ஞாயிறு, 25 டிசம்பர், 2011

மோஹஞ்சதாரோ

மொஹஞ்சதாரோ அல்லது மோஹனஸ்ய தரு? ஏறு தழுவும் வழக்கம் தமிழ் நாட்டு மதுரையிலும் இருந்திருக்கிறது. கிருஷ்ணன் வாழ்ந்த மதுராவிலும் இருந்திருக்கிறது. அந்த வழக்கம் சிந்து சமவெளிப்பகுதியிலும் இருந்திருக்கிறது என்பதை, மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள சின்னம் மூலம் அறிகிறோம். மொஹஞ்சதரோ என்னும் இடம் இன்று பாகிஸ்தானில் உள்ளது. இந்த இடத்தில் ஒரு பழைய நாகரிகம் இருந்தது என்று 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் சிந்து நதிக் கரையில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் சிந்து நதியின் ஒரு கிளை நதியான ராவி நதிக்கரையில் ஹரப்பா என்னும் இடத்திலும், இதே நாகரிகம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து நதிக்கரையில் இவை காணப்படவே, இங்கு காணப்பட்ட நாகரிகத்தைச் சிந்து சமவெளி நாகரிகம் என்கின்றனர். இந்தப் படத்தில் அந்த இரு இடங்களும் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கின்றன. இங்கு காணப்படும் நாகரிகத்தின் காலம் சுமாராக, இன்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களது கருத்து. அதாவது கி.மு.3000 வருட காலத்தில் இந்த நாகரிகம் இங்கு இருந்திருக்கிறது. அதே காலக்கட்டத்தில் ஆரிய- திராவிடப் போரைப் பற்றி உச்சக் கட்டமாக ஆங்கிலேய மொழியியலார் பேசிக் கொண்டிருக்கவே, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் திராவிடர்கள் நாகரிகமாக இருக்க வேண்டும் என்றும், மத்திய ஐரோப்பாவிலிருந்து வந்த ஆரியர்கள் அவர்களை வென்று, விரட்டி விட்டு, அவர்கள் இடங்களில் தாங்கள் குடியேறினார்கள் என்றும் சொன்னார்கள். அப்பொழுது அவர்களிடமிருந்து தப்பிய மக்கள் தமிழ் நாட்டுப் பகுதிகளில் குடியமர்ந்தார்கள். அதனால் சிந்து சமவெளி மக்களான திராவிடர்களே, தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்பது ஐரோப்பியர்கள் செய்த ‘கண்டுபிடிப்பாகும்’. அதை அப்படியே நம்பினவர்கள் நம் தமிழ் நாட்டு திராவிடவாதிகள். நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள கதைகளை அலட்சியப்படுத்திய அவர்கள், தமிழில் இல்லாத திராவிடம் என்னும் சொல்லைப் பிடித்துக் கொண்டு, ஆங்கிலேயன் சொன்ன திராவிடக் கதையை நம்பி, திராவிடர் சங்கம், திராவிடர் இயக்கம் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள். முதன் முதலாக திராவிடர் என்ற பெயரைக் கொண்ட ’திராவிடர் சங்கம்’ என்னும் ஒரு அமைப்பு 1912 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் திராவிடன் என்றால் யார், திராவிடம் என்பது என்ன என்ற எந்த ஒரு விவரத்தையும் ஆராயாமல், ஆராயும் முயற்சியும் இல்லாமல், சமூகத்தைப் பிரித்தாளும் ஒரு கருத்தாகவே திராவிடவாதிகள் பயன்படுத்தி வந்தனர். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் பலர் விழித்தெழவில்லை. ஆங்காங்கே சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட சில விவரங்களைக் கொண்டு, அவற்றுக்கும், தமிழ் வழக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டு அங்கிருந்துதான் தமிழன் வந்தான் என்று நினைக்கிறார்கள். அப்படி நினைக்கச் செய்யும் ஒரு விவரம், ஏறு தழுவுதல் ஆகும். ஏறு தழுவும் முத்திரை கிடைத்த இடம் மொஹஞ்சதாரோ ஆகும். இதைக் கொண்டு மொஹஞ்சதாரோவில் அதாவது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்த ஒரு வழக்கம்தான், கிருஷ்ணன் கதையில் வரும் வழக்கம் என்று சொல்லலாமல்லவா என்றும், இதன் மூலம் கிருஷ்ணாவதாரத்தையே சிந்து சமவெளி நாகரிகத்துக்குப் பின்னால் தள்ளவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கருத்து தவறு என்று காட்டும் விதமாக ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அதிலும் மொஹஞ்சதாரோவில் கிடைத்த ஆதாரங்கள் சுவாரசியமானவை. ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த அதே மொஹஞ்சதாரோ பகுதியில் கிருஷ்ணாவதாரத்தைப் பறை சாற்றும் இன்னொரு ஆதாரம் கிடைத்துள்ளது. அது ஒரு குழந்தை உருவம் கொண்ட முத்திரை ஆகும். இது கிருஷ்ணன் உருவமாகும் என்று ஆராய்ச்சியாளார் திரு என்.எஸ். ராஜாராம் அவர்கள் கூறுகிறார். இ,ஜெ,ஹெச். மாக்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முத்திரையில் ஒரு சிறுவன் இரண்டு மரங்களைப் பிளப்பது போலவும், அதிலிருந்து இரண்டு மனிதர்கள் வெளி வருவது போலவும் இருக்கிறது. இதைப் போன்ற ஒரு சம்பவம் கிருஷ்ணன் கதையில் இருக்கிறது. உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன், மரங்களில் சிறைப்பட்டிருந்த நளகூபரன், மணிக்ரீவன் என்னும் இருவரை சாப விமோசனம் செய்த காட்சியை இது ஒத்திருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். http://kurukshetra.nic.in/museum-website/archeologicaltreasure.html கி.மு 2600 ஆண்டில் இந்த முத்திரை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குழந்தை கிருஷ்ணன் மரத்தைப் பிளந்த நிகழ்ச்சி. சிந்து சமவெளி நாகரிக காலம் என்பது கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு, அதாவது மஹாபாரதப் போர் முடிந்த பிறகு தொடங்கிய நாகரிகமாக இருந்தால்தான் இப்படிப்பட்ட சின்னத்தை உருவாக்கியிருக்க முடியும். ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த, அதே மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிலையைப் பாருங்கள். இந்தப் படத்தை, திராவிட ‘இன’த்துக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் ‘திராவிடத்’ தலைவர்களிடம் காட்டுங்கள். பூணூல் போட்ட பார்ப்பான் படத்தை ஏன் காட்டுகிறீர்களே என்பார்கள் அல்லவா? முகத்தில் தாடி, தலையில் ஒரு பட்டை, கையில் தாயத்து போல ஒரு கயிறு, தோளில் அங்கவஸ்திரம் இவற்றையெல்லாம் பார்த்தால் இந்த உருவம் ஒரு அர்ச்சகர் போல இருக்கிறது. திராவிடவாதிகள் நோக்கில் சொன்னால் இது ஒரு ’ஆரியன்’ உருவம்! இந்த உருவத்தின் பின்புறத்தைப் பாருங்கள். தலையில் ஒரு கொண்டை போன்ற அமைப்பு இருந்த அடையாளம் தெரிகிறது. காதருகே மாலை செருகவென்று ஓட்டை இருக்கிறது. இந்த உருவம், ஒரு முனிவராகவோ, அல்லது மதிப்புக்கிரியவராகவோ, அல்லது ஒரு குருவாகவோ இருக்க வேண்டும். இந்த உருவத்துக்கும், திராவிடவாதிகள் உண்டாக்கி வைத்துள்ள திராவிட உருவகத்துக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? இன்னொரு விவரத்தையும் பார்ப்போம். மொஹஞ்சதாரோ என்ற பெயரைப் பாருங்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? இதை மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro) என்றும், மோயென்ஞ-தாரோ (Moenjo – daro) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம் என்று சிந்து சமவெளிக் கண்டுபிடுப்புகளைப் பதிவு செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மோஹஞ்ஜ- தாரோ (Mohanjo- daro) என்றால் ‘மோஹனுடைய மேடு’ என்றும் மோயென்ஞ-தாரோ (Moenjo – daro) என்றால் ’இறந்தவர்களது மேடு’ என்றும் பொருள் கொள்கிறார்கள். விவ்ரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும். http://www.mohenjodaro.net/mohenjodaroessay.html இறந்தவர்களது மேடு என்ற பெயர் தோன்றியிருக்க முடியாது. இங்கு இறந்தவர்களது கல்லறைகளும் இல்லை, பலரும் இறந்ததற்கான அடையாளங்களும் இல்லை. ஆனால் மொஹஞ்சதாரோ என்னும் பெயரில் மோஹன் என்ற சொல் இருப்பதை மறுக்க முடியாது. மோஹன் என்பது கிருஷ்ணனது ஒரு பெயர். மோஹன் என்றால் வசீகரிப்பவன் என்பது பொருள். வட மதுரையிலும், பிருந்தாவனத்திலும் சுற்றிக் கொண்டிருந்த பால கிருஷ்ணனுக்கு மோஹன் என்ற பெயரும், கோபால் என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணனது கொள்ளுப் பேரனான வஜ்ரன் என்பவன் கிருஷ்ணனைப் போலவே 16 உருவங்கள் செய்து கோவில் கட்டி ஸ்தாபித்திருக்கிறான். அதில் மோஹன் என்ற பெயர் கொண்ட உருவமும் இருக்கிறது. இங்கு இந்த வஜ்ரனைப் பற்றி ஒரு விவரத்தைச் சொல்ல வேண்டும். கிருஷ்ணன் தமிழ் நாட்டு மாப்பிள்ளை என்று முந்தின கட்டுரையில் சொன்னோம். இந்த வஜ்ரன், தமிழ் நாட்டின் பேரப்பிள்ளை ஆவான். அது எப்படி என்றால், கிருஷ்ணனுக்கும், ருக்மிணிக்கும் பிறந்த மகனான ப்ரத்யும்னனது மகன் வழிப்பேரன் வஜ்ரன் ஆவான். ப்ரத்யுமனது மகனது பெயர் அநிருத்தன். இவன் மனைவி மஹாபலிபுரம் பகுதியைச் சேர்ந்தவள். இவர்களுக்குப் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான். மஹாபலிபுரம் என்பது மஹாபலியின் ஊராகும். மஹாபலியின் வழி வந்த பாணாசுரனது மகளான உழை (உஷா) என்பவளை அநிருத்தன் காதலித்தான். அதை ஒத்துக் கொள்ளாத பாணாசுரன், அநிருத்தனைச் சிறையில் அடைத்தான். தன் பேரனான அநிருத்தனை விடுவிக்க கிருஷ்ணன் பாணாசுரனது நகருக்கு வந்தான். பாணாசுரனது தலைநகரமான ‘சோ’ என்னும் நகர வீதியில், உலோகத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட குடங்களைத் தலை மீது வைத்துக் கொண்டு நடனம் ஆடினான். இந்த நடனம் குடக் கூத்து என்ற பெயர் பெற்றது. வினோதமான இந்த ஆட்டத்தை அனைவரும் தம்மை மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது, அநிருத்தனை மீட்கிறான். பிறகு அவனுக்கும், உழைக்கும் திருத்தங்காலில் மணம் செய்து வைக்கிறான். இந்த அநிருத்தனுக்கும், உழைக்கும் பிறந்த மகனே வஜ்ரன் ஆவான். கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு கிருஷ்ணனது வாரிசாக வட மதுரை நகர் உள்ளிட்ட பகுதிகளை இந்திரப் பிரஸ்த்தத்திலிருந்து (இன்றைய டில்லி) வஜ்ரன் ஆண்டான். இங்கு சொன்ன பாணாசுரன் கதை உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நடந்ததாக ஆங்காங்கே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்தக் கதையுடன் தொடர்பு கொண்ட இடங்களெல்லாம் தமிழ் நாட்டில்தான் உள்ளன. பாணாசுரன் என்பவன் மஹாபலியின் வம்சத்தில் வந்தவன். இவன் நரசிம்ம அவதாரத்தில் வரும் பிரஹல்லாதன் வம்சத்தில் வந்தவன். மஹாபலி ஆண்டதால் அந்த இடம் மஹாபலிபுரம் என்ற பெயர் பெற்றது. அதைக் கடல் கொண்டது என்றும், பாணாசுரன் காலத்திலும், கடல் ஊழி ஏற்பட்டது என்றும் புராணச் செய்திகள் உள்ளன. இதனால் பாணாசுரனது நகரம் கடற்கரையை ஒட்டி இருந்தது என்று தெரிகிறது. அது உத்தரப் பிரதேசமாக இருக்க முடியாது. கடல் ஆராய்ச்சி செய்து வரும் க்ரஹாம் ஹான்காக் அவர்கள், இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் மஹாபலிபுரப் பகுதிகள் கடலுக்குள் அமிழ்ந்தன என்கிறார். கடல் மட்ட ஆராய்ச்சி செய்து வரும் க்ளென் மில்னே அவர்களது ஆராய்ச்சியும், இன்றைய மஹாபலிபுரம் பலமுறை கடல் அழிவைச் சந்தித்திருக்கிறது எனபதை உறுதிபடுத்துகிறது. கிருஷ்ணன் குடக்கூத்து ஆடிய மஹாபலிபுரம் இன்று கடல் கொண்ட இடத்தில் இருக்க வேண்டும். மஹாபலிபுரம் பகுதியில் ஆறு கோவில்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கடலில் இருக்கின்றன என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. க்ரஹாம் ஹான்காக் அவர்கள், அந்தப் பகுதி மீனவர்கள் உதவியுடன், கடலுக்குள் சென்று முழுகின அடையாளங்களைப் பார்த்த்தாகச் சொல்கிறார். பாணாசுரன் பேரூரில் கிருஷ்ணன் ஆடிய குடக் கூத்தைச் சிலப்பதிகாரமும் சொல்கிறது (கடலாடு காதை - “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்’) அது மட்டுமல்ல, இந்த நடனம், தமிழ் மரபில் உள்ள 11 நடனங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. முந்தின கட்டுரையில் கண்ணன் ஆடிய அல்லியக் கூத்து என்பது, தமிழ் நாட்டுக் கூத்து என்று பார்த்தோம். கிருஷ்ணன் ஆடிய இன்னொரு கூத்தான குடக்கூத்தும், தமிழ்க் கூத்துகளில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. அதை மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. தமிழ் நாட்டுக்கே உரிய கரகாட்டம் எனப்படும் நடன வகை இந்த குடக் கூத்திலிருந்து உருவானது. இந்தக் கூத்து, இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. கிருஷ்ணனும், வஜ்ரனும் இவ்வாறு தமிழ் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அந்த வஜ்ரன் ஆட்சியில் அமர்ந்தபோது, அவன் மனம் வருத்தத்தில் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், கிருஷ்ணன் இருந்தபோது மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த வட மதுரையில் வஜ்ரன் காலத்தில் மக்கள் இல்லை. அதனால் அவன் வருத்தமுடன் இருந்ததைப் பார்த்த பரீக்ஷித்து அரசன் (அர்ஜுனன் பேரன். இவனே பாண்டவர்கள் வாரிசாக ஹஸ்தினாபுரத்தில் ஆட்சியில் அமர்கிறான்) சாண்டில்ய மஹரிஷியை அழைக்கிறான். . பகுதி 64 இல், கடம்பனூர்ச் சாண்டில்யன் என்பவர் எழுதிய பாடல் (307) குறுந்தொகையில் இருக்கிறது என்று கண்டோம். சாண்டில்ய மஹரிஷிக்கும், கிருஷ்ணனுக்கும் தொடர்புண்டு. இவர் கிருஷ்ணனது வளர்ப்புத் தந்தையான நந்த கோபனது குடும்ப குரு என்று புராணங்கள் சொல்கின்றன. வஜ்ரனுக்கு ஆலோசனை சொல்ல சாண்டில்ய ரிஷியை அழைத்ததால், இந்தத் தொடர்பு உறுதியாகிறது. இந்தத் தொடர்பு உறுதியாவதால், நமக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. இந்த சாண்டில்ய ரிஷி 12 ஜோதி லிங்கங்களில் முதல் ஜோதி லிங்கமான சோமநாதரை, பிரபாச க்ஷேத்திரத்தில் நிறுவினார் என்று பல நூல்களில் கூறப்பட்டுள்ளது. கஜினி முகம்மதுவால் 17 முறை படையெடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட சோமநாதர் ஆலயம் இது. இந்த ஆலயம், நாம் இந்தத் தொடரில் தேடுகிறோமே, தமிழர்கள், மற்றும் எல்லா பாரதீயர்களது மூலம்- அது வந்த வழியைக் காட்டும் ஒரு ஆதாரத்தைக் கொண்டுள்ளது. இங்கு நாம் சொல்லவருவது, சாண்டில்ய ரிஷி, இந்தக் கோவிலை அமைத்தார் என்பதே. தக்ஷனால் சபிக்கப்பட்டு, அதனால் தேய்ந்த சந்திரன், சிவனிடம் அடைக்கலாகி, சாப விமோசனம் பெறுகிறான். சிவன் முடியில் பிறைச் சந்திரனாகத் தங்கி விடுகிறான். சந்திரனால் வழிபடப்பட்ட அந்த சிவ ரூபமே, சோமநாதர் என்றழைக்கப்பட்டது. இங்கு பிறைச் சந்திரனை வழிபடுவது விசேஷம். இதில் நமக்கு ஆச்சரியம் தரும் விவரம் என்னவென்றால், குறுந்தொகையில் கடம்பனூர்ச் சாண்டில்யனார் என்னும் பெயரில் இடம் பெற்றுள்ள பாடலில், பிறைச் சந்திரனைக் கன்னிப் பெண்கள் தொழும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே. “வளையுடைத் தனையதாகிப் பலர் தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே யன்னா” (கு-தொ 307) என்னும் அவரது பாடலில் பெண்களது உடைந்த வளையலைப் போல உருவத்துடன் பிறைச் சந்திரன் வானத்தில் தோன்றும் காட்சியையும், அதைப் பெண்கள் வழிபட்டதையும் உவமையாகச் சொல்கிறார். சாண்டில்யருக்கும், சந்திரன் வழிபட்ட சோமநாதருக்கும் தொடர்பு இருக்கவே, சாண்டில்யர் பெயரில் இயற்றபட்டுள்ள இந்தப் பாடலிலும், பிறைச் சந்திரனைப் பற்றிய விவரம் வருவது தற்செயலானது என்று நம்ப முடியவில்லை. அந்தச் சாண்டில்ய மஹரிஷி வஜ்ரனுக்கு ஆலோசனை சொன்னார். அவர் சொன்னவாறு கிருஷ்ணனைப் போன்ற தோற்றம் கொண்ட சிலைகள் பதினாறினை வஜ்ரன் உருவாக்கினான். அவற்றுள் ஒன்று மதன் மோஹன் என்ற பெயர் கொண்டது! அதாவது, மதுரா மக்கள் அறிந்த இளம் வயது கிருஷ்ணனுக்கு மோஹன் என்பது பெயர். அந்த மதுரா நகர மக்கள் துவாரகைக்குக் கிருஷ்ணன் சென்ற போது, அவனுடன் சென்றார்கள். துவாரகை, மற்றும் அந்த நகரம் இருக்கும் குஜராத் மாநிலமெங்கும், சிந்து சமவெளி நாகரிக அடையாளங்களே தென்படுகின்றன. மதுராவிலிருந்தோ, அல்லது துவாரகையிலிருந்தோ, ஒரே மூலத்திலிருந்து வந்த மக்கள், சிந்து நதியைக் கரை ஓரத்திலும் குடியமர்ந்திருக்கின்றனர். கிருஷ்ணன் உலகை விட்டு நீங்கிய பிறகு, அவன் நாட்டு மக்கள், சிந்து நதிக் கரையில் குடியமர்ந்திருக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. மொஹஞ்சதாரோ என்னும் பெயரை ஆராயும் போது, மோஹன் எனப்பட்ட கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட மக்கள் குடியமர்ந்ததால் மொஹஞ்சதாரோ என்ற பெயர் பெற்றதோ என்ற சந்தேகம் எழுகிறது. மொஹஞ்சதாரோ என்ற பெயரில் மோஹன் என்ற சொல் எப்படி வந்தது? கிருஷ்ண லீலைகளான ஏறு தழுவுதலும், மரத்தைப் பிளந்ததும் முத்திரைகளில் எப்படி இடம் பெற்றன? அது மட்டுமல்ல, மொஹஞ்சதாரோ என்னும் பெயருக்கான சமஸ்க்ருத அர்த்த்த்தைப் பாருங்கள். அந்தப் பெயர், மோஹனஸ்ய தாரு (Mohanasya daaru) அல்லது மோஹனஸ்ய தரு (Mohanasya tharu) என்று சொல்லப்பட்டிருக்கலாம். மோஹனஸ்ய தாரு எனபது, நாளாடைவில் மோஹனச தாரு என்றாகி, மொஹஞ்சதாரோ என்றாகி இருக்க சாத்தியம் இருக்கிறது. ’அஸ்ய’ என்னும் 6 ஆம் வேற்றுமை உருபு (சமஸ்க்ருத மொழியில் உள்ளது), பிராகிருதத்தில் ‘ச’ என்று உருமாறும் என்று மொழியியலார் கூறுகிறார்கள். மோஹனுடைய என்னும் பொருள் கொண்ட மோஹனஸ்ய என்னும் சொல், நாளடைவில் அதே பொருளில் ‘மோஹனச’ என்றாகி ‘மொஹஞ்ச’ என்றாகி இருக்கிறது. என்பதில் தாரு என்பதும், தரு என்பதும் சமஸ்க்ருத்த்தில் ஏறத்தாழ ஒரே பொருளில் வருவது. தாரு என்றால் மரத்துண்டுகள். (timber, lumber) தரு என்றால் மரம். இந்த இரண்டு சொற்களுமே பொருந்தும் வண்ணம் மொஹஞ்சதாரோவில் விவரங்கள் இருக்கின்றன. உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணன், மரத்தை இரண்டாகப் பிளந்த அமைப்பில் முத்திரை ஒன்று மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளது என்று பார்த்தோம். அதைத்தான் மோஹனுடைய மரத்துண்டுகள் என்னும் பொருளில் மோஹஞ்சதாரு என்றிருக்கலாம். அது நாளடைவில் ‘மொஹஞ்சதாரோ’ என்றாகி இருக்கலாம். தரு என்ற சொல்லையும் பாருங்கள். மோஹஞ்சதரு என்றால் மோஹனுடைய மரம் என்னும் பொருள் தரும். இதைக் காட்டுகின்ற ஒரு சான்று மொஹஞ்சதாரோவிலும், மற்றொரு சான்று அகநானூற்றுப் பாடலிலும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக