திங்கள், 5 டிசம்பர், 2011

நாளைய இந்தியா-அறிஞனின் அற்புதப்பேச்சு

“நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும் நல்வாழ்வும், நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம் அறிவு அற்றம் காக்கும் இந்த கட்டுரைகளின் படைப்பாளிகள் தமிழ் திறனை, ஆராய்ச்சியை, கவிதை நடையை, மொழியின் திறனை, கற்பனை வளத்தை, வாழ்வின் சூழலை, இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களை, உலகமயமாகும் தமிழை, கணினித்துறையில் பல்வேறு பரிணாமம் பெற்ற தமிழை, பிற மொழிகளுடன் தமிழ் எவ்வாறு சமூக மாற்றத்தில் பங்கு பெற்றுள்ளது என்பதைப் பற்றியும், அழகாக தொகுப்பாசிரியர் திரு கோ. பாலச்சந்திரன், IAS, அவர்கள் தொகுத்தளித்துள்ளார்கள். இங்கு கணிணித்தமிழில் எப்படி பல்வேறு வடிவங்கள் பெற்று இன்றைக்கு யுனிகோடாக வடிவம் பெற்றுள்ளது என்பதை பற்றியும், இன்றைக்கு உள்ள Level 2 Complex Script என்ற முறையில் தமிழ் யுனிகோடும், அதன் பயன்பாடும் மற்றும் அதில் உள்ள குறைபாடுகளையும், TACE-16 என்ற முறையில் உருவாக்கினால் அது எப்படி கணிணி மட்டுமல்ல, ipad, iphone, smart phone, android போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என்பதைப்பற்றியும் ஓரு விவாதத்தை தொடங்கி இருக்கிறது. இதன் முடிவு 6 கோடி மக்களின் பயன் பாட்டுக்கு உபயோகமானதாக மாறும் என்பது திண்ணம். எனவே இப்படிப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை படைத்த அத்துனைபடைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணத்தில், “இதுவரை, இன்று, இனி...” என்ற புத்தகத்தின தொகுப்பாளார் திரு கோ.பாலச்சந்திரன் அவர்களிடம், நான் ஓர் எண்ணத்தைபகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த தமிழ் 2010 என்ற கருத்தரங்கத்தில் கொடுக்கப்பட்ட 7 தலைப்புகளில், இனிவரும் கருத்தரங்களில், இன்னும் இரண்டுதலைப்புகளை நீங்கள் சேர்க்க வேண்டும், அதாவது, ஒன்று தமிழ் மக்களின்வாழ்க்கை தரத்தையும், தமிழ் மக்களின் சிறப்பியல்புகளையும் சித்தரிப்பாக அமையவேண்டும், இரண்டாவது தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் பத்துஆண்டுகளில் எவ்வாறு மேம்பட வேண்டும், எப்படி ஓரு வழமான தமிழகத்தைநாம் காண முடியும் என்ற ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட வேண்டும்.அதை திரு கோ.பாலச்சந்திரன் அவர்கள் அடுத்த புத்தகமாக வெளியிடவேண்டும்.இம்முயற்ச்சிக்கு தில்லி தமிழ் சங்கம் உறுதுணையாக இருக்க வேண்டும். உலகின் கலங்கரை விளக்கம் அதற்கு முன்பாக, இங்கு தில்லி தமிழ் சங்கத்தில் கூடியிருக்கும் தமிழ் பெரியோர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஓரு நிகழ்ச்சியை பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்று தைவான் நாட்டின் தலைநகரம், தைபேயிற்கு சென்று இருந்தேன். அங்கு நடைபெற்ற 30 வது உலக கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்தும் பல்வேறு நாடுகளை சேர்ந்த கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். சீனா நாட்டை சேர்ந்த கவிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள். அதில் நான் கண்ட நிகழ்ச்சியை தான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்ன ஓரு நிகழ்ச்சி. அதாவது என்னுடைய நண்பர் கவிஞர் யூசி, அவர்கள் மேடையேறினார். அவர் சொன்னார், நான் 2005 ம் வருடம் இந்தியாவிற்கு சென்றேன், அங்கு என் நண்பர் கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்தார். அவரிடம், கவிதையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்த பொழுது, காலம் என்னிடம் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பிறந்து, இந்த உலகத்திற்கு உலக திருமறை வழங்கிய திருவள்ளுவரின், திருக்குறளை எனக்கு வழங்கினார். அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை எனக்கு வழங்கினார். அதை கடந்த 5ஆண்டுகளாக படித்து உள்வாங்கி, பல்வேறு திருக்குறளின் ஆங்கில உரை நடைகளை படித்தேன், எவ்வளவு ஓரு அருமையான கருத்துக்கள் அடங்கிய காலப்பெட்டகம் அவை. அறம், பொருள், இன்பத்தை பற்றி அவர் எழுதிய 2 வரி கொண்ட குறள், 2200 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த தமிழ் சமுதாயத்தின் மாட்சிமையை, அறிவார்ந்த சமூகத்தின் மகிமையின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது, நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பற்றியும், முழு உலகத்திற்கும் பொருந்தும் வகையிலும், அது இக்கால உலகத்திற்கும் முக்காலும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன் என்றார். அதற்கு அடுத்து சொன்னார், 2005ல் எனது நண்பர் கலாம், திருக்குறளை பரிசளித்து சொன்னார், இதை சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுங்கள் என்று. ஆனால் திருக்குறளை படிக்க படிக்க, எனது நண்பர் கலாம் சொன்னது என்னை தூங்க விடவில்லை, இது சீன மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்று அடைய வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக அதை சீன மொழியில், மொழிபெயர்த்து இருக்கிறேன், அதை இன்றைக்கு எனது நண்பர் கலாம் முன்னிலையில், இந்த 30வது உலக கவிஞர்கள் மாநாட்டில் வெளியிடுகிறேன் என்று சொன்னார். உடனடியாக, அங்கு கூடியிருந்த அத்தனை உலக கவிஞர்களும், அறிஞர் பெறுமக்களும், ஆரவாரத்துடன் திருக்குறளின் சீன மொழி பெயர்ப்பை வரவேற்று அங்கிகரித்தார்கள். இது புத்தகமாக 2011ஜனவரியில் சீனா முழுவதும் மற்றும் எங்கெல்லாம் சீனா மொழியில்பேசுபவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அதன் மகிமையைவெளிப்படுத்தி மக்களின் வாழ்வை வளப்படுத்தும். இந்த நிகழ்ச்சி ஓன்றே எப்படிதமிழ் மொழியால் தமிழர் படைத்த திருக்குறள் உலகத்திற்கு ஓரு கலங்கரைவிளக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படி பட்ட தமிழ் வளர்த்த தமிழர்கள்,எப்படி இருக்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் கூடிய உழைப்பே உயர்வு தரும் அதாவது இன்றைய சூழலில், தமிழர்களின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும். எப்படிப்பட்ட வாழ்வு தமிழுக்கும், தமிழர்க்கும் ஏற்றும் தரும். இன்றைக்கு இருக்கும் 6 கோடி தமிழ் மக்கள், 2020ல் 10 கோடிக்கு மேலாக உயர்ந்து இருப்பார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை உயர்ந்து சிறப்பான வாழ்க்கை வாழவேண்டுமானால், என்ன வேண்டும். சிறப்பாக வாழ முதலாவதாக சிறந்த கல்வி அவசியம், கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு அவசியம், வேலை வாய்ப்பு மட்டுமல்ல, பண்டைத்தமிழர்களுக்கிருந்த நற்பண்புகள் அவசியம், உழைப்பவரே உயர்ந்தவர் என்ற இலட்சியம் வேண்டும், தனது செயலில் நேர்மை வேண்டும், பகைக்கு அஞ்சா விவேகத்துடன் கூடிய வீரம் வேண்டும், அனைவரையும் மதிக்கும் பண்பு வேண்டும், வாழ்க்கையில் கோபத்தை தவிர்க்க வேண்டும், பயணற்ற வார்த்தைகளை சொல்லாமல் இருக்க வேண்டும், அரசியலில் நேர்மை, நாணயம் வேண்டும், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுக்கும் தலைமைப் பண்பு வேண்டும், நமது முன்னோர்கள் காட்டிய அறவழியை நமது குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும், வாழ்க்கையில் உழைத்து செல்வம் சேர்த்தோர்களுக்கு ஈகைப்பண்பு வேண்டும், ஈகை அறிவுச்செல்வத்தை தருவதாக அமையவேண்டுமேயல்லாம், தானமாக கூடாது. இதற்கெல்லாம் ஓரு அடிப்படை பண்பு வேண்டும். என்ன அந்த அடிப்படைப்பண்பு அது. அது தான் நல்லொழுக்கம். நல்லொழுக்கம் என்றால் என்ன? நல்லொழுக்கம் எண்ணத்திலே நல்லொழுக்கம் இருந்தால் நடத்தையில் அழகு மிளிரும் நடத்தையில் அழகு மிளிர்ந்தால் குடும்பத்தில் சாந்தி நிலவும் குடும்பத்தில் சாந்தி நிலவினால் நாட்டில் சீர் முறை உயரும் நாட்டில் சீர் முறை உயர்ந்தால் உலகத்தில் அமைதி நிலவும். எல்லாவற்றிற்கும் அடிப்படை நல்லொழுக்கம் என்பது இந்த சிறு கவிதை மூலம் உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். நல்லொழுக்கத்துடன் உழைத்தால், நல்ல எண்ணங்கள் உண்டாகும், நல்ல சிந்தனையால், நல்ல கவிதைகள் பிறக்கும், தமிழ் மொழி இலக்கியம் வளரும், தமிழ் விஞ்ஞானம் வளரும், தமிழர் தம் தொழிலில் சிறந்து விளங்குவர், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கும். நல்லொழுக்கும் உள்ள தமிழகம் உழைப்பால் சிறப்பாக வளரும். திருவள்ளுவர் கண்ட திருக்குறள் போல் மற்றுமொறு மறுமலர்ச்சிக்காவியம் பிறக்கும், தொல்காப்பியத்தைப்போல் தமிழ் இலக்கிய படைப்புகள் பலபல உண்டாகும். ஐம் பெரும் காப்பியங்கள் கண்ட தமிழகம் பல அறிய காப்பியங்களை வடிக்கும், தமிழ் மொழி சிறக்கும். அப்படிப்பட்ட தமிழகம் உருவாக வேண்டுமானால் நாம் ஓவ்வொருவரும் நல்லொழுக்கத்தை நமது எதிர்கால சந்ததிகளான குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும். வளர்ந்த நாடும் மக்களின் நல்ல பண்புகளும் நம் நாடு மிக வேகமாக வளர்ந்த நாடாக உருவாக எல்லாத் திறமைகளும், இயற்கை வளங்களும் உள்ளன. அரசியலில் இருப்பவர்கள், பதவியில் இருப்பவர்கள், அறிவு ஜீவிகள், தொழில் நிறுவனர்கள், செய்தி தொழில் நிபுணர்கள் இப்படிப் பலர் தங்கள் முழுத் திறனயும் கொண்டு இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தால், வளர்ந்த நாட்டைச் சீக்கிரமே உருவாக்க முடியும். நல்ல எண்ணங்கள மட்டுமே நாம் விதைப்போம். நல்லவைகளைப் பற்றியே நாம் சிந்திப்போம். நல்ல சமுதாயம் உருவாகும். இதுதான் நாம் இளய சமுதாயத்திற்கு உருவாக்கித்தரும் சொத்து.. இத்தருணத்தில்,, நாட்டின் பரம்பரை சொத்தாக திகழும் நல்ல எண்ணங்களை, இலக்கியத்தின் வாயிலாக எப்படி நாம் அறிகிறோம் என்பதை பற்றி நாம் பார்ப்போம். தொல்காப்பியரின் ஓர் அறிவுரை இன்றைய சூழலில் நாட்டிற்கு, தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது. அதாவது எப்படிபயனுள்ளவற்றை பேசவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும் என்றுஅழகாக கூறுகிறார். தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா 109 இல் ஒரு அழகான விடை கண்டேன். ”சிதைவு எனப்படுவவை வசை அற நாடின் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள் இலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல் பழித்த மொழியான் இழுக்கம் கூறல் தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனக்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்” ---------(பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா-109). இந்த நூற்பாவின் கருத்து என்னவென்றால் (தொல்காப்பிய பூங்காவிலிருந்து ) முன்பு கூறியதையே பின்பும் கூறுவது என்ற கூறியது கூறல், முதலில் ஒன்றைக் கூறி விட்டுப் பிறகு அதற்கு முரணாகக் கூறல், கூற வேண்டியதை நிறைவாகக் கூறாமல் குறைவாகக் கூறல், ஒன்றை மிகைப்படுத்திக் கூறல், பொருளற்ற செய்திகளைக் குறிப்பிடுதல், கேட்போரோ, படிப்போரோ குழப்பமடையுமாறு விளக்குதல், கேட்போர் செவிக்கு இனிமை கிட்டாத வண்ணம் சொல்லுதல், பெரியோர் பழித்திட்ட சொல்லை; அதன் இழிந்த நிலை கருதாமல் எடுத்தாளுதல், நூலின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய அறிவுரை பற்றிக் கவலையுறாமல், தன் கருத்தை எப்படியும் புனைந்துரைத்து இடைச் செறுகலாற்றுதல், படிப்போரும், கேட்போரும் சுவைத்திட முடியாத பழுதுற்ற நிலையில் படைத்தளித்தல் இந்தப் பத்து குற்றத்தைப் பேச்சிலும், எழுத்திலும், வாழ்விலும் நீக்கி விடவேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதுவும் இச்சமயத்தில், நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம். திருவள்ளுவர் 2200 ஆண்டுகளுக்கு முன், சொல்கிறார். சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். (200) பொருள்: நாம் சொல்லும், ஒவ்வொரு சொல்லும், நமக்கும், பிறருக்கும்நன்மையையும், பயனும் தருவதாக அமைய வேண்டும். பயன் இல்லாதசொற்களை ஆராய்ந்தறிந்து, விலக்கிவிட வேண்டும். ஓரு அரும்பெரும் விஞ்ஞானி பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் அவர்களுடன், நானும் எனது சக நண்பர்களும் ஓரு முக்கியமான பணி செய்து கொண்டு இருந்தோம். ஓவ்வொருநாளும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அவர் எங்களிடம் ஓரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார், ஆனால் அவர் பேசுவது ஓரு சில வார்த்தைகளே என்றாலும், அதன் முடிவு வெளிப்பட்டுவிடும். ஆனால் நாங்கள் பேசுவதே மிகவும் அதிகம். எனவே ஓரு விஷயத்தை பற்றி பேசும் முன்பு சிந்தித்தால், அதைப்பற்றி ஞானம் வந்தடையும், ஞானம் உண்டானால் பயனற்ற சொற்கள் தோன்றாது, பயனற்ற சொற்கள் இல்லையென்றால் அங்கு காரியம் நடக்கும், செயல் நடக்கும், மிகப்பெரிய அரும் பெரும் செயல்கள் மக்களுக்கு பயனுள்ள விஷயங்களை ஏடுத்து செல்லும். அதனால் எல்லோருக்கும் நன்மை விளையும். எனவே நாம் பயனற்ற வார்த்தைகளை பேசாமல், நமக்கும்,நாட்டிற்கும் பயனுள்ள விஷயங்களை மட்டும் சிந்திக்க வேண்டும், பேசவேண்டும் அதை திறம்பட செயல் படுத்த வேண்டும். அப்படிப்பட்ட இளைஞர்களால் மட்டுமே, இந்தியாவின் 2020க்குள் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற கனவை நனவாக்க முடியும். இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும் ,இந்தியா 2020ல் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்பதே நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால், பொருளாதாரம் வளமிக்க, 100 கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமென்பதே நமது நாட்டின் இலட்சியம். வேலை இல்லை என்ற நிலைமை மாறி, நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்கு தேவை. இதற்கு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயம், எண்ண எழுச்சியுள்ள இளைய சமுதாயம் நாட்டின் ஒரு அரும்பெரும் செல்வமாகும். 2020ல் எப்படி இந்தியா ஓரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை நான் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால் இலட்சியம் நிறைவேறும். 1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 2. சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 3. விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 4. பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 5. விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லூநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு இடமாக, நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 6. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைபடுத்தப் பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 9. ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறுநடைபோடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். 10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். மன எழுச்சியடைந்துள்ள 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். பூமியில் பிறக்கும் எந்தக் குழந்தையும் வாழ்க்கையில மிகப் பெரிய அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், விளையாட்டு வீரனாகவும், கை தேர்ந்த கலைஞனாகவும், மிகச் சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும், ஓர் தலைசிறந்த தலைவனாகவும், எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல மனிதனாக வரவேண்டும் என்பது தான் பெற்றோர்களது கனவாகும். அந்தக்கனவு நனவாவதற்கு அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், அந்தக் குழந்தைக்கு அறிவூட்டி, ஆற்றல் உற்றி வளர்க்க கூடிய சூழல் தான் அந்தக் குழந்தையை நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும், விவேகமானவர்களாகவும் மாற்றுகிறது. அதற்கு அடிப்படை காரணமாக அமைவது தான் புத்தகங்கள். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும். சிலப்பதிகாரம் கூறுகிறது, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாவதும். ஆட்சி பீடத்தில் இருந்து அரசாட்சி நடத்துபவர்கள், நாட்டை நிர்வகிப்பவர்கள், நீதி பாரிபாலனம் செய்பவர்கள், தவறு இழைத்தால், அந்த அறமே, (தர்மம்) எமனாக மாறி விடும் என்று தமிழ் இலக்கியம் நமக்கு முன்பே வழி காட்டியிருக்கிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர்,இளங்கோவடிகள், இந்தமூவரும் வெவ்வேறு, காலங்களில், மக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்க்கும்,மிகவும் நல் ஒழுக்கத்துடன் இருப்பதற்க்கும், நல்ல செயல்களை செய்வதற்கும்,அருமையாக மக்களுக்கு புரியும் படி அறிவுரைகள் கூறியுள்ளார்கள். அதாவதுநேர்மை, நல்லொழுக்கம், தெளிவான எண்ணம், நாம் செய்யும் செயலில் நேர்மைஇருக்க வேண்டும் என்பதை விளக்கி கூறியுள்ளார்கள். அதாவது ஒரு வளமானஇந்தியா, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், அறிவு, மற்றும்நல்லொழுக்கத்திலும் உயர்ந்து, ஒரு நல்ல மேன்மையான மக்களாக வாழ்ந்துகாட்ட வேண்டும். மனசாட்சியின் மாட்சி இன்றைய நம் நாட்டின் சூழ்நிலையை பார்க்கும் பொழுது நாம் ஓவ்வொருவருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றும், நம் நாடு இன்னும் 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் வளமான நாடாக மாறலாம். ஆனால் நம் இளைய சமுதாயம் எல்லோரும் நல்லொழுக்கம் உள்ள நல்ல சமுதாயமாக மாறவேண்டும், அப்படி உழைத்து, நல்லொழுக்கத்துடன் வாழும் சமுதாயம் மட்டுமே, நம் எதிர்கால சந்ததிகளுக்கு ஓரு நல்ல நாட்டை, அமைதியான தேசத்தை, வளமான தேசத்தை விட்டு செல்ல முடியும். இந்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக, நான் படித்த புத்தகத்தில் இருந்து ஓரு சம்பவத்தை உங்களுக்கு விளக்குகிறேன். சமீபத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை சேர்ந்த துறவி சமர்பண் எழுதிய “Tiya : A Parrot’s Journey Home” என்ற புத்தகத்தை படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தக்ம் தான் இந்த புத்தகம். தியா என்ற இந்த புத்தகம் மனசாட்சியை பற்றியதாக இருப்பதால் நாம் ஓவ்வொருவரையும் தொடுகிறது. இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் துறவிசமர்பண். அதாவது தியா என்ற பச்சைக்கிளியின் வாழ்க்கை பயணத்தில், நடந்தபல சுவையான நிகழ்ச்சிகளை, அருமையாக விளக்கி உள்ளார். அதை நான்உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை பச்சைக்கிளி மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை, ஆனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஓவ்வொரு வாசகரும் உணர்வார்கள். அதில் என்னை கவர்ந்த ஓரு முக்கியமான செய்தி என்னவென்றால், “நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும்”. இப்பொழுது எனக்குள் ஓரு எண்ணம் தோன்றுகிறது. எப்படி நாம் நமது மனசாட்சியை பக்குவப்படுத்துவது. என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச்செல்லும், இல்லை என்றால் அது விரும்பிய வழிக்கும் இட்டுச்செல்லும், என்பதை இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் விளக்குகிறது. அதாவது அதில் அடிமைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு கிடைத்த அருமையான செய்தி என்னவென்றால் “நீ தனித்துவமானவன், என்பதை நீ உணரவேண்டும். உன்னை பற்றி நீ உணர்ந்ததை காட்டிலும், நீ மேலானவன் என்பதை உணர் உன்னை பற்றி நீ அறிந்த அடுத்த வினாடி, உனது செயல் நீ எண்ணியதை காட்டிலும் மேலாக சாதிக்க வைக்கும்”. இப்பொழுது எனக்குள் ஓரு எண்ணம் தோன்றுகிறது. எப்படி நாம் நமது மனசாட்சியை பக்குவப்படுத்துவது. என்று என்னை நானே கேட்டேன். மனசாட்சி நம்மை நல்வழிக்கும் இட்டுச்செல்லும், இல்லை என்றால் அது விரும்பிய வழிக்கும் இட்டுச்செல்லும், என்பதை இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் விளக்குகிறது. அதாவது அதில் அடிமைப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கு கிடைத்த அருமையான செய்தி என்னவென்றால். “அற்ப காரண, காரியங்களுக்கு கண்ணீர் விட்டு பொழுதை கழிப்பதைக்காட்டிலும், வாழ்க்கையில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் அதிகம். இப்படி பட்ட இடத்தை விட்டு வெளியேறு சீக்கிரம்.” என்ன ஓரு அருமையான செய்தி. எண்ணம் பெரிதாக இருந்தால் நம்மால் சாதிக்க முடிவது அதிகம். இந்த புத்தகம் எதைப் பற்றி பாடுகிறது “வாழ்வின் கசப்பான மற்றும் இனிப்பான அனுபவங்களுக்கும், வாழ்வின் சந்தோஷத்திற்கும், துக்கத்திற்கும், வாழ்வின் சிரிப்பிற்கும், கண்ணீருக்கும், வாழ்வின் இன்பத்திற்கும், வலிக்கும் துன்பத்திற்கும், கடலின் பேரலைகள் எப்படி கடலின் ஆழத்தை கண்டதில்லையோ அதைப்போல் இவை எல்லாவற்றிற்கும் நாம், நாம் மட்டுமே, காரணம்” முடிவுரை தியா என்ற புத்தகத்தில் ஓரு முக்கிய கருத்து என்னவென்றால், அந்த பச்சைக்கிளியின் கருத்தாக, துறவி சமர்ப்பண் சொல்லுகிறார், நீ உன்னதமானவன் என்பதை உணரவேண்டும் என்று. துறவி சமர்பண் எழுதிய “Tiya : A Parrot’s Journey to Home” என் மனதை மகிழப்படுத்தியது, மனசாட்சியின் மனதை பற்றி அறிந்து கொள்ள உதவியது. மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர் விட்டு வழிகாட்டும் ஓரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்கு புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக்காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஓன்று, தப்பையும், சரியான வற்றையும் நமக்கு சரியான நேரத்தில் உணர்த்தும் ஓரு அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களை பதிவு பண்ணும் ஓரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மை பயமுறுத்தும், நம்பிக்கையை கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மை கட்டுக்குள் வைக்கும். ஓரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை, மறுமுறை உறுத்தினால் தண்டனை. கோழை கேட்பான், இது பாதுகாப்பானதா, பேராசாக்காரன் கேட்பான் – இதனால் எனக்கு என்ன லாபம் என்று, தற்பெறுமைக்காரன் கேட்பான், நான் மகானாக முடியுமா என்று, இச்சையானவன் கேட்பான், அதில் என்ன சந்தோஷம் உண்டு என்று, ஆனால் மனசாட்சி ஓன்று தான் கேட்கும், அது சரியா என்று, ஆனால் ஓட்டு மொத்தமான பதில் என்ன – தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஓன்று தான். எனவே இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள் தன் மனசாட்சி படி நேர்மையாக நடப்பது ஓன்றுதான், நாளைய இந்தியாவை நிர்மாணிக்கமுடியும். அப்படிப்பட்ட மனசாட்சி கொண்ட இளைஞர்களால், தலைவர்களால் மட்டுமே இந்த நாட்டை வளமான நாடாக மாற்ற இயலும். எனவே தமிழ் 2010 என்ற கருத்தரங்கம் போன்று பல்வேறு கருத்தரங்கள், முயற்சிகள், விழிப்புணர்ச்சி முகாம்கள் நாடெங்கும் நடந்து, தமிழ் மக்களை சமுதாயமாற்றத்திற்கு வித்திடவேண்டும், அப்படிப்பட்ட அறிவார்ந்த முயற்சியை ஆக்கமும் ஊக்கமும் அளித்து, வளப்படுத்த வேண்டும் என்று இங்கு கூடியுள்ள தமிழாய்ந்த ஆன்றோர்களையும், சான்றோர்களையும் கேட்டுக்கொண்டு, உங்களை அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக