செவ்வாய், 3 செப்டம்பர், 2013

புறநானூற்றில் மனித நேயக் கொள்கைகள்

புறநானூற்றில் மனித நேயக் கொள்கைகள்
முனைவர் துரை மணிகண்டன்
உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத் தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லைஎன்று கூறுகிறார். அத்தகைய சிறப்புப் பொருந்திய இப்புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம்பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.
மனித நேயம்
மனித நேயம் என்பது பிறர் துயர்கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.
மனித நேயம்என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். நேயம்என்று சொல் நேசம்என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு அன்பு என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது.
அன்புஎன்பதற்கு ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வுஎன்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
இரா. சக்குபாய் உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்என விளக்கம் தருகிறார்.
மனித நேயக் கொள்கைகள்
உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்க அமைப்பு உண்டு. இதனை நிறுவியவர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இது.
இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும் பூகம்பமாக இருந்தாலும் ஆழிப் பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது.
இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணி தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளார். இவர் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம். பாரதப் போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் குருஷேத்திரம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.
அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவி நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையில் இச்செயலாகப் பார்க்க முடிகின்றது.
போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புறும் மனித நேயமே என்று கொள்ளலாம்.
ஒன்றுமைக் கொள்கைகள்
உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
இதனைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ பழந்தமிழ்ப் புலவன், உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் பூங்குன்றன்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா’ (புறம் – 192)
என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனித நேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ஓர் உலகம்எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அறக்கொள்கைகள்
ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் பலர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ. நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலக மக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரொ என்ற வினா எழும்புகிறது.
வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறார். அவர் குடும்பச் சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.
நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கினைமுத  லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாடி நின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும் இன்னோர்க் கென்னது என்னேடுஞ் சூடியது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் கொடுமதி மனைகிழ
வோயே...’ (புறம், 173)
என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார், உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும், கொடுமையான கொடும் பசி தீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லப்பட்டவையாக அமைந்துள்ளது.
மன்னர்களும் பிறருக்குக் கொடுத்த உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக்கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,
உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே
(புறம் 182-1- 3)
என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது.
பிற உயிர்களைப் பேணும் கொள்கைகள்
மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறறிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள். கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒரு சிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.
முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன், பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துணுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடி படர்வதற்கு விட்டுவிட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனித நேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக் காட்டு இல்லை. மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வை தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி, பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.
உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனித நேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும். இல்லை அழிந்து போகும்.
இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழவேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதன நூலான, திராவிட இலக்கியமான புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும்.



1 கருத்து: