வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆலய வழிபாட்டில் அனலைதீவு


ஆலய வழிபாட்டில் அனலைதீவு

ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் தீவகப்பிரதேசங்களில் சைவ மணித்தீவு என்று சிறப்பித்துக் கூறப்படுவது அனலைதீவு ஆகும். நயினாதீவுக்கும் எழுவை தீவுக்கும் இடையில் காணப்படும் இத்தீவு சுமார் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்டது. சிறந்த நன்னீர் வளத்தால் விவசாய செய்கை, கடல் வளத்தால் மீனவ தொழில் என்பன பிரதானமாகவும், அரச துறையில் பல்வேறு வகிபாகங்களையும் இவ்வூர் மக்கள் கொண்டுள்ளனர். தற்போது சுமார் 3000 பேர் வசித்துவருகின்றனர். அனலை மக்களின் பூர்வீக இருப்புத் தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லாதபோதும் இவர்கள் தம்மை தனிநாயக முதலியாரின் வழித்தோன்றல்களாகக் கருதுகின்றனர். இதன் மூலம் இவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் சோழர் குடியேற்ற தொடர்பினை வரலாறாக கொண்டுள்ளனர் . இருந்தும் தீவகத்தின் கண்ணகை அம்மன் வழிபாடு, ஐயனார் வழிபாடு, பேச்சு வழக்கம், உணவு பழக்க வழக்கம் என்பன சேரத்தமிழர்களாக இவர்களை வகைப்படுத்தத் தூண்டுகின்றன.
அனலைதீவானது அதன் காரணப்பெயரான அணை-அலை தீவு என்பதிலிருந்து மருவியது என்பர். போர்த்துக்கீசர் இத்தீவிற்கு இட்ட பெயர் டொனா கிளாரா தீவு என்பதாகும். ஒல்லாந்தர் இட்ட பெயர் ரொட்டர்டாம் தவிர சிங்களத்தில் அக்னிதிவயின என்று வர்ணிக்கப்படுகின்றது. இது அனல்(அக்னி) கூடிய தீவு என்ற சம்ஸ்கிருத சொல்லின் மொழி பெயர்ப்பாகும். இத்தீவுக்கு இப்பெயர் சிவனின் நெற்றிக்கண்ணுக்கு ஒப்பிட்டு சூட்டப்பட்டதாகும். அனலைதீவின் இருமருங்கும் காணப்படுவது பருத்தீவு மற்றும் புளியந்தீவு என்பதாகும். இம்மூன்று தீவுகளும் சிவபெருமானின் கண்களாக உருவகிக்கப்படுகின்றது. அனலைதீவு-அக்னிதீவு(நெற்றிக்கண்) பருத்தீவு-சூரியன் உதயமாகும் தீவு (வலக்கண்) புலியந்தீவு- அம்புலியன் சிவனாரின் தீவு (இடக்கண்) எனப்போற்றப்படுகின்றது.
சைவமும் தமிழும் ஒருங்கே பேணப்படும் இத்தீவில் ஆலயங்களும் அதுகாறும் இடம் பெறும் ஆகம வழிபாடுகளும் பிரசித்தமானவை. அவ்வாறே ஆறுமுக நாவலரால் நெறிப்படுத்தப்பட்ட அவரது மாணாக்கரான ஸ்ரீமத் சின்னப்பா உபாத்தியார் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சதாசிவ சைவத்தமிழ் பாடசாலை இன்று 125 ஆண்டுகளை கடந்து வித்யா தானம் செய்துவருகின்றது. மேலும் இரு ஆரம்ப பாடசாலைகளும் 4 முன்பள்ளிகளும் இயங்குகின்றன. வெளிச்ச வீடு, பாதச்சுவடு என்பன வரலாற்று சின்னங்களாகும்.
ஆலயங்கள் வரிசையில் பிள்ளையார், ஐயனார், முருகன், சிவன், அம்மன், விஷ்ணு, வைரவர் எனப்பல தெய்வ வழிபாடுகள் முதன்மை பெறுகின்றன. இவற்றுள் ஐயனார் அனலைதீவை அடையாளப்படுத்த உதவுவதுடன் புளியந்தீவில் காணப்படும் சிவனாலயம் பண்டைய நாகேஸ்வரத்தையும் நயினை நாகபூசணியை தொடர்பு படுத்தும் ஆலயமாகவும் விளங்குகின்றது.
ஊர்காவற்றுறையில் இருந்து மோட்டார் படகில் (லோஞ்சு) பயணித்து ஐயனார் இறங்கு துறையில் இறங்கினால் நம்மை வரவேற்பது கோட்டை மாதா கோவில் எனக்கூறப்படும் கௌரி அம்பாள் கோவில் ஆகும். இது நயினையைப்போல் இறங்கு துறையில் கோயில் கொண்ட கண்ணகி அம்பாள். காலத்தால் கௌரி அம்பாளாக மருவியது என்பர். நாகபூசணி ஆலயம் போர்த்துகீசரால் அழிக்கப்பட்டபோது இக்கோவிலும் சிதைக்கபட்டது. தவிர ஒல்லாந்தர் காலத்தில் அவ்விடத்தே வேளாங்கன்னி மாதா கோவில் கட்டப்பட்ட போதும் சைவமணித்தீவில் அதன் தேவை ஏற்படாததால் அதை அனலை மக்கள் நிராகரித்து மீண்டும் அம்பாளை ஆவாகனம் செய்தனர்.
ஊரின் முதல் நாற்சந்தியை அடைந்தவுடன் காணப்படுவது பெரிய புலம் சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார் கோவிலாகும். முதன்மை கடவுளரின் தேவை கருதி உருவாக்கபட்ட இவ்வாலயதிற்கே பொங்கல், திருவிழா என்பன முதன்முதலாக நடத்தப்படும், சித்திரை வருடபிறப்பை தேர்த்திருவிழாவாக கொண்டு பத்து நாள் மகோற்சவம் இடம்பெறும். பெருங்கதை படிப்பு, தைப்பூஷம்,  ஆவணி சதுர்த்தி, மாத சதுர்த்தி என்பன இங்கு விசேடமாக இடம் பெறும்.
துறைமுகவீதியால் நேரே சென்றால் நாம் தரிசிப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஐயனார் ஆலயம் ஆகும். இது இலங்கையில் மிகப்பெரிய ஐயனார் ஆலயமாகவும், மிகப்பெரிய சித்திர தேரை கொண்டதாகவும் விளங்குகின்றது. 13 அல்லது 16 ஆம் நூற்றாண்டுக்குரியதாக கூறப்படும் இவ்வாலயம் அனலை மக்களால் மட்டுமன்றி தீவக, யாழ், வன்னி மக்களாலும் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். உலகம் பூராகவும் பரவிக்காணப்படும் ஐயப்பனின் மூல கடவுளரான இவர் யானை வாகனத்தில் பூரணை புஷ்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாராக காட்சி கொடுப்பார்.
இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் கல்லல் துடல் எனும் ஊரில் இருந்து இறைவனின் விதிப்படி கடலில் பெட்டகம் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கபட்ட ஐயனாரின் சிலை விக்கிரகம் ஒரேகல்லில் உருவான சுயம்பு விக்கிரகம் ஆகும். சேதுக்கடலில் ஒதுங்கிய அதனை கூழாமரவடியில் ஸ்தாபித்து பூஜிக்கதொடங்கிய காலம் முதல் இன்று வரை ஐயனாரின் திருவருள் பேருண்மையானது.
1627 இல் யாழ் தீப கற்பத்தை தாக்கிய கடற்கோளின் (சுனாமி) போது ஐயனார் கடலலையை கட்டுப்படுத்தி மக்களை காத்த வரலாறு உண்டு. இதனை வரகவி முத்து குமார சுவாமி புலவர் அழகாக பாடியுள்ளார். இது தொடர்பான சித்திர வேலைப்பாடுகள் ஐயனாரின் 38 அடி உயரமான தேரிலும் செதுக்கப்பட்டுள்ளது.
1974 முதல் 1980 வரை உருவாக்கப்பட்ட இத்தேர் உலகப்புகழ் வாய்ந்தது. ஆடி அமாவாசையை அடுத்து வரும் பௌர்ணமியை தீர்த்த திதியாக கொண்டு 10 தினங்கள் திருவிழா இடம் பெறும். ஒன்பதாம் திருவிழாவான தேர் திருவிழாவிற்கு இலங்கையின் அனைத்து பாகத்திலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஐயனாரின் பக்தர்கள் ஒன்று சேர்வார்கள். கற்பூரசட்டி முதல் பறவைக் காவடி வரை பல்வேறு நேத்திகள் ஐயனுக்கு அணிவகுக்கும், தங்க ஆபரண நேத்திகள் ஐயனை அலங்கரிக்கும் காட்சிகள் மிக பிரசித்தமானவை. இவை ஐயனாரின் பெரும்புகழை முரசு கொட்டி நிற்கின்றன.
அனலைதீவின் தெற்கே புளியந்தீவு எனும் சிறு தீவில் தென்னை, பனை, பற்றை காடுகள் நடுவே நாக பாம்புகளுடன் அருளாட்சி புரிபவர் நாகேஸ்வரர்.
கோவில் மட்டுமே உள்ள இத்தீவில் தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் வாசம் செய்து ஈசனை தொழுதுள்ளதாக ஐதீகம். பண்டைய நகேஸ்வரத்தின் எச்சமாக விளங்கும் இவ்வாலயம் நயினை நாக பூசணி அம்பாளுடன் தொடர்புடைய ஆலயம் ஆகும். புளியந்தீவில் நாகதம்பிரான் வழிபாடு இடபெற, அங்கிருந்து நாகம் ஒன்று தனக்கு பூஜித்த பூவை நயினை அம்பாளுக்கு சாத்தி வழிபட்டு வந்த வேளை கருடன் அப்பாம்பை இரையாக்க எண்ணிய போது அவ்வழியாகச் சென்ற வணிகன் அப்பாம்பை பாதுகாத்து அம்பாளின் அருளை பெற்றான்.
இது அம்மை அப்பனுக்கு இடையான முதல் தொடர்பாகும். அது இன்றும் தொடரும் அபூர்வ இறைச்சம்பவமாகும். தவிர போர்த்துகீசர் காலத்தில் நயினை பெருங்கோயில் இடிக்கப்பட்ட வேளை, அவ்வாலய மூலமூர்த்திகள் பத்திரப்படுதப்பட்டன. முறையே அம்பாள் விக்கிரகம் நயினையிலும், சிவலிங்கம் (நாகதம்பிரான் ) புளியன்தீவிலும் மறைத்து வைத்து பூஜிக்கப்பட்டன. இவ்வாறாக தெய்வீக தொடர்புடைய இறைவன் இறைவியாரின் அருளாட்சியே தீவகத்தை அலங்கரிக்கின்றன.
சக்தியானவளின் கீர்த்தி அனலையில் பல இடங்களில் ஆலயங்களை தோற்றிவித்துள்ளது. தான்தோன்றி ஆலயங்களாக எழுவடி வயல் எழுமங்கை நாச்சிமார் கோவில் மற்றும் வடலூர் ராஜராஜேஸ்வரி(கண்ணகை ) அம்பாள் கோவில் என்பன விளங்குகின்றன. நாச்சிமார் கோவில் மனோன்மணி அம்மன் கோவிலாக மகோற்சவம் இடம் பெறும் கோவில் ஆகும். இவை காலத்தால் முந்திய ஆலயங்கள் எனக்கூறப்படுகின்றது. தமிழர் கடவுளாம் முருகப்பெருமானுக்கும் இரு கோவில்கள் உண்டு. அனலை மத்தி அரசன் புலம் ஊடு முருகன் கோவில் அவ்வூர் மக்களால் முதன் முதலாக ஸ்தாபிக்கபட்ட கோவிலாகும். இங்கு நாவலரின் வழிவந்த கந்தபுராண படலம் பாடி பயன் சொல்லும் முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நடைமுறை பின்னாளில் உருவாக்கப்பட்ட கலட்டி சங்கரநாத முருக மூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி காலத்தே இடம்பெறும் திருவிழாவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மேலும் அனலைதீவில் காளி கோவில், விஷ்ணு கோவில், முத்துமாரி அம்மன் கோவில், வீர பத்திரர் கோவில் என்பன குலக் கோயில்களாகவும், எட்டுக்கும் மேற்பட்ட காவல் தெய்வமான வைரவர்கோவில்களும் காணபடுகின்றன. தினசரி பூஜைகள் விசேட பூஜைகள் என்பன இங்கு நேர்த்தியாக இடம் பெறுகின்றன. இத்தீவில் அனைத்து இந்துமத கடவுளர்களுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இதனால் தான் இவ்வூர் சைவமணித்தீவு என போற்றப்படுகின்றது. இங்கு ஆகம விதி முறைகள் பிரளாவண்ணம் கிரியைகள் இடம் பெறுவதும், சிறப்பான ஆலய பரிபாலனம் இடம்பெறுவதாலும். கண்டிப்பான ஆச்சார சீலர்களாக மக்கள் விளங்குவதும் ஆன்மிகம் தழைத்து ஓங்கக் காரணம் ஆகும். இருந்தும் கடந்த கால போர்ச்சூழல் இவ்வூர் மக்களை கல்வி மற்றும் புலம் பெயர் காரணங்களுக்காக அவ்வூரை விட்டு விலக செய்தாலும் அவர்களின் நாவிலும் மனதிலும் ஐயனார் முதல் அனைத்து கடவுளர்களும் வாசம் செய்வதைக்காணலாம்.
கந்தசாமி குமரன் (B.A)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக