Wednesday, 28 September 2011

செவ்வாய் -தமிழ் இனத்தின் பெருமை

லெமூரியாவில் (அ) குமரிக்கண்டத்தில் தான் உலக முதல் மனிதர்கள் தோன்றினார்கள் என்றும், அங்கிருந்து தான் மனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு போயினர் என்றும்,  உலக முதன் மொழி தமிழ் தான் என்றும், அதில் இருந்து தான் மொழிகள் தோன்றின என்றெல்லாம் ஆராய்ந்து குழுமங்களில்/வலைப்பதிவில் இடுவது இப்போதைய ஃபேஷன், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் fad. சுமேரியமும் கூட தமிழ்  தான் என்று பலர் கூறிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் என்னவோ, இஸ்ரேலியர்கள் கூட தமிழர்கள் தான் ஒருவர் ஆராய்ந்துஎழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து செவ்வாயில் தமிழர்கள் என்று என்னுடைய ஆராய்ச்சி கீழே:
  
செவ்வாய் கிரகத்தின் வாசிகள் கூட ஆதி தமிழர்கள் தான். இதைப்பலரும் அறியவில்லை. குமரிக்கண்ட தமிழர்கள் அந்த காலத்திலேயே செவ்வாய் கிரகம் சென்று கால்வாய் வெட்டி, வாழ்ந்துள்ளனர். ஆனால், இன்று பாருங்கள் செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் யாருமே இன்று இல்லை. அவர்கள் வெட்டிய கால்வாய்கள் மட்டும் அவர்கள் இருந்ததற்கான ஆதாரமாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றே, லெமூரிய தமிழர்கள் செவ்வாய் சென்று கால்வெய் வெட்டும் அளவுக்கு பெறும் அறிவுச்செல்வத்தை கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது. செவ்வாயின் கால்வாய்களையும் சங்க கால கால்வாய்கள் என்று கூட வேண்டாம், தமிழர்கள் இன்று கம்மாக்கரையில் வெட்டும் கால்வாய்களையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மைகள் பல தெரிய வரும்.

mars
இன்றைய மேற்கத்திய விஞ்ஞானம் அவை தானாக தோன்றியவை என்று கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டிலேயே அவை செவ்வாய் கிரக வாசிகள் (அவர்களும் தமிழர்கள் தான்) என்று எண்ணற்ற விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். அப்படி இருக்க, இன்று அவற்றை மறுப்பது எதனால் என்பது அனைவரும் யோசித்தால், அதற்கான விடை என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு நிச்சயம் ஆர்ய பார்ப்பன காழ்ப்புணர்வே காரணம். 19ஆம் நூற்றாண்டின் லெமூரியாவை ஒப்புக்கொள்ளும்போது, 19ஆம் விஞ்ஞானிகள், செவ்வாய் கால்வாய்கள் மனிதர்கள் (இவர்கள் ஆதி செவ்வாய் தமிழர்கள் என்று தான் நாம் நிரூபித்து விட்டோமே !) வெட்டியதே எனக்கூறியதை இன்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

செவ்வாய் கிரகத்தில் இன்று தமிழர்களே யாருமே இல்லை, இதற்கு என்ன காரணம் ? நாஸா விஞ்ஞானிகள் கூட அதைத்தான் மிகத்தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். நாசா விஞ்ஞானிகளை விசாரித்தால் ஆய்வு எப்படிச்செல்கிறது என்று சொல்லுவார்கள். செவ்வாய் கிரக தமிழர்கள் அழிந்தது ஆர்ய சதியினால் தான் என்று அவர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பனவாக உள்ளன என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இன்னும் ஆண்ட்ரோமீடா முதலிய விண்வெளிகளிலெல்லாம் தமிழர்கள் பரவியுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் பாருங்கள், பார்ப்பன சதி அதை மூடி மறைக்க பார்க்கிறது.

9832setiSETI
ன் வேற்று கிரக உயிர் தேடல்களில், "WOWஎன்ற ஒலிகள் வேறு அடிபடுகின்றனவாம். WOW என்பது தமிழ் சொல்லே அன்றி ஆரிய சொல்லன்று என்பது தெளிவு. வாவ் என்பது, வாவ் < வாவு < ஆவு < என்று திரிவு படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. (இதற்கான விதிகளை எல்லாம், அரைகுறையாக பளிய், உளிய் என்று தப்பு தப்பாக கல்வெட்டில் எழுதி வைத்த சமணர்கள் இயற்றிய நன்னூல் முதலிய நூல்களில் எல்லாம் தேடக்கூடாது ). ஆ என்ற தமிழ் வேர்ச்சொல்லே, வேற்றுக்கிரக தமிழர்களால் வாவ்என்று மாற்றம் பெற்று விட்டது. இன்றும் கூட தமிழர்கள் ஆச்சர்யத்தை ஆ...என்று குறிப்பிடுவது இதற்கு வலுசேர்ப்பதாக உள்ளது. (மற்ற மொழியினரும் ஆ...ஆச்சர்யப்பட்டால், அது தமிழில் இருந்தே பெறப்பட்டது என்பதை உணர்க.)

வாவ்என்பது தூய தமிழ்ச்சொல்லே. இதற்கு தெலுங்கர், கன்னடர், வியாழன் கிரக வாசிகள் ஆகியோர் தமிழ் வெறுப்பு கொண்டு இயற்றிய மெட்ராஸ் லெக்சிகனை தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் வேண்டுமென்றே இதை ரப்பர் வைத்து லெக்சிகனில் இருந்து அழித்துள்ளனர். வாவ்என்ற தூய தமிழ்ச் சொல் மற்ற கிரகங்களிலும் பேசப்படுகின்றன என்பது நம் கண் முன்னே நிதர்சனமாக தெரிகிறது. ஆகவே, தமிழர்கள் வேற்று கிரகத்திலும் வசித்தனர்-இன்னும்-வசிக்கிறார்கள் என்ற மெய்யை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி கங்கைகொண்டான், கடாரம் கொண்டான் என்ற மெய்க்கீர்த்திகளுக்கு பதிலாக, ஆண்டாராமீடா கொண்டான், பால்வெளி கோண்டான், செவ்வாய்-கால்வாய்-வெட்டினான் என்ற மெய்க்கீர்த்திகள் தரப்படவேண்டும்.

செவ்வாயின் கால்வாய்கள் இனி லெமூரிய கால்வாய் என்று அழைக்கப்பட வேண்டும். தமிழர்களே, செவ்வாயின் ஆதிகுடிகள் என்றும் நிறுவப்பட வேண்டும். பிரபஞ்சத்தின் முதல் ஒரு செல் உயிரி, குமரிக்கண்டத்தில், அதுவும் தமிழ் பேசிய செல் உயிரி தான் என்பது என்று சமஸ்கிருத சாய்வு கொண்ட மேற்கத்தியர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். குமரிக்கண்டத்தில் இருந்தே பூத-பிரேத-பிசாச-நாக-யக்ஷ-கின்னர-மஹோரக-தேவ-கந்தர்வ-பிரம்ம-மானுஷ முதலிய சகலவிதமான கதிகளும் தோன்றின என்பதையும் நாம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறிவுடையோர் தாமாகவே இதை புரிந்துகொள்வர்.

andromeda
இதை எல்லாம் தப்பித்தவரி கூட Peer-reviewed Journalகளில் வெளியிடக்கூடாது. அவர்கள் அனைவரும் சமஸ்கிருத மற்றும் நெப்ட்யூன் கிரக சாய்வு கொண்டவர்கள். செவ்வாய் கிரகம் தமிழர்களுடையதே என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது, அவர்களுடைய சாய்வுகள் அப்படி. அதனால், இதை வெளியில் சொல்லக்கூடாது என்பது இல்லை. இந்த விஷயம் நிச்சயம் பரப்புரை செய்யப்படவேண்டியது.

எனவே, “செவ்வாயில் ஆதி தமிழன்”, “ஆண்ட்ரோமீடா மக்கள் பேசியது தமிழே: SETI ஆதாரம்”, “செவ்வாயில் குமரிக்கண்டத்தினர் வெட்டிய கால்வாய்”, “லெமூரிய உயிர் செவ்வாயில்”, “செவ்வாய் தமிழ் சொல்லகராதி”, “செவ்வாயில் தமிழை அழித்த ஆர்ய சதிஎன்று தமிழிலேயே நூல்கள் எழுத வேண்டும். செவ்வாய் தமிழ் எழுத்துக்களை படிப்பது எப்படி என்று டியூஷன் செண்டர் நடத்த வேண்டும். பல்வேறு தமிழ் மகாநாடுகளின் அவற்றை குறித்து பேச வேண்டும். மிக முக்கியம், அதற்கு அரசு நிதி வாங்கிக்கொள்ள வேண்டும். ( பின்ன, செய்ததெல்லாம் தர்மத்திற்கா என்ன ? )

பின்னர் ஒவ்வொரு குழுமத்திற்கு போய், இந்த நூல்களை வாங்கிப்படியுங்கள், இதில் எல்லா உண்மைகளும் உள்ளன இவரை தொலைபேசியில் கூப்பிட்டு சந்தேகத்தை தீர்ந்த்துக்கொள்ளுங்கள் என்று மூச்சுக்கு முன்னூறு பிரச்சாரம் செய்து மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.(பின்னே நூல்கள் விக்கவேணாமோ.. )

இவ்வாறு திவசத்திற்கு மூணு முறை, ஆகாரத்துக்கு முன்னும் ஆகாரத்தும் பின்னும், முடிந்தால் இதையே ஆகாரமகாவும் செய்து வந்தால், செவ்வாயில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்றும், அங்கு தமிழே பேசப்பட்டது என்றும், லெமூரியர்கள் அங்கு சென்று கால்வாய் வெட்டி பாசணம் செய்து மூன்று போகம் விளைவித்தனர் (இன்றைய விஞ்ஞானம் இப்போது தான் செவ்வாயில் தண்ணீர் குறித்து ஆய்ந்து வருகிறது, அன்றே தமிழன் செவ்வாயிலேயே கால்வாய்வெட்டி நீர்ப்பாசனம் செய்தான் என்றால், என்னே, தமிழனின் மான்பு ! ) என்றும், பல அரிய உண்மைகள் தெரியவரும் .

செவ்வாயில் தமிழர்க்ளே இருந்தனர், அவர்கள் பேசியது தமிழே என்ற உண்மைகள் வெளிய வரட்டும் ! செவ்வாய் கால்வாய்கள் இனி லெமூரிய கால்வாய்கள் என்று அழைப்பெறட்டும் ! இதை எல்லாம் சொல்ல நிதி கிடைக்கப்பெறட்டும் ! (இது தான் மிக முக்கியம்)

அடுத்து ப்ளூட்டோ கிரகத்தின் தமிழர்கள், கருந்துளையுள் செந்தமிழன் போன்ற ஆய்வுகளில் சந்திப்போம் (ஓ... ப்ளூட்டோவை குறுங்கிரகம் ஆக்கிவிட்டனரோ.. பாருங்கள் ... ஆர்ய சதி என்னவெல்லாம் செய்கிறது என்றும்... ப்ளூட்டோ தமிழர்கள் ஜீவித்த கிரகம் என்ற அறிந்த மாத்திரத்தில் அதை சதி செய்து குறுங்கிரகம் ஆக்கிவிட்டனர் சதிகாரர்கள்...இவர்களின் குறுமதி இப்படித்தான் இருக்கும் என்பது பல மில்லியன் வருடங்களாக நாம் அறியாததா.. ஹ்ம்ம்ம்.. தமிழனை பொறுத்த வரையும் ப்ளூட்டோ என்றுமே தமிழ் கிரகம்தான் ! )

அது வரையில் செவ்வாய் தமிழ் இனத்தின் மான்பு, செவ்வாய் தமிழ் இனத்தின் பெருமை முதலிய விஷயங்களை குறித்து விவாதித்து பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கோள்கிறேன்.
 

No comments:

Post a Comment