ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஆண்டாளின் பக்திநிலை


ஆண்டாளின் பக்திநிலை
                                    பி.ஆர்.இலட்சுமி
                              முனைவர்பட்ட ஆய்வாளர்                                         அன்னைதெரசாமகளிர்பல்கலைக்கழகம்                   கொடைக்கானல்
.
ஆண்டாள் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.
ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களின் வழியாக இறைவன் மேல் கொண்ட பக்தி குறித்த செய்திகளைச் சுட்டுவதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.
வைணவ சமயத்தில் ஆண்டாள்
பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே கிடைத்த ஒரு அழகிய பெண் குழந்தையை கோதைஎன்று பெயரிட்டு வளர்த்து வந்தார். 
மிகுந்த பாசத்தோடு இளம் வயதிலேயே  தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச்சமயம், தமிழ் சொல்லிக்கொடுத்து நல்ல திறமை கொண்டவராக வளர்த்து வந்தார்.  இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார் கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்த பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் பிடித்தவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எனறும் அழைக்கப்படும்
ஆண்டாள் பூமிபிராட்டியின் அவதாரமாய்க் கருதப்படுகிறார்.
மணப்பருவம் எய்திய மகள்
மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்என்றும்
மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்
என்றும் கூறுவதைக் கேட்டு
மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர். சூடிக் கொடுத்த நாச்சியாரும் மார்கழி
நீராடி, மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாய்ச்சியார்
திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி அருளினார். இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார் குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது கதை.
திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு  முழுதும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணமாகும். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் சங்கத் தமிழ்மாலைஎன்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்குசங்கத் தமிழ்மாலைஎன்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவைஎன்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். தைந்நீராடல்என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னைப் பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளுக்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர்.

இறையன்பு
     பெண்களின் உடற்கூறு குறித்து பாடல்கள் முழுவதும் காணப்படினும் இறைவனைத் துயிலெழுப்பி, பாவை நோன்பு இருக்கும் பெண்களை உய்வித்து காத்தருளும் போக்கிலும் உறக்கத்திலிருந்து விடுபடாமல் இருக்கும் பெண்களை எழுப்பியும் பாவை நோன்பு மூலம் அடையக்கூடிய பலன்களையும் திருப்பாவை தெளிவுபட விளக்குகிறது. பாவை நோன்பின் சிறப்புகளையும் பாவை நோன்பின் பலன்களும் முதல் ஐந்து பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன. இறைவனை அடையும் வழியாக இரண்டாவது பாடல் நேர்த்தியாகப் பாடப்பட்டுள்ளது. பூர்வஜென்ம பாவம் குறித்த செய்திகள் (பாடல் ஐந்து) பாவங்கள் தொலைய இறைவனின் பார்வை அவசியம் என்ற கருத்து ‘முப்பத்து மூவா எனத்தொடங்கும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது (பாடல் இருபது). நமக்கு பக்தியும், வைராக்கியமும் இருந்தால் ஆண்டவன் கண்திறப்பான் என்ற கருத்துடன் கூறப்பட்டுள்ளது சிறப்பானது.
பிரேமா அருணாச்சலம் எழுதிய பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லைஎன்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதேஎன்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது. ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைபிடிக்கக்கூடியவை.
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம்
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம், கோள் சொல்ல மாட்டோம், அதிகாலையில் குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு.
அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் இயற்கை வர்ணனையுடன் அமைந்துள்ளன.திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்ற காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.
 ஆண்டாள் இறைவனை நாதனாக வரித்து, ‘மானிடருக்கு எனில் ஆட்படேன்என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர்.
ஒரே அடிகொண்டு உலகையே அளந்த வாமனனின்அவதாரத்துடன், புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நான்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
இப்பாடலின் மூலம் இயம்புகிறாள்.
கோதையாகிய ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடல்கள் முப்பதும் வாழ்வியல் பண்புகளை விளக்கியுள்ளது. ஆண்டாள் இறைவனைத் தன் நாயகனாக வரித்து இப்பாடல்களைப் பாடியுள்ளார்.
வாழ்க்கையில் நாம் வாழும் காலமறிந்து செயல்பட வேண்டும் என்பதை,
     “வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று
      புள்ளும் சிலம்பின்காண் போதரிக் கண்ணினாய்“
பாடலடிகள் உணர்த்துகின்றன. இப்பாடலடிகள் வள்ளுவர் காட்டும் காலமறிந்து செய்தல் வேண்டும் குறளுக்கு ஒப்புநோக்கத்தக்கவையாக உள்ளன.
அறிவியல்பார்வை
திருப்பாவைப் பாடல்கள் அவற்றைப் படிக்கையிலேயே பேரானந்தம் அளிப்பவையாகும் என்பதை,
 ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழிய்அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றுஅதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்என்ற பாடலின் மூலம் ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்தியிருப்பது புலனாகிறது.ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட, மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். ஒன்பதாம் நூற்றாண்டில் கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைஇப்பாடலில்  காணலாம்.
முடிவுரை
இளந்தலைமுறையினருக்கு இறைவன் மீது நம்பிக்கை வேண்டும்.சமயஉணர்வு அன்பின் அடிப்படையில் உருவாகிறது.சமயங்கள் பலவாயினும் அவை அனைத்தும் ஒரே கருத்தினைப் போதிக்கின்றன. வாழ்க்கையில் இன்ப துன்பங்களை ஏற்றுக்கொண்டு வாழ்தல் ஒரு நிலை; முழுவதும் இறைவனைச்சரணடைந்து ஏற்றுக்கொண்டு வாழ்தல் ஒருநிலை. இவ்விரண்டில் ஆண்டாள் இரண்டாவது நிலையினை அடைந்துள்ளார்.இன்றைய காலத்திற்கு இத்தகைய நிலை பொருந்தாதுஎன்ற ஆய்வியலறிஞர்களின் கருத்து நிலவினாலும் ஆண்டாளின் பக்தி வெளிப்பாடு என்ற நிலையில் இறையன்பு, வாழ்வியல் பண்புகள், பெண்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், இயற்கை வர்ணனை, அறிவியல்பார்வை போன்ற வகைகளில் இவ்வாய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக