வியாழன், 29 நவம்பர், 2012

ஏழிலை



கப்பக்கிழங்கு என்று வழக்குமொழியில் வழங்கப்படும் ஏழிலைக் கிழங்கு பல சத்துகள் அடங்கிய கிழங்கு வகையாகும். அவித்துப் பொறித்து குழந்தைகளுக்கு வழங்கினால் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவு வகைகளில் இந்த கிழங்கும் ஒன்று. இந்த வாரம் ஏழிலைக் கிழங்கில் உள்ள சத்துகளை அறிவோம்...

ஏழிலைக் கிழங்கின் அறிவியல் பெயர் மனிகாட் எஸ்கலன்டா என்பதாகும். உருமாறிய வேரே ஏழிலைக் கிழங்காகும். தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட ஏழிலைக் கிழங்கு தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா கண்டங்களில் பரவலாக உண்ணப்படும் உணவுப் பொருளில் ஒன்றாக உள்ளது. மனிகாட், டாபியோகா, யுகா, கஸ்ஸவா என பல பெயர்களில் இது வழங்கப்படுகிறது.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து நிறைந்தது ஏழிலைக் கிழங்குதான். 100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் சுக்ரோஸ் எனும் சர்க்கரை சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அமைலேஸ் என்ற கூட்டுச்சர்க்கரையும் கணிசமான அளவில் உள்ளது.

மிகக்குறைந்த கொழுப்புச் சத்து கொண்டது. மற்ற கிழங்குகளைவிட அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

ஏழிலைக்கிழங்கில் குளுட்டன் இல்லாத புரதச்சத்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. குளுட்டன் என்பது குழந்தைகளுக்கு சிலியாக் வியாதியை ஏற்படுத்தும் ஒருவித தானிய புரதமாகும். எனவே சிலியாக் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழிலைக் கிழங்கால் சிறப்பு உணவுகள் தயாரித்து வழங்கப்படுவது உண்டு.

விட்டமின் கே நிறைந்திருக்கிறது. இது எலும்புகளின் உறுதித்தன்மைக்கு உதவும். மேலும் குழந்தைகளின் நரம்புமண்டல வளர்ச்சி, மூளைத்திறனுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான் அல்சீமர் எனும் ஞாபகமறதி வியாதிக்கு இது மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

விட்டமின் பி காம்ப்ளக்ஸ், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் ஆகியவை அடங்கி உள்ளன.

தாது உப்புக்களான துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், அயர்ன், மாங்கனீசு போன்றவையும் ஏழிலைக் கிழங்கில் உள்ளது.

100
கிராம் கிழங்கில் 271 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து இருக்கிறது. இது சுரப்பிகள் நன்றாக வேலை செய்ய உதவும். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதிலும் பங்கெடுக்கும்.

செய்து சாப்பிடுங்கள்:

*
அண்டை மாநிலமான கேரளா உள்பட உலகநாடுகள் பலவற்றில் ஏழிலைக் கிழங்கால் பல்வேறு உணவுப் பண்டங்கள் தயாரித்து சாப்பிடப்படுகிறது.

*
தமிழகத்தில் கிழங்கை அவித்து, பொறித்து சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

*
ஏழிலைக் கிழங்கு சிப்ஸ் நல்ல சுவையாக இருக்கும்.

*
மீனுடன் சேர்த்து பொறித்து சாப்பிடுவது, கேக், பிஸ்கட், கூழ் என விதவிதமான பதார்த்தங்கள் செய்து சாப்பிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக