ஞாயிறு, 25 டிசம்பர், 2011

சோழர்கள்'-தூங்கெயில் எறிந்த' செம்பியர்கள்

மனுவில் ஆரம்பித்து, இக்ஷ்வாகு, சிபி போன்ற மன்னர்கள் பரம்பரையில் சோழர்கள் வந்தனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது. சிபியின் வம்சத்தில் வந்தவர்கள் ஆதலால் சோழர்கள் செம்பியன் என்றழைக்கப்பட்டனர். சிபி என்னும் அரசன் யார், அவனைப் பற்றித் தமிழ்ப் புலவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்த்தால், பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. அவற்றுள் முக்கிய ஆச்சரியம், சிபியுடன் மட்டுமல்ல, அயோத்தி ராமனுடனும், சோழர்களின் வம்சத்துக்குத் தொடர்பு உள்ளது என்பதாகும். அவனை முன்னிறுத்தி சோழ மன்னர்கள் பெருமை அடைந்தனர். பல கோணங்களிலிருந்தும், இதை மெய்ப்பிக்க முடியும். சிபியைப் பற்றிய கதை பல பழம் நூல்களில் உள்ளது. மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், புராணங்கள் போன்றவற்றில் உள்ளது. புத்த ஜாதகக் கதைகளில் உள்ளது. போதிசத்துவரே ஒரு முறை சிபியாகப் பிறந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன. மேலும் சிபி என்ற பெயர் பல வேறு இடங்களில், வெவ்வேறான காலக் கட்டத்தில் வருகிறது. பாகிஸ்தானத்தில் உள்ள பலுச்சிஸ்தானத்தில் சிபி என்ற பெயரில் ஓரிடம் உள்ளது. அங்குள்ள மக்கள் சிபி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள சிபி என்னும் இடத்தை சிபி அரசாண்டான் என்றும் மகாபாரதம் கூறுகிறது. அது போல கங்கைக் கரையில் உள்ள காசி நகரையும் சிபி என்ற பெயருள்ள அரசன் ஆண்டான் என்றும் வருகிறது. இப்படிப் வேறுபட்ட விவரங்கள் சிபியைப் பற்றி உள்ளன. ஆனால் சிபியின் பெருமையைப் பற்றி தமிழில் சொல்லப்பட்ட அளவுக்கு, வேறு எந்த மொழியிலும், புராண, மகாபாரத, ஜாதகக் கதைகளிலும், சொல்லப்படவில்லை.தமிழ் காட்டும் விவரங்கள் மூலம் சில குழப்பங்களையும் தீர்க்க முடிகிறது. சிபியைப் போற்றும் இடங்களில், மூன்று மதில்களை உடைய தூங்கெயிலை வெற்றி கொண்டவன் என்று இன்னொரு அரசனையும் பற்றி தமிழ் கூறுகிறது. சிபியின் பெருமை, ஒரு புறாவுக்காகத் தன் சதையை வெட்டிக் கொடுத்தவன் என்பது. இது பல இடங்களிலும் சொல்லப்படுகிறது. அவன் வம்சத்தில் வந்தவர்கள் என்று சோழ மன்னர்களைப் போற்றும் பாடல் ஒன்று சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதில் வேறு விவரங்களும் வருகின்றன. அந்த விவரங்களில் ஒன்று தூங்கெயில் வெற்றி கொண்ட அரசனைப் பற்றியது. அப்பாடல் வாழ்த்துக் காதையில் அம்மானை வரியில் வருகிறது. அம்மானை என்பது பெண்கள் பாடும் பாடல். அதில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி அம்மானை என்பார். மற்றொருவர் அதற்குப் பதில் தர வேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்வியிலேயே, சோழர்கள் பெருமை சொல்லப்படுகிறது. அதில் முதல் கேள்வி, இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார்? அதற்குப் பதில் நமக்கும் இப்பொழுது தெரியும். அது முசுகுந்தன் என்னும் முன்னாள் அரசன். இவன் சோழவர்மன், சோழர் ஆட்சியைத் தமிழ் நாட்டில் ஸ்தாபிப்பதற்குப் பல தலைமுறைகள் முன்பே தோன்றினவன். ஆனால் அந்த அம்மானைப் பாடலில் வரும் பதில் இப்படி இருக்கிறது :- வானின் கண் அசைகின்ற மூன்று மதில்களை அழித்தவனே அவன். இந்திரன் மதிலைக் காத்தவன் முசுகுந்தன். அவன் அழிக்கவில்லை. ஆகவே இந்தப் பதில் அவனைப் பற்றியது அல்ல. இது வேறொரு அரசன் மதிலைகளை அழித்த கதையைச் சொல்கிறது. இந்த வர்ணனை சங்கத் தமிழில் பல இடங்களில் வருகிறது. அடுத்த கேள்வி, புறாவுக்காகத் தன் உடம்பை அரிந்தவன் யார் அம்மானை, என்கிறது. அதற்குப் பதில் சிபி என்று சொல்லவில்லை. மாறாக, அரண்மனை வாயிலின் முன் ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காகத் தன் மகன் மீது தேர்க்காலை ஒட்டினவன் என்று அம்மானை பாடப்படுகிறது. அதாவது கேள்வி ஒருவரைப் பற்றி, ஆனால் அதற்கான நேரிடையான பதில் கிடையாது. மற்றொரு சோழ மன்னனின் பெருமையைப் பறை சாற்றிச் சொல்லி, சோழ மனனர் அனைவரையுமே பெருமைப் படுத்தி சொல்லப்பட்டுள்ளது. கேள்வியில் சுட்டிக் காட்டப்படும் அரசன் வேறு, பதிலில் வரும் அரசன் வேறு என்று இந்த அம்மானையில் தெரிகிறது. முதல் கேள்வியில் வந்த அரசன் முசுகுந்தன். அதற்கான பதிலில் வந்தவன் அவனில்லை. அவையாவன:- மூன்று மதில், வானின் கண் தென்படும் மதில், அந்த மதிகளை அழித்த ஒருவன். இதுவரை பாரத நாட்டில் வழங்கி வந்துள்ள கதைகளில், வானின் கண் தென்படும் மதில் இரண்டு இடங்களில்தான் உள்ளன. ஒன்று, தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம். இதனைக் காத்தவன் முசுகுந்தன். மற்றொன்று ராவணன் ஆண்ட இலங்கை நகரம் - அது திரிகூட மலை மீது அமைந்திருந்தது. இந்த மலையைத் திரிகோண மலை என்றும் கூறுவார். மூன்று சிகரங்கள் அல்லது மூன்று மதில்கள் சூழ்ந்திருப்பதன் காரணமாக ராவணனது நகரம் மூன்று மதில்கள் கொண்ட 'தூங்கெயில்' அதாவது, 'தொங்கும் நகரம்' அல்லது "தொங்கும் மதில்" என்று அழைக்கப்பட்டது. அது தேவர்களது அமராவதி போன்றது என்று வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அமராவதியும், இலங்கையையும் தொங்கும் நகரம் என்று ஏன் சொன்னார்கள்? அவை இரண்டும் மேகங்கள் தவழும் மலை மீது அமைந்திருந்தன. தூரத்திலிருந்து பார்பதற்கு மேகங்களுக்கிடையே வானிலிருந்து தொங்கும் நகரம் போலத் தெரியுமாம்.அந்த நகரங்களின் செழிப்புக்கும் , வளத்திற்கும் குறைவே கிடையாது. அதனால் இலங்கையை அமராவதியுடன் ஒப்பிட்டு ராமாயணத்தில் விவரங்கள் வருகின்றன. சமீபத்திய சில அகழ்வாராய்ச்சிகளும், இராமாயண விவரங்கள் சிலவும், அமராவதி என்று ஒரு பட்டணம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளைக் கொடுக்கிறது. மூன்று மதில்களைக் கொண்ட நகரத்தை உடைய ஒருவனை வென்ற அரசன் சோழர்களது வம்சத்துடன் தொடர்பு கொண்டவன் என்பது. இதே கருத்தை மணிமேகலை முதல் அத்தியாயத்தில் நான்காவது வரியில் காண்கிறோம். ஐம் பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை புகார் நகரில் நடந்த இந்திர விழா பற்றியே ஆரம்பிக்கிறது. 'தூங்கெயில் எறிந்த' செம்பியர்கள் வழி வந்த சோழ மன்னன், அகத்திய முனிவர் சொன்னபடி, இந்திரனை வணங்கி இந்திர விழாவை ஆரம்பித்தான் என்கிறது மணிமேகலை. சிபியையும், தூங்கெயில் எறிந்த மன்னனைப் பற்றியும் சிலப்பதிகாரத்தில் மற்றொரு இடத்திலும் பார்க்கிறோம். கண்ணகிக்குச் சிலை வடிக்க, சேர மன்னன் செங்குட்டுவன் இமயமலை சென்று, கல் எடுத்து அங்கிருந்து கங்கைக் கரைக்கு வந்து, கங்கையில் அந்தக் கல்லை நீராட்டி, அங்கு தங்கியிருக்கிறான். அத்துடன் அவன் வஞ்சி நகரை விட்டுக் கிளம்பி முப்பத்தி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன என்று அவனது ஜோதிடர் கூறுகிறார். அந்தக் காலக் கட்டத்தில், தமிழ் நாட்டிலிருந்து மாடலன் என்னும் அந்தணன் கங்கையில் புனித நீராட வருகிறான். வந்த இடத்தில் சேர மன்னனைப் பார்க்கிறான். சேரனும், மாடலனிடம் தமிழ் நாட்டு நிலவரங்களைக் கேட்கிறான். சோழ நாட்டின் வெவ்வேறு பகுதிகளை ஆண்ட, ஒருவருக்கொருவர் உறவினர்களான ஒன்பது சோழ மன்னர்களும், அவர்களுக்கும் உயர்ந்த நிலையில் சக்கரவர்த்தி போல ஆண்ட வளவன் கிள்ளியை எதிர்த்தனர். ஆனால் வளவன் கிள்ளி ஒரே பகல் பொழுதில் அவர்கள் அனைவரையும் அடக்கி விட்டான். இதைச் சொன்ன மாடலன் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறான். தூங்கெயில் மூன்றினை எறிந்தவனும், புறாவுக்காகத் தன் உடம்பை தராசுக் கோலில் இட்டவனும் வளர்த்த அறம் கொண்ட செங்கோல் திரிந்து போகுமா? போகாது. சோழன் செங்கோல் எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கிறது என்று . தூங்கெயில் கதையையும் நினைவு கூர்கிறான். தூங்கெயில் கதை புறநானூறிலும் வருகிறது.(புறநானூறு 39 ). சோழ மன்னன் குளமுற்றத்துச் துஞ்சிய கிள்ளி வளவனை, மாறோக்கத்து நப்பசலையார் வாழ்த்துகிறார். அந்த மன்னன் உயிர்களிடத்தில் இரக்கம் கொண்டவன். தன்னை மற்றவர்கள் புகழ வேண்டுமென்று அவன் இரக்கத்தைக் காட்டுபவனில்லை. அவன் முன்னோனான புறாவுக்காத் தன் உடம்பை அரிந்து கொடுத்தவன் மரபில் வந்துள்ளவன் ஆதலால், அவனுக்கு இரக்கம் காட்டுதல் என்பது இயல்பாக உள்ளது. இந்த மன்னன் பகைவரை வெல்பவன். அது புகழுக்காகச் செய்வது அல்ல. இவனது முன்னோன் ஒருவன், தேவர்கள் நெருங்குவதற்குப் பயப்படும் ஆகாயத்திலிருந்து தொங்கும் தூங்கெயிலை வென்றவன். அதனால் அப்படிப் பகைவரை வெல்லுதல் என்பது இவனுக்கு இயல்பாக உள்ளது என்கிறார் புலவர். இந்தத் தூங்கெயில் எறிந்த விஷயம், சிறுபாணாற்றுப் படை (79 -82 ), கலிங்கத்துப் பரணி (17 ) ராஜா ராஜா சோழன் உலா (13), விக்கிரம சோழன் உலா (8-9) போன்றவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்படி வென்ற அரசன் பெயர் எங்கும் சொல்லப்படவில்லை. அப்படிப் பார்த்தால், சிபியின் பெயரும் , மனு நீதிச் சோழனின் பெயரும், முசுகுந்தனின் பெயரும் எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் செயலைச் சொல்லிச் சொல்லியே புளகாங்கிதம் அடைந்திருக்கின்றனர். மேலும், சங்கப் புலவர்கள் பொதுவாகவே, அரசன் பெயரைச் சொல்வதில்லை. அந்த அரசர்கள் செய்த செயல்களது அடிப்படையில், பிற இடங்களில் வரும் அவர்களது கதைக் குறிப்புகளைக் கொண்டு நாம் அவர்கள் பெயரை அறிகிறோம். உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் வரும் முசுகுந்தனைப் பற்றி உரை ஆசிரியரான, அடியார்க்கு நல்லார் வாயிலாகத் தான் நாம் அறிகிறோம். செப்பேடுகளிலும் அந்தப் பெயர் வந்துள்ளதாலும், அந்த மன்னனைப் பற்றி மகாபாரதத்திலும் விவரங்கள் வருவதாலும் அவனைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அப்படியே சிபி என்னும் மன்னனைப் பற்றியும், தகவல்கள் தெரிகின்றன. செப்பேடுகளிலும் அவன் பெயர் இடம் பெற்றுள்ளதால், செம்பியன் என்று சங்கப் புலவர்கள் புகழாரம் சூட்டுவதற்குக் காரணம், சிபியை முன்னிட்டு அந்த அளவுக்கு சோழர்கள் பெருமை நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இதில் 'தூங்கெயில்' எறிந்தவன் யார் என்பது பற்றி செப்பேடுகளில் சொல்லப்படவில்லை. ஆனால் சங்கப் புலவர்கள் அந்தத் தகவலை அடிக்கடி நினைவு கூர்ந்துள்ளனர். தூங்கெயில் என்பப்படுவது ராவணனுடைய இலங்கை என்பதாலும், அதை அழித்தவன் ராமன் என்பதாலும், நாம் ராமனது பரம்பரையைப் பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எந்த மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையிலிருந்து தாங்கள் வந்தவர்கள் என்று சோழர்கள் சொல்லிக் கொண்டார்களோ, அதே மனு மற்றும் இக்ஷ்வாகு பரம்பரையில் வந்தவன் ராமன்! செப்பேடுகளில் காணப்படும் சோழர் பரம்பரையை 11 -ஆம் பகுதியில் பார்த்தோம், அதில் ககுஸ்தன் என்னும் மன்னன் பெயரும் வருகிறது. ராமனது முன்னோனும் ககுஸ்தன் ஆவார். அதனால் ராமனுக்கும் ககுஸ்தன் என்னும் பெயரும் உண்டு. ராமன் சூரிய குளத்தில் தோன்றியவன். சோழர்களும் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, ராமனது பரம்பரைச் சங்கிலியை நாம் தெரிந்து கொண்டால், ராமனுக்கும், சோழனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று தெரிய வரும். ராமனது பரம்பரையில் வரும் முன்னோர்கள் பெயர் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. இப்பொழுது புழக்கத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உள்ளன என்கிறார்கள். ஆனால் வால்மீகி அவர்கள் எழுதின ராமாயணத்தைத்தான் ஆதாராமாக எடுத்துக் கொள்கிறோம். ஏனென்றால் ராமனின் சமகாலத்தில் வாழ்ந்தவர் வால்மீகி. ராமனின் சரித்திரத்தை அவர் எழுத, அதை ராமனின் மகன்களான லவனும், குசனும் கற்றுக் கொண்டு, அப்படியே அதை ராமனுக்கு முன்னிலையில் பாடினார்கள். அந்தக் கதையில் ஏதேனும் தவறு, குறை இருப்பின், அப்பொழுதே அவை சரி செய்யப்பட்டு அல்லது சரி பார்க்கப்பட்டிருக்கும். எனவேதான் வால்மீகி ராமாயணம் நம்பத் தகுந்தது, ஆதாரபூர்வமானது. அதில், ராமன்- சீதை திருமணம் நடப்பதற்கு முன், ராமனது குல குருவான வசிஷ்டர் ராமனது பரம்பரையில் வந்த மன்னர்கள் பெயரையும் அவர்கள் பெருமையையும் பற்றியும் பேசுகிறார். ராமனுக்கு முன் வந்த மன்னர்கள் பெயரை வரிசையாகச் சொல்கிறார். அதாவது இன்னார் மகன் இன்னார் பட்டத்துக்கு வந்தார் என்று அடுத்ததடுத்து வரிசையாகச் சொல்கிறார். அந்த மனனர்கள் பெயரைப் பார்த்தால் நமது புதிருக்கு விடை கிடைக்கிறது. 1- பிரம்மா 2-மரீசி 3- காஷ்யபர் 4- சூரியன் (சோழர் பரம்பரை இங்கிருந்து ஆரம்பிக்கிறது) 5- மனு 6- இக்ஷ்வாகு (வசிஷ்டர் இவரை அயோத்தியின் முதல் அரசன் என்று சொல்கிறார். ) 7- குக்ஷி 8- விகுக்ஷி 9 -பாணன் 10- அனரண்யன் 11- ப்ரீது (சோழர் பரம்பரையில் வருகிறார்) 12- திரிசங்கு 13- துந்துமாரன் (சோழர் பரம்பரையில் வருகிறார்) 14- யுவனாஷ்வன் (சோழர் பரம்பரையில் வருகிறார்) 15- மாந்தாதா (இதுவரை சோழன் பரம்பரையும், ராமன் பரம்பரையும் ஒத்து இருக்கிறது.) 16- சுசந்தி 17- த்ருவசந்தி 18- பரதன் 19- அசிதன் 20- சகரன் 21- அசமஞ்சன் 22- அம்ஷுமான் 23- திலீபன் 24- பாகீரதன் (கங்கையைக் கொண்டு வந்தவன்) 25- ககுஸ்தன் (சோழர் பரம்பரையில் இக்ஷ்வாகுவுக்கு அடுத்து இந்த அரசன் வந்து விடுகிறான்) 26- ரகு 27- பிரவ்ரித்தன் 28- சங்கனன் 29- சுதர்ஷணன் 30- அக்னிவர்ச்ணன் 31- ஷீக்ருகன் 32- மரு 33- ப்ரஷுஸ்ருகன் 34- அம்பரீஷன் 35- நஹுஷன் 36- யயாதி 37- நாபாகன் 38- அஜன் 39- தசரதன் 40-ராமன் சோழர் பரம்பரையையும், ராமன் பரம்பரையையும் ஒப்பீடு செய்யும் போது சில விஷயங்கள் தெளிவாகின்றன. மாந்தாதா வரை, இருவர் பரம்பரையும் ஒத்ததாக உள்ளது. மாந்தாதாவுக்குப் பின் சோழர் பரம்பரையில் முசுகுந்தன் வருகிறான். ராமன் பரம்பரையில் சுசந்தி வருகிறான். அவனுடைய இரண்டு பிள்ளைகளில் முதல் மகன் இக்ஷ்வாகு சிம்மாசனத்துக்கு வருகிறான் என்று வசிஷ்டர் கூறுகிறார். மற்றொரு பிள்ளையைப் பற்றி ராமாயணத்தில் ஒரு குறிப்பும் இல்லை. இதைக் காணும் போது ஒரு அரசனின் பிள்ளைகள் பலர் இருந்தால், அவர்களில் ஒருவர் இக்ஷ்வாகு பரம்பரையில் தொடர்கிறார். மற்றவர்கள், வேறு வேறு இடங்களில் அரசு ஸ்தாபனம் செய்து ஆண்டிருக்க வேண்டும். அவர்கள் வழியில் தனித் தனி பரம்பரை தொடர்ந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ராமனது சகோதரர்களைச் சொல்லலாம். ராமன் அயோத்தியின் பட்டத்திற்கு வந்தாலும், மற்ற சகோதரகளுக்கு ஆங்காங்கே அரசுரிமை கொடுத்திருக்கிறான். அதிலும் அடுத்த தலைமுறை மகன்கள் வேறு வேறு இடங்களில் நாட்டி ஸ்தாபித்து ஆண்டிருக்கிறார்கள். இன்றைக்கு பாகிஸ்தானத்தில் இருக்கும் பெஷாவர் என்பது பரதனது மகன் புஷ்கலனது பெயரில் புஷ்கலாவதி என்று ஸ்தாபிக்கப்பட்டு, அந்த மகனிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு மகனான தக்ஷன் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டதே தக்ஷசீலம் என்னும் நகரம். அதுவும் அந்த மகனிடம் கொடுக்கப்பட்டு அவனை அடுத்து அவன் பரம்பரையினர் ஆண்டு வந்தனர். அது போலவே லக்ஷ்மணன், சத்ருக்னன் மகன்களுக்கும், வேறு வேறு இடங்களில் ஆட்சிப் பொறுப்பு கொடுக்கப்பற்றிருக்கிறது என்று மகா கவி காளிதாசர் தான் எழுதிய 'ரகு வம்சம்' என்னும் நூலில் எழுதி உள்ளார்.ராமனுக்குப் பிறகு அயோத்தி சிம்மாசனத்துக்கு வந்தது ராமனின் மகனான குசன், அவனைத் தொடர்ந்து அவன் சந்ததியினர் என்று காளிதாசர் அவர்கள் பெயரைப் பட்டியலிடுகிறார். எனவே ராமன் பரம்பரை காட்டுவது, ஒரு மகனின் வழியில் வந்தவர்களை மட்டுமே. மற்ற மகன்கள் ஆங்காங்கே சென்று தங்களுக்கென்று அரசுரிமை நாட்டி தங்கள் பரம்பரையை ஸ்தாபித்திருக்க வேண்டும். அதனால்தான் வால்மீகி ராமாயணத்தில் வரும் ராமன் பரம்பரையில் மனுவில் ஆரம்பித்து 36 அரசர்கள் ராமன் வரை சொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் புராணங்கள் கூறும் அரசர்கள் 63 ஆவர். அந்த அரசர்களும் இக்ஷ்வாகு பரம்பரையினர்தாம். ஆனால் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்க மாட்டார்கள். வேறு வேறு இடங்களில் பரவி இருப்பார்கள். இங்கே நமக்குத் தேவையான சிபியின் சரித்திரத்தைப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து ஆராய்ந்தால், அவன் தந்தை உசீனரன் என்று தெரிகிறது. சோழர் செப்பேடுகளும் அதையே தெரிவிக்கின்றன. உசீனரன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவன் என்று மகா பாரதத்தில் வருகிறது. ராமன் பரம்பரையில் வந்த யயாதியின் மகளான மாதவிக்கும் உசீனரனுக்கும் பிறந்தவனே சிபி என்பது முக்கியச் செய்தி. அதாவது, மனுவில் ஆரம்பித்து மாந்தாதா வரை சோழர்கள் குலமும் சூரிய குலத்திலிருந்து வேறுபடவில்லை. அதற்குப் பிறகு, பங்காளிகளாகப் பிரிந்து மாறியிருக்க வேண்டும். அப்படி மாறினதில் சூரிய வம்சத்தை விட்டு விலகியும் போயிருக்கிறார்கள். ஆண் சந்ததி நின்று போய், பெண் சந்ததி மூலமாக குலம் மாறியிருக்க வேண்டும். எனினும் யயாதியின் மகள் மூலம், மீண்டும் சூரிய குல சம்பந்தம் வந்திருக்கிறது. யயாதி என்னும் அரசன், ராமனது தந்தையான தசரதனுக்குக் கொள்ளுத் தாத்தா. அவனது மகள் வழியில் வந்த சந்ததியில் சிபி வருகிறான். இப்படி சிபிக்கும், ராமனுக்கும் ரத்த சம்பந்தம் இருந்திருக்கின்றது. சிபி யயாதியின் பேரன். அவர்கள் இருவரைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது. யயாதி ஒரு காரணமாக தேவ லோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு விடுகிறான். அப்பொழுது தன்னை சிறந்த தவம் உடையவர்களுக்கிடையே தள்ளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறான். அதன்படி அவன் சென்றடைந்தவர்களுள் ஒருவன் அவன் பேரனான சிபி என்கிறது மகா பாரதம். இதை ராமாயணத்திலும் சொல்லக் காணலாம். ராமனை வன வாசத்திற்கு அனுப்பும் போது, தசரதனுடைய தேரோட்டியான சுமந்திரன் அவர்களை கங்கைக் கரையில் விட்டு விட்டுத் திரும்பினவுடன் தசரதன் அவர்களது நலனைப் பற்றி விசாரிக்கிறார். ராமனது நலத்தைப் பற்றிக் கேட்டால், எப்படி யயாதி தவஸ்ரேஷ்டர்களுடைய மத்தியில் ஆறுதல் அடைந்தானோ , அது போல தானும் ஆறுதல் அடைவேன் என்று சொல்கிறார். அதாவது ராமாயணம், மகா பாரதம் இவற்றுள் வரும் விவரங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடில்லாமல் இருக்கின்றன. உண்மையாக நடந்த சரித்திரத்தை அவை சொல்லியிருந்தாலே இப்படி மாறுபாடில்லாமல் இருக்க முடியும் இப்பொழுது முக்கிய விஷயத்துக்கு வருவோம். சிபிக்கும், ராமனுக்கும், ரத்த சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது. சோழர்கள் தங்கள் சூரிய குல அடையாளத்தையே வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆண் வாரிசு அளவில் மீண்டும், சிபிக்குப் பிறகு சூரிய குல சம்பந்தம் அவர்கள் பரம்பரையில் வந்திருந்தால்தான் தாங்கள் சூரிய குலம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியும். வெறும் வெத்துப் பேச்சுக்காக அவர்கள் சூரிய குலத்துடன் தங்களைத் தொடர்பு படுத்தியிருக்க மாட்டார்கள். மேலும் ராமன் வம்சாவளியில் வந்ததைப் போல, எல்லா மன்னர்கள் பெயரையும் சோழர்கள் செபெப்டுகளில் பொறிக்கவில்லை என்பதையும், உபரி சர வஸு பற்றிய குறிப்பில் கண்டோம். புறாவுக்கு இரங்கிய சிபியின் கதை மிகவும் பிரசித்தமானது. ராமனின் கதை தூங்கெயில் சம்பந்தப்பட்டது. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆதலால் இவர்கள் இருவரையுமே சோழப் பரம்பரையுடன் இணைத்து, சங்கப் புலவர்களும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிகிறது. இதில் ஒவ்வொரு தமிழனும், திராவிடம் பேசுபவனும், தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் என்னவென்றால், எந்த யயாதியின் மகள் வயிற்றில் சிபி பிறந்தானோ, எந்த யயாதி ராமனுக்கு எள்ளுத் தாத்தாவோ, அந்த யயாதியை முன்னிட்டு வரும் ரிக் வேதப் பாடல்களில்தான் ஆரிய- தஸ்யு போராட்டம் வருகிறது . அதி மேதாவித்தனமாக மாக்ஸ் முல்லர் 'கண்டு பிடித்த' ஆரிய - திராவிட சண்டை யயாதியின் மகன்கள் காலத்தில் நடந்திருக்கிறது. அது முடிந்து, இரண்டு தலைமுறை கழித்து ராமன் பிறந்து, அவனுக்கு முன் 36 தலைமுறைகள் எந்த அயோத்தியைத் தங்கள் நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்களோ, அதே அயோத்தியில் ஆட்சி புரிந்துள்ளான். அந்த அயோத்தி இன்றைய உத்தரப்ப்ரதேச மாநிலத்தில் சரயு நதிக்கரையில் உள்ளது. இவர்கள் சொல்லும் ஆரியப் படையெடுப்பு நடந்தது, இன்றைய பாகிஸ்தானத்தில். ஆனால் அயோத்தி ராமன் ஆரியன் என்பது நம் திராவிடவாதிகள் கருத்து. ராமன் ஆரியன் என்றால், யயாதியின் மகள் வழி வம்சாவளியில் வந்த சிபியும் ஆரியன் அல்லவா? சிபியை முன்னிட்டுத் தங்களைச் செம்பியன் என்று அழைத்துக் கொண்ட சோழர்களும் ஆரியர்கள் அல்லவா? அவர்கள் எங்கிருந்து இந்தியாவில் நுழைந்து, எந்த மக்களை விரட்டி, எங்கே ஆக்கிரமிப்பு செய்தார்கள்? இன்னும் ஒரு விஷயம். மாக்ஸ் முல்லர் தரும் ஆரியப் படைஎடுப்புக் காலம், இன்றைக்கு 3,500 வருடங்களுக்கு முன்னால். அது யயாதியின் மகன்கள் காலத்தில் நடந்தது. யயாதியின் பேரனான சிபிக்குப் பிறகுதான் காவேரி நதியே தமிழ் நாட்டில் ஓடியது என்பது செப்பேடுகள் தரும் செய்தி. அப்படியென்றால், கடந்த 3,500 வருடங்களுக்குள்தான் காவேரி நதி பிறந்திருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக