செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நாலடியார் காட்டும் கல்வியில் இன்றைய சமுதாயப் போக்கு


நாலடியார் காட்டும் கல்வியில் இன்றைய சமுதாயப் போக்கு
புலவர்.பி.ஆர்.இலட்சுமி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்,
கொடைக்கானல்.
            தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலத்தைச் ‘சங்கம் மருவிய காலம் அல்லது நீதி நூற் காலம்‘ என்பர். நீதி நூற் காலத்தில் இயற்றப்பட்ட நூல்களைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் குறித்தனர்.
    பதினெட்டு நூல்களையும் குறிக்கும் வெண்பா வருமாறு
          “நாலடி நான்மணி நானாற்ப தைத்திணைமுப்
           பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
           இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
           கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு“.
       ‘கீழ்க்கணக்கு‘ என்பது அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்களைக் குறிக்கும். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளையும் கொண்டு ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் ஆன வெண்பாக்களால் இயன்ற நூற்களைக் கீழ்க்கணக்கு என்பர். திருக்குறளுக்கு அடுத்த பெருமை வாய்ந்த நீதி நூல் நாலடியார் ஆகும். இது சமண முனிவர்களால் பாடப்பட்ட நானூறு வெண்பாக்களை உடையது. எண்ணாயிரம் சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் வைகையாற்றில் இடப்பட்ட போது அவற்றில் நானூறு பாடல்களே எதிர்த்துக் கரையேறின என்ற செய்திகளும் உண்டு. இதனைப்பாகுபடுத்தியவர் பதுமனார் என்பவராவர். திருக்குறளைப் போன்றே இந்நூலும் மூன்று பிரிவினை உடையது (அறம்-13 அதிகாரங்கள், பொருள்-24 அதிகாரங்கள், காமத்துப்பால்- 3 அதிகாரங்கள்) “பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்என்னும் பழமொழி மூலம் நாலடியாரின் பெருமையை அறியலாம். இந்நூலின்கண் பெருமுத்தரையரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால் இது கி.பி.8ஆம் நூற்றாண்டினதாக இருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. சிறந்த கருத்துகளும், மாறாத இலக்கியத் தன்மையும் பெற்றிருப்பதினால் தான் ஜி.யு.போப் அவர்கள் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
    நாவடக்கம்
         மனிதன் பெற வேண்டிய 16 வகைச் செல்வங்களுள் ஒன்று கல்விச் செல்வம். ‘கல்வி‘”” என்ற சொல் கல்‘ என்பதன் அடியாகப் பிறந்தது. ‘கல் என்றால் ‘கல்லி எடு அல்லது ‘தோண்டு எனப் பொருள்படும்.
         அறிவாளி போல் சிந்தனை செய்து, அந்தச் சிந்தனையைப் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிதாகச் சொல்வது கல்வி. கல்வி கற்பதினால் பணிவாகப் பேசவும், நிறைவான அறிவை உணரவும், அனுபவ அறிவைப் பெறவும், ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று சக்திகளையும் அறியும்படியான திறனைக் கற்றவன் அடைகிறான். அத்தகைய கல்வியைக் கற்று அறிந்தவர் நாவடக்கம் உடையவராய் இருப்பது நன்மை தரும் என்று பொருள் படுமாறு
                                 காவாது ஒருவன்றன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
               ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
              ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
              காய்ந்தமைந்த சொல்லால் கறுத்து
    என்கிறது பாடல். (நாலடி. பாடல் – 63  அதிகாரம் : சினமின்மை )
    பனைமரத்தின் ஓலைகளை வைத்துப் படித்தவனையும், படிக்காதவனையும்     அடையாளம் காட்டுகிறது நாலடியார்.
                            கற்றறிந்த நாவினால் சொல்லார்தம் சோர்வஞ்சி
             மற்றையராவர் பகர்வர் – பனையின் மேல்
             வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
            பச்சோலைக்கில்லை ஒலி!(நாலடி. பாடல் – 256 அதிகாரம் :   அறிவின்மை)
    காய்ந்த ஓலைதான் சப்தமெழுப்பும். பச்சை ஓலை சப்திக்காது. காய்ந்த ஓலை சப்தமிடுகிற மாதிரி படிக்காதவன் பலவும் பேசுவான். படித்தவனோ தம்பட்டமில்லாமல் பச்சை ஓலையாய் மவுனித்திருப்பான்.
     எனவே மனிதர்கள் நடந்து கொள்ளும் முறைமையினை நாலடியார் சிறு உவமையுடன் கல்வி அதிகாரத்தைத் தவிர பிற அதிகாரத்திலும் கல்வியின் பெருமையை எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பானது.
கற்றவரின் நட்பு
          நல்ல நூல்களைக் கற்று அவற்றின் பொருள் அறிந்தவர்களது நட்பு கரும்பை நுனியிலிருந்து தின்றாற் போல இறுதியில் நன்மையைத் தருவதாகும். இதனை
“ . . . . . . . . . . . . . கற்றறிந்தார் கேண்மை
நுனியில் கரும்பு தின்றற்றே  (நாலடி.பாடல் - 138) என நாலடியார் குறிப்பிடுகின்றது.
“உலகமே எலி வாகனத்தில்
பயணிக்கிறது.
எலிப் பொறிக்குள்
மனிதர்கள் மாட்டிக் கொள்ளும்
எட்டாம் அதிசயம்
சிவ பார்வதியைச் சுற்றிய
பிள்ளையாராக
வாமன வாரிசுகள்
ஓரடிப் பெட்டிக்குள்
உலகைச் சுற்றுகிறார்கள்“
-                (எலிப்பொறிக்குள் மனிதன் -ஆண்டாள் பிரியதர்சினி கவிதைகள்)
   என்று உலகம் கணினியின் வசம் சிறைப்பட்டு விட்டதை நகைச்சுவையாகக் கவிதை வரிகளில் கூறினாலும் இன்றைய உலகில் கணினித்துறையில் சாதிப்பவர்களே அதிகம். இதனால் தமிழ் கற்றவர்கள் கணினித்துறையில் சாதித்தவரோடு இணைந்து பாடுபட்டுத் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்.
        
      பெண் கல்வி
பெண்கள் அடுக்களை, தொலைக்காட்சி நெடுந்தொடர்கள்,குடும்பம்  போன்ற சின்னச் சின்ன சுகங்கள்,அடக்குமுறைகள் இவற்றில் மூழ்கித் தன் திறமைகளை வெளிக் கொணராமல், ஆண்களுக்கு அடங்கிப் பணிவிடைகள் செய்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்தலே கடன் என்று வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்காமல், தன்னம்பிக்கையுடன் வெளியே வர வேண்டும். சமுதாயம் வளர்ச்சியுறப் பாடுபடவேண்டும். பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை
                                                குஞ்சியழகும் . . . . . . . . . . .
                        . . . . . . . . . . . அழகு(நாலடி. பாடல் - 131)
            என்பதைத் தெளிவாக்குகிறது நாலடியார்.
     நமது சமுதாயம் சார்ந்த கலாசாரக் கட்டுப்பாடுகள் ஊடகத் தொழில்நுட்ப அறிவு, உயர்கல்வி,இவற்றை ஆண்களுக்கு மட்டும் உரியது என்ற கருத்தை உருவாக்கி உள்ளன. நிஜ வாழ்வில் காணப்படும் அதிகார உறவுகளும், ஆதிக்கமும் பெண் கல்வி கற்று ஒரு நிலைக்கு வந்த போதும், இரண்டாம் கட்ட நிலையிலேயே வைத்து இருக்கிறது. ஒரு பெண், ஆண் செய்யும் வேலைகளைச் செய்ய முற்படும் போதும், முன் வரும் போதும், அவள் பெண் தன்மைகள் இல்லாத ஒரு நபராகவே பாவிக்கப்படுகிறார்.பொதுவாழ்வில் அவர் ஈடுபடும்போது அவர் வாழும் இருப்பிடச்சூழ்நிலையால்,துன்பம்அணுகாதிருக்கும்பொருட்டு குடும்பத்தவரால் கட்டுப்படுத்தப்படுகிறார்.இல்லறவாழ்வினைஇனிமையாக்குவதற்காகப் பெண்ணும் வளைந்து கொடுக்கவேண்டியுள்ளது.
இந்தியக்குடும்பங்கள்இன்னமும் ஆணைக்குடும்பத்தலைமையாக்கிக்கொண்டு இயங்கி வருகிறது.இதற்குக் காரணம் பெண்கள்  இன்றைய காலகட்டத்தில் தனித்து இயங்க முடியாமையும்,பெண்களுக்குப் பாதுகாப்பின்மையும் ஒரு காரணமாகும்.
இதனால், அதிகாரமனப்பாங்குடையவர்களின் எண்ணங்கள் மேலும் வலுப்பெறுகின்றன. இந்நிலை மாற்றம் ஏற்பட பெண் கல்வி கற்றால் மட்டும் போதாது. ஆண்களின் மனோபாவமும் மாற வேண்டும். ஆணாதிக்க சமுதாயம் பெண்கள் வளர்ச்சியுறுவதற்கு உதவி புரிய வேண்டும்.
கல்வி கற்கும்முறை
            கல்வி என்பது முடிவில்லாதது. வாழ்நாளில் சில நாட்களில் நோய்கள் பல நமக்கு உண்டு. ஆதலால், அன்னப்பறவை போல பாலோடு கலந்த நீரை விலக்கிப் பாலை அருந்துவதைப் போல நல்ல நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவுடையார் கற்பர் என்பதை,
கல்வி கரையில . . . .
. . . . . . . குருகின் தெரிந்து (நாலடி. பாடல் - 135)
நாலடியார் விளக்குகிறது.
     பாஞ்சாலி சபதத்தில் தருமனைப் பற்றிக் கூறுகின்ற போது
    “நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்
     மெய்யறிந்தவர் தம்முள் உயர்ந்தோன்“
    எனக்குறிப்பிடுகின்றார் பாரதியார். தருமன் பலவகையான நூல்களைத் தேர்ந்தெடுத்து நல்லவற்றைக் கற்று அதில் தெளிவு பெற்றவன் எனவும், உண்மைகளை அறிந்தவர்களின் உயர்ந்தோன் எனக்கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. (ப.1944, ஆய்வுக்கோவை-2008,ம.கா.ப)
நாலடியாரில் ‘கல்வியானது இப்பிறப்பின் பயனையும், பிறருக்குக் கொடுப்பதால் மற்ற செல்வம் போலக் குறைவுபடாது மேன்மேலும் வளரும். தம்மைப் புகழால் நெடுந்தூரம் விளக்கச்செய்யும் தன்மை உள்ளவராகச் செய்து,அறியாமை என்னும் நோயை ஒழிக்கும் மருந்தாகும்‘ என 131 ஆவது பாடலில் கூறப்பட்டுள்ளது. கல்வி கற்பது பணத்திற்காக என்ற எண்ணம் மேலோங்கியுள்ள இக்காலத்தில் இப்பாடலின்மூலம் மக்களின் மனதில் ஒரு தெளிவு பிறக்க நாலடியார் உறுதுணையாக உள்ளது.‘செல்வத்துப்பயனே ஈதல் என்ற கொள்கையும் இங்கே வலியுறுத்தப்படுகிறது.
          கல்வியானது  ஒருவனின் அனுபவம் மற்றும் வாழ்க்கை முறையை அறிய வைக்கும். இத்தகைய அனுபவங்களை நூல்வாயிலாகவோ,பிறரின் அறிவுரை வாயிலாகவோ அறிந்துகொள்வது கல்வி.ஒருவன் கற்ற கல்வி அவன் ஏழு பிறப்பிற்கும் சென்று பாதுகாப்பு தரும்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து“.(குறள்,கல்வி-398) என்பார் வள்ளுவர்.
இத்தகைய சிறப்புவாய்ந்த கல்வியானது நாலடியாரில் மனித மனத்தை மேம்படுத்தவும்,வாழ்வில்நிறைவுகண்டுஉயர்வுநிலையை அடையவும்,வாழ்க்கைச்சிக்கல்களுக்குத் தெளிவு தரக்கூடிய விதத்தில் கூறப்பட்டுள்ளது
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்
1. பேராசிரியர்.ஜெ.ஸ்ரீ.சந்திரன்,
நாலடியார்(மூலமும் உரையும்)- வர்த்தமானன் பதிப்பகம்,
சென்னை-17,
1999.
2. புலியூர்க்கேசிகன், (உரையாசிரியர்)        
திருக்குறள்- பூம்புகார் பிரசுரம்,
மார்ச் 1977.
3. வி.கரு.இராமநாதன்,
மகாகவி பாரதியார் கவிதைகள்- இந்து ப்ப்ளிகேஷன்ஸ்,
சென்னை-17.
ஜனவரி 1992.
4. சோம இளவரசு, எம்.ஏ
இலக்கிய வரலாறு- மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை-1
2002.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக