வெள்ளி, 11 நவம்பர், 2011

இயற்கையழகு





  1. Click Here Enlargeகுறிஞ்சிக்குக் கபிலன் என்பர். இங்கே குறிஞ்சித்திணைக் கவிதையொன்றைக் காண்போம். குறிஞ்சித் திணையின் கருத்தானது களவுக்காதலாகும்; அதாவது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் காதலில் ஈடுபட்டு மறைவில் கூடுவதற்குச் சில இடங்களை முன்னமே குறித்து அங்கே கூடி அளவளாவுவது. அவ்வாறு காதல் நிகழும் பொழுது தலைவியின் தோற்றத்தில் ஏதும் மாறுதல் நேர்ந்தால் தலைவியின் தாய் அவளுக்கு ஏதோ தெய்வத்தாக்கம் என்று அஞ்சி இல்லத்தை விட்டு வெளியே போகாதவாறு செறித்துவிடுவாள் (அடைப்பு); அதை இற்செறிப்பு என்பர். எனவே இச்செறிப்பு நேர்வதுபோல் தோன்றினால் தோழி ஒரு சூழ்ச்சி செய்வாள். தலைவன் தலைவியைப் பார்க்க வரும்பொழுது அவன் அண்டையில் காத்திருப்பதை அறிந்து தலைவியிடம் சொல்லுவாள், குறிப்புகள் பொதிந்த சில சொற்களை. அவற்றின் குறிப்பு இனிமேல் தலைவன் மறைவில் தலைவியைக் கூடுவதை விட்டு அவள் பெற்றோரிடம் நேரடியாகப் பெண்கேட்டுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே. அத்தகைய ஒரு கவிதையை நாம் கபிலன் பாடுவதைக் கேட்போம். இது தோழி தலைவியை ஊசலில் இருத்தி மயிலைப்போல் ஆட்டும் மென்மையான காட்சி. சங்கப் பாடல்களின் தொகுப்புகளில் ஒன்றான எட்டுத்தொகையில் நற்றிணையின் 222-ஆம் பாட்டு. முகில் படர்ந்த முகடுகள் கொண்ட மலையடுக்கத்திற்குச் செல்வோம்.

    வேங்கைக் கொம்பில் கட்டிய ஊஞ்சல்:

    இவர்கள் மலைவீட்டின் அருகில் விளையாடும் காட்டில் வேங்கை மரம் ஒன்று உள்ளது; அதன் கால் கருத்தது; பூவோ சிவந்தது; அந்தச் செம்பூக்கள் மலர்ந்த வாங்கலான (வளைந்த) மரக்கொம்பில் வடுத்தழும்பு கொள்ளப் பதியுமாறு இறுகக்கட்டியுள்ளது ஒரு கயிறு (முரற்சி). அந்தக் கயிற்றினை முறுக்கம் விடுமாறு திருகி ஊஞ்சலைச் சுற்றிச் சிறிதாக நெறித்துக் கையால் புனைந்துள்ளனர். அதில் பற்றித்தான் ஊசலை இழுப்பது வழக்கம்.

    கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்குசினை
    வடுக்கொளப் பிணித்த விடுமுரி முரற்சிக்
    கைபுனை சிறுநெறி ... (கபிலன்: நற்றிணை:222:1-3)

    [
    வீ = பூ; வாங்கு = வளை; சினை = கிளை, கொம்பு; வடு = தழும்பு; பிணி = கட்டு; முரி = முறுக்கம்; முரற்சி = கயிறு; நெறி = வளைவு, சுற்று]

    மயில்போல் வானத்தில் ஆட்டிவிடவோ?

    தோழியும் தலைவியும் அந்த ஊஞ்சலில் இருந்து ஆடுவது வழக்கம். இன்று தலைவன் அங்கே தலைவியைப் பார்க்க வரவிருப்பதாக முன்னமே குறி. அவன் வந்திருப்பதை அறிந்த தோழி தலைவியை ஊசலில் இருத்தி ஆட்டும்பொழுது கேட்கிறாள்:

    ...
    சிறுநெறி வாங்கிப் பையென
    விசும்பாடு ஆய்மயில் கடுப்ப,யான் இன்று
    பசுங்காழ் அல்குல் பற்றுவன் ஊக்கிச்
    செலவுடன் விடுகோ?, தோழி! (கபிலன்: நற்றிணை: 222: 3-6)

    [
    வாங்கி = இழுத்து; பையென = பைய, மெல்ல; விசும்பு = வானம்; ஆய் = மெல்லிய; கடுப்ப = போல; பசும் = ஒளிர்; காழ் = வடம்; அல்குல்= இடுப்பு; ஊக்கி = தள்ளி; செலவு = வேகம்; விடுகோ = விடுவேனோ]

    ஊஞ்சலை அதன் கயிற்று வளைப்பில் இழுத்துப் பைய வானத்தில் பறக்கும் மென்மயில்போல நான் இன்று உன் இடுப்பில் கட்டிய ஒளிரும் வடத்தைப் பற்றித் தள்ளி வேகமாக விடவோ? என்று வினவுகிறாள். ஆனால் இன்று அவ்வாறு கேட்பதன் குறிப்பு உண்டல்லவா அதைப் பின்னர்ச் சொல்கிறாள். பிடியானையைக் காணாமல் பிளிறும் ஆண்களிறு:

    தலைவன் குன்று இன்னொரு புறம் உள்ளது; அந்தக் குன்றிலன் சாரலில் வாழையும் சுரபுன்னை மரங்களும் ஓங்கிப் பலவாகச் செழித்த சோலையிலே யானைச்சோடியின் ஆண்களிறும் பெண்பிடியும் உறங்குகின்றன அருகருகே. அப்பொழுது களிறு ஒருமுறை விழித்துப் பார்க்கிறது; அண்டையில் இருந்த பிடியைக் காணவில்லை; உடனே பிளிறுகிறது அதை நினைத்து. அது மலையாதலால் அடிக்கடி மஞ்சு (மூடுபனி, fog) படரும்; அந்த மஞ்சிலே பிடி புதைந்து தென்படாமல் போய்விட்டது. அவ்வளவுதான்.

    ...
    பலவுடன்
    வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்
    துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது
    பெருங்களிறு பிளிற்றும் சோலை (கபிலன்: நற்றிணை: 222:6-9)

    [
    வழை = சுரபுன்னை மரம்; அமை = நெருங்கு; சிலம்பு = மலைச்சாரல்; துஞ்சு = தூங்கு; பிடி = பெண்யானை; மருங்கு = பக்கம், இடம்; மஞ்சு = மூடுபனி, மேகம்]

    துணை பிளிறும் சோலையுள்ள அவர்
    மலையைப் பார்த்து வா!

    அத்தகைய துணைகள் தங்கும் சோலையுள்ள தலைவனின் உயர்ந்த நெடிய குன்றத்தை நீ ஆகாயத்தில் மயில்போல் மெல்ல ஆடிப் பார்த்து வர நான் ஆட்டிவிடட்டுமா? என்கிறாள் தலைவியைப் பார்த்துத் தோழி.

    ...
    களிறு பிளிற்றும் சோலை, அவர்
    சேண் நெடுங் குன்றம் காணிய நீயே
    (
    கபிலன்: நற்றிணை: 222:9-10)

    [
    சேண் = உயரம்; காணிய = காண]

    நீயும் கதறவேண்டாமே:

    இங்கே பிடியானை சிறிது நேரம் மஞ்சில் மறைந்து தென்படாததற்கே களிற்றுயானை பிளிறும் என்பதில் குறிப்புப் பொதிந்துள்ளது. தலைவியை இல்லத்திலே அவள் தாயார் செறித்து விட்டால் தலைவா நீயும் பிரிவினால் கதறவேண்டிவரும், எனவே விரைவில் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய் என்று உணர்த்துகிறாள்!

    கபிலன் இவ்வளவு பொருள் நுணுக்கமும் மென்மையும் பொதிந்த கவிதையைப் பாடியுள்ளது இன்பமும் வியப்பும் தருவதாகும். சிலசொற்களில் மேகம்படர்ந்த மலையில் உயர்ந்த காதல் கொண்ட தலைவியை மெல்லிய மயில்போல் பூமரத்து ஊஞ்சலிலே ஆட்டி மென்மயில்போல் பறக்கவிடுவதில் எத்தனை நுணுக்கம், என்னென்ன உணர்வு. சங்கத் தமிழ், உலகத்தின் அருஞ்சொத்தே.

    பெரியண்ணன் சந்திரசேகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக