Sunday, 25 December 2011

யுகங்களும், இதிஹாச காலங்களும்.

யுகங்களும், இதிஹாச காலங்களும்.jeyasree சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகும். ராமனை எங்கோ வடக்கில் இருந்த ஆரியன் என்று சொன்னால், அதே அடையாளம் சோழனுக்கும் பொருந்தும் - என்றெல்லாம் பார்த்தோம். ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை. ஆனால் என்றைக்குத் தமது பூர்வீக படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும் ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம் முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு. அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர். அவர்கள் பலவிதமாகப் பகுத்த விவரங்கள், ஆங்கிலக் கல்வி முறையாலும், திராவிடவாதிகள் பிரசாரத்தினாலும் நாளடைவில் மறைந்து போனது. மறக்கடிக்கப்பட்டும் விட்டது. இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது. அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், நம்முடைய பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும் தெரிந்து கொள்ள முடியும். முதலில் ராமன் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்பதை எடுத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான வருடங்கள் அளவில் சதுர் மஹா யுகம் என்ற பகுப்பு வழங்கி வருகிறது. இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது. இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம். இந்த சுழற்சிக்காகும் காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்: - 12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம். அதாவது 1 வருடம் = 12 மாதம் 43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் ) 71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம் இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். ) ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே 1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் . 14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள் இதையே இப்படியும் சொல்லலாம் :- 4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம் 1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள் 4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது. அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும் ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள் = 8,64,00,00,000 வருடங்கள் இந்த நாட்கள் 360 கொண்டது பிரம்மனின் ஒரு வருடம். அப்படிப்பட்ட வருடங்கள் 100 கொண்டது பிரம்மனின் ஆயுள். அதாவது, மேற்சொன்ன 8,64,00,00,000 வருடங்களை ஒரு நாளின் காலமாகக் கொண்டு, அதன் அடிப்படையில் 100 வருடங்கள் எவ்வளவோ அவ்வளவே நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியம் என்று விண்வெளி அறிவியலும் சொல்கிறது. பிரம்மனின் கல்பம், அதாவது ஒரு பகல் அல்லது ஒரு இரவுப் பொழுது நேரத்தில், நாம் இருக்கும் சூரிய மண்டலம், நமது கலக்சியின் மையத்தை 20 முறை சுற்றி வந்து விடுகிறது என்று அறிவியல் காட்டுகிறது. இந்தக் காலக் கணக்கு, பிரபஞ்ச அளவில் உள்ள காலத்தின் கணக்கு. இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின் பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள் ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 -ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று 5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம். , கரிகாலன் போன்ற தமிழ் அரசர்களும், மக்களும், இந்தக் காலக் கணக்கைத்தான் பின் பற்றினர். சங்க நூலான பரிபாடலில் பிரபஞ்சமும், உலகங்களும் தோன்றின விதத்தை எப்படி இன்றைக்கு அறிவியல் சொல்கிறதோ அதே போல விவரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தக் கல்பம் ஆரம்பமான போது பூமி நீரில் மூழ்கி இருந்தது என்றும், அதைத் தன் கொம்பினால், வராஹமானது வெளியே கொண்டு வந்தது என்றும் பரிபாடல் செய்யுள்கள் சொல்கின்றன. (பரிபாடல் - 2 & 4 ) ஒரு சமயம் எங்கும் கடலே இருந்தது. நிலப்பகுதி வெளியில் தெரியவில்லை. பிறகு நிலப்பகுதிகள் மேலே எழும்பியதை வராஹ அவதாரம் என்கிறோம். நிலம் வெளியே எழுந்த அறிவியல் உண்மையை வராஹ அவதாரம் விவரிக்கிறது.. அப்படி நிலப் பகுதி வெளி வந்த காலத்தில் இந்தக் கல்பம் ஆரம்பித்தது. அன்று முதல் இந்தக் கட்டுரை எழுதும் இந்நாள் வரையில், 196,08,53,111 வருடங்கள் ஆகி விட்டன. இப்படி பிரபஞ்ச அளவில் நாம் வாழும் காலத்தின் கணக்கைத் தருவதுதான் இந்த கல்பத்தையும், சதுர் மஹா யுகங்களையும் அடக்கிய கால அளவு. சதுர் மஹா யுக அளவில், விண்வெளி சார்ந்த விவரங்களைத் தருவார்கள். உதாரணமாக, கலி யுகம் எப்பொழுது ஆரம்பித்தது என்று கேட்டால், நவகிரகங்களும் மேஷ ராசியில் பூஜ்யம் பாகையில் ஒன்றாகக் கூடினால் அன்று கலி யுகம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். இந்தக் கலி யுகத்தின் கால அளவு, 4,32,000 வருடங்கள். இது அடிப்படை அளவு. இதைப் போன்ற இரண்டு மடங்கு கால அளவு, அதாவது 8,64,000 வருடங்கள் உள்ளது துவாபர யுகம். கலி யுக அளவைப் போன்ற மூன்று மடங்கு கால அளவு கொண்டது த்ரேதா யுகம் (12,96,000 வருடங்கள்) கலி யுக அளவைப் போன்ற நான்கு மடங்கு கால அளவு கொண்டது கிருத யுகம் (17,28,000 வருடங்கள்) இந்த காலக் கணக்கின் அடிப்படையில், ராமன் த்ரேதா யுகத்தில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தான் என்று இன்று மக்கள் நினைக்கின்றனர். அதனால் ராமன் வாழ்ந்தான் என்பது கட்டுக் கதை என்றும் முடிவு கட்டுகின்றனர். பிரபஞ்ச அளவிலான கணக்கை, மக்கள் வாழ்க்கையுடன் முடிச்சு போடவே இந்தக் குழப்பம வருகிறது. ஆனால் இந்தப் பிரபஞ்சக் கணக்கு, சூரியனும், சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களும் அவ்வப்பொழுது ஒவ்வொருவிதமான சேர்க்கையில் வருவதன் அடிப்படையில் எழுந்தது. கலி யுகம் ஆரம்பிக்கும் போது எப்படிப்பட்ட சேர்க்கை இருக்கும் என்று பார்த்தோம், அது போல ஒவ்வொரு யுகம் ஆரம்பிக்கும் போதும், நம் கலக்சீக்கு அப்பால் உள்ள மண்டலத்தின் அடிப்படையிலும் சேர்க்கை நடப்பதைக் கொண்டு சொல்லியுள்ளார்கள். உதாரணமாக, கிருத யுகம் ஆரம்பிக்கும் போது, இந்தச் சேர்க்கை மேஷ ராசியில் நடப்பதில்லை. கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்துக்கு நேராக அமைகிறது. யுகம் என்று, பொது வார்த்தையாகச் சொல்வதனால், குழப்பம் வந்து விட்டது எனலாம். எனவே யுகம் என்றால் என்ன என்று பார்ப்போம். 'யுக்மா ' என்ற சொல்லிலிருந்து யுகம் என்ற சொல் வந்தது. யுக்மா என்றால், இரட்டை அல்லது இரண்டு விஷயங்கள் ஒன்றாக இருத்தல் என்று பொருள். யோகா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சொல்லும் யுக்மா என்பதிலிருந்துதான் வந்தது. யோகாசனம் செய்யும் போது, உடலும், உள்ளமும் ஒருங்கிணைத்து செய்யப்பட வேண்டும். அதனால்தான் சாதாரண உடற்பயிற்சியிலிருந்து யோகாசனம் வேறுபடுகிறது. இப்படி உடல், உள்ளச் சேர்க்கை இருப்பதால் அது யோகா என்றாயிற்று. இப்படிச் சேர்வதைப் பலவிதமாகக் காணலாம். வானில் சூரியனும், சந்திரனும் சேர்ந்தால் அது அமாவாசை எனப்படும். அப்படி ஒரு குறிப்பிட்ட வானப் பின்னணியில், ஒரு முறை சூரியனும், சந்திரனும் சேர்ந்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் சேர்வதை ஒரு யுகம் என்றார்கள். இதற்கு ஆரம்பம் மேஷ ராசியின் பூஜ்யம் பாகை என்று எடுத்துக் கொண்டார்கள். அந்தப் புள்ளியில் சூரியனும் சந்திரனும் சேர்ந்ததற்குப் பிறகு, அவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், வானத்தைச் சுற்றுகின்றன. அந்த இடத்தில் மீண்டும் அவை இரண்டும் சந்திக்க ஐந்து வருடங்கள் ஆகின்றன. அதை ஒரு யுகம் என்றனர். ஆனால் அதற்குள் சந்திரனது வேகமான ஓட்டத்தால், ஒரு மாதம் அதிகம் வந்து விடுகிறது. அது இரண்டரை வருடங்களிலேயே வந்து விடுகிறது. எனவே இரண்டு, இரண்டரை சேர்த்து ஒரு யுகம் என்றானது. இதில் முதல் இரண்டரை ஏறு முகம், (ஆரோஹணம்) அடுத்த இரண்டரை இறங்கு முகம் (அவரோஹணம்) என்று கணக்கு செய்தனர். இதுதான் யுகம் என்பதன் அடிப்படை. ஒரு யுகத்தில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் - என்றும் இருக்கும். இது அடிப்படை கால அளவீடு. இதைப் பஞ்ச வருஷாத்மிக யுகம் என்றனர். இந்தக் கால அடிப்படையில்தான் வேத யாகங்கள், ஹோமங்கள் போன்றவற்றைச் செய்தனர். இந்த அடிப்படைக் கால அளவீட்டினை படிப்படியாக ஒவ்வொரு நிலைக்கும் கொண்டு போய, நாம் மேலே பார்த்தோமே அப்படிப் பிரபஞ்ச அளவிலான யுகங்கள், காலம் என்று பகுத்தனர். அப்படி ஐந்து வருடங்கள் கொண்ட யுகங்கள் 12 - ஐக் கொண்டது வியாழன் அல்லது ப்ரஹச்பதி என்று சொல்லப்படும் குருவின் காலச் சுற்று. அதன் மொத்த அளவு 5 X 12 = 60 வருடங்கள். பிரபவ, விபவ என்று ஆரம்பிக்கும் வருடங்களின் பெயர்கள் இருக்கின்றனவே, அவை குருவின் அறுபது வருட காலத்திற்குத்தான் முதலில் இருந்தது. ஆனால் அது பிரபவ என்னும் பெயரில் ஆரம்பிக்கவில்லை. 'விஜய' என்னும் வருடத்தின் பெயரில் ஆரம்பித்தது. இதைப் பற்றிய விவரங்களை ஜோதிட நூல்களில் காணலாம். மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான் இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம், கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு, சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன. இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு. குருவின் சுற்றுக்கான வருடப் பெயர்கள், மனித வாழ்கையின் கால அளவுக்கும் பொருந்தும். நாம் சூரியனது சுழற்சியின் அடிப்படையிலான வருடக் கணக்கைக் கொண்டுள்ளதால் அந்தப் பெயர்கள் சூரிய வருடத்துக்கும் வந்தன. இதில் ஆரியத் தனம் எதுவும் கிடையாது. என்றைக்கு ஆரம்பித்தது என்று தெரியாமல், என்றென்றும், பாரதம் முழுவதும், தமிழ் நாடு உட்பட- இந்தக் கால அளவீடு நடை முறையில் இருந்திருக்கிறது. இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன், மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில் ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60 + 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள் 120 வருடங்களுக்கு வருகின்றன. 120 வருட அடிப்படையில் அடுத்த அளவு காலக் கணக்கு வருகிறது. 120 X 120 = 14,400 வருடங்கள் ஒரு ஏறு முகம். இந்தக் காலத்தை மார்கண்டேய முனிவர் நான்கு யுகங்களாகப் பிரித்துள்ளார். இதுவே மானுட யுகத்திற்கு அடிப்படை. மகாபாரதத்தில் (3-187) மார்கண்டேய முனிவர் பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் யுகக் கணக்கு பின் வருமாறு. அவரும், கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களைப் பற்றிச் சொல்கிறார். கிருத யுகம் = 4,000 வருடங்கள். இதில் சந்தி வருடங்கள் முன்னும் பின்னும் வரும். கிருத யுகத்துக்கு சந்தி = 400 +400 வருடங்கள். த்ரேதா யுகம் = 3,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 300 + 300 வருடங்கள். துவாபர யுகம் = 2,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 200 + 200 வருடங்கள். கலி யுகம் = 1,000 வருடங்கள். + முன்னும் பின்னும் சந்தி 100 + 100 வருடங்கள். இவற்றைக் கூட்டினால் 400 + 4000 + 400 = 4,800 300 + 3000 + 300 = 3,600 200 + 2000 + 200 = 2,400 100 + 1000 + 100 = 1,200 = 12,000 + 10 % சந்தி முன்னும் , பின்னும் = 1,200 + 1,200 = 2,400 மொத்தம் = 12,000 + 2,400 = 14,400 வருடங்கள். இதுவே மார்கண்டேயர் தரும் மானுட அளவிலான சதுர் யுகக் கணக்கு. முன்னம் நாம் பார்த்த 120 X 120 = 14,400 வருடங்கள் இதுவே. இது ஏறு முகம். இதன் இறங்கு முகம் இன்னுமொரு 14,400 வருடங்கள் மொத்தம் 14,400 + 14,400 = 28,800 இது ஒரு சுற்று. மனித குலத்தின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் காட்டும் ஒரு சுற்று இது. 28,800 வருடங்கள் கொண்ட இந்த சுற்று, முன்பு பார்த்தோமே, விண்வெளி அளாவிய சதுர் யுகம் - அதன் கலி யுகத்தில் 15 முறை வரும். (15 X 28,800 = 4,32,000 = கலி யுக அளவு ) சதுர் மஹா யுகத்தில் 150 முறை வரும். (150 X 28,800 = 43,20,000 = சதுர் மஹா யுக அளவு) ஒரு கல்பத்தில் 150,000 முறை வரும். ( 150,000 X 28,800 = 432,00,00,000 = ஒரு கல்பத்தின் அதாவது பிரம்மனின் ஒரு பகல் பொழுது அளவு) இந்த ஒரு சுற்று சூரியன் வான் மண்டலத்தை precession என்று சொல்லபப்டும் பின்னோக்கு வழியில் செல்ல எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஆகும். இது என்ன என்று விளக்குவோம். சூரியன் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தைச் சுற்றி வருகிறது. 20 சுற்றில் ஒரு கல்பம் முடிகிறது என்று பார்த்தோம். இப்படிச் சுற்றும்போது, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலம் ஒரே மாதிரி இருக்க முடியாது. சூரியனும் அதனுடன் நாம் இருக்கும் சூரிய மண்டலமும் நகர, நகர, அதன் பின் புலத்தில் இருக்கும் நட்சத்திர மண்டலங்களின் ஊடே இடம் பெயர்வது தெரியும். இன்றைக்கு அறிவியல் கணக்கிட்டுள்ளபடி இந்த நகர்வு ஓர் இடப் பெயர்வு நிகழ ஒரு டிகிரிக்கு 72 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ரீதியில் 360 சுற்றளவுள்ள வான் மண்டலத்தைக் கடக்க ஏறத்தாழ 26,000 வருடங்கள் ஆகும். இந்தக் கால அளவு நம் பாரதீய சித்தாந்தப்படி முன் சொன்ன 28,800 வருடங்கள். இந்தக் கால அளவு அடிப்படை அளவு என்று பார்த்தோம். அறிவியலுக்கும் சித்தாந்தத்துக்கும் வேறுபாடு இருப்பதற்குக் காரணம், சூரியனின் இந்த வேகம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி இருக்காது, இருந்ததில்லை. இதைப் பற்றிய விவரங்கள், நிறைய இருக்கின்றன. அவற்றை இங்கே விளக்க இடமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்த சுழற்சியின் கால அளவே. இந்தச் சுழற்சியை வேறு ஒரு பெயராலும் அறிகிறோம். அது, சப்த ரிஷி மண்டலச் சுழற்சி அல்லது சப்த ரிஷி யுகம் என்பதே. சப்த ரிஷி மண்டலம் என்பது வானின் வட பகுதியில் தென்படுவது. அதன் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டு துருவ நட்சத்திரத்தை அறிகிறோம். நமது பூமியின் அச்சானது துருவ நட்சத்திரத்தை நோக்கியே சுழல்கிறது. சூரியனுடன் நாமும் சேர்ந்து வான மண்டலத்தின் பின்னணியில் நகர்வதை, துருவ நட்சத்திரத்தை நோக்கியுள்ள நம் அச்சு காட்டும் இடத்தைப் பொறுத்தே அறியலாம். இதையே வராஹமிஹிரர் வேறு விதமாகச் சொன்னார். (பிருஹத் சம்ஹிதா - அத்தியாயம் 12 ). மகாபாரதப் போர் நடந்து முடிந்து யுதிஷ்டிரர் அரசரான போது, சப்த ரிஷிகள் மகம் நட்சத்திரத்தில் இருந்தனர். அந்த அமைப்பு இப்படி இருந்திருக்கும். தற்சமயம் சப்த ரிஷிகள் சுவாதி நட்சத்திரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டுவித அமைப்புகளையும் மேல் காணும் படத்தில் காணலாம். இந்த வேறுபாடு, நட்சத்திரங்களின் பின்னணியில், நாம் நகர்வதால் வருகிறது. மகம் மமுதல் சுவாதி வரை உள்ள தூரம் 80 டிகிரி. ஒரு டிகிரிக்கு இன்றைய அறிவியல் கணக்கின் படி 72 வருடங்கள் ஆகின்றன என்று எடுத்துக் கொண்டால், 80 டிகிரிகள் கடக்க 5760 வருடங்கள் ஆகின்றன. அதாவது மஹா பாரத யுத்தம் முடிந்து 5760 வருடங்கள் ஆகி உள்ளன. இதுதான் சபதரிஷி யுகம் செல்லும் வழக்கு. இதை காஷ்மீரப் பகுதிகளில் 'லௌகீக யுகம்' என்று வழங்கி வந்தார்கள். காஷ்மீரப் புத்தகமான 'ராஜ தரங்கிணி'யில் இந்த லௌகீக யுகத்தின் அடிப்படையில்தான் வருடக் கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் ஆட்சி வந்தது முதலே, இந்த வழக்குகள் அழிந்து விட்டன. அதனால் இந்த யுகத்தின் விவரங்கள் மறைந்து விட்டன. இந்த யுகக் கணக்கு எப்படி இருந்தது என்று சரிவரத் தெரிந்தவர்கள் யாருமே இன்று இல்லை. ராஜ தரங்கிணி சொல்லும் லௌகீக யுகம் யுதிஷ்டிரன் வானுலகம் சென்றவுடன். ஆரம்பித்தது . அந்த வருடம் கி. மு. 3076 ஆகும். அந்த வருடம் லௌகீக யுகம் ஆரம்பித்தது என்று ராஜ தரங்கிணி கூறுகிறது. அதைத் தொடர்ந்து கி.பி. 11,324 வரை இறங்கு முகமாக இருக்கக் கூடும். அதற்கு முந்தின ஏறு முகம், கி-மு. 17,476 -இல் ஆரம்பித்திருக்க வேண்டும். அதுவே நாம் இப்பொழுது இருக்கும் மனித குலத்தின், அல்லது லௌகீக யுகத்தின் ஆரம்பம். இந்தக் காலக்கட்டத்தை 4:3:2:1 என்ற விகிதத்தில் கிருத யுக, திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று பிரிக்கலாம். அவை முறையே, கி.மு. 17,476 முதல் கி.மு.11, 716 வரை = கிருத யுகம் கி.மு. 11,716 முதல் கி.மு.7,396 வரை = த்ரேதா யுகம் கி.மு. 7, 396 முதல் கி.மு.4,516 வரை = துவாபர யுகம் கி.மு. 4,516 முதல் கி.மு.3,076 வரை = கலி யுகம் கிருஷ்ணன் உலகை விட்டு நீத்த பிறகு வந்ததாகச் சொல்லப்படும் கலி யுகம், பிரபஞ்ச அளாவிய சதுர் மஹா யுகத்தில் உள்ள கலி யுகம். அது ஆரம்பித்து 5,112 ஆண்டுகள் ஆகின்றன. சப்த ரிஷி யுகத்தின்கண் வரும் த்ரேதா யுகம் ராமன் பிறந்த யுகமாக இருக்கக்கூடும். முன் பகுதியில் புஷ்கர் பட்நாகர் என்பவர் தந்துள்ள ராமனது கால நிலவரம், இந்தத் த்ரேதா யுகத்திற்கு இரண்டாயிரம் வருடங்கள் பின்னால் வருகிறது. ஆனால் வார்தக் என்னும் மற்றொரு ஆராய்ச்சியாளர் விண்வெளி மென்பொருளில் ராமனது பிறந்தநாளைக் கண்டுபிடுத்துள்ளார் அவர் கொடுத்துள்ள ராமனது காலம் இங்கு சொல்லப்பட்டுள்ள த்ரேதா யுகத்தில் வருகிறது. இந்த விவரங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் சில கருத்துக்கள்:- • யுகம் என்று சொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. அவற்றுள் லௌகீக யுகம் எனப்படும் சப்த ரிஷி யுகம் மனித வர்க்கம் வாழ்க்கையை ஒட்டி அமைந்துள்ளது. அதன் அடிப்படையில், சோழர் சொல்லும் பரம்பரையும் , ராமன் சொல்லும் பரம்பரையும், பல ஆயிரம் வருடங்களுக்கும் மேலானவை. • லட்சக்கணக்கான ஆண்டுகளில் வரும் மஹா யுகம் விண்வெளியில் சூரியன் செல்லும் சுழற்சி சம்பந்தப்பட்டவை. • சமீபத்திய லௌகீக யுகம் கி.மு. 17,476 ஆண்டு ஆரம்பமாகியது. அது முதல் கொண்டு வரும் மனித நாகரீகத்தின் அம்சங்களே ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். • இந்த ஆரம்பம் வேறொரு விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று அறிவியலார் ஆராய்ச்சியின்படி ஏறத்தாழ அந்த காலக்கட்டத்தில்தான், பனி யுகம் முடிந்து, இன்றைய மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது. ரிக் வேத, இராமாயண, மகாபாரத , புராணக் கதைகள் ஆரம்பமானது இதற்குப் பிறகுதான். • கிருத யுகம் என்று மேல சொலல்ப்பட்ட காலக்கட்டத்தில், மக்கள் சாதுக்களாக, ஆன்மீக வளர்ச்சி அடைந்தவர்களாய் இருந்திருக்கின்றனர். மகாபாரதத்தில் அனுமன், பீமனைச் சந்திக்கும் சம்பவம் ஒன்று வருகிறது. (மஹா பாரதம் - 3- 148) . அதில் அனுமன் யுகங்களை விவரிக்கிறார். அவர் சொல்லும் கிருத யுகத்தில் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்ற பிரிவுகள் இல்லை. பணமோ, பொருளோ கொடுத்து சாமான்களை விற்பதும், வாங்குவதும் இல்லை. இயற்கையில் கிடைத்ததைக் கொண்டு மக்கள் திருப்தியுடன் இருந்தனர். எல்லா மக்களும், ஆன்மீகத்தில் நிலை பெற்றிருந்தனர். ரிக் வேதம் அப்பொழுது எழுந்தது. அதன் பிறகு வந்த த்ரேதா யுகத்தில் இந்த மக்கள் பிரிவுகள் வந்தன. அப்போழுது சாம, யஜூர் வேதங்கள் வந்தன. அதற்குப் பிறகு வந்த துவாபர யுகத்தில் வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன என்கிறார். • ஐரோப்பியப் பகுதிகளில் பனி உருகியதால், மக்கள் ஆங்காங்கே இடம் பெயர்ந்துள்ளனர். உதாரணமாக, இங்கிலாந்தும் பிரான்சும் முன்னாளில் நிலத் தொடர்பு கொண்டிருந்தது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கி-மு- 6,500 வாக்கில் கடல் எழும்பி வரவே அந்த நிலத் தொடர்பு வழி கடலுக்குள் மறைந்து விட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. • பனி யுகம் முடிந்ததால், உலகெங்கும், பனி உருகி, நிலப் பகுதிகள் தெரிய ஆரமபித்தன. பனி உருகியதால், கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. அதனால் கடலை ஒட்டிய நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின. அப்படி மூழ்கிய பகுதிகள் இந்தியாவைப் பொறுத்த மட்டில், குஜராத், தென்னிந்தியா ஆகிய பகுதிகள் ஆகும். இது அறிவியல் செய்தி. • அதில் முக்கிய இடம் பூம்புகார். • மற்ற பகுதிகள் குமரிக் கண்டம் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. • ஆரியப் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப்படும் காலத்துக்கு முன்பே ராமாயண, மகாபாரதம் நடந்து விட்டது என்பது வராஹ மிஹிரர் கொடுக்கும் சப்த ரிஷி அமைப்பின் மூலம் தெரிகிறது. • சிந்து சமவெளி நாகரீகம் ஆரம்பித்தது என்று மாக்ஸ் முல்லர் அவர்களால் சொல்லப்பட்டது கி-மு- 3000 ஆண்டுகளில். அந்தக் காலக் கட்டத்தில் மகாபாரதப்போர் முடிந்து விட்டிருக்கிறது. எனவே சிந்து சமவெளி நாகரீகம் என்பது மகாபாரதக் காலத்திற்குப் பிற் பட்டது அல்லது அப்பொழுது இருந்த மக்களின் தொடர்ச்சியே என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment