக்கும் சக்தியாகிய ஆத்மாவை கொடுப்பவன் இறைவன். உடலும் உயிரும் தந்த தாய் தந்தையை கண்களால் காணமுடியும். அறிவுப் பொருளான ஆத்மாவை கொடுத்த இறைவனை வெறும் கண்களால் காணமுடியாது. அவனை தரிசிக்க ஞானக் கண் வேண்டும். ஞானக்கண் பெற்று இறைவனை தரிசித்து விட்டால் ஆனந்தம் என்பது அன்றாட வாழ்வின் அனுபவமாகி விடும். ரிக் வேதத்திற்கு சொந்தமானதை அறிய உபநிஷதம் மனிதன் என்பவன் அன்னநிலை, பிரான நிலை, மனோநிலை, விஞ்ஞான நிலை, ஆனந்த நிலை என்று ஐந்து வகையான ஆக்கப்பட்டதாக சொல்கிறது. இந்த ஐந்தில் அன்னநிலை என்பது உடம்பை குறிக்கும், பிரான நிலை உயிரை குறிக்கும், மனோ நிலை ஆத்மாவாகும், விஞ்ஞான நிலை அறிவாகிய ஞானமாகும், ஆனந்த நிலை என்பது இறைவனோடு கலப்பதால் ஏற்படும் பெருங்களிப்பாகும். இதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையிலும் நாம் எடுத்து கொள்ளலாம். அதாவது கருவிலே உருவாகிய தாய் நம்மை தகப்பனிடம் தருகிறாள். தகப்பன் ஞானம் பெறுவதற்காக நம்மை குருவிடம் அனுப்புகிறார். ஞானத்தை தரும் குருவோ நம்மை அழியாத ஆனந்தத்தை தரும் ஆண்டவனிடத்தில் கொண்டு சேர்க்கிறான். எனவே மனிதனின் இறுதி லட்சியம் இறைவனின் திருவடிகளை சேர்வதே ஆகும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது. ரிக் வேதத்தில் புகழ்பெற்ற பருஷசூத்தகம் பத்தாவது மண்டலத்தில் அடங்கியுள்ளது. இந்த சூத்தகத்திலுள்ள மந்திரங்கள் மிகவும் அர்த்த புஷ்டியானது ஆகும். அந்த சூத்தகத்தின் கருத்தை சுருக்கமாக விளக்கி சொல்ல முயற்சிப்போம். விராட் புருஷனான கடவுள் நாம்காணும் இடத்திலும் கானாத இடத்திலும் பரவிகிடக்கிறான். ஏனென்றால் அவனது உருவம் கண்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது. அவனுக்கு ஆயிரம் தலைகளும் பல்லாயிரம் கைகளும் பல நூறு கோடி கால்களும் உள்ளன. பூமியின் எல்லா திசைகளையும் அண்டசராசரத்தின் ஒவ்வொரு துகள்களையும் அவனது கைகள் தாங்கி கொண்டிருக்கின்றது. இந்த சூத்தகத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாமல் நுணுக்கரிய நுண்ணியனாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் இறைவனுக்கு மனித உடல்கள் இருப்பது போன்ற கற்பனையை வேத ரிஷி வர்ணனை தருகிறார் கடவுளை மனித வடிவாக்கியது சரிதானா முறைதானா என்ற வாதங்கள் வேத உரையாசியர்களால் இன்று வரை எழுப்பட்டு கொண்டிருக்கிறது. பதில் தான் இன்னும் கிடைத்த பாடில்லை. ஏன் இந்த கேள்வி புருஷ சூத்தகத்தை பார்த்து கேட்கபடுகிறது என்றால் 33 வகையான பெயர்களைக் கொண்டு கடவுள் வர்ணனை செய்யப்பட்டாலும் வேத கால கவிஞர்களான ரிஷிகள் காட்டியது தேவதைகள் இயற்கையின் வடிவங்களாக இருக்கிறது என்பது தானே தவிர மனிதர்களாக இருப்பதாக அவர்கள் உறவில்லை. மின்னலை ஆயுதமாகக் கொண்ட இந்திரன் தான் வேதப் பாடல்களில் முழுமுதற்கடவுளாக கருதப்படுகிறான். மக்களின் அபிமனாத்திற்குய கடவுளாகவும் நான்கில் ஒரு பகுதி இந்திரனை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்கு அடுத்த படியாக அக்னியும் மூன்றாவதாக மழையை தரும் வருணனும் நான்காவதாக காற்றுக் கடவுளான வாயுவும் சூரிய சந்திரர்களும் வணங்கப்படுகிறார்கள். பருவக்காலங்களில் வரும் மந்த மாருதமும் சண்டமாருதமும் காலை பொழுதின் நாயகியான உஷாவும் கோபத்தோடு இருக்கும் ருத்திரனும், விஷ்ணுவும், அஷ்வினி தேவர்களும், பிரகஸ்பதி, பிரஜாபதி, அதிதி என்று இன்னும் பல தேவதைகளும் வேத ரிஷிகளின் பாடல்களால் ஆராதிக்கபடுகிறார்கள். இந்த பாடல்களில் எந்த தேவதையும் மனித வடிவமாக சித்தரிக்கப்படவில்லை. மாறாக புருஷ சூத்தகம் மட்டுமே கடவுளை மனித வடிவில் வர்ணனை செய்கிறது. அது ஏன்? மிக முக்கியமாக இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனை மனித வடிவில் காட்ட முயற்சிக்கும் புருஷ சூத்தக பாடல் ரிக் வேதத்தின் கடைசி பகுதியாகத்தான் வருகிறதே தவிர முதற்பகுதியிலோ நடுப்பகுதிலோ வரவில்லை. எனவே சென்ற அத்யாயத்தில் நாம் சிந்தித்த படி பூர்வ குடிமக்கள் தான் கடவுளை மனித வடிவில் வணங்கினார்கள் அவர்களின் கொள்கைகளை பிறகு வேதங்களோடு இணைக்கப்பட்டன என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறதல்லவா. ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை. வர்ணம் என்ற வார்த்தை மனித நிறங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர சாதியை குறிக்க பயன்படவில்லை. வெள்ளை நிறம் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள். கருப்பு நிற மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள். தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும். இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல் இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது. ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள். ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கருதப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல் சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கபட்டார்கள் அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை. சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம். இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வா மித்திரர் மகரிஷி அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவான். இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறான். வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும். இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள். நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வலுவாக இருப்பதை பலர் அறிவார்கள். ஆனால் வேதகாலத்தில் உணவை தயாரிப்பதிலும் உண்பதிலும் எந்த பாகுபாடும் இருந்ததாக தெரியவில்லை. ரிக் வேதத்திலுள்ள பல பாடல்களில் சூத்திரர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் உண்டதற்கான பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. உணவு விஷயத்தில் மட்டுமல்ல திருமண விஷயத்திலும் பாகுபாடுகள் வேதகாலத்தில் இல்லை. சத்திரிய பெண்ணை பிராமணனும், பிராமணப் பெண்ணை சூத்திரனும் மணந்து கொண்டதாக பலத் தகவல்கள் கிடைக்கின்றன. இதை எயாதி, ருஷ்யசுருந்தர் ஆகியோர் கதைமூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது. கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது. மனிதன் எங்கிருந்து வந்தான் எங்கே இருக்கிறான் இறுதியில் எங்கே போகிறான் என்பதை இந்த உபநிஷதம் ஒரு பாடல் மூலம் அழகுபட விளக்குகிறது. பிரம்மம் என்னும் கடவுளை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட பிறகு முனிவர் தமது தந்தையான வருண தேவனிடம் கேள்விகள் கேட்கிறான் அதற்கு வருணதேவன் பல பதில்களை சொல்லி கடைசியாக எதிலிருந்து எல்லாப் பொருட்களும் வெளியேறுகிறதோ எதனால் எல்லாப் பொருட்களும் காக்கப்படுகிறதோ எதில் எல்லாப் பொருட்களும் ஒரு நாள் திரும்பி வந்து அடங்குகிறதோ அதுதான் பிரம்மம் என்று வருணதேவன் குறிப்பிடுகிறான். இந்த சொற்றொடரில் வருகின்ற பொருள்கள் என்னபதம் மனிதன் உட்பட சகல ஜீவ ராசிகளையும் ஜடப் பொருட்களையும் குறிக்கிறது. இப்படி மனிதனையும் மற்ற பொருட்களையும் படைத்த இறைவனுக்கு எப்படிபட்ட உருவத்தை கொடுக்கலாம் என்று வேத ரிஷி சிந்திக்கிறார். இறைவனை மிருகமாகவோ பறவையாகவோ சிந்தித்து பார்ப்பதை விட மனிதனாக சிந்தனை செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று அவர்கருதுகிறார். ஏனென்றால் அவர் பறவைக்காகவோ மிருகத்திற்காகவோ இறைவனை பற்றிய தகவலை தரவில்லை அல்லவா. மனித வடிவில் இறைவனை உருவப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு தலையும் இரண்டு கால்களும், கைகளும் கொடுத்தால் அவனும் சாதாரண மனிதனாக கருதப்பட வாய்பிருக்கிறதே தவிர சர்வசக்தி வாய்ந்த ஆண்டவனாக கருதமுடியாது. அதனால் வேதக் கவிஞன் இறைவனுக்கு ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும் கொடுத்து உருவகப்படுத்துகிறான். தன்னைக் காட்டிலும் சக்தி மிகுந்த வேறு ஒன்று இருந்தால்தான் மனிதன் அதை பயத்துடனும் வியப்புடனும் மதிப்பான். இந்தக் கருத்தை கொண்டுதான் ரிக் வேதத்தில் புருஷ சூத்தகத்தில் பிரமாண்டமான வடிவத்தை இறைவனுக்கு கொடுத்து வேதகால கவிஞன் போற்றிபாடுகிறான். அத்தகைய பிரமாண்ட வடிவுடைய ஈஸ்வரனுக்கு விராட் புருஷன் என்ற பெயரையும் சூட்டுகிறான். விராட் புருஷனை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது. விராட் புருஷனின் தன்மைகளை பற்றி புருஷ சூத்தகம் விளக்கம் கொடுப்பதை பார்ப்போம். விராட் புருஷன் தனியாகவே இருக்கிறான் இதே நிலையில் தான் முன்பும் இருந்தான் இப்போதும் இருக்கிறான் இனி எப்போதும் அப்படியே இருப்பான். அவன் அழிவு என்பதை அறியாதவன் உணவை எடுத்துக் கொள்ளும் எல்லா உயிர்களும் இவனிடமிருந்தே வருகின்றது. உயிரை உற்பத்தி செய்யும் அவன் ஒவ்வொரு ஜீவனுக்கு உணவையும் உற்பத்தி செய்கிறான். உணவு என்பது உடலை வளர்ப்பது அன்று. உயிரை வளர்ப்பதாகும். விராட் புருஷன் எல்லா தெய்வங்களை விட மேம்பட்டவன். இவனுக்கு இணையாக எந்த கடவுளும் இல்லை. ஏனென்றால் இவனே எல்லா கடவுளுமாக இருக்கிறான். இவனது மனதிலிருந்துதான் சந்திரன் தோன்றினான் இவன் கண்களிலிருந்து சூரியன் தோன்றினான். இந்திரனும் அக்னியும் இவனது வாயிலிருந்து தோன்றியவர்களே. இவன் சுவாசம் தான் வாயுவாகும். உலகத்தில் காணுகின்ற யாவும் காணாத எல்லாமும் இவனன்றி வேறில்லை. உலகப் பொருளாகவும் இருக்கிறான் அந்த பொருட்களுக்கு அப்பாலும் இருக்கிறான். இப்படி 16 பாடல்களாக புருஷ சூத்தகம் பிரம்மத்தை பற்றியும் அதன் உருவம் ஆற்றல் குறித்து விளக்கி கொண்டு போகிறது. இந்த விளக்கங்களுக்கு இடையில் மனித சிருஷ்டியை பற்றியும் பேசுகிறது. இனி ரிக் வேதத்தின் அக்னி என்ற இரண்டாவது மண்டலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம். அக்னியை அழியக்கூடிய பிறவிகொண்ட மனிதனான எங்களுக்கு நாள்தோறும் சக்தியை கொடு அதேநேரம் அழிவற்ற நிலையை நோக்கி செல்லும் பாதையை காட்டி அருள் கொடு இப்போதும் இனி எப்போதும் குறைவில்லாத வளம் கொழிக்கும் வாழ்க்கையையே அறிவாளி வேண்டுகிறான். அந்த குறைவற்ற நிறைவான வாழ்வை எப்போதும் கொடுத்துக் கொண்டே இரு இப்படி அக்னி தேவனை நம்பிக்கையுடன் வழிபடும் வேத ரிஷி உரிமை நிறைந்த உறவுடன் அக்னியின் அருகில் நெருக்கமாக சென்று அக்னியே எங்களிடம் அன்பு கொண்டவனாகவே நீ எப்போதும் இருக்கிறாய். நீ தான் எங்களுக்கு உயிர் கொடுத்த தந்தை என்பதை நாங்கள் அறிகிறோம். நீ எவராலும் வெல்ல முடியாத வல்லமை படைத்தவன் எனவே உனது குழந்தைகளை பலசாலிகாளக பார்க்கவே நீ விரும்புவாய். உன்னை வணங்கும் எங்களுக்கு நீயே பாதுகாவலன் நாங்கள் கேட்பதெல்லாம் எங்களை நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் பெருக்கு. உன்னிடம் நாங்கள் சரணடைகிறோம். இந்த ரிக் வேத பாடல் ஒரு தோத்திர பாடலாக மட்டுமல்லாது அந்தகால மக்களின் நிலையை படம் பிடித்து காட்டும் காலக் கண்ணாடியாகவும் இருக்கிறது. வேதப் பாடல்களை வடித்தெடுத்த இந்த மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் வாழ்ந்த மற்ற மனித கூட்டத்தோடு ஒற்றுமையாக இல்லை. அவர்களுடன் போராடிக் கொண்டே இருந்தனர் மனித எண்ணிக்கையும் அடிப்படையில் அன்றைய யுத்தத்தில் வெற்றி தோல்விகள் தீர்மாணிக்கப்பட்டதால் ஆள் பலம் தங்களுக்கு வேண்டுமென்று நெருப்பு தேவியிடம் பிரார்த்தனை செய்கிறான். இதில் இன்னொறு உண்மையும் மறைந்திருக்கிறது. நெருப்பு என்பது விரகுகளை மட்டுமே பற்றிக் கொண்டு எரியும் ஒரு பொருள்ளல்ல எல்லா உயிர்களிடத்திலும் உடம்பிற்குள் அக்னி மறைந்திருக்கிறது. ஜனனத்தை அதிகப்படுத்தும் காமமும் ஒரு வகையில் நெருப்புதான் பித்த உடம்பு அதாவது சூடான உடம்பும் படைத்த மனிதனால் உடனுக்குடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே இந்த பாடல் அக்னியை போற்றும் பாடலாக மட்டும் அல்லாது இதை முறையிலான சந்தலயங்களோடு ஓதினால் மனித உடம்பில் வெப்பத்தை அதிகபடுத்தும் அதிர்வுகளும் நிறைந்துள்ளதை அனுபவத்தில் உணரலாம். இதனால்தான் வேத ரிஷி அக்னியை தந்தை என்று உணர்வு பூர்வமாக பாடுகிறான். அதனுடைய உறவையும் நெருக்கத்தையும் வேண்டுகிறான். எல்லா வெளிச்சங்களிலேயும் அக்னியை காண்கிறான். சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மின்னலும் அவனுக்கு அக்னி வடிவாகவே தெரிந்தது. அக்னியை பற்றி வேத பாடல் ஆசிரியர் கூறுவதை உபநிஷத ஞானி தத்துவ நோக்கில் நமக்கு காட்டுகிறான். இருட்டிலிருந்து உண்மைக்கு என்னை கூட்டிசெல்வாயாக பொய்யிலிருந்து என்னை மீட்டு செல்வாயாக அழிவிலிருந்து அழிவற்ற அமிர்த நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக என்று அக்னி தேவனிடம் முறையிடும் உபநிஷத வாக்கியம் அக்னியை ஞான வடிவாக நமக்கு காட்டுகிறது. ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம் இந்திரனையும் மூன்றாவது பகுதி வருணனையும் நான்காவது வாயுவையும் பற்றி பேசுகிறது. அவையாவும் ஏறக்குறைய முதல் மண்டல கருத்துகளை போலவே இருப்பதனால் இனி ஐந்தாம் மண்டலத்தில் சூரியனை பற்றி சொல்லப்பட்டிருப்பதை பார்ப்போம். வேத ரிஷி சூரியனை துதிக்கும் போது அவனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழ்கிறான். சூரியனை இருட்டின் பகைவன் என்றும் மனிதச் சோம்பலின் எதிரி என்றும் பாராட்டுகிறான். சூரியனை சோம்பலின் எதிரியாக காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வேதகால மனிதன் சோம்பி இருக்க முடியாத நிலையில் இருந்தான். பகைவர்களிடமிருந்தோ கொடிய மிருகங்களிடமிருந்தோ சதாகாலமும் அவனை அபாயம் துரத்திக் கொண்டே இருந்தது. சூரியன் மறைந்து விட்டால் அவனது அச்ச உணவு அதிகபட்டது பாதுகாப்புணர்வு இன்னும் அதிகமாக தேவைப்பட்டது அதனால் அவன் இருட்டை வெறுத்தான் இருட்டை கிழித்தெரியும் பகலவனை வரவேற்றான். ஒளி தருகின்ற அனைத்து பொருட்களையுமே தனது நண்பனாக கருதி அன்பு செலுத்தினான் ஆராதனை செய்தான். இந்த உணர்வுகளை சூரியனை பற்றிய ரிக் வேதப் பாடல்கள் தெளிவாக காட்டுகிறது. சூரிய தேவன் எல்லாம் தெரிந்தவன் சகல சக்திகளும் வாய்க்கப் பெற்றவன் பலவாறு வடிவம் கொண்ட உயிர்கள் அனைத்திற்கும் போதனை செய்யும் ஆசியரை போன்றவன் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் அவன் உணவளிப்பவன். வைகரை பொழுதின் இவன் தலை உயர்த்தி பார்த்து விட்டாலே மனித மனங்கள் இன்பத்தின் எல்லையை தொட்டுவிடுகிறது. பசியை நீக்கும் நேரத்தை மட்டும் சூரியன் தருவதில்லை. ஞானமும் அறிவும் ஆற்றலும் பெறுகின்ற பொழுதையும் சூரியன் தருகிறான். சூரியனின் ஞானக் கதிர்கள் மனநிலத்தை ஆழ உழுது அறிவு பயிர்களை விதைக்கிறது. இதனால் புத்திசாலிகள் சூரியனை ஆராதிக்கிறார்கள். தெய்வீகமான எண்ணங்களை வளர செய்பவன் மனச்சோர்வுகளை போக்க செய்பவனும் தானியங்களை செழிக்க செய்பவனும் சூரியனே ஆவான் என்று சூரியனை போற்றும் இந்த பாடல் மேலோட்டமாக பார்க்கும் பொழுது சாதாரணமாக நமக்கு தெரியும் ஆழமான சிந்தனையை செலுத்தினால் ஆதிகால இந்து எத்தகைய நுட்பம் வாய்ந்தவனாக இருந்தான் என்பது புலப்படும். வைகரையில் சூரிய தரிசனத்தை பெறும்படி வேத ரிஷி ஏன் வற்புறுத்துகிறான். அந்த நேரம் மனிதனின் உடலும் மனமும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது. சூரிய கதிர்கள் கண்களிலும் உடல் முழுவதும் அந்த நேரம் பரவினால் மனிதனின் அறிவாற்றல் பலமடங்கு கூடும். சிந்தனையின் வேகம் செழுமைபடும். எதையும் துணிந்து செய்யக் கூடிய மன தைரியம் அதிகரிக்கும். உடலிலுள்ள மாசுகள் அழிந்து ஆரோக்கியம் பெருகும். இந்த உண்மையை அவன் அறிந்து பாடினானா அறியாமல் பாடினானா என்பது முக்கியமல்ல. இந்த பாடல் வரிகள் சூரிய சக்தியை நமக்கு அதிகபடுத்தி தருவதாக இருப்பது அறிவியல் உண்மையாகும். இனி சமுதாய சிந்தனைகளை கொண்ட ரிக் வேதத்தின் ஆறாவது மண்டலத்தை பார்ப்போம். சமூகம் என்பது ஆண்களையும் பெண்களையும் கொண்டது மட்டுமல்ல குழந்தைகளையும், முதியவர்களையும், பல மற்றவர்களையும், நோயாளிகளையும் கொண்டதே ஆகும். பலசாலிகள் அப்படி பட்ட பலஹீனர்களை காப்பாற்ற வேண்டும் உணவளித்து பாதுகாக்க வேண்டும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது. ஆறாவது மண்டலம் 75-வது சூத்தகம் சமூகத்தை நேசி அதற்கு மதிப்பு கொடு, பசியால் வாடுவோருக்கு ஆகாரம் கொடு, சிரமத்தில் சிக்கியோன் துன்பத்தை போக்க போராடு, அதற்காக உனது சக்தியை பெருக்கிகொள், ஆற்றலை வளர்த்துக் கொள், உனது கௌரவத்தை திரட்டிக்கொள், உயர்ந்த செயலுக்காக உன்னிடமுள்ள துணிச்சல் உச்ச நிலையை அடையட்டும். உனது கைகளிலுள்ள ஆயுதங்கள் எதிகளை மட்டுமல்ல அதர்மத்தையும் சாய்க்கும் ஆற்றலை பெறும் வண்ணம் பயிற்சி எடுத்துக்கொள். தர்மத்திற்கு மாறானவைகளிடமும் எதிகளிடமும் நிமிர்ந்து நிற்க்கும் சுபாவத்தை வளர்த்துக் கொள். மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பண்பை பெறுக்கி கொள் என்றெல்லாம் மனிதனுக்கு அறிவுரை தருகிறது. அடுத்ததாக முழுமுதற்கடவுளான விஷ்ணுவை பற்றி குறிப்பிடும் ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தை பார்ப்போம். இந்த இடத்தில் ஒரு உண்மையை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். வேத பாடங்களில் எந்த இடத்திலேயும் விஷ்ணுதான் மூலப்பரம் பொருள் என்று குறிப்பிடப்படவில்லை. இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற முக்கியத்துவம் கூட கொடுக்கப்படவில்லை. விஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால்தான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் என்ற கருத்து வேதகாலத்திற்கு பின்பு வந்ததே ஆகும். உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார். இப்படி வேதத்தில் விஷ்ணுவை பிரதானபடுத்தாமைக்கு வேறொரு காரணத்தையும் கூறலாம். வேத பாடல்கள் அனைத்துமே ஒருவரால் உருவாக்கப்படவில்லை ஒரே காலகட்டத்திலும் ஆக்கப்படவில்லை பல ரிஷிகளால் பல காலத்தில் அறியபட்டதே வேதபாடல்களின் தொகுப்பாகும். எனவே ஒவ்வொரு பாடலும் தான் போற்றும் தெய்வமே சிறந்தது உயர்ந்தது இணையற்றது என்று கருதுகிறது. அதனால் மற்ற தெய்வங்களை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் விஷ்ணுவை பாடிய ரிஷிகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதனால் வேதத்தில் விஷ்ணுவின் தரம் தாழ்த்தபட்டிருப்பதாக கருதமுடியாது. இந்திய தத்துவங்கள் சிந்தனை மரபுகள் மதக் கோட்பாடுகள் உருவாக வேதங்கள் பாதைகளை மட்டுமே அமைத்து கொடுத்து இருக்கிறது மற்றபடி உள்ள வளர்சிகள் அனைத்துமே உபநிஷதங்களாலும் இதிகாச புராணங்களாலும் ஏற்படுத்தப்பட்டிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் எந்த குழப்பம் ஏற்படாது. இனி விஷ்ணுவை பற்றிய வேத வரிகளை பார்ப்போம். விஷ்ணுவே நீ தான் அனைத்திலும் உயர்ந்தவன். மிகச் சிறந்த அரியாசனத்தில் அமர்ந்திருப்பவன் ஏனென்றால் இந்த மண்ணில் பிறந்த நாங்கள் பூமியின் அனைத்து பகுதிகளையும் அறிந்து கொள்ள முடியாத அர்பர்களாக இருக்கிறோம். ஆனால் நீ எல்லா இடங்களை அறிந்தவனாகவும் எங்கும் இருப்பவனாகவும் எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளாய். நீ விஸ்வரூபம் எடுத்து உயரும் போது எல்லாமே உனக்குள் அடங்கி விடுகிறது. உனது விஸ்வ ரூபத்திற்கு எல்லைகளை வகுக்கும் ஆற்றல் எங்களுக்கு இல்லை. அதனால் உனது பெருமையில் சந்தேகப்படும் தகுதி எந்த மனிதனுக்கும் இல்லவே இல்லை. நீ தான் உயர்ந்தவன் சிறந்தவன் என்று உன்னை துதிக்கும் எனக்கு ஆதாரமாக இருப்பதுவும் நீயே ஆகும். நீ பெரு வடிவம் எடுத்து நிர்க்கும் பொழுது உனது சிரசு சொர்க்கத்தையும் தாண்டி மேலே நிற்க்கிறது. உன் பலம் பொருந்திய பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கண்ணுக்கு புலப்படாமல் இருக்கின்றன. திசைகள் அனைத்தும் உனது கைகளுக்குள் சிறைபட்டு கிடக்கிறது. மனித சமூகம் தனது சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டாலும் உனது பெருமையின் ஒரு துளியை மட்டுமே கணித்து பார்க்க முடியும். இது இப்போது இருக்கும் எங்களின் கருத்துமட்டுமல்ல. எங்களுக்கு முன்னால் இருந்தவர்களும் இப்படித்தான் கருதினார்கள் இனி வரப்போகிறவர்களும் இப்படிதான் கருதுவார்கள். விஷ்ணுவை பற்றி இன்னும் சில குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளது. அவற்றில் முக்கியமானதாக இந்த பகுதியை நான் சுட்டி காட்டுவதற்கு வேறொரு காரணம் உண்டு. நமது புராணங்களை பற்றி குறிப்பிடும் பொழுது அவைகள் வேதங்களுக்கான விளக்க உரைகளே என்று பொதுவான கருத்துகள் சொல்லப்படுவது உண்டு. விஷ்ணுபுராணத்தில் நாராயணன் வாமன அவதாரமும், திருவிக்ரம் அவதாரமும் எடுத்த விதத்தை வர்ணனை செய்யப்பட்டிருப்பதை எல்லோரும் அறிவீர்கள். அந்த வர்ணனையோடு ரிக் வேத கருத்துகளை பொறுத்தி பார்த்தால் வேத விஷயங்கள் புராணங்களில் எந்த வகையில் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும். மேலும் ரிக் வேதத்தில் வேதத்தின் பெருமையை பற்றி எட்டாவது மண்டலமும் விடியலை பற்றி ஒன்பதாவது மண்டலமும் சதுரங்கம் முதலான அறிவு சார்ந்த விளையாட்டுகளை பற்றி பத்தாவது மண்டலமும் பேசுகிறது. யஜூர் வேதம் இந்த பெயர் பெறுவதற்கு வழிபடுதல் என்ற பொருளைக் கொண்ட யஜ் என்ற வினைச் சொல் மூலக் காரணமாகும். நான்கு வேதங்களில் இது இரண்டாவது இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த வேதத்தில் அரசர்களும் குடிமக்களும் பின் பற்ற வேண்டிய சடங்கு முறைகளை பற்றியும் அந்த சடங்குகளை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களை பற்றியும் விரிவாக கூறுகிறது. அதனால் இது மந்திரப்பகுதி, சடங்கு பகுதி என்று இரு பகுதிகளை கொண்டதாகவும் மந்திரங்களை கூறும் பகுதி சுக்கில யஜூர் என்றும் சடங்குகளை கொண்ட பகுதி கிருஷ்ண யஜூர் என்றும் பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது. யஜூர் வேதத்தில் உள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 1946 ஆகும். இந்த பாடல்கள் பெறும் பகுதி சுக்கில யஜூர் வேதத்திற்குள் அடங்கி விடுகிறது. கிருஷ்ண யஜூர் வேதப்பகுதி உரைநடையாகவே இருக்கிறது. பொதுவாக மற்ற வேதங்களை போலவே இதிலும் சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யம் என்ற மூன்று பிரதானப் பகுதிகளும் கடைசியாக தத்துவ விளக்கங்களை கூறும் உபநிஷத பகுதியும் உண்டு. யஜூர் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டிருப்பதால் ஆரண்யம் என்பது சுக்கில பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. யஜூர் வேதம் 40 அத்யாயங்களை கொண்டது இதில் பெரிய அத்யாயங்களும் சிறிய அத்யாயங்களும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தனிப்பட்ட விஷயத்தை பற்றி மட்டுமே பேசவில்லை. பலதரப்பட்ட விஷயங்களின் கலவையாகவே ஒவ்வொரு அத்யாயமும் அமைந்துள்ளது. இதில் உள்ள மந்திரங்கள் சடங்குகளின் போது ஒருவராலோ, பலராலோ ஓதப்படும் வண்ணம் அமைந்துள்ளது. சடங்குகள் எதற்காக செய்யப்பட்டாலும் நெருப்பு இல்லாமல் எந்த சடங்குகளும் வேதகாலத்தில் நிகழ்த்தப்பட முடியாது. சடங்குகளின் நெருப்பு அவசியம் என்பதனால் அந்த நெருப்பை மூட்ட சமித்துக்கள் என்ற மரக்குச்சிகள் தேவை. எல்லா மரங்களிலுள்ள உலர்ந்த குச்சிகளை சமித்துக்கள் என்று அழைத்துவிட முடியாது. சில குறிப்பிட்ட வகை மரக்குச்சிகளை தான் குறிப்பாக அரசு, மா, தேவதாரு, சந்தனம் போன்ற மரக்குச்சிகளை தான் வேதகால ரிஷிகள் சமித்துக்கள் என்ற தகுதியில் அழைத்தார்கள். அவர்கள் அன்று சமித்துக்கள் என்று தனித்தகுதி சிறபித்த மரக்குச்சிகளே இன்றளவும் யாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சடங்குகள் என்பது ஒரு தனி மனிதனின் சுய தேவைக்காகவும் ஒரு சமுதாயத்தின் பொது நோக்கத்திற்காகவும் நடத்தப்பட்டது. தனி மனிதனுக்குரிய சடங்குகளை செய்ய எழுப்பப்படும் அக்னி குண்டங்கள் அல்லது யாகசாலைகள் ஆகவனியம், தட்சனாக்னியம், காரக பத்தியம் என்று மூன்று வகையாக அழைக்கப்பட்டது. எந்த திசையை நோக்கி யாக குண்டம் அமைக்கப்படுகிறதோ அதை பொறுத்து. அதாவது மேற்கு திசை நோக்கி யாக சாலை அமைக்கப்பட்டால் காரகபத்தியம் என்றும் கிழக்கு நோக்கி அமைந்தால் ஆகவனி என்றும் தெற்கை நோக்கி அமைந்தால் தட்சனாக்னியம் என்றும் வழங்கப்பட்டது. இனி யஜூர் வேதத்தின் சில பகுதிகளை பார்ப்போம் இந்த வேதத்தின் முதல் பாடல் சூரிய தேவனை வணங்கி ஆரம்பிக்கிறது. ஒளி மயமான கதிர்களுடன் கிழக்கு வானிலிருந்து புறப்பட்டு வரும் சூரிய தேவனே உன்னை மங்களமாரன வார்க்தைகள் சொல்லி வரவேற்கிறேன். நீ எங்கள் பசுகூட்டத்தை பாதுகாக்கிறாய் அவைகளின் மீது மிருகங்களும் துஷ்டமனிதர்களும் பாயாதபடி வெப்பம் நிறைந்த உனது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாய். எங்களது செல்வங்களான பசுக்களின் எண்ணிக்கை வளரும் வண்ணம் அவற்றிற்கு தாராளமாக உணவை கொடுகிறாய் இந்த பசு செல்வங்களை எங்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் தீய மனம் கொண்ட பகைவர்களை உன் ஒளிக்கரங்களால் விரட்டுகிறாய். அதற்கு நன்றி செலுத்த இந்த யாகத்தில் உனக்குய பங்கினை அக்னியிடம் கொடுக்கிறேன். உன் பங்கு மேன் மேலும் பெருகட்டும் என்று சூரியனை வேதகால ரிஷி போற்றி வணங்குகிறான். இந்த பாடல் மூலம் அடிப்படையான இரண்டு விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது. நாம் நினைப்பது போல் அந்த கால மக்கள் அறிவியல் சிந்தனை அற்ற அசடர்களாக இருக்கவில்லை. புல் பூண்டுகள் சூரிய வெளிச்சத்தினால் தான் நன்கு வளரும் வெளிச்சம் இல்லை என்றால் தாவரங்களின் வளர்ச்சி சரிவர அமையாது என்பதை போன்ற அடிப்படையான அறிவியல் அறிவையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்ததாக அவர்கள் மாடு மற்றும் கால் நடைகளை நம்பி வாழ்ந்தவர்களாக இருந்தமையனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்கும் இயல்பு இல்லாதவர்களாகவும் பல இடங்களுக்கு சுற்றி திரியும் தன்மையோடு இருந்தமையாலும் பட்டறிவு என்பது அளவுக்கு அதிகமாக கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் யஜூர்வேதத்தில் உள்ள மூன்றாவது பாடல் ஆழமான தத்துவக் கருத்தை வெளியிடுகிறது. என்னை அதனுடன் இணைத்தது யார் அவன் தான். என்னை அதனுடன் பிணைத்தவன் யார் அதுவும் அவன் தான். இந்த வேலையை தொடங்கியவன் நீயே அதை முழுமையாக்கியவனும் நீயே என்ற கருத்து பட நீண்டு செல்லும் இந்த பாடலில் வரும் அது என்ற வார்த்தை வேத கால தெய்வங்கள் எதையும் பொதுவாகவோ சிறப்பாகவோ சுட்டிக் காட்டாமல் மறை முகமாக பரமாத்ம தத்துவத்தை சுட்டி நிற்பதை உணரலாம். இதே போக்கில் வேறு இரு பாடல்களும் முடிவாக விஷ்ணுவை பற்றிய ஒரு பாடலும் வருகிறது. இப்பாடல்கள் அனைத்தையும் இணைத்து பார்க்கின்ற பொழுது நாராயணனை பரம் பொருளாக கருதும் கருத்து யஜூர் வேதத்திலும் இருந்திருப்பது தெரிகிறது. சிந்து நதி கரையிலும் அதன் உபநதிகளான ஆறு நதிகளையும் இணைத்துக் குறிப்பிடும் சப்த நதி மண்டலத்தில் இந்த மக்கள் தங்களது வாழ்க்கை ஓட்டத்தை நடத்திக் கொணடிருந்த போது பல தேவதைகளை வழிபடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ஒரே கடவுள் தான் உண்டு என்ற வாதங்கள் உருவாகாமல் இருந்திருக்கிறது. சிந்துவை தாண்டி யமுனையையும், கங்கையையும் கடந்து அந்நதிகரையோரம் பரந்து விரிந்த சமவெளியில் நிலையான வாழ்வைத் துவங்க குடியேறிய பின்னரே வேத மைந்தர்களுக்கு ஒரே கடவுள் தான் இருக்க வேண்டு மென்ற சிந்தனை தெளிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் ரிக் வேதம் தோன்றி பல காலத்திற்கு பின்னால் தோன்றிய யஜூர் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் ஒரே கடவுள் என்ற சிந்தனை அதிக அளவில் நம்மால் காண முடிகிறது. வேத கால வாழ்வில் சிந்தனைகளை விட சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. யாககுணடங்களை ஏற்படுத்தி அக்னியை வளர்த்தான் அதிலிருந்து கிளம்பும் புகை மழையை வரவழைக்கும் சக்தியை பெற்றிருப்பதாக நம்பினர். அதனால் தான் நெருப்பை உருவாக்கும் சமித்துகளையும் அதனை வளர்க்கும் நெய்யையும் புனித மிக்கதாக கருதி சமித்துக்கள் அக்னி தேவனின் உணவு என்றும் நெய் அவனுக்கு ஆற்றலைக் கொடுக்கும் பொருள் என்றும் புகழ்ந்து பாடினார்கள். இயற்கையோடு ஒருங்கிணைந்து வாழ்ந்ததினால் இயற்கையின் வளர்ச்சியில் தான் தங்களது சமூக வளர்ச்சியும் அடங்கியிருப்பதாக கருதி இயற்கை வளங்களை செழுமைபடுத்துவதற்கான சடங்குகளை ஏற்படுத்தி எந்த சடங்கை எப்போது செய்ய வேண்டும் என்ற நியதியையும் வகுத்தார்கள். அந்த ஒழுங்கு முறைக்கு எதிராக பிற்கால சமூகம் செல்லக் கூடாது என்றும் எச்சரித்தனர். வேத நெறிகளை அலச்சியம் செய்யாதே அந்த நெறிப்படி தினசரி நெருப்பை வளர்த்து தேவதைகளை திருப்தி படுத்து யாகப்புகை மேலே செல்லாவிட்டால் மேகங்கள் கூடாது மழை பொழியாது மழை இல்லை என்றால் வாழவே முடியாது என்று அவர்கள் எச்சரித்தது அன்றைய வாழ்க்கைக்கு மட்டுமல்ல இன்றைய வாழ்க்கைக்கும் பொறுத்தமாகவே இருக்கும். யாகங்களிலுள்ள விஞ்ஞான பூர்வமான உண்மைகளை விவரிப்பது இந்த இடத்தில் நமது நோக்கம் இல்லையென்றாலும் யாகங்களின் சிறப்பை ஓரளவாவது நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். முறைப்படி சப்தம் தவறாத வேத கோஷங்களுடன் செய்யப்படும் யாகங்கள் மழையை வருவிப்பதும் நச்சு புகையிலிருந்து உயிர்களை பாதுகாப்பதும் நாம் அறிந்ததே ஆகும். தீயை வளர்த்து நெய்யை வார்த்து செய்யப்படும் யாகங்கள் அறியாமையின் வெளிப்பாடு அல்ல. கண்ணுக்கு தெரியாமல் பூமியெங்கும் பரவி கிடக்கும் அணுக்களை வேதியியல் முறையில் அசைவித்து நமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அறிவுப் பூர்வமான செயல்பாடே யாகங்கள் ஆகும். அந்த யாகங்கள் சரிவர செய்யப்படாததினால் செய்யும் பண்டிதர்களும் யாகங்களை முறைதவறி செய்வதினாலையும் தான் பருவ காலங்கள் தனது கடமைகளை சரிவர செய்ய முடியாமல் இயற்கை அழிவுகளுக்கு விதை தூவுகிறது. இதை உணர்ந்து தேசத்தில் எதாவது ஒரு மூலையில் நியமப்படி வேதகால யாகம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றால் பூமி பந்தின் கோபச்சூடு கொஞ்ச நேரம் குறையும். நாம் பிராமணனுக்கும், சத்திரியனுக்கும், சூத்திரனுக்கும், ஆரியனுக்கும், அருகில் உள்ளவனுக்கும், அந்நியனுமாகிய அனைத்து ஜனங்களுக்கும் இம்மங்கலகரமான வேதத்தை உபதேசம் செய்கிறேன். காணிக்கை அளிக்கும் தேவர்களுக்கு நான் பிரியமுடனாக வேண்டும் எனது விருப்பம் பூரணமாகட்டும். அது எனது ஸ்வாதினம் ஆகும். பிரகஸ்பதியே சத்தியத்தின் புதல்வனே சத்துரு சிறப்புக்கதிகமாயும் அறிவுள்ள ஜனங்களின் நடுவே பிரகாசமுடையதாகிய உறுதியுள்ள செல்வத்தை எமக்களிப்பாய். நீ ஆதரவோடு கிரகிக்கப்பட்டுள்ளாய். செல்வம் மிகுந்த இந்திரனே! இங்கே வா நூறு மடங்கு சக்தி உள்ளவனே சோமனை பருகவும் சோமன் பெருமையான சாதனங்களால் நிறைந்துள்ளது. நீ ஆதரவோடு பற்றப்பட்டுள்ளாய். நான் செல்வம் மிகுந்த இந்திரனை பற்றுகிறேன். பசுக்கள் நிறைந்த இந்திரனே இது உனது மூலஸ்தானமாகும். இங்கே வந்து உனது அருளை நிரப்பு. ஜோதியின் தலைவனாகவும் அழியாதவனாய் உள்ளவனே நாங்கள் நாடுகிறோம். நாங்கள் வைசுவா நரனின் நல்ல நிலையில் சாய வேண்டும் அவனே புவனங்களின் தன்னிகரற்ற தலைவன் ஆவான். இவனே ஜீவனாக தோன்றி விழிகளால் அனைத்தையும் காண்கின்றான். இவன் சூரியனுக்கு சமமாய் உள்ளவன். வெகு தூரத்திலுள்ள வைசுவா நரனை அக்னி எங்கள் அருகில் அழைத்து வரட்டும். அக்னி பவித்திரமான ரிஷி ஆவான். பஞ்ச ஜனங்களின் புரோகிதன் அக்னியே. அதிகமாக பிரகாசிக்கவும் ஜோதிவடிவாகவும் உள்ள அக்னியே நீயே செல்வமும் செழுமையும் தரும மூல முதல்வன் பருவகாலங்கள் உனது யாகத்தை விசாலப்படுத்தட்டும். மாதங்கள் உனது அவிர் பாகத்தை ரட்சிக்கட்டும். வருடங்கள் உனது பிரஜைகளை காவல் செய்யட்டும். மலைகள் அருகிலும் நதிகளின் சங்கமத்திலும் தோன்றிய அறிவாளி உனது புகழை பாடி பரவட்டும். நாங்கள் வீரமக்கள் எங்கள் பசுக்களும் குதிரைகளும் பல்கி பெருகட்டும். சகல புஷ்டிகளுடன் எமது எல்லா விருப்பங்களும் ஓங்கி வளரட்டும். எங்களை சுற்றியுள்ள மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெருகி நிரம்பட்டும். தேவர்கள் எங்கள் யாகத்தை பருவ காலத்தோடு வழி நடத்தி செல்லட்டும். சோமனே நீ பசியை அழிப்பவன். அனைத்து மனிதர்களின் நண்பனும் நீ. இன்பம் அளிக்கின்ற தாரையுடன் பெருகி நீ வழிய வேண்டும். தங்கத்தால் ஆன துரோனத்தில் சமமான மூலஸ்தானத்தில் வந்து அமர்ந்துக் கொள். இந்த பாடல்கள் யஜூர் வேதம் 26-வது அத்யாயத்தில் 392-வது அனுவாகத்தில் 2 முதல் 26 வரையிலான பாடல்வகளாகும். இவைகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் பல உண்மை தெரிய வரும். வேதங்கள் என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரிமையான சொத்தாகும். அதை மற்ற ஜாதி ஜனங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்து ஆழமான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு இன்றைய நாள் வரை வந்து கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்ல வேதங்களை ஓதினால் மற்ற ஜாதிகாரர்களின் நாக்கை துண்டிக்க வேண்டும் காதுகளால் கேட்டால் செவிகளில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பதாகவும் மனுசாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இவைகளை அறிவு தெளிவுள்ள எந்த மனிதனும் படித்தாலே அருவருப்பு அடைந்து விடுவான். அதிர்ச்சியில் உரைந்து விடுவான். ஆனால் வேதகால கவிஞன் வேதங்களை தனிப்பட்ட சொத்தாக கருதவில்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்குமே வேதம் சொந்தமாகும் என்று கருதுகிறான். வேதக் கட்டளைக்கு விரோதமாகவும் விருப்பத்திற்கு மாறாகவும் வேதங்களை தனி உடமையாக்கியது யார்? எதற்காக? அது ஜாதிவளைக்குள் சுருட்டப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்த்து வாதங்களில் ஈடுபடாமல் வேதத்தை விருப்பமும் தகுதியும் உடைய அனைவருக்கும் கற்பிக்கவும் கற்றவழி நிற்கவும் முன் வரவேண்டும். மேலும் புவனங்களின் தலைவனாக இருப்பவனும் மக்களின் உற்பத்திக்கும் சுகதுக்கங்களுக்கும் ஒருவனே காரணம் என்ற கருத்தும் கவனிக்க தக்கது. தேவதைகளுக்கு பல பெயர்களை வைத்து ரிஷிகள் அழைத்தாலும் அவையாவும் ஒரே தேவதையின் மாறுபட்ட பெயர்களே என்பது தெளிவாகிறது இந்திரன், அக்னி, சோமன் என்ற பெயர்களெல்லாம் மூல பரம் பொருளை குறிப்பிடுவதற்காகத்தான் பயன்படுத்தி இருப்பார்களோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. இனி உழவத் தொழிலை பற்றி வேதக் கருத்தை பார்ப்போம். யஜூர் வேத சுக்கில பகுதியில் வேளாண்மையை பற்றி பல பாடல்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானதாக 12-வது அத்யாயத்தில் ஒரு பாடல் உள்ளது. அதில் நிர்த் என்ற தேவதையின் பெயர் குறிப்பிடப்படுகிறது. விவசாயத்திற்கு தேவைபடுவது மண்ணும், நீரும், ஒளியும், காற்றுமாகும். இந்த நான்குமே வேதங்களில் தேவதையாக வணங்கப்படுகிறது. நிர்த் என்ற வேதகால விவசாய தேவதை பூமியாக விரிந்து கிடக்கிறாள். முதலில் அவள் பச்சை வண்ண ஆடையை உடுத்தி இருக்கிறாள். முடிவில் பொன் வண்ணமாக காட்சி தருகிறாள். அவள் நீராடுவதற்காக குளிர்ந்த நீர்திவலைகளை கார்முகில் என்ற வானப்பந்தலை அமைத்து வருணதேவன் சாரலாக தெளிக்கிறான். நேரம் செல்லச் செல்ல முகிலினங்கள் பெரும் மழையை கொட்டுகிறது. இதில் அந்த தேவதை முழுமையாக குளிர்ச்சி அடைகிறாள். அவள் உடலெங்கும் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், அருவிகளும் வெள்ளியை உருக்கி விட்டது போல் பெருகி ஓடுகிறது. இந்த நேரத்தில் கலப்பைகள் தயார் செய்யப்படுகின்றன. கலப்பையின் முனைகளில் கூர்மையான இரும்பு கொழுவுகள் பொறுத்தப் படுகின்றன. நுகத்தடியில் வெள்ளை எருதுகள் பூட்டப்படுகின்றன. நிர்த் தயாராக இருக்கிறாள். கலப்பைகளை பலமாக பிடித்துக் கொண்டு முன்னால் செல்கிறாள். அதே நேரம் ஏர் முனையை தனது உடலில் தாங்கியும் கொள்கிறாள். இரும்பு முனை மண்ணை அழுத்தி கீறுகிறது மண் கீழும், மேலுமாக புரள்கிறது. மலர்களைப் போல் விரிந்து கலப்பை என்னும் வண்டுகளுக்கு மகரந்தத்தை கூடலில் வாரிக் கொடுக்க தயாராகிறது. உழவன் விதைகளை நாலாபுறமும் தூவுகிறான். நிர்த் தேவதை அதை வாங்கிக் கொள்கிறாள். தனக்குள் தாங்கியும் கொள்கிறாள். தனக்கு கிடைத்த ஒரு தானிய மணியை பல நூறு மடங்காக பெருகி தருகிறாள். தேவதையின் உடலில் உழவன் ஏறி விளையாடுகிறான். அரிவாள்களைக் கொண்டு முற்றி தலை சாய்ந்த கதிரை அறுவடை செய்கிறான். தன்னை ஏர் கொண்டு பிளப்பதினாலோ வாள் கொண்டு வெட்டுவதாளோ பூமி தேவதை மனிதர்களை கோபத்துடன் முறைப்பது இல்லை ஏனென்றால் அவள் உயர்களுக்கெல்லாம் தாயை போன்றவள் முலைக்காம்பை குழந்தை கடித்தால் தாய் அதன் வாயை கிழித்து விடவா போகிறாள் வாரி அணைத்து தானே கொள்வாள். அத்தகைய தாயான தானியங்களை கொடுக்கும் நிர்த் தேவதையை வணங்குவோம். அவள் பசியை போக்கும் அன்னை சக்தியை கொடுக்கும் வெண்ணை. நமது மகிழ்ச்சி தீபத்தை சுடர்விட்டு பிரகாசிக்க செய்யும் எண்ணெய். அவளை மீண்டும் மீண்டும் வழிபடுவோம். பூமியின் தாகத்தை தனித்தவன் வருணன். தானியங்களை தருபவன் வருணன். வருணனின் செங்குருதியே மழை நீராகும். அந்த குருதியை நீராக பெற்றுக் கொள்ளும் பூமித்தாய் தானியபாலாக நமக்கு புகட்டுகிறாள். அக்னியின் வடிவமான சூரிய தேவனும் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த வாயு தேவனும் நிர்த்க்கு உதவி செய்கிறார்கள். அவர்களை நாம் வணங்குவோம். நமது வீட்டு களஞ்சியங்களில் தானியங்களை நிரம்பி வழிய செய்த இந்த நான்கு தேவதைகளும் நமது கருவூலங்கள் ஆவார்கள். அதனால் தங்கநிற தானியங்களை அக்னியிடம் வழங்குவோம். அவன் அவைகளை தேவதைகளுக்கு நிச்சயம் கொண்டு கொடுப்பான். இந்த சடங்கு பாடல் தேவகால மக்களின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு நாடோடியாக திரிந்த ஆரம்பகால மக்கள் யஜூர் வேத காலத்தில் நிலையாக ஒரு இடத்தில் தங்கி விவசாயம் முதலியன செய்ய ஆரம்பித்து இருப்பது இந்த பாடல்களால் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமல்ல விவசாயத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவை. உடலால் உழைப்பவர்களை சூத்திரர்களை என்று வேதம் வகைபடுத்தி காட்டுகிறது. சூத்திரர்கள் தாழ்ந்தவர்களாக இழிகுல மக்களாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தால் வேதங்கள் அவர்களையும் அவர்களது தொழில்களையும் சிறப்பித்து கூறப்பட்டிருக்குமா இருக்கவே முடியாது. எனவே வேதகாலத்தில் எவனும் எந்த தொழிலிலும் இழிந்தவனாக கருதப்படவில்லை என்பது நன்றாக விளங்குகிறது. இனி சடங்குகள் என்பது அந்தகால மக்களுக்கு எந்த வகையில் உதவி புரிந்தன என்பதை பார்ப்போம். யஜூர் வேதம் 18-வது அத்யாயத்தில் 77 பாடல்கள் இருக்கிறது. இதில் 29 பாடல்கள் சடங்குகளை பற்றியும் அவைகளால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் விவரித்து கூறுகிறது. கிரிகைகள் எனக்கு கொடுப்பது எது? அவற்றை செய்வதினால் தெய்வங்களிடமிருந்து எதை நான் பெறுகிறேன். எல்லாம் எல்லாவற்றையும் நான் பெறுகிறேன். கிரிகையினால் பலத்தை நான் அடைகிறேன். ஆதாயம் அடைகிறேன். என் மனது ஆற்றல் அடைகிறது. உடல் பலம் அடைகிறது. எனது எண்ணங்கள் தெளிவடைகின்றன. எனக்கு புகழும் பாராட்டும் கிடைகிறது. ஒளிமயமான சொர்க்க கதவுகள் எனக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதோ நான் நன்மையும் நன்மைக்கு மேல் நன்மையும் பெற்றுக் கொண்டே இருக்கிறேன். எனது மூச்சு காற்று தடங்கல் இன்றி உள்ளே செல்கிறது. சிரமப்படாடல் வெளியேயும் வருகிறது. அதன் பாதைகளில் அது தங்கும் இடங்களின் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. எனது கண்கள் தெளிவாக இருக்கிறது. நெருப்புத் துண்டுகள் போல் அவைகள் ஜொலிக்கவும் செய்கின்றன. வில்லிலிருந்து புறப்படும் அம்புகளை போல் எனது பார்வை எல்லா இடங்களிலும் கூர்மையுடன் பாய்கின்றன. எனது காதுகளும் அப்படியே இருக்கின்றது. இந்திரனின் கட்டளையால் மேகங்கள் மோதி உண்டாகும் இடி முழக்கங்களால் எனது செவிகள் துன்பப்படவில்லை. மிருதுவான இனிமையான புல்லாங்குழலின் ஓசை எனது காதுகளை குளிர்விக்கின்றன. எனது நாவும் நல்லதையே பேசுகிறது. தீய சொற்களை உருவாக்கும் வயலாக அது என்றும் மாறியது இல்லை. இத்தகைய நன்மையெல்லாம் பெற எனக்கு உதவியது எது. இந்த சடங்குகளும் இந்த யாகங்களும் தான். இதில் எரியும் நெருப்பு எல்லா இடத்திலும் இதமான வெப்பத்தை பரப்பட்டும். இதன் புகை நாலா புறமும் பரவி நறுமணமாக கமழட்டும். இன்னும் என்னவெல்லாம் எனக்கு கிடைக்கிறது தெரியுமா? அவைகளை எல்லாம் இதோ பட்டியலிட்டு சொல்கிறேன். இவைகள் உண்மைக்கு புறம்பான பொய்கள் அல்ல. உண்மையை போல் தோன்றும் கற்பனைகள் அல்ல. பயமும் தயக்கமும் இல்லாமல் இதை நான் சொல்லுவதினால் இவை அனைத்துமே உண்மைகள். என்றும் நிலைத்து இருக்கும் சத்தியங்கள். யாகங்களால் நான் உண்மையென்னும் பேருலகில் நிலைத்து இருக்கிறேன். அது அசத்தியத்தில் இருந்து என்னை எப்போதும் பாதுகாவல் செய்கிறது. எனது சொற்களில் சத்தியம் மட்டுமே ஒலிப்பதனால் நான் எப்போதும் நாணயத்திடமிருந்து பிரியாமல் இருக்கிறேன். தர்மத்தை மட்டுமே எனது கண்கள் பார்ப்பதனால் நேர்மை என்ற காவல் படை என்னை சுற்றி எப்போதும் அரணாக இருக்கிறது. வெற்றியை தருவது சத்தியம் மட்டும் தான் என்பதனால் நான் அடைகின்ற ஒவ்வொரு வெற்றியுமே சத்தியத்தின் வடிவங்களாக மின்னுகிறது. எனது பசுக் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால் எனது செல்வம் மிகுதியாகிறது. எனது சொத்துக்கள் பல மடங்கு பெருகுகிறது. எனது பொருட்கள் குவிவதனாலும் பெருகுவதானலும் நான் அதை அனைவரிடத்திலும் பகிர்ந்து கொள்கிறேன். அந்த பகிர்வு எனக்கு மகிழ்ச்சி பேரை தந்த வண்ணமே உள்ளது. இந்த மகிழ்ச்சியினால் அதிகமான குழந்தைகள் எனது வீட்டில் பிறக்கின்றன. குழந்தைகளின் மழலை நாதம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மதுவை விட அதிகமான போதையும் பெண்ணை விட அதிகமான சுகத்தையும் வாரி தருவது குழந்தைகளின் அருகாமையும் மழலை மொழிகளும் தானே. குழந்தைகளே மனிதர்களின் சொர்க்கமாவார்கள். யாகங்களால் எந்த நோயும் என்னை அனுகாது அதனால் நான் பிணி என்ற பெரும் துன்பத்தை அனுபவிக்கவே மாட்டேன். எனது உடல் வலுவாக இருப்பதனால் எனது வலது கையில் இருக்கும் ஏர்முனை தானியங்களை உற்பத்தி செய்கிறது. இடது கையில் இருக்கும் கூர்மையான ஈட்டி எனது மக்களை பாதுகாக்கிறது. எனது ஆயுள் பரிபூரணமாக இருக்கும். மரணம் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறேன். ஏனென்றால் அது வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரக்கூடியது. தவிர்க்க முடியாத அதை எண்ணி நான் ஏன் வருத்தப்பட வேண்டும் எப்போதுமே நான் சுதந்திர காற்றை சுவாசிப்பவனாக இருக்கிறேன். நான் எவராலும வெல்ல முடியாதவன் என்னை அடிமையாக்கும் தகுதி எவருக்குமே இல்லை. எனக்குரிய பசுக்கள் மட்டுமல்ல எல்லாமே பெருகும். கல்லும், களி மண்ணும், குன்றுகள், பாறைகளும், தங்கமும், பித்தளையும், இரும்பும் இதர உலோகங்களும் நீரும், நெருப்பும் எப்போதுமே குறையாமல் எனக்காக பெருகிக் கொண்டே இருக்கும். இதே மாதிரியான பல விஷயங்களை பேசி கொண்டு செல்லும் யஜூர் வேதம் கடைசி பகுதிகளில் தெய்வத்துடனான சிந்தனையை ஒருமுகப்படுத்துகிறது. இறைவனுடன் ஆத்மாவானது இரண்டற கலந்தால் தான் நிரந்தரமான அமைதியும் சந்தோஷமும் கிடைக்குமென்று சொல்கிறது அப்படி பேசும் யஜூர் வேத பாடல் ஒன்றை சிந்தித்து பார்ப்போம். இந்த பூமியிலுள்ள எல்லாமே இறைவனின் படைப்புகள் தான் ஒரு சிறு மண் துகள்கள் கூட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அவன் படைத்தவற்றை வைத்து நாம் மகிழ்ச்சியை பெருக்கி கொள்கிறோம். அவன் படைப்பை நாம் அனுபவிக்க அயராது உழைக்க வேண்டும். உழைத்தால் தான் ஆயுள் கூடும். ஆரோக்கியம் பெருகும் உழைக்காமல் கிடந்தால் கல்லைப் போல் வாழ்ந்து காலனின் கைகளில் அகப்பட்டு அழிய வேண்டியது தான். மரணத்திற்கு பிறகு நாம் என்னவாக மாறுகிறோம் நமக்கு என்ன நேருகிறது. நாம் எங்கே போகிறோம். நமது பயனத்தின் விவரம என்ன என்ற கேள்விகள் அனைத்திற்கும் மர்ம முடிச்சுகளே பதிலாக கிடைக்கிறது. இந்த பதில்களை பற்றி கவலைபடாமல் இறைவனின் திருவடியே அடைவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அவனை போய் அடைவது மட்டுமே நமது பயணத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அவன் இருக்கும் இடத்திலேயே நமது பயணம் முடியும். அவன் எப்படி பட்டவன் எத்தகைய குண இயல்பு கொண்டவன் எதுவும் நமக்கு தெரியாது அவன் அசைவற்றவன். அதே நேரம் எல்லாவற்றையும் அசைத்து கொண்டிருப்பவன். அவன் நம்மிடமிருந்து தொலைவிலும் இருக்கிறான் அருகிலும் இருக்கிறான். அவன் எங்கும் நிறைந்தவனாக இருக்கிறான். அவன் இல்லாத இடம் என்று பூமியிலும் ஆகாயத்திலும் எதுவுமே இல்லை. இதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் தான் அறிவு அது தான் ஞானம். இந்த ஞானம் பிறந்து விட்டால் ஐயம் இல்லை, எண்ணம் இல்லை, குழப்பம் இல்லை எல்லாவற்றிற்குமே முற்று புள்ளி ஏற்பட்டுவிடும். அவனை பற்றிக்கொண்டால் அடைந்து விட்டால் உடல் என்ற கூடு நமக்கு இல்லை உடல் வேதனைகளும் ஆசைகளும் அவஸ்தைகளும் ஏற்படப்போவது இல்லை. ஏன் என்றால் பிறக்க வேண்டிய அவசியமே நமக்கு இல்லை. பிறப்பும் இறப்பும் இறப்பும் பிறப்பும் முற்றிலுமாக அழிந்தே விடுகிறது. நாம் ஒளிமயம் ஆகிவிடுவோம். மிகத்தூயதாக மாறிவிடுவோம். அதோ அந்த பொன் மயமான உலகத்தில் அவன் அமர்ந்து இருக்கிறான். அவனுக்கு அருகில் மிகப் பெரும் சிம்மாசனம் போடப்பட்டிருக்கிறது. அதில் நாமும் அவனும் சமமாக அமரலாம். அவனது இந்த உலகம் தான் சொர்க்கம். அவன் தான் அனைத்துமாய் ஆன பிரம்மம். அவனை அடைந்த பின் நமக்கு கிடைப்பது அழிவற்ற குழப்பமில்லாத அன்பு மயமான சாந்தி! சாந்தி! சாந்தி! மட்டுமே. யஜூர் வேத பாடல்கள் அனைத்தும் கங்கை கரையில் மக்கள் பரவி வாழ்ந்த பிறகு உருவானவைகளாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற கருத்தை இந்த பாடல் வகள் மெய்பிக்கின்றன. சிந்து நதி ஓரம் வாழ்ந்த போது 33 தேவதைகளை வழிபட்ட இவர்கள் யஜூர் வேத காலத்தில் சிந்தனை கூர்மைபட்டவர்களாக காணப்படுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் அபாயங்கள் குறைந்து அமைதி நிலவிய காலமாக இது இருந்திருப்பதினால் தான் மனம் இறைவனை பற்றி அவன் ஒருமையை பற்றி சிந்திக்க வழி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவுகளையே இந்த பாடல்களின் மூலக் கருத்தாக அமைந்திருப்பதை நாம் காணலாம். இந்த யஜூர் வேத கருத்துக்கள் தான் நாளடைவில் ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகம் ஓர் இன்பகேணி என்ற கருத்துக்களின் விரிவாக்கமாக அமைந்திருக்கிறது. இசைக்கு மயங்கி வருபவனாக இறைவனை சொல்லுவார்கள். இறைவனே இசை வடிவம் தான் என்றும் கூறுவார்களும் உண்டு. இசைக்கு இத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்ற பாங்கு இன்று நேற்று வந்தது அல்ல. வேத காலம் தொடங்கிய வருகின்ற மரபாகும். அதனால் தான் நான்கு வேதங்களில் மூன்றாவதாக கருதப்படும் சாம வேதம் இசை வடிவமாகவே இருக்கிறது. இறைவனான திருமால் பகவத் கீதையில் தன்னை சாம கீதமாக இருப்பவனாக குறிப்பிடுகிறான். சிவ பெருமானும் சாமகீதப் பிரியன் என்று போற்றப்படுகிறார். சாம வேதத்தின் நாத அலைகள் மனதை மட்டுமல்ல உடலையும் உறுக்கும் சக்கி வாய்ந்தது. எங்கெல்லலாம் சாம வேதம் முறைப்படி ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் பயிர் பச்சைகள் செழிப்புடன் வளர்வதை அனுபவத்தில் காணலாம். இதனால் தான் சாம வேதத்தை சாமகானம், சாமகீதம், சாமபாடல் என்று இசையின் பெயரிட்டே அழைக்கிறார்கள். இந்த வேதத்தில் சம்ஹிதை பகுதிகளில் இருக்கும் பாடல்களில் எண்ணிக்கையை பற்றிய கருத்து பேதங்கள் இன்று வரை நீடித்து வருகிறது. சில சாமவேத உரையாசியர்கள் 1575 பாடல்கள் தான் உள்ளது என்று சொல்கிறார்கள். வேறு சிலரோ 1603 பாடல்கள் என்று சொல்லுகிறார்கள். பாடல்களின் எண்ணிக்கை கூடுவதாகவோ குறைவதாகவோ இருந்தாலும் அனைவரும் ஒரு பொது முடிவை ஒப்புக் கொள்கிறார்கள். அந்த பொது முடிவு என்னவென்றால் சாம வேதம் என்பது தனி ஒரு பிரிவாக இருந்தாலும் இதிலுள்ள பெருவாரியான பாடல்கள் ரிக் வேதத்திலிருந்தே எடுக்கபட்டிருக்கிறது என்பதாகும். சாம வேதத்திற்கென்று தனியாக கண்டெடுக்கப்பட்ட பாடல்கள் 99 பாடல்கள் தான் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளும் முடிவாகும். சாம வேதத்தை ஆறு வகையான சந்த வகைகளில் பாராயணம் செய்கிறார்கள். அந்த ஆறு வித ஒலி அமைப்பிற்கு ரதந்தரா, பிரகத், வைரூபா, வைராஜா, ஷிக்வாரா, ரைவாதா என்று பெயரிடப்பட்டுள்ளது. பாடும் போது ஒலிகளை ஏற்றியும் சமப்படுத்தியும் இறக்கியும் பாடுவதை பொருத்து இந்த ஆறு முறைகளும் பயன்படுத்த படுகிறது. சாமகானத்தை பாடுவதற்கு வேத காலத்தில் ஒரு நெறி பின்பற்றப்பட்டது. அதாவது சோமரசத்தை தயாரிக்கும் போது தான் இந்த வேதத்தை ஓத வேண்டும் என்பது அந்த நெறியாகும். சோமபானம் என்றால் என்ன? வேதங்களைப் பற்றியும் வேதகால மக்களைப் பற்றியும் பேச்சு எழும்பொழுதெல்லாம் சோம பானத்தை பற்றிய பேச்சு தானாக வந்துவிடுகிறது. நம்மில் நிறைய பேர் சோம பானம் என்பது ஆதிகால சாராயம் என்றே நம்புகிறோம். உண்மையில் சோமபானம் போதை தருகின்ற சாராய வகையை சார்ந்தது தானா அல்லது உடலுக்கு தெம்பூட்டக்கூடிய சக்தி மிக்க பானங்களின் ஒன்றோ என்பது பற்றி ஆராய்ச்சி செய்யவும் விடைகானவும் அனைவருக்கும் ஆவல் எழும்புவது இயற்கைதான். அந்த ஆவலை நிவர்த்தி செய்து கொள்ள வேதங்களை நுண்ணியமாக ஆராய்ந்த போது அது போதை தரும் பானம் தான் என்ற அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. இதில் என்ன அதிர்ச்சி இருக்கிறது? சோம பானம் என்றாலே போதை வஸ்து என்று தானே நம்பிக் கொண்டிருக்கிறோம் அது அப்படி அல்ல என்று தெரிய வந்தால் அதிர்ச்சி ஏற்படலாம் இதில் ஒன்றுமே வியப்பு இல்லையே என்று சிலர் எண்ணக்கூடும். பொதுவாக நாம் பூஜைகள் போன்ற புனிதமான காரியங்களுக்கு மது மாமிசங்களை படையல் செய்வதையோ பயன்படுத்துவதையோ கீழ்தரமானதாகவே கருதி வருகிறோம். கிராம புற தேவதைகளான ஐயனார், வீரன் போன்றவர்களுக்கு சாராயம், சுருட்டு படைத்து வழிபடுவதை அனாகரீகம் என்றே கருதுகிறோம். நாம் இன்று கீழ்தரமாக எண்ணுவதும் அனாகரீகம் என்று கருதுவதும் ஒரு காலத்தில் வழிபாட்டின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. காலம் செல்ல செல்ல மக்களின் மனதும் அறிவும் வளர வளர வழிபாட்டு முறைகளில் பல வித மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறது. இந்த உண்மையை சுலபமாக நாம் மறந்து விடுகிறோம். இன்று நாம் செய்கின்ற வழிபாடுதான் நாகரீகமானது வேதங்களின் அங்கிகாரம் பெற்றது என்று கருதிக் கொண்டு மாறுபட்ட வழிபாட்டு முறைகளை கேலி செய்து வருவது விந்தையிலும் விந்தை அல்லவா, சோமன் என்ற வார்த்தை சந்திரனை குறிக்கும். அதே போன்றே சோமபானம் என்ற வார்த்தையும் சந்திரனின் ரசம் என்ற அர்த்தத்திலேயே அழைக்கப்படுகிறது. இதனால் இப்பானம் நேரிடையாக சந்திர கிரகணங்களை கிரகித்து உருவாக்கப்பட்டது என்ற பொருளை ஏற்றுக் கொள்ள முடியாது. சந்திரன் உதயமாகி நடுவானத்திற்கு வருகின்ற பொழுது இந்த பானம் தயாரிக்கப்படுவதினாலும் சோமக் கொடி என்ற மூலிகையின் வேர் பகுதியை பயன்படுத்த உருவாக்கப்படுவதினாலும் இதற்கு சோமபானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. வேதங்களில் சோமபானம் தயாரிக்கும் முறை மிக அழகுடன் விவரிக்கப்பட்டுள்ளது. சோமக் கொடிகள் செழித்து வளர்ந்திருக்கும் மலையடிவாரத்திற்கு சென்று அதன் வேர்பகுதிகள் சேகரிக்கப்படும் அப்படி சேகரிக்கப்பட்ட வேர்கள் ஆடுகள் இழுக்க கூடிய அழகிய சிறு வண்டிகளில் வைத்து ஊர் புறத்திற்கு கொண்டுவரப்பட்டு நேர்த்தியான முறையில் குறிப்பிட்ட பகுதியில் அடுக்கிவைக்கப்படும். சோம பானத்தை சுலபமாக எல்லோரும் தயாரித்து விட முடியாது. அதை தயாரிப்பதற்கு 20-லிருந்து 25-வயது நிரம்பிய இளைஞர்கள் 12-பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் 12-நாள் கடுமையான விரதம் இருக்கவேண்டும். முதல் மூன்று நாட்கள் ஒரு வேளை உணவு மட்டுமே அருந்த வேண்டும். அதை தொடர்ந்து வரும் ஆறு நாட்கள் ஒரு வேளை உணவையும் சமைக்காமல் பிச்சை எடுத்து உண்ண வேண்டும். கடைசி மூன்று நாட்கள் உணவு எதுவும் உட்கொள்ளாமல் சோமபானம் தயாரிக்க ஆரம்பிக்க வேண்டும். சோமச் செடிகளின் தண்டுகளையும் இலைகளையும் விறகுகளாக்கி மண்பான்டத்தில் சுத்தமான நீரை நிரப்பி சோம வேர்களை அதில் வைத்து காய்ச்ச வேண்டும். இப்படி காய்ச்சும் பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட வேத விற்பன்னர்கள் சூழ்ந்து நின்று சாம வேதத்தை கானம் செய்வார்கள். வேத கானத்துடன் தயாரிக்கப்படும் சோமரசம் யாகங்களில் படைக்கப்பட்டு பங்கு பெற்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். சோமபானத்தை வேதகால மக்கள் யாகங்களின் போது மட்டுமே பயன்படுத்தினர். போதை தருகிறது என்பதற்காக மற்ற நேரங்களில் அது பயன்படுத்தப் படவில்லை. காரணம் என்னவென்றால் சோமபானம் தெய்வங்களுக்குய புனிதப் பொருளாக கருதப்பட்டது. சோமன் என்ற சந்திர தேவன் பிரளயம் ஏற்பட்டு உலகமெல்லாம் அழிந்த பிறகும் நீடித்து நிலைத்திருப்பவனாக கருதப்பட்டான் அப்படி நிலையான சந்திர தேவன் தருகின்ற சோமபானம் அதை அருந்துபவர்களையும் நிலையாக ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்ற நம்பிக்கை அக்கால மக்களிடத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆரோக்கியம் தரும் சோமத்தை தயாரிக்கும் பொழுது ஆனந்தத்தை தரும் சாமவேதம் ஓதவேண்டும் என்ற நெறி நடைமுறையில் இருந்தது. இனி சாம வேத கருத்துகளை சிறிது சிந்திப்போம். இந்த வேதத்தின் முதல் பாடல் அக்னி தேவனை ஆராதனை செய்கிறது. சோமரசம் உற்பத்தியாக அக்னி பெரும்பங்கு ஆற்றுகிறதல்லவா. அதனால் அவனுக்கு அர்ப்பணம் செய்யும் முறையிலேயே இப்பாடல் அமைந்திருக்கிறது. இந்த முதல் பாடல் 10 பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ மகரிஷி 5 பகுதிகளையும் மேதாதிதி, உசானா, புருமீதா, வத்ச, வாமதேவர் ஆகியோர்கள் ஒவ்வொரு பகுதியையும் பாடி இருக்கிறார்கள். இனி அந்த பாடலின் முழுக்கருத்தையும் பார்ப்போம். அக்னியே இங்கே வா. உனக்காக ஆடம்பரமான விருந்தொன்று காத்திருக்கிறது. உனது பெருமைகளை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் அடிக்கி கொண்டே போகிறோம். எல்லா தெய்வங்களுக்கும் நீனே தூதுவனாக செயல்படுகிறாய். உன் மூலமாகத்தான் தெய்வங்கள் எல்லா விதமான ஆகுதிகளையும் எடுத்துக் கொள்கிறது. இத்தகைய தகுதி வாய்ந்த நீ எங்களை காக்க வேண்டும். புனிதமான தர்பை புல் மூலம் உனக்கு இருக்கை செய்யப்பட்டுள்ளது. அதில் வந்து நீ கம்பீரத்துடன் அமர்ந்துக் கொள். மனிதர்கள் வாழுகின்ற பூமியெங்கும் சடங்குகள் நடத்தப்படுகின்றன. அந்த சடங்குகளில் புனிதமான நெருப்பே எப்பொழுதும் மூட்டப்படுகிறது. அந்த நெருப்பு அக்னி தேவனான உனது அழகிய வடிவமென்றோ உனது திவ்யமான நெருப்பு சரீரத்தில் தான் நாங்கள் எல்லா தேவர்களையும் தரிசனம் செய்கின்றோம். அக்னியே நீ தெய்வங்கள் அனைத்திற்கும் பிரதிநிதியாகிறாய். அதனால் செல்வங்கள் அனைத்திற்கும் நீயே அதிபதி. இந்த தெய்வீக திருச்சடங்கு குற்றமின்றி அமைய எங்களுக்கு துணை செய். எங்களை நோக்கி வரும் எல்லாவிதமான துன்பங்களையும் பகைவர்களையும் வதம் செய்வது நீதான். நாங்கள் பெற்றிருக்கும் செல்வங்களெல்லாம் உன்னுடையது தான். இப்படி அனைத்தையும் தரும் உன்னை துதிக்கவும் வணங்கவும் இந்த ஒரு பாடல் போதுமா போதாது அதனால் உன்னை வணங்கும் பாடல்கள் பெருகி கொண்டே போகிறது. ஒளிமயமான தேகத்துடன் வருகின்ற தேவா எங்களது துதிகள் அனைத்தும் உனக்கே அர்ப்பணம். அக்னியே புகழுக்கு தகுதியானவனே நீயே எங்களது இனிய விருந்தினர். நம்பிக்கைக்குரிய நண்பன். அறிவை நாங்கள் அடையும் பாதையை எங்களுக்கு காட்டும் வழிகாட்டி நீ. அறிவுப் பாதையில் நாங்கள் சுகமாக பயணம் செய்ய குதிரைகள் பூட்டிய தேர்போல் நீ உதவுகிறாய் எங்களை சுற்றி கொடிய பகைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கண்களிலிருந்து வெறுப்பும் பொறாமையும நிரம்பி வழிகிறது. அவர்களின் தாக்குதலிலிருந்து எங்களை பாதுகாவல் செய். உன்னை போற்றுவதில் உண்மையான சொற்களே பயன்படுகிறது. அவற்றில் எதற்காக வாய்மை இல்லாததை சேர்க்க வேண்டும். உனை போற்றும் உண்மைகள் எங்கள் இதய ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் உருவகமாக சோமபானம் இருக்கிறது. சோமரசத்தை அள்ளி குடித்து எங்களுக்கு துணை செய்ய துள்ளி குதித்துவா. உனக்கு பிரியமானவர்கள் நாங்கள் தான். உன்னை புகழ்வதால் எங்களது இதய மாசுகள் அகன்று புனிதத்தை அடைகின்றன. எங்களது விருப்பங்களும் நிறைவேறுகின்றன. எங்கே நீ தூரத்திலிருந்தாலும் உன்னை அழைக்கும் எங்கள் குரல் அங்கேயும் செவிகளில் வந்து விழும். நீ தொலைவில் இருந்தாலும் சொர்க்கத்தில் இருந்தாலும் எங்கள் குரலுக்காக ஒரே பாய்ச்சலில் அருகில் வந்து விடுவாய். அக்னியே உலக மக்களின் நலன் கருதி அதர்வ முனிவர் யாக நெருப்பை முதல் முதலில் மூட்டினார். உயர்ந்ததும் மேன்மையானதுமான சாயக் கிரிகைகளை பயன்படுத்தி அவர் உன்னை எழுப்பினார். அந்த நேரம் முதல் இந்த நேரம் வரை நீ எங்களுடன் இருக்கிறாய். அக்னியே நீ இருட்டை மட்டும் விலக்குபவன் அல்ல. அந்த இருட்டை அழிப்பவனும் இல்லாது செய்பவனும் நீயே ஆகும். உனது அழகிய வடிவத்தை தரிசனம் செய்ய நாங்கள் அனைவரும் கூடி இருக்கின்றோம். உனது தெய்வீக திவ்ய மங்கள திரு உருவை எங்களுக்கு காட்டு. எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களை பாதுகாக்கும் அக்னி தேவனே! எங்கள் முன் நாங்கள் பார்க்கும் படி அன்புடன் வந்து காட்சி தா. எங்களுக்கு அறிவை கொடுத்து ஞானத்தை வளர்க்கும் பேராசான் நீ. எனவே எங்கள் அறிவுக்கனல் மூண்டெறிய எங்கள் முன் தோன்று. இந்த பாடல் வரிகள் மூலம் வேதகால மக்கள் அழிந்து போகக் கூடிய உலக பொருட்களை மட்டும் தெய்வங்கள் தராது அதையும் தாண்டிய நிலையிலுள்ள அழியாத சந்தோஷத்தையும் மன சாந்தியையும் தரவல்ல அறிவையும் ஞானத்தையும் தேவதைகள் தரும் என்று நம்பியது தெளிவாகிறது. இனி சாம வேதத்தின் இரண்டாவது சம்ஹிதையிலுள்ள இந்திரனை துதிக்கும் ஒரு பாடலை பார்ப்போம். உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இந்திரனை வணங்குகின்றன, வாழ்த்துகின்றன. நமக்கு கிடைத்திருக்கும் பசுகளும் செல்வங்களும் அவன் தந்ததே ஆகும். பலம் மிகுந்த காளையை போல் காட்சி தரும் இந்திரன் ஒருவனே நமக்கெல்லாம் தலைவன் ஆவான். சோமபானத்தைக் கொண்டு நடத்தப்படும் தெய்வீகம் சடங்குகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நமக்கெல்லாம் வழிகாட்டும் தலைவனாகவும், அரவணைக்கும் தாயாகவும், அனுக்கிரகம் செய்யும் தெய்வமாகவும் திகழும் தன்னிகரற்ற இந்திரனை போற்றி பாடுவோம். அவனைப் பாடுவதற்காக அடிவயிற்றிலிருந்து பெருங்குரலை எழுப்புங்கள். இந்த குரல் ஓசைகள் நமது ஆத்மாவோடு இணையட்டும். நூறு யாகங்களை செய்து பெரும் ஆற்றல் பெற்ற இந்திரன் என்ற தேவாதி தேவா உன்னை தவிர இத்தகைய ஆற்றலை வேறு யார் பெறமுடியும். அதனால் தான் எல்லா தெய்வங்களும் உன் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. நீ அவர்களின் தன்னிகரற்ற தலைவன் அல்லவா. உன்னை புகழ்ந்து பாடும் சொற்களால் நீ மட்டுமா சந்தோஷப்படுகிறாய் அந்த சொற்களை பயன்படுத்தும் நாங்களும் தான் மகிழ்வென்னும் பால் குடத்தில் மூழ்கி ஆனந்தக்களிப்படைகிறோம். உனது கருணை என்னும் பெரிய கவசங்கள் எங்களை பாதுகாக்கும் போது நாங்கள் யாரை பார்த்து பயப்பட போகிறோம். யார் தான் எங்களுக்கு துன்பம் தர இயலும். உனது அருள் பார்வை ஒன்றே எங்களது துயரங்களை தூர விலக்கி விடும். தேவர்களை தலைவனாக இருக்கும் இந்திரன் மழையின் அதிபதி. ஆகாயத்திலுள்ள வண்ண முகில்களை தேர்களாக்கி பவனி வந்துகொண்டிருக்கும் ஆற்றல் மிகுந்த அந்த தெய்வத்தின் பெருமைகளை எடுத்துரைத்த நமது குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும். அந்த தேவனின் காதுகளில் மின்னல்கள் குண்டலங்களாக ஒளி வீசுகின்றன. அவன் விரல் அசைவுகளில் இடி முழக்கங்கள் கட்டுப்பட்டு கர்ஜனை செய்கின்றன. அவனது அருளால் இந்த பூமி நனைந்து குளிர்கிறது. பச்சை பசுஞ் செடிகள் அவன் அருளுக்கு தலை சாய்த்து வணக்கம் செலுத்துகிறது. உயர் தகுதி உடைய ரிஷிகளின் புதல்வர்களே நீங்கள் தெய்வங்களின் புகழைப் பாடி கொண்டாடுங்கள். உங்கள் கொண்டாட்ட கோலாகலத்தில் நெருப்பின் நாக்குகள் ஜொலிக்கட்டும். உங்கள் ஆத்மாக்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணையட்டும். இந்த தெய்வம் நாம் விரைந்து செல்வதற்கு தேர்களையும், குதிரைகளையும் கொடுத்திருக்கிறது. நமது சரீரம் ஊட்டம் பெறுவதற்காக ஏராளமான பால் பசுக்களை தந்திருக்கிறது. நமது வாழ்வு முடிவு பெற்று மரணத்தின் வாசலை நாம் தொடுகின்ற பொழுது சொர்க்கத்தையும் நமக்காக தருகிறது. விராடன் என்ற கொடிய அசுரனை அழித்து நம்மையும் தேவர்களையும் காத்தவன் இந்திரனே ஆவான். அப்படி காத்த அவனை பாராட்டுவது நமது கடமை அன்றோ புனிதமான சடங்குகளின் போது தேவர் தலைவனை பாரட்ட புதிது புதிதான பாடல்களை அமைத்து அவனுக்கு பரிசாகக் கொடுப்போம். வல்லமை படைத்த இந்திரனே! நீ மழையை கொடுத்து மண்ணை வளப்படுத்தி நாங்கள் கணக்கில் அடங்காத செல்வங்களை பெற காரணமாக அமைகிறாய். இத்தகைய செயல்களை தனி ஒருவனாக செய்கின்ற ஆற்றல் உனக்கு உண்டு என்றாலும் பல தேவதைகளுக்கு புகழ் வந்து சேரவேண்டும் என்பதற்காக பணிகளை பங்கிட்டும் கொடுக்கிறாய். நாம் புனிதமான முறையில் சடங்குகளை செய்தால் இந்திரன் இன்பம் அடைகிறான். ஏனென்றால் இந்தப் புனித சடங்குகள் இந்திரனை வளரச் செய்கிறது. வளம் பெறச் செய்கிறது. புயல் காற்றாக இந்த உலகத்தை அவன் வலம் வருகிறான். தனது புன்னகை என்னும் இடி முழுக்கங்களால் தேவர்கள் வாழும் சொர்க்கத்தையும் அதிரச் செய்கிறான். இந்திரனே! அனைத்து செல்வங்களுக்கும், அனைத்து வளங்களுக்கும் நீயே தலைவன். உன்னை போல நாங்களும் அந்த நிலையை அடைய எங்களுக்கு உதவுவாயாக. உன்னை துதித்துப்பாடும் அனைவரின் இல்லங்களிலும் பசுக் கூட்டம் நிறையட்டும். நமது சடங்குகளில் வளர்கின்ற நெருப்பு இந்திரனின் இதயத்தை குளிர்விக்கிறது. சோமபானத்தின் தலைவனான அவன் அதை தயாரிக்கும் உங்களுக்கு அன்பு மிகுதியால் பல நன்மைகளை குவித்து தருவான். தேவர்களின் தலைவா! இது உனது பானம் உயர்ந்த முறையில் தயாராகி விட்டது. கோவைப் பழம் போல் சிவந்திருந்தாலும் உறுதி மிக்க உனது உதடுகள் சோம ரசத்தை ருசி பார்க்கட்டும். இதன் இனிமை உன்னை பரவசப்படுத்தும். உன் மூலமாக சோமபானத்தை பெற்றுக் கொள்ளும் மற்ற தேவதைகளும் எங்களை ஆசிர்வதிக்கட்டும். உனது கட்டளையை பெற்று அந்த தேவர்கள் எல்லா உதவிகளையும் எங்களுக்கு செய்யட்டும். எங்களை பயம் என்ற உணர்விலிருந்து காப்பாற்றும் இந்திரனே உன்னுடன் சேர்ந்து நாங்களும் இந்த ரசத்தை அருந்துகிறோம். வருணன் நமக்கு அறிவாற்றலை வாரிவழங்கிறான். நமது ஞானத்தையும் வளர செய்கிறான். நாம் இன்று பெற்றிருக்கும் அறிவு எல்லாமே அவனிடமிருந்து வந்தவைகள் தான். அவனே தான் நமது ஞான குரு. அவன் நமது அருகாமையில் இருக்கும் பொழுது அறியாமை என்ற அரக்கன் நம்மை தொட்டு விட முடியுமா. தமது ஆசை விரல்களால் நம்மை சுட்டு விட முடியுமா. மித்திரன், ஆரியமன் என்கின்ற தேவதைகளும் நம்மை பாதுகாக்கின்றன. இவர்கள் நம்மை காக்கும் பொழுது வேறு எந்த சக்தி நம்மை சாகடிக்க முடியும். வெற்றி கொள்ள முடியும். வாகை சூடுதல் என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் நம்மை அனுகாது. நம் ஆசை என்னும் அம்பு எதன் மீது அடிக்கடி பாய்கிறதோ குதிரைகள் மீதும், தேர்களின் மீதும் தானே இவைகள் ஏராளமாக நமக்கு வேண்டும் என்று ஆசைபடுகிறோம். அந்த ஆசைகள் நியாயமானவைகளாகும். நாம் இந்த பூமி எங்கும் பறந்து விரிவதற்கு இந்த ஆசைகளே நிலக்கலங்கள் ஆகும். எனவே அந்த ஆசைகள் நிச்சயம் நிறைவேரும். இதை நிறைவேற்றி கொடுக்கும் தெய்வங்கள் அனைத்துமே நமது அருகில் உள்ளன. அவர்களுக்கு அக்னியின் மூலமாக நாம் கொடுக்கும் ஆகுதிகள் அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. இந்த பாடலை ஊன்றி கவனிக்கும் பொழுது ஒரு உண்மை நமக்கு தெரிகிறது. இந்திரன் என்பவன் தேவர்களுக்கு தலைவனாகவும், செல்வங்களுக்கு அதிபதியாகவும், வெற்றிகளின் பிறப்பிடமாகவும், தன்னிகரற்ற ஆற்றல் பொருந்தியவனாகவும் இருந்தாலும் கூட அவன் மனிதர்களோடு சரி சமமாக எளிய நிலையில் வரக் கூடியவனாகவே கருதப்பட்டிருக்கிறான். உன்னுடன் சேர்ந்து நாங்களும் சோமரசம் அருந்துகிறோம் என்ற பாடலின் கருத்து நமக்கு இதை தெளிவாகப்புலப்படுத்துகிறது. அதாவது கடவுள் உயரிய நிலையில் இருந்தாலும் அன்பினால் தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து நம்மோடு பழகுவான் என்ற வேதகால மக்களின் நம்பிக்கை ஆத்ம வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக அமையும். இறை அச்சமாக இல்லாமல் இறை பக்தியாக வளர்ச்சி அடைந்திருப்பதை கவனத்துடன் பார்க்க வேண்டும். அடுத்தாக இந்திரனுடன் வருணன், மித்திரன், ஆரியமன், சரஸ்வதி, நகுஷன் ஆகிய தெய்வங்களை துதிக்கும் விதத்தில் அமைந்துள்ள பாடலை பார்ப்போம். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சாமவேதத்தில் பாடல்கள் எல்லாமே மிகப்பெரியது. குறைந்த பட்சம் பத்து பகுதிகளுக்கு மேல் உள்ளவையாகும். அதே நேரம் ஒரு பாடலை ஒரே ஒரு ரிஷிகள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியும் இருக்கிறார்கள். இனி பாடல் வரிகளுக்குள் நமது பயணத்தை தொடருவோம். வெற்றிகளை கொடுக்கும் தெய்வங்களை புகழும் பாடல்கள் நம்மிடமிருந்து பெருகட்டும். அந்தப் பாடல்களின் இசை நாதம் எட்டு திக்குகளிலும் நிரம்பட்டும் ஆகாயத்தில் அந்த நாத அலை மேகக்கூட்டங்கள் போல் பரவட்டும். கீதங்களை பாடி சோமரசத்தை எல்லா தேவதைகளுக்கு கொடுத்து மகிழ்வோம். சோம பானம் பெற எந்த தெய்வம் தான் வரமறுக்கும். சோமச் செடிகளின் வேர்களில் ஆயிரமாயிரம் மதுக்குடங்கள் தொங்குகின்றன. அதன் சுவை மனிதர்களின் மனங்களை மட்டுமல்ல தெய்வங்களின் ஆத்மாவையும் சிலிர்க்க செய்யும் இந்த சுவையை பகிர்ந்து கொள்வதினால் தேவர்ளும் மனிதர்களும் வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியானவர்களால் மாறிவிடுகிறார்கள். தெய்வங்களை நமது விருந்தாளிகள். நாம் விருந்தளிப்பவர்கள். நமக்கு செல்வங்களையும் வெற்றிகளையும் தருகின்ற அவர்களுக்கு சோம ரசத்தால் ஆராதனை நிகழ்த்துவோம். அனைத்து கலைகளிலும் ஆத்மாவாய் இருக்கின்ற கலைமகளை வழிபடுவோம். அவளே நம்மை இருட்டிலிருந்து மீட்டெடுக்கும் அன்னை. மனிதத்தாய் பத்து மாதம் மட்டுமே நம்மை சுமக்கிறாள். கலைகளின் தலைவியான இந்த தெய்வத்தாய் நம்மை காலமெல்லாம் சுமக்கிறாள். வழிதெரியாமல் தவிக்கும் நம்மை விரல் பிடித்து அழைத்து சென்று உரிய இலக்கை காட்டுகிறாள். இவளின் ஞான வெளிச்சம் தான் உலகத்தை இருள் அண்டாமல் காப்பாற்றுகிறது. இவள் தரும் அறிவுதான் ஆற்றலின் ஊற்றுக் கண்களாக இருக்கிறது. குதிரைகளையும் தேர்களையும் பெறலாம். கொட்டகை நிறைய பசுக்களையும் பெறலாம். இந்த செல்வங்களை ஆற்றலினால் மட்டும் காப்பாற்ற முடியுமா. அறிவு இல்லாத ஆற்றல் நம்மை மட்டுமல்ல செல்வத்தையும் அழித்துவிடுகிறது. இந்திரன் எதனால் மகிழ்ச்சி அடைகிறான். நமது சடங்குகள் தான் அவனை சந்தோஷம் அடைய செய்கிறது. நமது சடங்குகளோ நாகுஷத்தை அடிப்படையாகக் கொண்டது. நாகுஷ விதிமுறைச் சடங்குகள் தான் இந்திரனை மகிழ்விக்கும் தன்மை கொண்டதாகும். இந்திரன் எல்லையில்லாத செல்வங்களின் சொந்தக்காரன் ஆவான். பகைகள் அனைத்தையும் அடக்கி ஆளும் வீரனும் ஆவான். நமது ஆயூதங்களுக்கும் ஆற்றல்களுக்கும் அவனே மூலம். அதனால் நம்மிடமிருந்து சோமரசத்தை பெற்று வெற்றி என்னும் ஆனந்தக் கடலை நமக்கு தருகிறான். சாம வேதத்தின் பல பகுதிகள் சோம ரசத்தின் பெருமைகளை பேசுவதாகவே இருக்கிறது. அதனால் இதை சாம வேதம் என்று அழைப்பதை விட சோம வேதம் என்று அழைத்தால் பொருத்தமாக இருக்கும். இனி இந்த வேதத்தின் இறுதி பகுதியை பார்ப்போம். பிரகஸ்பதி என்ற பெயர் இந்திரனுக்கு உரியது. இப்போது இவன் வெள்ளை குதிரைகள் பூட்டிய அழகிய தேரில் வருகிறான். கம்பீரமான அவனது குதிரைகள் காற்றை விடவும் வேகமாக செல்லக் கூடியதாகும். இததகைய குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்த படியே பல போர்களங்களை அசுரர்களின் அழிவுக்களமாக ஆக்கி வெற்றி வாகை சூடி இருக்கிறான். வெற்றி ஒன்று தான் இந்திரனின் பிரகடனப்படுத்தப்படும் செய்தி ஆகும். இத்தகைய வெற்றியின் அரசனான இந்திரன் நமது தேர்களை காக்கட்டும். இந்திரன் தனது ஆயுதத்தால் மேகங்களை பிளக்கிறான். அவற்றில் அடங்கி இருக்கும் நீரை பூமியின் மேல் மழையாக பொழிய செய்கிறான். இந்திரனின் கோபம் மிகவும் பயங்கரமானது. எந்த ஆயுதமும் அவனை வெல்லாது. அவனது இருக்கையிலிருந்து அவனை அசைக்கும் சக்தி எவருக்கும் இல்லை. எல்லா தேவர்களும் அவனிடத்தில் அடங்கி நடப்பவர்களே ஆவார்கள். அசுரர்களும் அவன் முன்னால் சக்தியற்று போய் விடுகிறார்கள். இந்திரன் வரும் போது அனைத்து தேவர்களும் வணங்கி வரவேற்பார்கள் அவனை. அவனது படை முன்னேரும் போது சடங்குகளின் அதிதேவதையான சோமன் அவைகளை வழி நடத்துகிறான். சண்டமாருதமும், மந்த மாருதமும் அப்படியே செய்கின்றன. இந்திரனை எவரும் வெல்ல முடியாது என்பது போலவே அவனது படைகளையும் யாரும் வெல்ல முடியாது. ஏனென்றால் அவன் படைவீரர்கள் அனைவருமே சோம பானத்தை சுவையுடன் பருகிய தேவர்கள் ஆவார்கள். சோம பானம் அருந்துவதினால் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் புதிய பலத்தை பெறுகின்றன. கவசத்தால் சூழப்பட்டு ஆயுதங்களால் காக்கப்பட்டால் எந்த உணர்வு தலைக்கேருமோ அதே உணர்வு சோமபானம் அருந்துவதால் ஏற்படுகிறது. அமிர்தத்தால் ஏற்படும் அழிவற்றத் தன்மை சோமபானத்தால் தற்காலிகமாக ஏற்படுகிறது. தேவர்களின் ஆற்றல்களால் எங்கள் பாதுகாப்பு பலபடுத்தப்படட்டும். நஞ்சு நிறைந்த தலையை இழந்த நாகப்பாம்பை போல் எங்கள் விரோதிகள் கண்களை பறிகொடுத்து அழியட்டும். எங்களது பகைவர்களும் அவர்களது படைகளும் அக்னி தேவனின் கொடிய பார்வை பட்டு வெறும் சாம்பலாக மாறட்டும். நாங்கள் வெறுக்கும் பகைவர்களும் எங்களை வெறுக்கும் பகைவர்களும் தேவர்களால் கொல்லப்படட்டும். அத்தகைய தேவர்களை பாடி பரவும் பாடல்களின் ஓசை நாலாபுறமும் சூழ்ந்து ஒரு கவசம் போல் எங்களை பாதுகாக்கட்டும். இந்திரனே! உனது பலம் ஆயிரம் சிங்கங்களின் வீரியத்திற்கு ஒப்பாகும். உனது பாதச் சுவடுகள் வனாந்திரங்களிலும் மலைகளின் சிகரங்களிலும் படிந்திருக்கிறது. சிகரங்களையும் சமுத்திரங்களையும் பாதங்களால் நசுக்கி மார்தட்டி நீ அறை கூவல் செய்தால் திசைகளெல்லாம் நடுக்கம் அடையும். உயிர்களெல்லாம் கதிகலங்கும் உனது குரலுக்கு அஞ்சாத உயிர்கள் எதுவுமே இல்லை. உன்னை மனநிறைவு கொள்ளச் செய்யும் யாகங்களையும் சடங்குகளையும் நாங்கள் செய்வதினால் எங்களை தொடர்ந்து பாதுகாப்பாயாக. வாழ்க்கையை ரசமுடையதாக்கும் பகுதிகள் பல சாம வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர வாழ்வை கடந்து செல்ல உதவி செய்யும் தத்துவங்கள் மிகக் குறைவாகவே இந்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காகவும் தொழில்களுக்காகவும் நாலாபுறமும் நாடோடிகள் போலும் சுற்றி திரிந்த வேதகால மக்களுக்கு போதிய ஓய்வும் களியாட்டமும் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் இந்த வேதத்தில் தெளிவாக காணமுடிகிறது. சாதாரணமான உணவுகளினால் மனிதர்கள் எப்போதுமே திருப்தி அடைவது கிடையாது. உணவின் சுவைகளையும் தாண்டி வேறு சிலவற்றையும் மனித மனம் நாடுகிறது. ஏனென்றால் மாற்றும் சுவையை அனுபவிக்கும் பொழுது இனம் புரியாத உல்லாசம் தனக்கு ஏற்படுவதாக அவன் நம்புகிறான். பாதுகாப்பற்ற நிலையிலும் பயத்துடனும் வாழ்ந்த ஆதிகால மனிதன் அவற்றை மறைப்பதற்காகவும் மறப்பதற்காகவும் மயக்கம் தருகின்ற பானங்களை நாடி இருக்கிறான். அந்த நாட்டத்தின் கண்டுபிடிப்பே சோம பானம் ஆகும். இந்த பானம் இப்போது எங்கும் தயாரிக்கப்படவில்லை. காரணம் சோமச் செடிகள் இன்று மனிதர்களுக்கு கிடைக்கவில்லை. அவைகள் முற்றிலுமாக அழிந்து போய் இருக்கலாம் அழிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது இது தான் சோமச் செடி என்று அடையாளம் தெரியாமல் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் போதைக்கு மயங்கும் மனித சுபாவம் ஆரம்ப நாட்களில் புனிதத் தன்மையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இணைத்ததற்கு காரணம் தீயதை நல்லதாக காட்டும் சதி உணர்வா அல்லது அவர்களின் இயற்கையே அப்படித்தானா என்பது இன்றைய நிலையில் அமர்ந்து கொண்டு நம்மால் சிந்தித்து முடிவு செய்து விடமுடியாது. இருப்பினும் சாம வேதத்தின் இந்த கருத்துகளை பிரதானப்படுத்த சில குழுவினர் வைதீகச் சடங்குகள் அனைத்துமே போதை களியாட்டங்கள் தான் என்று பிரச்சாரம் செய்வதற்கு தக்க பதிலடியை நமமால் சரிவர கொடுக்க இயலவில்லை. அதற்காக வைதீகச் சடங்குகளை கொச்சை படுத்துவதை பொருத்துக் கொள்ள முடியாது. காரணம் எந்த இலக்கியமும் அது தோன்றிய காலத்தின் பண்பாடுகளையும் பழக்கங்களையும் புறந்தள்ளாமல் தன்னகத்தே கொண்டு பல புதிய கருத்துகளை உருவாக்குவதே ஆகும். வேத இலக்கியமும் இதற்கு விதி விலக்காக முடியாது. அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது சோமபானம் என்ற மதுவகை ஓடி ஆடி உழைத்த வேதகால மக்களின் உடல் வலியை போக்கி உற்சாகத்தை கொடுத்திருப்பதினால் வேதத்தில் அது புகழப்பட்டிருக்கலாம். அதற்காக இன்று கூட வைதீகச் சடங்குகள் களியாட்டமாக அமைந்திருக்கிறது என்று வாதிடுவது முழுமையான அறியாமையாகும் அல்லது முரட்டுத் தனமான மூடச் சிந்தனை ஆகும். சாம வேதம் அக்கால மக்களின் இன்ப நுகர்வு எப்படி இருந்தது என்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. உல்லாசம் இல்லாத எந்த வகையான வாழ்வும் மனிதனுக்கு சுமையாகி விடும். உல்லாசங்களை அனுபவித்தால் தான் மனதில் எழும்பும் உணர்ச்சிகள் அடங்கும். அனுபவிக்காமல் உணர்வுகளை அடக்கினால் அது பூதாகரமாக வேறோரு வடிவத்தில் வெளிபட்டு மனிதனை அழிவு பாதைக்கு அழைத்துச் சென்று விடும். அனுபவித்து முடிந்த பிறகு மனம் அமைதி அடைந்து மோட்சம் என்ற அடுத்த படியை நாடுகிறது. இதை தெளிவாகக் காட்டுவதே சாம வேதத்தின் முக்கிய நோக்கமாகும். அதர்வண வேதம் கடைசி வேதமாக கருதப்படுகிறது ஏறக்குறைய யஜூர், சாம வேதங்கள் உருவான காலத்திலேயே அதர்வணம் உருவாகி விட்டது என்றாலும் அது அப்போது வேதமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை பகவத் கீதையில் கூட முதல் மூன்று வேதங்களை பற்றி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது தவிர அதர்வணத்தை பற்றி பெரியதாக எதுவும் கூறப்படவில்லை இதனால் மகாபாரத காலத்திற்கு பின்னரே அதர்வணம் வேதம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று கருத முடிகிறது. ரீக் வேதம் தெய்வங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை எப்படி பெறலாம் என்று கூறுகிறது. யஜூர் வேதம் தெய்வங்களுக்கான சடங்கு முறைகளை விரிவாகக் கூறுகிறது. சாம வேதம் சோமபானம் முதலிய பொருட்களை உருவாக்குதலை பற்றி கூறுகிறது தெய்வத்தால் மட்டுமே மனிதர்கள் கலப்பில்லாத நன்மைகளை பெறலாம் என்பது இந்த வேதங்களின் பொதுவான கொள்கை ஆகும். தெய்வங்களை அடைவதற்கு மனிதர்கள் மனம் என்னும் படகை கொண்டுதான் பயனிக்க வேண்டுமென்று இந்த வேதங்களின் கருத்துகளை ஒட்டி உபநிஷதங்களும் பறைசாற்றுகின்றன. அதர்வண வேத பாடல்களும் யாக தேவதைகளை போற்றுகின்றன. உதவிகளை கேட்கின்றன அதே நேரம் தெய்வங்கள் தரும் உதவி என்பது மனித உடல்களின் அவஸ்தைகளை தவிர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர கஷ்டங்களை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று தெளிவாக வலியுறுத்துகிறது. ஆத்மாவானது செயல்பட வேண்டுமென்றால் சரீரம் என்பது அவசியம் தேவை ஆத்மாவை தாங்கி நிற்கும் உடல் உயிர் இல்லாவிட்டால் இயங்காது உடலின் இயக்கம் நின்று விட்டால் அதாவது உடலும் உயிரும் தனித்தனி ஆகிவிட்டால் ஆத்மாவால் எதையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவே உடம்பு என்பது அவசியமான பொருள் என ரிஷிகள் கருதினர். எனவே அவர்கள் உடம்பை நோய்களிடமிருந்தும் மற்ற அபாயங்களிலிருந்தும் பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துகளை முதன்மையாக வைத்து பாடல்களை இயற்றினர். அத்தகைய பாடல்களின் தொகுப்பு தான் அதர்வண வேதமாகும். இந்த வேதத்தில் 5987 பாடல்கள் உள்ளன. இந்த பாடல்களில் நோய்களிலிருந்து மனிதனை பாதுகாக்கும் படி வேண்டுகின்ற பாடல்களே மிகுதியாக உள்ளது. ஆரோக்கியத்தை விரும்பும் கோரிக்கைகள் அதிகமாக பல பாடல்களில் வெளிப்பட்டாலும் கூட வேறுசில பாடல்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறது திருமணம் ஆகாத குமரி பெண்களுக்கு திருமணம் வேண்டியும் வயதான பிறகு கூட திருமணம் முடியாமல் தனிமையில் தள்ளாடும் ஆண்களுக்கு தக்க துணை வேண்டியும் குழந்தைகள் இல்லாதவர்கள் மழலைச் செல்வங்களை பெற்று மகிழ்வுற வேண்டியும் கடவுளிடம் முறையிடும் பாடல்கள் இருக்கின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் மலட்டுத் தன்மையை போக்கவும் கருச்சிதைவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைக்கும் பாடல்களும் உள்ளன. இது மட்டுமல்ல பொறாமைகளை பொசுக்கும் படி சச்சரவுகளை நீக்கும்படி பேதங்களை மேலெழும்பாமல் அமுக்கும் படியும் கோபத்தை குறைக்கும் படியும் வீடுகட்டிக் கொள்ள உதவி செய்யும் படியும் விதை விதைக்கும் போதும் பயிர்களில் பூச்சிக்கள் பரவும் போதும் விளைச்சல் வீட்டுக்கு வந்து சேரும்போதும் கடவுளை பக்கத் துணையாக இருந்து பாதுகாத்து தரும்படி கேட்கின்ற பாடல்களும் அதர்வண வேதத்தில் உள்ளன. ஆயுதங்களைக் கொண்டும் ஆள் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற முடியாத எதிரிகளை மந்திரங்கள் கொண்டு செயலிழக்கம் செய்ய வைக்கும் வகைகளும் மேலும் பல மாந்திரீக ரகசிய வித்தைகளும் அதர்வண வேதத்தில் ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வேதத்தை மக்களின் வேதம் என்று பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். காரணம் மக்களுக்கு ஏற்படும் நோய் நொடியிலிருந்தும் அரசுகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களிடமிருந்தும் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த பிரச்சனைகளிலிருந்தும் வெளிவருவதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் அதர்வண வேதம் காட்டுவதனால் அப்படி அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஜூரத்தினால் துன்பப்படும் மனிதனை காப்பாற்றும் படி அக்னி தேவனை துதிக்கும் ஒரு பாடல் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த பாடலை முறையான சந்த லயத்துடன் நோயாளியின் முன்பு பாடினால் எத்தகைய ஜூரமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் குறைந்து விடுகிறது மேலும் குழந்தை பேரு தருகின்ற மந்திரத்தால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு மட்டுமல்ல சாதாரண தச்சுத் தொழிலாளிக்கும் கூட குழந்தை பிறக்கிறது. இதை நாம் வேதங்களை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக கூறவில்லை. எனது சொந்த அனுபவத்தாலும் என் கண்முன்னே மற்றவர்கள் பெற்ற அனுபவத்தாலும் கூறுகிறேன். காய்ச்சலை விரட்டும் அதர்வண வேத பாடலை தமிழ் வடிவில் பார்ப்போம். அக்னி பகவானே ஜூரம் என்ற துர்தேவதையை இங்கே இருந்து விரட்டி அடி. சோமனையும் வருணனையும் உன்னுடன் சேர்த்துக்கொள். அவர்கள் ஆற்றல் மிகுந்தவர்கள் சக்தி தரும் சோமனும் குளிர்ச்சித் தரும் வருணனும் அக்னியாகிய நீயும் திரி சூலம் போல் இணைந்தால் இந்த நோய் தங்கி கொடுமைபடுத்தும் தேவதை புற்களின் மீதும் நெருப்பு குண்டங்கள் மீதும் அமர்ந்திருக்கும் தெய்வங்களே இந்த ஜூரம் என்ற தீயசக்தியை வெகுதூரம் துரத்துங்கள். இந்த தீய சக்தி மனிதனை பிடித்து விட்டால் அவனை அது எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது. நெருப்பு குண்டமாக அவனது உடலை மாற்றி சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது. பழங்களின் சாரை உறிஞ்சி விட்டு சக்கைகளை தூர எறிவது போல் மனித உடல்களையும் ஜூரம் செயல்பட முடியாதவனாக மனிதன் மாறிவிடுகிறான். முப்பெரும் தெய்வங்களே இந்த தீயவனின் கொட்டத்தை ஒடுக்குங்கள். அவனை கீழே விழ்த்துங்கள். மீண்டும் அவன் எழுந்து வராத வண்ணம் குழிதோன்டி புதைத்து விடுங்கள். இதோ அந்த தீயவன் வந்துவிட்டான். உடம்பில் குடியேறிவிட்டான். அதற்கான அடையாளங்கள் உடல் முழுவதும் பூரான்கள் போல் நெளிகிறது. மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளிலிருந்து சிவப்பு நிற முளைகள் வெளிவருவது போல் உடல்முழுவதும் செம்புள்ளிகள் வரிசையாக பரவி மனிதனை வாட்டுகிறது. உடல்களை வாட்ட அந்த தீயவன் பிரயோகம் செய்யும் ஆயுதங்கள் தான் இந்த சிவப்பு புள்ளிகளோ தெய்வங்களே விரைந்து வாருங்கள் அவன் ஆயுதத்தின் முனைகளை ஒடித்து போடுங்கள் ஆயுதம் வலுவிழந்து விட்டால் ஒடி விடுவான் அல்லவா. அவனைதப்பி செல்ல விடாதீர்கள். மறைந்திருந்து மறுபடியும் தாக்குவான் எனவே அவனை புதைத்துவிடுங்கள் இவன் எப்போதும் தனி ஆளாக வருவது இல்லை. இருமல் என்ற சகோதரனையும், எரிச்சல் என்ற தங்கையையும், நடுக்கம் என்ற மாமனையும் இன்னும் வித விதமான உறவு முறைகளையும் அழைத்து வந்து கும்பலாக தாக்குவான் அவர்கள் ஒவ்வொருவன் உருவங்களும் கண்டுபிடிக்க முடியாதவாறு மாயங்கள் நிரம்பியதாகவும் மர்மங்களின் வடிவங்களாகவும் இருக்கும் மரண தேவனே வந்து வைத்தியம் செய்தால் இவர்களின் கொட்டம் அடங்குமோ என்னவோ தெரியவில்லை. சக்தி மிகுந்த அக்னி தேவதையே கரம் கூப்பி மண்டியிட்டு வேண்டுகிறோம். இந்த தீயவர்களை விரட்டு இனிமேலும் தலைகாட்டாதவாறு அடக்கு. மேலே சொன்ன பாடலை மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் ஜூரத்தை பற்றி மட்டுமல்ல அம்மை நோயின் அறிகுறியை பற்றியும் விளக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள். மேலும் அந்த தீயவனை புதைத்து விடுங்கள் என்று தேவதைகளை வேண்டுவதை வைத்து பார்க்கும் பொழுது நோயை புதைக்க தெய்வங்களை வேண்டிவிட்டு நோய்பாதித்து இறந்தவர்களை தகனம் செய்யாமல் புதைத்து விடும் பழக்கமும் அக்காலத்தில் இருந்திருப்பதை உணரலாம். நோயை விரட்ட பிரார்த்தனை செய்வது மட்டுமல்ல சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிகிறது. பொதுவாக அதிகரித்துவிட்ட உடல் சூட்டை வெளியேற்றுவதற்கு ஜூரமும் வெளியேற்ற கால தாமதமாகியே அல்லது கிருமிகளின் தாக்குதலில் முடியாமல் போனதாலும் அம்மை நோய் வருவது உண்டு. இந்த நோய்களுக்கு இன்றைய நவீன உலகில் பல மருந்துகள் இருப்பது போலவே வேதகாலத்திலும் குஷ்த்தா என்ற மூலிகைமருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்திருக்கிறது மலை பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் அந்த மூலிகையை தெய்வமாகவும் அம்மக்கள் கருதி இருக்கிறார்கள். அதை விளக்கும் ஒரு பாடலில் சில பகுதிகளை பார்ப்போம். குஷ்த்தாவே நீ ஜீரத்தை அழிக்கும் தெய்வம் என்னிடமிருந்து அந்த தீயவனை விரட்டி அடித்தது நீ தான். உன்னை நான் வணங்குகிறேன். உலக தாவரவர்க்கங்களில் தலைவனான உன்னை மலைகளிள் மீதும் நான் கண்டேன். கழுகுகள் கூடுகட்டும் எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய். நீ எங்களை தாக்கும் ஜூரம் என்ற துர்தேவதையின் வருகையை அறிந்தாலே எந்த உயரத்தில் இருந்தாலும் எங்களுக்காக இறங்கி வருகிறாள். இமவானின் மகளான கங்கையை விடவும் வேகமாக நீ எங்களை நோக்கி வருகிறாய். நீயே எங்களின் கருவூலம் உனது பெருமையை ஊரெல்லாம் எடுத்துறைப்போம். அரசமரம் என்பது தேவதைகள் குடியிருக்கும் புனிதபீடம் அதன் நிழலில் தான் தெய்வங்கள் வாழ்கிறார்கள். அந்த மரம் சொற்கத்திலிருந்து பூமிக்கு வந்ததாகும். தேவர்கள் அதன் நிழலிலிருந்தான் அமிர்தத்தை தயாரிக்கின்றார்கள். இந்த மரத்திற்கு குஷ்தா தனது சக்தியை வழங்கி இருக்கிறது. இதன் பட்டைகளும் வேர்களும் அமிர்தத்திற்கு ஒப்பானது சோமபானம் தயாரிப்பதை போல் இதை தயாரித்து குடித்து ஜூரம் என்னும் விரோதியை ஓட ஓட விரட்டுங்கள். குஷ்தா என்ற அமிர்தத்தை மலைகளின் மீதும் தேவர்கள் எப்படி அனுப்புகிறார்கள். தலை நகரத்திலிருந்து அரசனானவன் எத்தகைய ராஜ மரியாதையுடன் எல்லை புறத்திற்கு செல்வானோ அதே போலவே குஷ்தாவும் சொர்கத்திலிருந்து மலை முகடுகளுக்கு வருகிறாள். அமிர்தமான அவள் வரும்பாதை தங்கத்தால் ஆனது. அது எப்போதும் ஒளிமயமாகவே இருக்கும் தங்கரதத்தில் அவள் வருவாள். அவள் தேரை இழுக்கும் குதிரைகள் தங்க நிறமானது. அவைகளும் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் உயர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டு உயர்ந்த வாகனத்தால் குஷ்தா என்ற அமிர்த தேவதை நம்மையும் உயர்த்துவாள் இவள் நமது அருகாமையில் வந்துவிட்டாலே போதும் நம்மை படுக்க வைக்கும் புரள வைக்கும் இம்சை செய்யும் ஜூர அசுரன் பயந்தே ஒடிவிடுவான். எனவே குஷ்கா தேவதையை துதிப்போம். ஜூரம் அம்மை நோய் போலவே தலைவலி இருமல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்த கோரும் பாடல்களும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த நோய்கள் மின்னல்களால் ஏற்படுவதாக வேதகால மக்கள் நம்பினர். அதற்கு காரணம் மழையில் நனைந்து நோய் வந்தாலும் கூட அதற்கான குற்றத்தை தானியங்களை விளைவிக்க வரும் மழையின் மீது சுமத்த வேதகால மக்கள் விரும்ப வில்லை வானை கிழித்து கண்ணை பறிக்கும் மின்னல் மீது சுமத்தினால் நன்றி கொன்ற தன்மையிலிருந்து தப்பித்து விடலாம் என்று நம்பினார்கள். மின்னலால்தான் ஜூரம் நோய் வருகிறது என்ற நம்பிக்கையில் எழுந்த பாடலை பார்ப்போம். மேகங்களின் கருப்பையில் இருந்து சிவப்புவண்ண எறுது ஒன்று வெளிவருகிறது. காற்றும் மழையும் இடியும் அதன் பிரசவத்தை கவனித்துக் கொள்கின்றன. அப்படி பிறக்கும் மின்னல் என்னும் எறுது நம்மீது பாயாமல் நேராக போகட்டும் காரணம் அவன் அடிக்கடி வராவிட்டாலும் அத்திமரப்பூபோல் தாக்குதலுக்கு ஒரு முறை ஆளானாலே போதும் நாம் சின்னாபின்னமாகி விடுவோம். குளிர் நோய்களின் அன்னை மின்னலே ஆகும். இவனால் தொடப்பட்டவர்கள் நிம்மதியை இழந்து விடுவார்கள். நம்மை இவன் ஒடுக்குகிறான், வதைக்கிறான், நடுநடுங்கசெய்கிறான் இவன் இறங்குவதற்கான இடம் மலைகளும் வெட்ட வெளிகளும் தான் எங்கள் வீடுகள் அல்ல அதோ விண்ணை நோக்கி மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. பாம்புகளைப் போல் மலைகள் படுத்து கிடக்கின்றன. வெட்டவெளி பிரதேசமோ மடிவிரித்த அன்னை போல் மலர்ந்து கிடக்கிறது. நீ அவர்களை தாக்கு அவர்கள் பலவான்கள் பதிலுக்கு அவர்கள் உன்னை தாக்குவார்கள். அல்லது உனது தாக்குதலையாவது தாங்கி கொள்வார்கள். பலசாலிகளை விட்டுவிட்டு பலஹீனர்களை தாக்குவது வீரனுக்கு அழகல்ல சண்டை போட தகுந்த மல்லர்கள் இருக்கும் போது குழந்தைகளிடம் மல்லுக்கு நிற்பது பாராட்டக் கூடிய செயலாகாது அதனால் எங்களை விட்டு விடு நாங்கள் இன்னும் கொஞ்ச காலம் வாழ விரும்புகிறோம் அதற்குள் எங்களை விறகுகளின் மேடைகளில் படுக்க வைத்துவிடாதே. நாங்கள் இந்த மண்ணில் நெடுங்காலம் வாழு ஆசைபடுகிறோம். நூறு கோடைகாலத்தையும் நூறு குளிர் காலத்தையும் பார்க்க விரும்புகிறோம். இந்திரனும், அக்னியும், பிரகஸ்பதியும் இதற்கான வரத்தை தரசித்தமாக இருக்கிறார்கள். மரண தேவன் கரம் நீட்டி அழைக்கும் பொழுதெல்லாம் எங்களை காப்பாற்ற தேவாதி தேவர்கள் தயாராக இருக்கிறார்கள். நல்ல பழங்கள் கனிந்து தொங்கும் போது அதை விட்டுவிட்டு பச்சை காய்களை கடித்து துப்பும் குருங்கை போன்று எங்களை குதறி விடாதே மற்ற தேவர்கள் எங்கள் மீது கருணையை பொழியும் பொழுது நீ மட்டும் நெருப்பை உமிழ்வது நீதியாகாது. வாயு தேவனே நீ அண்ட சராசரங்களில் உணர்ந்து கொள்ள முடியாத எத்தனையோ இடங்களில் தங்கி இருக்கிறாய். இந்த பூமியும் நீ வாழுகின்ற இடமாகும் அது மட்டுமல்ல எங்களது உடலும் நீ வாசம் செய்யும் பகுதியே ஆகும். நீ உள்ளே போகிறாய். வெளியே வருகிறாய் நாங்கள் தூங்கும் போதும் மயங்கும் போதும் கூட நாங்கள் அறியாமையிலேயே நீ இந்த செயலை செய்துகொண்டிருக்கிறாய் தயவு செய்து இத்தகைய வேலையை நிறுத்தாமல் தொடர்ச்சியாக எங்களிடத்தில் செய் உனது பயணத்தை எங்களிடம் இருந்து நீ துண்டித்துக் கொண்டால் மரணத்தில் வலையில் நாங்கள் விழுந்து விடுவோம். யம ராஜனை வெல்லும் தகுதி உனக்குதான் இருக்கிறது. கரங்களை கூப்பி சிரங்களை தாழ்த்தி உன்னை வணங்குகிறோம். நமது உறவு வெகு நாள் நீடிக்க வேண்டும். மனிதனே நீ மயங்காதே உனது நினைவுகளை தவறவிடாதே ஆயிரம் கயிறுகள் விண்ணை நோக்கி உன்னை இழுத்தாலும் மண்ணில் இருக்க தைரியத்துடன் போராடு ஆத்மாவை உதறித்தள்ள விரும்பாதே யம தூதர்கள் உன்னை அழைக்கலாம் வண்ண மயமான சொர்க்கம் உன் கண்ணில் தெரியலாம் அதனால் தூதர்கள் பின்னால் செல்ல நினைக்காதே இந்த மண்தான் உனது வீடு இதை மறக்காதே மருந்துகளை ஏற்றுக் கொள்ள தயங்காதே இதை ஏற்றுக் கொள்ள உன்னை பயம் தடுக்கிறதா யமனை விரட்டும் போர்வீரர்கள் உன்தாயும் தகப்பனும் சகோதரியும், சகோதரனும் மருந்துகளே ஆகும். நோய்கள் உன்னை வதைக்கும் விதத்தை பார் எதற்கும் உதவாவதனாக அவைகள் உன்னை மாற்றுகிறது. பாறைபோல் உன்மேல் ஏறி அமாந்து கொண்டு அழுத்துகிறது. ஆற்றில் துவைத்த துணியை ஈரம்போக பிழிவதைபோல் உன் சரீரத்தையும் பிழிந்தெடுக்கின்றனர். நோய் என்னும் கொடிய மிருகத்தை கொன்று வீழ்த்தும் ஆயுதம்தான் மருந்துகள் இந்த மருந்து உனது உடலுடன் கலந்து விட்டால் நோய்கள் வந்தவழியே இந்திரனைக் கண்டு அசுரப்படைகள் போல் ஒடி ஒளிந்து விடும். இன்னும் பல நோய்களை பற்றியும் அவைகளை விளக்குவதை பற்றியும் ஏராளமான பாடல்களில் விவரித்து கூறப்பட்டுள்ளது. அவைகளெல்லாம் ஏறக்குறைய இப்போது கூறப்பட்ட பாடல்களின் சாயலிலே இருப்பதனாலும் அதை பயன்படுத்தும் முறைகளை பற்றி நாம் இப்போது பேசப் போவதில்லை என்பதாலும் வேறு வகையான பாடல்களை சிந்திப்போம் பெண்கள் தக்க பருவம் வந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுவது நமது மரபாகும். பெண்களின் திருமணம் என்பது சமுதாய அந்தஸ்டோடும் பொருளாதார நோக்கத்தோடும் இணைக்கப் பட்டிருப்பதால் மற்ற நாடுகளை விட நமது நாட்டின் திருமணத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறித்த காலத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறாவிட்டால் பெற்றோர்கள் அதை பெரும் பாரமாகவும் கவலையாகவும் கருதுகிறார்கள். அதனால் திருமணம் நடைபெற வேண்டி தெய்வீக சடங்குகள் பல செய்கிறார்கள் இந்த வழக்கம் இன்று புதிதாக தோன்றியது அல்ல வேதகாலத்திலும் இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சடங்கில் ஒதப்பட்ட பாடலை இப்போது பார்ப்போம். அக்னியே இந்த இளம்பெண்ணுக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் உள்ள கணவனை கண்டுபிடித்து கொடுப்பாயாக அவன் இவளது இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும். அவன் இவளது வாழ்வில் அதிஷ்ட பொக்கிஷமாக அமையிட்டும் திருமணமான பிறகு அவனால் இவளுக்கு களிப்பு ஏற்படட்டும். திருவிழா காலங்களில் இருவரும் இனிமையை அனுபவிக்கட்டும். இந்த திருமணம் சோமனின் அங்கிகாரத்தை பெற்றதாகட்டும். பிரம்மனும் இதற்கு இணக்கம் தெரிவிக்கட்டும் ஆயமான் என்னும் தெய்வம் திருமணத்தை முடித்து வைக்கட்டும். தாதர் என்னும் கடவுளும் தயங்காமல் ஆசிர்வாதம் செய்யட்டும். எல்லாத் தெய்வங்களும் இணைந்து தேடி கொடுத்த சௌந்தர்யம் நிரம்பிய வல்லமை பொருந்திய கணவனால் மகிழ்ச்சியை இவள் முழுமையாக அனுபவிக்கட்டும். அந்த மகிழ்ச்சி நெடுநாள் தொடரட்டும். இந்த பெண்ணுக்கு விரைவிலேயே கணவன் வருவான் அது உறுதி ஏனென்றால் இவள் அழகும். அறிவும் அடக்கமும் நிறைந்தவள். இவளுக்கு அழகை கொடுத்த சோமன் கணவன் வராமலா தடுத்து விடுவான் பெண்ணே உனது கணவனுக்கு நீ ராணியாக இரு அவன் உன்னை நெருங்கும் போது இனிமையான ஒளி உன்னிடமிருந்து பிரகாசிக்கட்டும். அவன் குழந்தைகளை வம்சம் தழைக்க சுமந்து கொடு செல்வத்தின் அதிபதியான இந்திரனே இவள் எத்தனை நாளைக்கு தனிமையில் இருப்பாள். சிதறிகிடக்கும் மாமிசத்துண்டுகளை கழுகுகள் கொத்துவது போல் தனிமையில் இருக்கும் இவளை மற்றவர்கள் கண்கள் கொத்தாதா. அதனால் இவளுக்குரியவனை ஆணையிட்டு அழைத்து வா உனது ஆணைக்கு கீழ் படியாத யாரையும் பூமியில் உண்டா இவளை மணக்க இருக்கும் இளைஞனின் மனதை இவளோடு இணைத்துவிடு திருமணம் முடிவதற்கு எத்தகைய பிரயத்தனங்களை வேதகால மக்கள் செய்தார்களோ அதே அளவிற்கு கடுமையான முயற்சிகளை ஆண் குழந்தைகளை பெறுவதற்காகவும் செய்தனர். ஏனென்றால் ஆண்களின் பலம்தான் அவர்கள் சமூகத்தை பாதுகாத்து பகைவர்களிடமிருந்தும், கொடிய மிருகங்களிடமிருந்தும் ஆபத்து வராமல் தடுக்க முடியும் என்று நம்பினர். அந்த காலத்தில் பெண்களும் இந்த காரியத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாலும் கூட ஆண்கள் தான் மிக முக்கியமாக இப்பணிகளை ஏற்றிருந்தனர். பகைவர்களோடும். மிருகங்களோடும் சண்டையிடுகின்றபோது ஆண் மக்கள் பல நேரங்களில் இறந்து விடுவதும் உண்டு அந்த காலி இடத்தை நிரப்புவதற்காக அடுத்தடுத்து ஆண்கள் பிறந்தால்தான் படைமாட்சி என்பது சிறப்புடன் இருக்கும் அதற்காக ஆண் குழந்தைகள் அதிகமாக வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதனடிப்படையில் தேவதைகளிடம் வேண்டுதலையும் வைத்தனர். அந்த வேண்டுதல் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். இவளது கர்ப்பபையில் ஒரு ஆண் சிசு உருவாகட்டும். அதற்காண வித்து வில்லிலிருந்து பாயும் அம்பைபோல் இவள் கருவளைக்கு விரையட்டும் பத்து மாதங்கள் நிறைவடைந்த பிறகு வீரத்திருமகனாக இந்த பூமியில் ஜனனம் எடுக்கட்டும் பெண்ணே உனது குழந்தைக்கு பால் கொடுக்கின்ற பொழுது உன் முலைக்காம்புகள் பசுவின் மடிக்காம்புகளாக மாறட்டும். காளை போல் உனது மகன் வீரமுடன் வளரட்டும். சக்தி மிகுந்த தாவரங்களிலுள்ள மூலிகைகளை நீ அருந்து அந்த மூலிகைகளின் தகப்பன் மழை மேகங்கள் உலா வருகின்ற ஆகாயமாகும். தாயோ உள்ளதை எல்லாம் வாரிக் கொடுக்கும் பூமி ஆகும். பூமிக்கும் ஆகாயத்திற்கும் பிறந்த மூலிகையை நீ அருந்துவதினால் உனது ஆண் மகவு நோய்களை எதிர்த்தும் வல்லமையோடு கூடியும் பிறப்பான். கரு உருவாக மட்டுமல்ல உருவான கரு சிதையாமல் முழுமையான குழந்தையாக பிறப்பதற்கான மந்திரப்பாடலும் அதர்வண வேதத்தில் இருக்கிறது. இந்த மண் எத்தனை வகையான மரவிதைகளை தனக்குள் ஏற்றுக் கொண்டு செழுமையாக வளர விடுகிறது. அதே போல இவளது கருப்பையும் ஒரு குழந்தையை உறுதியாக ஏற்கட்டும். இந்த மண்ணில் எத்தனை வகையான பறவைகளும், விலங்களும் வளருகின்றன. அதே போன்று இவளது மணி வயிற்றிலும் மழலைச் செல்வம் கருகாமல் வளருட்டும் என்ற பாடல் வரிகள் கருச்சிதைவை தடுக்க கோரி நிற்கின்றது. அடுத்ததாக அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கூறும் வேத பாடல்களை சிந்திப்போம் அதர்வண வேதத்தில் வசியம் முதலான அஷ்டகர்மங்கள் தெளிவாக கூறுப்பட்டுள்ளது இந்த அஷ்டகர்மங்களை தந்ர சாஸ்திரபடி பிரயோகம் செய்து மனிதன், விலங்குகள் இயற்கை சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வழி வகைகள் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழிமுறைகள் அனைத்தையும் கடும் முயற்சியுடனும் தூய பிரம்மச்சரிய விரதத்துடனும் பழக்கப் படுத்திக் கொண்டான் சாத்தியமே இல்லாதது என்று ஒதுக்க கூடிய அனைத்தையும் சாத்தியப்படுத்திக் காட்டலாம் என்பதை எனது சொந்த அனுபவத்தில் நான் நன்கு அறிந்திருக்கிறேன். இருந்தாலும் அந்த வழி முறைகளை பற்றிப் பேசுவது இந்த நூலின் நோக்கம் அல்ல என்பதனால் அதர்வண வேதத்திலுள்ள பேய்களை விரட்டும் மந்திரப் பாடல் ஒன்றை தமிழ்படுத்தி தருகிறேன். இதை படித்தாலே அதர்வண வேதத்திலுள்ள மந்திர சாஸ்த்திரத்தின் நுட்பத்தை ஒரளவு தெரிந்து கொள்ளலாம். ஏவலின் மூலமாக ஒரு பெண்ணிடத்தில் தீய சக்தி குடி புகுந்துவிட்டது அவள் மணமானவள் அதனால் அவளுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கண்டு அந்த கவலையை போக்கி அந்த பெண்ணை சகஜ நிலைக்கு கொண்டு வர ஒரு ரிஷி முயற்சிக்கிறார். அப்போது அவர் பிரயோகம் செய்த மந்திரத்தின் தமிழ் வடிவம் இதோ உங்கள் முன்னால் தருகிறேன். இவளிடமிருந்து தீய சக்தியே நீ ஒடிவிடு உன்னால் இவள் படும் பாடுகள் போதும் இவள் கைகள் குணமாகட்டும். அங்கே அழகு திரும்பட்டும் இவளை விட்டு நீ ஒடிவிட்டால் பழைய நிலைக்கு இவள் வந்துவிடுவள் திருமணம் முடிந்து கணவனை சந்தித்த நானத்துடன் கால் எடுத்து வைக்கும் போது எப்படி இவள் அழகு பொருந்தியவளாக இருந்தாளோ இவள் மேனியில் அழகு தேவதை எத்தகைய வர்ணஜாலங்களை நிரப்பி இருந்தாளோ அதே வடிவத்தை இவள் மீண்டும் பெறுவாள் குடி வெறியில் ஆட்டம் போடும் குரங்கை போன்று குதித்து கும்மாளம் அடிக்கும் தீய சக்தியே எனது கையிலுள்ள மந்திர தண்டத்தை நன்றாக பார் இதனால் உன்னை தண்டிக்கும் முன்னால் ஒடி விடு நீ போய் விட்டால் இவளது குடும்பம் அமைதி அடையும் உன்னை ஏவி விட்டது யார் அவன் சூத்திரனா அரசகுமாரனா, அந்தன புரோகிதனா, அழகுடைய வைசீக பெண்ணா அது யாராக இருந்தாலும் அவர்களிடமே நீ திரும்பி விடு மறுத்தால் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணை போல் நீ கதறப்போகிறாய் அடிப்பட்ட கழுதையை போல் துடிக்கப்போகிறாய் எனது மந்திரங்கள் சூரியனிலிருந்து புறப்பட்ட கதிர்கைள போல் உன்னை சுட்டுவிடப் போகிறது. நீ நெருப்பில் விழுந்த பஞ்சு போல சாம்பலாகப் போகிறாய் இனி உன் வேலை நடக்காது உன்னை கால்களையும் கைகளையும் இணைத்து கட்டப்போகிறேன். உனது தலையை பின் புறமாக திருப்பப் போகிறேன். உன் விரல் நகங்களை தலைமுடியை இரும்பு கம்பியில் சுற்றி முறுக்கப்போகிறேன். எனது மந்திர வார்த்தைகள் உனது உடலெங்கும் துளைகளை போடட்டும். உனது இரண்டு செவிகளும் வவ்வால்களைப்போல் அருந்து தொங்கட்டும் இதோ உன்னை மந்திரச் சக்கரத்தில் உட்கார வைகிறேன். எனது மந்திரங்கள் கத்தியை போலவும், ஈட்டிகளை போலவும் உன் நெஞ்சை பிளக்கப்போகிறது. அதிலிருந்து தெரிக்கும் பச்சை ரத்தத் துளிகள் உனது மேனி எங்கும் நெய்போல் பரவும் அக்னி தேவனின் செந்நிற நாக்குகள் உன்னை சாம்பலாக்கப் போகிறது விழிகள் பிதுங்க கோரை பற்கள் நீல நாக்கைத் தொங்கவிட்டு கருத்த மேனியுடன் பருந்த சதைகளோடு ஆட்டம் போடும் ஆலகால விஷமே நீ அழிந்து போ நீ வாசம் செய்யும் இந்த பெண்ணின் உடல் புனித அடையட்டும் புது பொலிவு பெறட்டும் என்பதாக அந்த பாடல் தொடர்ந்து செல்கிறது மனித தேவைகளை நிறைவேற்ற வழிகூறும் அதர்வணவேதம் பிரம்மத்தை பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் நிறைவே பேசுகிறது இருப்பினும் அந்தக் கருத்துக்கள் ரிக் வேத சிந்தனைகளோடும் உபநிஷத தத்துவங்களோடும் பெருவாரியாக ஒத்து போகிறது எனவே அதைப்பற்றி அதாவது உபநிஷத தத்துவங்களை பற்றி அடுத்த அத்யாயத்தில் ஆழமாக சிந்திக்க போவதினால் இங்கே அதைப்பற்றி சொல்லாமல் விடுகிறேன். அதர்வண வேதம் மற்ற மூன்று வேதங்களைக் காட்டிலும் மக்களோடு இணைந்து வருவதினால் தனிச்சிறப்பு உடையது என்றே சொல்லலாம். ஒரு தகப்பனும் ஆச்சாயனும் வருங்கால தலைமுறைகளுக்கு சிக்கல்களை தீர்த்துக் கொள்ள எவ்வாறு வழிமுறைகள் கற்றுதருவார்களோ அதே போலவே அதர்வண வேதமும் மனிதன் வாழ்வில் ஏற்படும் சிறு சிக்கல்களிலிருந்து பெரிய சிக்கல் வரை ஏற்படாமல் தடுக்கவும் ஏற்பட்டால் அதிலிருந்து விடுதலை பெறவும் வழியை சொல்கிறது. எனவே அதர்வண வேதத்தை மக்களின் வேதம் என்று அடித்துச் சொல்லலாம்

1 comment:

  1. Interesting.
    You may like to read Roberto Calasso's Ardor

    ReplyDelete