Friday, 11 November 2011

குன்றெல்லாம் விளையாடும் கண்ணகி!


குன்றெல்லாம் விளையாடும் கண்ணகி!


 1. Click Here Enlargeசிலப்பதிகாரத்திலே வாழ்த்துக்காதை என்னும் படலத்தில் சொல்லும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று, தமிழரை அவமதித்த கனகன், விசயன் என்னும் இரு அரசர்களையும் அவர்கள் துணைவர்களையும் வென்று இமயத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து மீண்டு சேரநாட்டிலே கோவிலில் நிறுவி விழாக்கொண்டாடி அமைகின்றான்.

  அது நடக்கும்பொழுது பூம்புகாரில் உள்ளோருக்குக் கோவலனுக்கு மதுரையில் நேர்ந்ததுவும் அதனால் கண்ணகி வழக்குரைத்ததுவும் பாண்டியன் உயிரிழந்ததும் கண்ணகி தன் நெஞ்சின் இடது நகிலைத் திருகி மதுரையின் தீயோரை எரித்ததுவும் எல்லாம் எட்டியது. பூம்புகாரில் கண்ணகிக்குச் சிறுவயதிலிருந்து செவிலியாய் இருந்து கவனித்த காவற்பெண்ணும், கண்ணகியின் அடித்தோழியும் (ஏவற்பெண்), தேவந்தி யென்னும் பெயருடைய பார்ப்பனத் தோழி ஒருத்தியும் ஆகிய மூவரும் அது கேட்டு மதுரைக்குச் சென்றனர். அங்கே சென்றால் கண்ணகிக்கு இடையர் சேரியில் அடைக்கலம் ஈந்த ஆயர்குலப் பெண்ணான மாதரி பற்றிய தியாகம் செறிந்த துயரச் செய்தியைக் கேட்கவேண்டியதானது. மாதரி தன்னிடம் அடைக்கலமாக வந்த கோவலகண்ணகியரைக் காக்க முடியாமல் போனதை நொந்து நள்ளிரவில் தீமூட்டி அதில் குளித்து இறந்ததை அறிந்தனர். அடைக்கலமாக அடைந்தாரை உயிர்க்குமேல் கருதும் தமிழர் பண்பு வியப்பானது.

  பிறகு அந்த மாதரியின் மகளான ஐயை என்பவளையும் கூட்டிக்கொண்டு கண்ணகிக்குச் சேரன் கோவில் எடுத்தமை அறிந்து சேரநாட்டு மலையை அடைந்தனர். அங்கே சேரன் அவையில் தங்களை அறிமுகப்படுத்தும் முறையாகப் பாடினர். 'சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்', 'தண்புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்', 'பூம்புகார்ப் பாவைக்குத் தோழிநான் கண்டீர்' என்று பாடினர். பிறகு கோவலன்தாயும் கண்ணகிதாயும் உயிர்துறந்ததையும் மாதரி உயிர் நீத்ததையும் தங்களுடன் வந்த ஐயையும் அறிவித்து அரற்றிப் பாடினர்.

  செங்குட்டுவன் வியப்பு

  அப்பொழுது செங்குட்டுவன் மிகமிக வியப்பாக 'என்னேஇஃது என்னேஇஃது என்னேஇஃது என்னே! மின்னுக்கொடியொன்று மீவிசும்பில் தோன்றுமால்!' என்று வானத்தைப் பார்த்து அடுக்கடுக்காகச் சொல்லினான். அங்கே காலில் பொற்சிலம்போடும் இடுப்பில் அழகிய மேகலையோடும் கைவளையோடும் வயிரத் தோட்டோ டும் பொன்னகை அணிந்தும் உயர்ந்த வானத்தில் மின்னற்கொடியொன்று தோன்றினாள்!

  பாண்டியன் தீதிலன்! நானவன் மகள்!

  அந்த மின்னற்கொடியான கண்ணகித்தாயார் பேசிய முதற்சொல்: 'தென்னவன் தீதிலன்!' என்பதாகும். தென் தமிழகம் காக்கும் பாண்டியன் நீதி தவறினான் என்ற குற்றமில்லாதவன் என்று தெரிவித்துப் பிறகு 'தேவர்கோன் தன்கோயில் நல்விருந்து ஆயினன்' என்றும் சொல்லினாள்; தேவர்க்கு அரசனான இந்திரனின் அரண்மனையில் உயர்ந்த விருந்தினனாக ஆயினான்' என்றும் அறிவித்தாள். மேலும் 'நான் அவன்றன் மகள்' என்றும் தன்னைப் பாண்டியன் மகள் என்பதாகக் கூறுகிறது! பிறகு கண்ணகியம்மை பேசியது பெருவிந்தையான செய்தியாகும். வெற்றிவேலான் குன்றில் விளையாட்டு!

  '
  வென்வேலான் குன்றில் விளையாட்டு யான்அகலேன்' என்று கண்ணகித் தெய்வம் உரைத்தது! அதாவது 'எப்பொழுதும் வெற்றிதரும் வேலையேந்திய முருகனின் குன்றில் விளையாடுவதில் இருந்து நான் அகலமாட்டேன், நீங்கமாட்டேன்!' என்று சொல்லியது! பிறகு 'என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம்!' என்று பாட்டுப் பாடியாட அழைத்தாள் அந்த விளையாடும் தெய்வம்!

  இது மிக அரிய செய்தியாகும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று வழக்கமுண்டு. அதனோடு குமரன் இருக்கும் இடத்தில் கண்ணகி இருக்கிறாள் என்பது சிலப்பதிகாரம் சொல்லும் உண்மையாகும்!

  '
  தென்னவன் தீதிலன்! தேவர்கோன் தன்கோயில்
  நல்விருந்து ஆயினன்! நானவன் தன்மகள்!
  வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
  என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்!
  (
  சிலப்பதிகாரம்: வாழ்த்துக்காதை)
  [
  தேவர்கோன் = தேவர் தலைவன்; கோயில் = தலைவன் வீடு, அரண்மனை; வென் = வெற்றி; வம் = வாரும்]

  பெரியண்ணன் சந்திரசேகரன்


No comments:

Post a Comment