ஞாயிறு, 20 ஜனவரி, 2013

தமிழெழுத்து



கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 1வளவு.காம்
அறிவின் எதிரி அறியாமையல்ல; அது அறிந்ததாய் எண்ணிக் கொள்ளும் மயக்கம்
-
விண்ணியல் அறிஞர் ச்*டீவன் ஆக்கிங்

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்என்ற தொடரை முடித்து, அடுத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது கிரந்தவெழுத்து எப்படி எழுந்தது? அதன் பின்புலம் என்ன? இற்றைத் தமிழெழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது? சங்க காலத் தமிழெழுத்தின் பெயரென்ன? அது நம் இலக்கியங்களிற் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? வட்டெழுத்து என்பது என்ன? அது எப்பொழுது புழக்கத்திலிருந்தது? ஏன் மறைந்தது? புள்ளியிட்ட தமிழியெழுத்து, வட்டெழுத்து, கிரந்தவெழுத்து என்ற மூவகை எழுத்துக்களுக்கும் இடையிருந்த ஊடாட்டு என்ன? - என்ற கேள்விகளுக்கு விடை சொல்லாது போனோமோ?” என்று தோன்றியது.

அதேபொழுது, ஒருங்குறி நுட்பியற் குழுவிற்கு முன், வந்த கிரந்த முன்மொழிவுகளை ஆழ்ந்து பயிலாது, வெறும் அரைகுறைப் புரிதலில், பொதுக்கைப் போக்கில் "கிரந்தம் x கிரந்த எதிர்ப்பு" என்று எளிமைப் படுத்தி, “தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்என அடம்பிடித்து வறளி பேசுவோர் ஒருசிலர் இருக்கிறாரே? அவருக்கு இது போன்ற எழுத்துப் பின்புலங்களைச் சொல்வது தேவையா? இவருக்குச் சொல்லி என்ன பயன் விளையும்?” - என்று ஓரோவழி சலித்தும் போனேன். தமிழ்க்காப்பில் தாம் மட்டுமே முன்னிற்பதாய் முழங்கும் ஒரு சிலர், ”ஆ., இராம.கி கிரந்தத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்என்று முற்றிலும் அவதூறாய்க் கைதூக்கும் நேரத்தில், ”இக் கேள்விகளுக்கு விடையிறுத்து என்னாகப் போகிறது?” என்று தயங்கியும் நின்றேன். அப்புறம், இச் சலிப்பையும், தயக்கத்தையும் தூக்கியெறிந்து, சொல்ல வந்ததைச் சொல்லத்தான் வேண்டுமென முடிவு செய்தேன். புரியாத நாலு பேர் அறியாது தொல்லை கொடுப்பதாலேயே நமக்குத் தெரிந்ததைச் சொல்லாதிருக்க இயலுமோ?

இற்றைத் தொல்லியல் வளர்ச்சியில் சிந்து சமவெளி எழுத்துக்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியப் பொறிப்புகளிலேயே மிகவுந் தொன்மை வாய்ந்தவை, அசோகர் கல்வெட்டிற்கும் முந்தியவை, தமிழகத்திற்றான் கிடைக்கின்றனவாம். கொங்கு மண்டலக் கொடுமணலிற் கிடைத்த பானைப் பொறிப்புகள் கி.மு.4/5 ஆம் நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லுகின்றனவாம். அவை அசோகருக்கும் முன்னால் குறைந்தது 100 ஆண்டுப் பழமை வாய்ந்தனவாம். இந்தக் கண்டுபிடிப்புகளின் முகன்மை இன்று இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டிருக்கிறது. அந்தக் காலத்து தி,,நா. சுப்பிரமணியன், இந்தக் காலத்து கே.வி.இரமேஷ், கா.இராஜன் போன்றோர் தமிழி எழுத்துக்களில் இருந்தே அசோகனின் பெருமி எழுத்துக்கள் எழுந்திருக்கலாம் என்ற ஏரணங் காட்டி மாற்றுச் சிந்தனைக்கு நம்மை நகர்த்துவார்கள். அவர்களின் ஏரணம் இன்னும் ஆய்ந்து உறுதி செய்யப்படவேண்டியவொன்றாகும்.

[
ஆனால், தொல்லியலையும், கல்வெட்டு எழுத்துக்களையும், தூக்கிப் போட்டு மிதிக்க முனைவோருக்கும், செஞ்சீனக்கலாச்சாரப் புரட்சிபோல் இடதுசாரி எக்கு வாதத்திற் (left wing extremism) தோய்ந்து, பழைய ஆவணங்களைத் தூக்கிக் கடாசுவோருக்கும், ”வரலாறா, வீசை என்ன விலை?” என்பவருக்கும் இந்த எழுத்துத் தோற்றங்கள் விளங்காது.]

இனிக் கட்டுரைக்கு வருவோம். என்னுடைய தொல்காப்பியமும் குறியேற்றங்களும்என்ற தொடரின் 5-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/5.html) பழம் எழுத்துமுறைகள் பற்றி ஒருசில பத்திகளிற் சொல்லியிருப்பேன். மேலும் அத்தொடரின் 6-ஆம் பகுதியில் (http://valavu.blogspot.com/2006/11/6.html) ஒரு படத்தொகுதியால் விளக்கியிருப்பேன். அவற்றைச் சில திருத்தங்களுடன் இங்கு மீண்டுந் தருகிறேன்.
-----------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVvtTVUVC0CuuNtSbf5ZDs9fa5rWA1Lyo6IdtLcTea-SeQVs6G1LOgJxfSYAphXNkdlTFKALdWBCYPcRxdB4VO8EtW7HAqTXa2gydmzr4bTaoyHNsKQOY9b0SwovXXT1TRSKh5EJgzbTL6/s320/Thamizi%2525201.jpg
கிடைத்துள்ள தமிழிப் பொறிப்புகளில் ஆறு வகைத் தமிழியை இதுவரை இனங் கண்டிருக்கிறார்கள். ஆறுவிதமான எழுத்து முறைகள் பின் வருமாறு:

1.
முதல் முறை என்பது உயிர்மெய்களுக்கு இடையில் ஒரு சில இடங்களில் உயிரையும் மெய்யையும் தனித்து எழுதிக் காட்டிய முறை. இப்படி இருக்கும் கல்வெட்டுக்களில் ஒரே எழுத்து மெய்யாகவும், உயிர்மெய் அகரமாகவும், உயிர்மெய் ஆகாரமாகவும் தோற்றமளிக்கலாம். இடம்பார்த்து அவற்றில் மெய் எது, உயிர்மெய் அகரமெது, உயிர்மெய் ஆகாரமெது என்று கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில் மெய், உயிர்மெய் அகரம், உயிர்மெய் ஆகாரம் ஆகியவற்றின் இடையே வேற்றுமை காண்பது சரவலாய் இருக்கிறது. [மேலே வரும் படத்தொகுதியில் முதற் படம் முதல்முறையைக் குறிக்கிறது. சாத்தன் என்ற சொல்லைப் பாருங்கள்.]

2.
இரண்டாம் முறையில் (இரண்டாவது படம்) மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். ஆனால், அகரத்தையும், ஆகாரத்தையும், ஒரே தோற்றம் போல், மெய்யெழுத்தை ஒட்டினாற்
போல் ஒரு சிறு கோடு போட்டுக் காட்டுவார்கள். இந்த முறையில் "கல்" என்பதற்கும் "கால்" என்பதற்கும் வேற்றுமை காணமுடியாது. அதாவது ககரத்திற்கும், காகாரத்திற்கும் வேறுபாடு தெரியாது; அவற்றை இடம் பார்த்துப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும். [இங்கே சாத்தன் என்ற சொல்லிற் சா-வும் த-வும் படத்தில் ஒரே மாதிரி இருப்பதைப் பாருங்கள்.]

3.
மூன்றாம் முறையில் (மூன்றாம் படம்) மெய்யெழுத்திற்கும், அகரமேறிய மெய்க்கும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாகக் காட்டும். [படத்தில் த் என்பதற்கும், த என்பதற்கும் வேறுபாடு இல்லாததைக் கவனியுங்கள்.] மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு தோற்றம் காட்டுவது உயிர்மெய் ஆகாரத்திற்கு மட்டுமே அமையும். தமிழ் போன்ற மொழியில் இப்படி மெய்யெழுத்துக்கும், அகரமேறிய மெய்க்கும் ஒரே எழுத்து அமைந்தது அவ்வளவாகக் குழப்பம் தராது, ஏனென்றால் மெய்ம்மயக்கம் என்ற ஒழுங்கு இந்த மொழியில் இருந்தது. மாணிக்கம் என்ற சொல்லில் வரும் க் என்னும் மெய்யெழுத்துக்குப் புள்ளி இல்லாமல் இருக்கிறதென்று வையுங்கள். இருந்தாலும் நாம் படித்துவிடுவோம். ஏன்? க்க என்ற கூட்டில் முதலில் வருவது மெய் என்றும் அடுத்து வருவது அகரமேறிய மெய் என்றும் நமக்குப் புரிந்துவிடும். இனித் தஙகம் என்ற சொல்லில் வரும் ககரம் அகரமேறிய ககரம் என்றும், அதற்கு முன்னால் வருவது ஙகர மெய் என்றும் புரியும். இதே முறையில் க்க, ங்க, ட்க, ண்க, ம்க, ய்க, ர்க, ல்க, ழ்க, ள்க, ற்க, ன்க என்ற மெய்க்கூட்டுக்களில் பின்னால் வருவது உயிர்மெய் தான், மெய்யல்ல என்பது புரிந்துவிடும்.

இனிச் சக என்று தோற்றம் காட்டுவதில், தமிழ்மொழி என்ற காரணத்தால், அதை ச்க என்று படித்துவிட முடியாது. சக் என்பது சரியா என்றால் அடுத்து மூன்றாவதாய் வரும் உயிர்மெய்
க என இருந்தால் சரி, வேறு உயிர்மெய்யாக இருந்தால் சரியல்ல. இதே போல, மூன்றாம் எழுத்து க என இருந்தால், கக், சக், டக், ணக், தக், நம், பக், மக், யக், ரக், லக், வக், ழக், ளக், றக், னக் என்ற எழுத்துக் கூட்டுக்கள் சரியாகும். மொத்தத்தில் தமிழ்ச்சொற்கள் மட்டுமே பயிலும் போது, வடபுலத்துக் கடன்சொற்கள் புழங்காத போது, மெய்யெழுத்தும் அகரமேறிய மெய்யெழுத்தும் ஒரே போல் தோற்றம் அளித்தாலும், அவ்வளவு சரவல் தமிழுக்குத் தராது. ஆனால் கடன் சொற்கள், குறிப்பாகப் பாகதச் சொற்கள், கூடிவரும் போது, தமிழ் வரிகளைப் படிப்பது கடினமாகிக் கொண்டே வந்தது.

இதுவரை பார்த்த மூன்று முறைகளும் பாகதம் கலந்த தமிழை எழுதுவதிற் குழப்பமான முறைகள். இனி மூன்று தீர்வுகளைப் பார்ப்போம்.

4.
பட்டிப்போரலு முறை. (நாலாவது படம்) இந்த முறையில் மெய்யெழுத்து புள்ளியில்லாமல் இருக்கும். அடுத்து, மெய்யெழுத்தின் மேல் ஒட்டினாற் போல் ஒரு சிறு கோடு கொண்டு உயிர்மெய் அகரத்தைக் குறிப்பார்கள்; உயிர்மெய் ஆகாரத்தில், மேலே சொன்ன சிறுகோடு, செங்குத்தாக கீழ்நோக்கி வளைந்து, இன்னொரு சிறுகோட்டையும் ஒட்டிக் காட்டும். இந்த முறையில் மெய்யெழுத்து, அகரமேறிய மெய், ஆகாரம் ஏறிய மெய் ஆகிய மூன்றிற்கும் உரிய வேறுபாடு இருக்கும். கல்வெட்டில் ஒரு குழப்பம் இருக்காது; [படத்தில் சா-வும், த் -ம் த- வும் வெவ்வேறாகக் காட்சியளிப்பதைப் பாருங்கள்.] ஆனாலும் இந்த முறை ஏனோ பரவாமல் போய்விட்டது.

5.
வடபுலத்துப் பெருமி முறை: (ஐந்தாவது படம்) இந்த முறையில் இரண்டு தகரங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்து மேலுள்ள தகரம் மெய்யையும், கீழுள்ள தகரம் உயிர்மெய் அகரத்தையும் குறிப்பதைப் பார்க்கலாம். சா என்ற எழுத்திற் சிறுகோடு வந்து தனித்து நிற்கும்.

6.
தொல்காப்பிய எழுத்துமுறை: (ஆறாவது படம்) இந்த நிலையில் தான் ஆறாவது முறை வந்தது. இந்த முறை வந்த போது பாகதச் சொற்கள் தமிழுக்குள் ஓரளவு வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். இது போன்று பாகதம் நுழைவதால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க, இந்த ஆறாவது முறையில் மெய்யெழுத்தைக் குறிக்கப் புள்ளியிட்டார்கள்; புள்ளியில்லாத, வேறு குறியீடுகள் தொட்டிருக்காத, எழுத்து அகரமேறிய மெய் என்று ஆயிற்று, அதே போல, மேலே சிறு கோடு கொண்ட எழுத்து ஆகாரம் ஏறிய மெய்யாகக் கொள்ளப் பட்டது. இந்த ஆறாவது முறையைத் தான் தமிழ்ப் புலவோர் அறிமுகப் படுத்தினார்கள். அதைத் தொல்காப்பியர் ஆவணப் படுத்தினார். ஆவணப் படுத்திய முறையை மக்கள் ஏற்பதற்கு நெடுங்காலம் ஆயிற்றுப் போலும்.

மேலே சொன்ன ஆறு முறைகளும் ஒன்றின் பின் ஒன்றாய் எழுந்தவை அல்ல. அவற்றில் ஒருசில சமகாலத்தில் ஒன்றோடு ஒன்று இழைந்து இருந்தன. முடிவில் கொஞ்சம் கொஞ்சமாய் மற்றவை குறைந்து சங்க கால இறுதியில் தான் ஆறாம் முறை நிலைத்தது. இதில் முதல்வகை கி.மு. 1000 யை ஓட்டியது என்றும், இரண்டாவது வகை அதற்கு ஓரிரு நூற்றாண்டுகள் கழிந்தது என்றும். மூன்றாவது நான்காவது, ஐந்தாவது, ஆறாவது வகைகள் கி.மு.400, 500 களைச் சேர்ந்தது என்றும், நெடுங்காலம் புழக்கத்தில் இருந்தன என்றும் தெரிகிறது. கடைசி மூன்றும் தொல்லியல் (archeology) ஆய்வுகளின் படி பார்த்தால் சம காலத்திலேயே இருந்திருக்கலாம் என்றும், தமிழை முன்வைத்துப் பேசும் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் தொல்காப்பிய காலம் (கி.மு.700-500) என்பது ஆறாம் வகைத் தமிழியின் காலத்தோடு ஒத்து வருகிறது.
--------------------------------------
மேலே சொன்ன ஆறு முறைகளைப் புரியும் வகையில், ஒருசில கல்வெட்டுக்களைப் படமாகப் பார்ப்போம். முதலிற் நாம் காண்பது மாங்குளம் கல்வெட்டாகும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKIxO9OWrADgcTLtcGOxGxsXReShEu_Fe6pXd_tuEY239SS9sZCIuCS0vFasBvHgXMb_c8t6vZMN9e1bSs1o_TU12Kfh0VnlOHTOTIFvWvHjmBC0ESkBxU1i1e7K-9yRJbj7hqy-OY-eED/s320/img017.jpg
இது பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தது. இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா, அன்றி வேறு நெடுஞ்செழியனா என்று சொல்ல முடியவில்லை. [ஆனால் உறுதியாகச் சிலம்புக் காலத்து நெடுஞ்செழியனில்லை.] இக்கல்வெட்டின் காலம் கி.மு.2 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் கணிப்பார். நடன. காசிநாதன் போன்றோர் இதைக் குறைந்தது கி.மு. 3/4 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவர். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

கணிய் நந்த அஸிரிய்இ
குவ்அன்கே தம்ம்ம்
இத்தஅ நெடுஞ்சழியன்
பணஅன் கடல்அன் வழுத்திய்
கொட்டூபித்தஅ பளிஇய்

இந்தக் குறிபெயர்ப்பில், ம்மம் என்ற சொல்லில் வரும் தஎனும் எழுத்து, பெருமியில் வரும் மூன்றாவது த -வைக் குறிக்கும். (கவனித்துப் பாருங்கள், இத்தனை பழைய கல்வெட்டிலேயே பெருமியும், தமிழியும் உடன் கலந்திருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் பாகதமும் தமிழும் அருகருகே புழங்கின போலும். ஸகரம் முதல்வரியில் வருவது கூட இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டியதே.) இக் கல்வெட்டில் உயிர்மெய் அகரம் சிலபோது மெய்+ உயிர் என்று பிரித்து அடுத்தடுத்து வருவதையும், உயிர்மெய் நெடிலானது, உயிர்மெய் குறில் + உயிர் என்று பிரித்து வந்திருப்பதையுங் காணலாம். இந்தக் கல்வெட்டு மேலே சொன்ன மூன்று தீர்வுகளும் வாராத காலத்தில் எழுந்த முதல் எழுத்து முறையைச் சேர்ந்தது. இது போன்ற கல்வெட்டுக்கள் ஆகப் பழங் காலத்தன என்று கல்வெட்டாய்வாளர் சொல்கிறார்கள்.

அடுத்து இரண்டாவது எழுத்து முறைக்கான சான்றாய்ப் புகழூர்க் கல்வெட்டைச் சொல்லலாம். இது இரும்பொறைச் சேரர் மரபை ஒட்டியது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQFwfU-KxBxN5PXnDtPUkkRiha1Ib0XUepD_AWs4Qt-nQP5f85hPIH8AnjS5-RDyX-94ubtbHNsnrjlJXSjdf2W-32Ayq3iuoijxwoTT7NACF7W3_Ldc_p3dih-DsncWaZbQ_D6J6zoVWb/s320/img018.jpg
இதை மிகவும் பிற்காலத்ததாய் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிற்கு ஐராவதம் மகாதேவன் சொல்லுவார். முன்னாற் சொன்ன ஆசீவகப் பின்புலத்தாலும், மற்ற வரலாற்றுக் காரணங்களாலும் இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பின்பகுதியாய் இருக்கவேண்டும். இதில் உயிர்மெய் அகரமும், ஆகாரமும் இடம் கருதிப் புரிந்து கொள்ளவேண்டிய குழப்பத்தில் இருக்கிறது.

மூன்றாம் எழுத்து முறைக்கான சான்றாய்ச் சம்பைக் கல்வெட்டைக் காணலாம். இது அதியன் நெடுமான் அஞ்சியின் காலத்தது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzolnstD-uMB7dY0_5Cul99vTDS2-6DvSc6qtEN-qxGUQKLt26GxllO8fv4DKKgtNhuIauoijSthVfRKBp7yLdAubsc4ZCybGxlP2o8Arnjkt1GZkhDoms8RmhhZ5L9x3Gxp28HnuJNWEh/s320/img019.jpg
இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்வார். மற்ற இலக்கியச் சான்றுகளோடு பொருத்திப் பார்த்தால், கல்வெட்டின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகக் கூட அமையலாம். மேலுள்ள படத்தின் இன்றைய எழுத்துப் பெயர்ப்பு கீழ்வருவது போல் அமையும்.

ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி இத்த பளி

இக் கல்வெட்டைக் கூர்ந்து பார்த்தால் உயிர்மெய் எழுத்தை உடைத்து எழுதும் பழக்கம் அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் அருகிவிட்டதை உணர முடியும். ஆனால் அகரத்திற்கும் ஆகாரத்திற்கும் இடையே தெளிவு இல்லாதிருக்கிறது. வாசகத்தை வைத்தே எது உயிர்மெய் அகரம், எது உயிர்மெய் ஆகாரம்?” என்று அடையாளங் காண வேண்டியிருக்கிறது.

பட்டிப் போரலுக் கல்வெட்டு பாகதத்தில் இருக்கும் காரணத்தால், அப்படத்தை இங்கு சேர்க்கவில்லை. அதேபோல, அடுக்குக் கட்டு முறை புழங்கிய அசோகரின் பாகதக் கல்வெட்டையும் இங்கு தரவில்லை. பல்வேறு இணையத் தளங்களிலும் இவற்றைத் தேடிக் காணமுடியும். மூன்றாவது படமாய் ஆனைமலைக் கல்வெட்டின் வாசகத்தைக் காணலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhse94hSCekgC5ILfpOidXk6wJsf1xQ72SRKueFdNgIPMC6k6AL-wJf5NVcFqQ5xkZmXVstXRWWTxNtwxAOZSqHPzV_PH3R9M8chz-7z-POjTXFJbVnNzi9ESck0Zkq8XXSgEIXu83Z8OGP/s320/img020.jpg
இவகுன்றதூ உறையுள் பதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்றே ஐராவதம் மகாதேவன் கூறுவார். அத்துவாயிஎன்ற சொல்லை அற்றுவாயிஎன்ற செந்தமிழ்ச் சொல்லின் பேச்சுவடிவாய்க் கொண்டால், அரட்ட காயிபன் என்ற பெயர் செயினத் துறவியைக் குறிக்காது ஓர் ஆசீவகத் துறவியைக் குறித்ததோ என்ற ஐயமெழுகிறது. அப்படி அமையுமானால், இக் கல்வெட்டின் காலம் மீளுறுதி செய்யப்படவேண்டும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு என்பது ஆசீவகத்தையொட்டிப் பார்த்தால் மிகவும் பின் தள்ளியதாய்த் தெரிகிறது. இந்தக் கல்வெட்டிற் தான் முதன் முதலில் புள்ளியைக் கண்டதாய் திரு. ஜெபராஜன், கிவ்ட் சிரோமணி ஆகியோர் உறுதி செய்வர். கல்வெட்டுப் படத்தைப் பார்த்தால், ”அரட்டஎன்ற பெயர்ச்சொல்லின் டகர மெய்க்கு மட்டும் புள்ளியிருப்பது தெரியும். அதே பொழுது, கல்வெட்டின் ஊடே புள்ளியிருக்க வேண்டிய எல்லா இடங்களிலும் புள்ளியைக் காணோம் என்பது நம்மை ஓர்ந்து பார்க்கவைக்கிறது. ஒருவேளை புள்ளி பழகுவதும் பழகாமல் இருப்பதுமாய் இக்காலம் இருந்தது போலும்.

புள்ளி பெரிதும் புழங்கியதாய்க் குடுமியான் மலைக் கல்வெட்டைச் சொல்லலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ2NjzvEuGFr3vh5dVUe2LCcUaPkxcEBIgGku7Y-Ykv0n5Q-fod-nhcVvPi7c4XnyFNV4bXfRtr9phfqQBvndADzwpI-ZxZYHBIM_1YurB73APGg5d7NXzntir9dnQMuOLQUgTYPCPu3rc/s320/img021.jpg
இதன் வாசகம், “நாழள் கொற்றந்தய் ப[ளி]ய்என்றமையும். இதிலும் புள்ளி முற்றிலும் புழங்கியதென்று சொல்லமுடியாது. இதன் காலம் கி.பி.3 ஆம் நூற்றாண்டு என்று ஐராவதம் மகாதேவன் சொல்லுவார்.

புள்ளி முற்றிலும் புழங்கியதாய்த் தேடும் போது ஐராவதத்தின் பரிந்துரைப்படி அது நாலாம் நூற்றாண்டு ஆகிவிடுகிறது. (ஐராவதம் மகாதேவனின் காலக் கணிப்பு பெரும்பாலும் கட்டுப் பெட்டியானது.) அப்படிப் புழங்கிய நேகனூர்ப்பட்டிக் கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxJHufcBCz0JTnUs1c2bIbGi9VZQSPEoX8hnZGqKcJxjnLklOT0wVgxHwP3X5Bc1IJl6A4S1tXjtZPneRQRpO-TwiSRpzwA2mMzgPtSMpdkystG995dKtD_yR3rzTpTVyKmybkzP1lR6eg/s320/img022.jpg
அதன் வாசகம்,

பெரும்பொகழ்
சேக்கந்தி தாயியரு
சேக்கந்தண்ணி சே
யிவித்த பள்ளி

என்றமையும். புள்ளிவைத்தெழுதும் பழக்கம் பிற்காலத்தில், 4/5 ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்துக்களிலும் புழங்கியிருக்கிறது.

இந்தக் கல்வெட்டுக்களையெல்லாம் ஒருசேர வைத்துப் பார்க்கும் போது, முன்னாலிருந்த மெய் / அகர உயிர்மெய்ச் சிக்கலுக்கு மூன்று தீர்வுகள் வரலாற்றில் எழுந்தது சரியாக விளங்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg3OYlxop55u8AP8JgwzhwpKSwuBX8u_tvhQDpYKBA_aJ-8vhFObUOrw7sKc8rTv7T-f4tFvG3mJKrprBYbIohyphenhyphenNU7dIz4UK_qADHMzSPEmojFK3UlbNqG8Ngu0lAsALmynSCuwXL11izs/s320/img004.jpg
அவற்றில் பட்டிப்போரலு முறை ஏனோ இந்தியத் துணைக்கண்டத்தில் முன்னெடுக்கப் படாமலே போனது. அது நடந்திருந்தால் இந்தியாவெங்கணும் ஒரேவகையெழுத்து ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஏற்றுக் கொண்ட இருமுறைகளும் எழுத்தொழுங்கில் (orthography) வடபுலம், தென்புலம் என இருவேறாய் ஆகிப்போயின. தென்புலப் புள்ளி முறையின் (dot method) படி, எந்தக் குறுங்கோடும் போடாத எழுத்து அகர உயிர்மெய்யையும், புள்ளி போட்ட எழுத்து மெய்யையும் குறித்தன. வடபுல அடுக்குக் கட்டு முறையின் (stacking method) படி, ஒன்றின் கீழ் இன்னோர் உயிர்மெய்யைப் பொருத்தி மேலது மெய்யாகவும், கீழது உயிர்மெய்யாகவும் கொள்ளப்பட்டது.

வடபுல எழுத்து ஒரு பக்கமும், தென்புல எழுத்து இன்னொரு பக்கமுமாய்ச் சாதவாகனர் (கி.மு.230-கி.பி.220) நாணயங்களில் இருப்பதைப் பார்த்தால் அவர் ஆட்சியில் பாகதமும், தமிழும் அருகருகே ஆட்சி புரிந்திருக்க வேண்டும் என்பதும், 2000 ஆண்டுகளுக்கு முன்னே தமிழின் புழங்கெல்லை ஆந்திரம், கருநாடகம், ஏன் மராட்டியம் வரை கூட மொழிபெயர் தேயத்திற் பரந்திருந்தது என்பது புலப்படும். [சங்கத்தமிழ் இலக்கியத்தில் வரும் மொழிபெயர் தேயம்என்ற சொல்லாட்சியை நாம் சரிவர உணர்ந்தோமில்லை.]

தக்கணத்தின் வடக்கே படித்தானத்தைத் (>ப்ரதிஷ்தான் அதாவது இன்றைய ஔரங்காபாதிற்கு அருகில்) தலைநகராய் நிலைகொண்ட சாதவா கன்னர் அரசு கி.பி. 220 அளவில் முற்றிலுஞ் சிதறியது. (அவ்வரசையும், அதற்குப் பின்வந்த அரசப் புலங்களையும் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழர் வரலாற்றை நாம் மீள்கட்டமைக்க முடியாது.) அதன் பின், சாதவா கன்னரின் கீழிருந்த சிற்றரசர், படைத்தலைவர் ஆகியோர், “தடியெடுத்தவர் தண்டல்காரர்என்ற கூற்றுப்படி, தனித்தனி அரசுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

ஆப்ரர் என்பார் தமக்கு முன்னிருந்த சாதவா கன்ன அரசின் வடமேற்கையும் [ஆப்ரர் < ஆ புரர் = ஆவைப் புரந்தவர் என்ற சொல்லின் சங்கதத் திரிவு. இவர் ஆயர் = ஆய்ச்சர் = யாதவர் என்பவராவர், கன்னடத்தில் ஆப்ரா என்ற பெயர் இடைச்சியைக் குறிக்கும். வட இந்தியாவெங்கணும் ஆயர் (=ஆப்ரர், Ahir, Abhra) இன்று யாதவர் என்றே அழைக்கப்படுகிறார்.

தக்கணத்து ஆப்ரர் சிவநெறியையும், விண்ணவ நெறியையும், செயின நெறியையும் மாறி மாறிக் கடைப்பிடித்தனர். தமிழரை 300, 350 ஆண்டுகள் ஆண்ட களப்ரருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பைக் கீழே சில பத்திகள் கழித்துச் சுருக்கமாய்ப் பார்ப்போம்.], இக்குவாகு (>இக்ஷ்வாகு) என்பார் அதே அரசின் வடகிழக்கு ஆந்திரப் பகுதியையும், சேதி மரபினர் சாதவா கன்ன அரசின் (கன்னடத்துத்) தென்மேற்கையும், பல்லவர் இராயல சீமையைச் சேர்ந்த தென் கிழக்கையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த நால்வருள் எழுந்த அரசியற் போட்டிகளின் முடிவில் நிலைத்து எஞ்சியது ஆப்ரரும், பல்லவரும் மட்டுமே. சேதி மரபினர், தனித்து நிற்க இயலாது பின்னால் கருநாடத்தைச் சேர்ந்த கடம்ப மரபினுள் கலந்து போயினர். (காள ஆப்ரரின் வழிமுறையினர்தான் கி.பி. 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த காளச்சூரி மரபினர்.) இக்குவாகு மரபினர் இராயல சீமையைச் சேர்ந்த பல்லவருக்கு முன்னால் நீடித்து நிற்க முடியவில்லை. மிகவும் தென்பாலி முகத்திருந்த தமிழகமும் சாதவா கன்னருக்குப் பின்வந்த அரசியற் சிக்கலிற் தடுமாறியது.

இந்த நாலு குடியினரும் தமிழி(ப் புள்ளி) எழுத்து முறையைக் கடைப்பிடிக்கவில்லை. பெருமி (அடுக்குக் கட்டெழுத்து) முறையையே அவர்கள் பின்பற்றி வந்தனர். அவர்கள் பகுதியிற்றான் பெருமி கொஞ்சங் கொஞ்சமாய்த் திரிந்து கிரந்த எழுத்தாய் மாறிற்று என்று ஊகிக்க வேண்டியிருக்கிறது. [சாதவா கன்னருக்கு வடக்கே பெருமி திரிந்து நாகரி போன்ற எழுத்துக்களைத் தோற்றுவித்தது.] கிரந்தம் என்றால் பலரும் பல்லவரையே முகன்மையாய் நினைக்கிறார்கள். அது தவறு. பல்லவர் கிரந்தத்தைத் தோற்றுவித்தவரில்லை. அதைப் பெரிதும் புழங்கியவராகும்.

கிரந்தத்தின் தோற்றம் சாதவா கன்னருக்குப் பின் வந்த ஆப்ரர், இக்குவாகு, சேதி, பல்லவர் என்ற நால்வர் தொடர்புற்ற, பழைய சாதவா கன்னருக்குப் பின்வந்த, அரசியற் புலத்தைச் சாரும். இன்னார் தான் கிரந்தம் தோற்றுவித்தவர் என்று எவரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கல்வெட்டு, செப்பேடு போன்ற ஆவண ஆய்வுகள் ஆழமானால் ஒருவேளை விடை கிடைக்கலாம்.

இற்றை இந்தியாவில் புள்ளி முறையைக் கையாளும் ஒரே எழுத்து தமிழெழுத்து மட்டுமே. மற்ற எழுத்துக்கள் எல்லாம் அடுக்குக் கட்டு முறையையே பயன்படுத்துகின்றன. அடுக்குக் கட்டு முறையில் இடம்வலமாய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதோடு, எங்கு மெய்யை ஒலிக்கவேண்டுமோ அங்கு எழுத்துக்களை மேலிருந்து கீழாய் அடுக்கிக் கட்டி உணர்த்துவர். அதாவது வடபுல ஆவணங்கள் (தமிழல்லாத தென்புல ஆவணங்களும் இதிற் சேர்ந்தவையே) இரு பரிமானப் பரப்புக் (two dimensional extent) கொண்டவை. 2 மெய்களுக்கு மேல், சொல்லிற் சேர்ந்துவராத தமிழ் ஆவணம் மட்டும் அப்படிப்பட்டதல்ல. புள்ளி பழகுவதால் தமிழாவணம் இடம்வலமாய் ஒரு பரிமானப் பரப்பிற் (single dimensional extent) மட்டுமே எழுதப்படுகிறது. எந்தத் தமிழாவணமும் இழுனை எழுத்தொழுங்கு (linear orthography) கொண்டதாகவேயிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.
கண்ணெழுத்தும் வட்டெழுத்தும், கந்தெழுத்தும் - 2
"இவ்விரண்டையும் குறிக்க ஏதேனும் பெயர்கள் அக் காலத்தில் இருந்திருக்க வேண்டுமே?" என்று தேடிப் பார்த்தால் கி.மு.முதல் நூற்றாண்டில் உருவானதாய்ச் சொல்லப்படும் சமவயங்க சுத்தஎன்ற செயின நூலுக்கு முன்னால் இதுவரை எந்த எழுத்துக்களின் பெயரும் கிட்டவில்லை. சமவயங்க சுத்தத்தில் 18 எழுத்துப் பெயர்கள் சொல்லப் பட்டிருக்கும். பெருமி (>பம்மி), கரோத்தி (<கரோஷ்டி), யவனாலி, தமிழி (>தாமிளி) போன்ற எழுத்துப் பெயர்களை அதிலிருந்துதான் நாம் அறிந்தோம். கி.பி.500/600 களில் எழுந்த புத்தமத நூலான லலித விஸ்தாரத்தில் 18 எழுத்துக்கள் 64 வகையாய் மேலுங் கூடியிருக்கும். தமிழி என்ற சொல் இந்நூலில் இன்னுந் திரிந்து த்ராவிடி என்று ஆகியிருக்கும்.

தமிழி/த்ராவிடி என்பது நம்மெழுத்திற்கு மற்றோர் கொடுத்த இயல்பான பெயராகும். (தமிழர் எழுத்து.) நம்மவரே நம்மெழுத்திற்குக் கொடுத்த பெயர் என்ன? அப்படியொன்று உண்டா?” என்பது அடுத்த கேள்வி. சமவயங்க சுத்த-விற்கும், லலித விஸ்தாரத்திற்கும் இடைப்பட்டு தமிழ் இலக்கியச் சான்றாய் நாம் ஓர்ந்து பார்க்கக் கூடியது சிலப்பதிகாரத்தில் மூன்றிடங்களில் கண்ணெழுத்து பற்றிவரும் குறிப்புகள் மட்டும் தான். அவற்றை ஆழ்ந்து பார்ப்பது நல்லது.

வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி

என்று, இந்திரவிழவூர் எடுத்த காதை 111-112 ஆம் வரிகளில் வரும் குறிப்பு கண்ணெழுத்து என்ற பெயரை நமக்கு முதன்முதலில் அறிமுகஞ் செய்யும். இதை, “கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்என்ற கால்கோட்காதை 136 ஆம் வரியும்,

தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்
மண்ணுடை முடங்கல் அம் மன்னவர்க்கு அளித்தாங்(கு)

என்ற கால்கோட்காதை 169-171 ஆம் வரிகளும் உறுதிப் படுத்தும். இவற்றைப் படித்த நமக்கு, “அது என்ன கண்ணெழுத்து? பண்டங்களின் பொதிப்பட்டியலைக் (packing list of goods) ஏன் கண்ணெழுத்தில் எழுதவேண்டும்? புள்ளியெழுத்தென்று நாம் புரிந்த தமிழியெழுத்தும் கண்ணெழுத்தும் ஒன்றா? கண்ணெழுத்துப் போக, வேறெழுத்து எழுதுவதற்கு உகந்ததாய் தமிழகத்தில் இருந்ததா? கண் என்றால் என்ன பொருள்? ” என்ற கேள்விகள் இயல்பாக எழும். சிலம்பின் அரும்பதவுரையாசிரியர் கண் என்ற சொல்லிற்கு இடம் என்றே பொருள் சொல்வார். அடியார்க்கு நல்லாரும் அதற்குமேல் பொருள் சொல்லார். பண்டங்களின் பொதிப்பட்டியல் குறித்த விவரணை அங்கே அடுத்து அவர்கள் உரைகளில் வந்துவிடும். மு. இராகவ ஐயங்கார் மட்டும் கண்ணெழுத்து என்பதற்கு “pictorial writing" என்று வேறொரு பொதுப்பொருள் சொல்லுவார். [காண்க. Pre-Pallavan Tamil Index - N.Subrahmanian, page 211, Univ. of Madras, 1990.] ”அது ஏன் படவெழுத்து? அக் காரணம் சரிதானா?” - என்பவை இன்னும் எழும் கேள்விகள்.

தமிழில் இடம் என்பது இல்>இள்>இடு>இடம் என்ற வளர்ச்சியில் உருவாகும். இல்லுதல் என்னும் வினைச்சொல் குத்துதற் பொருளையுணர்த்தும். அதாவது இல்லுதல் என்பது அடிப்படையிற் துளைப்பொருளை உணர்த்தும். (இல்லுதலின் நீட்சிதான் தமிழில் to be என்று பொருள்படும் இருத்தலாகும். இல்>இர்>இரு>இருத்தல்) குல்>குள்>கள்>கண் என்பதும் துளைப்பொருளை உணர்த்தும். புல்>புள்>புள்ளி, புல்>புள்>பொள்>பொட்டு என்பதும் கூடத் துளைப்பொருளை உணர்த்துவன தான்.

நெற்றிக் கண்ணை உணர்த்தும் வகையில் இன்றுங் கூடச் சிவநெறியாளர் நெற்றிப் பொட்டு இடுகிறார் அல்லவா? கலக்க நெய்த துணியில் ஒவ்வொரு முடிச்சு/துளையிலும் நூலாற் பின்னிப் பெண்கள் பின்னல் வேலை செய்கிறார்களே, பார்த்திருக்கிறீர்களா? அதைக் கண்(ணித்)துணி என்பார்கள். இங்கு கண் என்பது புள்ளியையே குறிக்கிறது. தேங்காய்க் குடுமிக்கருகில் மூன்று பள்ளங்கள் இருக்கின்றனவே அவற்றையும் கண்கள் என்றுதானே சொல்லுகிறோம்? தேங்காய்ச் சிரட்டையில் கண்ணுள்ள பகுதி கண்ணஞ் சிரட்டை என்று சொல்லப்படுகிறதே? நிலத்தில் நீரூற்று எழும் புள்ளி, ஊற்றுக்கண் என்று சொல்லப்படுகிறதே? முலைக் காம்பின் நடுத்துளை முலைக்கண் எனப்படுகிறதே? பகடைக் காயின் பக்கங்களில், எண்களைக் குறிக்கப் போட்டிருக்கும் புள்ளிகள், கண்கள் என்றுதானே சொல்லப்படுகின்றன? இடியப்பக் குழலின் துளைகள் அடைந்தால், குழலின் கண் அடைந்து போயிற்று என்கிறோமே? புண்கண், வலைக்கண், சல்லடைக்கண், வித்தின் முளைக்கண் என எங்கெல்லாம் துளை, புள்ளி இருக்கிறதோ அங்கெல்லாம் கண்ணென்று சொல்கிறோம் அல்லவா?

இந்தச் சிந்தனையில் ஓர்ந்து பார்த்தால் கண்ணெழுத்து என்பது பெரும்பாலும் புள்ளியெழுத்தாய் இருக்கவே வாய்ப்புண்டு என்பது புரியும். சிலம்பின் காலம்என்ற என் கட்டுரையில் சிலம்புக் காப்பியம் எழுந்தது பெரும்பாலும் கி.மு.80-75 ஆய் இருக்கும்என்று பல்வேறு ஏரணங்களால் முடிவு செய்திருப்பேன். அதன் சம காலத்தில் முன்சொன்ன வடபுல எழுத்துத் தீர்வும், தென்புல எழுத்துத் தீர்வும், இந்தத் தீர்வுகளுக்கு முந்தைய உயிர்மெய் அகர / தனிமெய்க் குழப்பம் கொண்ட எழுத்தும் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒருங்கிருந்தன என்ற உண்மையையும் இங்கு கணக்கிற் கொண்டால், புகாரின் ஏற்றுமதிப் பண்டங்கள் குழப்பமில்லாது கண்ணெழுத்து முறையில் (புள்ளியெழுத்து முறையில்) பட்டியலிட்டு இலச்சினைப் பட்டிருக்கலாம் என்பது நமக்கு விளங்கும்.

பண்டங்களின் பொதிப்பட்டியல் என்பது இருவேறு நாடுகள், அரசுகள், ஆட்கள் ஆகியோரிடம் பரிமாறிக் கொல்ளும் பட்டியல் என்பதை ஞாவகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதிலுள்ள பண்டவிவரம் எக் குழப்பமும் இல்லாது சட்டத்திற்கு உட்பட்டுச் (legally binding), சொல்லப்படவேண்டும். அப்படியானால் குழப்பமிலா எழுத்து முறையில் அது இருப்பது கட்டாயம் ஆனதாகும். மொழிகளும் எழுத்துமுறைகளும் தோன்றிவிட்ட காலத்தில் அது படவெழுத்தாய் இருக்க முடியாது. ஒரு மொழியின் தனித்த எழுத்து முறையாகத் தான் இருக்கமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தில் கி.மு.முதல் நூற்றாண்டு அளவில் குழப்பமில்லாதன என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து முறைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று வடபுல முறை. இன்னொன்று தென்புல முறை. ஏற்றுக் கொள்ளப்பட்ட இவ்விரண்டில், தென்புல முறை, புள்ளி பழகியதால், கண் என்ற தமிழ்ச்சொல் புள்ளியைக் குறிப்பதால், கண்ணெழுத்து என்பது புள்ளி பழகும் தென்புலத்துத் தமிழி எழுத்தைத்தான் குறிப்பிட்டிருக்கும் என்று ஏரணத்தின் வழி முடிவிற்கு வருகிறோம்.

வேறு எந்த வகையாலும் சிலம்பில் மூன்று இடங்களிற் குறிப்பிடும் கண்ணெழுத்து என்ற சொல்லாட்சியைப் புரிந்து கொள்ளமுடியாது. அந்த மூவிடங்கள் தாம் கி.மு. முதல் நூற்றாண்டில் புள்ளியெழுத்து நம்மூரில் உறுதியாய்ப் புழங்கியதற்கான தமிழாவணச் சான்றுகள். [ஆனால் இதுவரை கிடைத்த தொல்லியற் சான்றுகளில் முதன்முதல் புள்ளி பழகியதாய், கி.பி.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சாதவா கன்னன் வசிட்டிபுத்ரன் புலுமாவியின் முகம் பதித்த முத்திரைக் காசில் இருந்த பெயரில் தான் வசிட்டி என்பதற்கிடையில் புள்ளியிட்டுக் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது.] இனிப் பிற்காலத்திய சிவஞான சித்தியாரில் (அளவை.1.மறை) பகுதியில் சோமே லிருந்தொரு கோறாவெனிற்...... கண்ணழுத்தங் கோல் கொடுத்தலும்என்ற வரி, எழுத்தாணி போலிருக்கும் கண்ணெழுத்தங் கோலைக் குறிப்பதாகவே நாம் எண்ண வேண்டியிருக்கிறது.

இனிக் கள்>கண்>கண்ணு>கணக்கு என்னும் வளர்ச்சியில் எழுத்துப் பொருளையுணர்த்தும். (கணக்கு என்ற சொல்லை எண்களோடு தொடர்புறுத்தும் பொருளும் பலகாலம் பயில்வது தான். ஆனால் இரண்டும் இருவேறு வளர்ச்சிகள். இன்றைய வழக்கில், கணக்கு என்ற சொல் எழுத்தோடு தொடர்புறுத்துவதைக் காட்டிலும் எண்ணோடு தொடர்புறுத்துவதாகவே இருக்கிறது.)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

என்ற குறள் 393 இலும், “எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்என்ற கொன்றை வேந்தன் வரிகளிலும் எண்ணும் எழுத்தும் கண்ணோடு சேர்த்துச் சொல்லப்பெறும் பாங்கைப் பார்த்தால், கண் எனும் பார்வைக் கருவியோடு மட்டும் பொருத்தாது, கண் எனும் புள்ளிப் பொருளோடும் சேர்த்து உரைக்கவொண்ணுமோ? - என்று எண்ண வேண்டியிருக்கிறது.

இனி, நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்று சிறார்களின் இளங்கல்வியில் எழுத்துவரிசையை அறிவிக்கும் வழக்கத்தைப் பார்ப்போம். எழுத்தாணியால் எழுதுபொருளில் இழுத்தது, எழுத்தென்பார் பாவாணர். முதலில் எழுந்த தமிழி எழுத்துக்கள் பெரும்பாலும் நேர்கோடுகளாகி, வளைவுகள் குறைந்திருந்தன. பின்னால் ஓலையில் எழுதி வளைவுகள் கூடிய காலத்தில் கணக்கு என்ற சொல்லிற்குத் துளைப்பொருளோடு வளைவுப் பொருளும் வந்து சேர்ந்தது போலும். (இது கி.மு.முதலிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே இது நடந்திருக்க வேண்டும்.)

குன்னிப் போன எழுத்துக்கள், கூனிப் போய், குணகிப் போய் குணங்கிய தோற்றம் காட்டியதால் குணக்கு>கணக்கு என்ற பொருளும் எழுத்திற்குச் சரியென்று கொள்ளப் பெற்றது. நெடுங்கணக்கு, குறுங்கணக்கு என்ற கூட்டுச்சொற்களில் வரும் கணக்கு எழுத்தைக் குறித்தது இந்தப் பொருளிற்தான். கணக்குச் (=எழுத்துச்) சொல்லிக் கொடுத்த ஆசிரியர் கணக்காயரானார். (இன்று கணக்காயர் என்பார் நம் கணக்குகளைச் சரிபார்க்கும் auditor ஆவார்.) கணக்காயர் மகனார் நக்கீரர் என்பவர் வேறு யாரும் இல்லைதிண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர் மகன் நக்கீரர்என்பவர் தான். கணக்கன் என்றாலேயே பழந்தமிழில் ஆசிரியப் பொருளுமுண்டு. அரண்மனையின் திருமுகமும் எழுதி, அங்குள்ள எண்மானக் கணக்கையும் பார்ப்பவர் அரண்மனைக் கணக்கரானார். இருபதாம் நூற்றாண்டு முன்பாதி வரை செல்வந்தர் வீட்டுக் கணக்குப் பிள்ளை, வெறுமே செல்வந்தர் வீட்டில் எண்மானம் பார்ப்பவர் மட்டும் அல்லர். அவர் செல்வந்தர் வீட்டின் எல்லா எழுத்து வேலைகளையும் பார்ப்பவர்.

ஆகக் கண்ணெழுத்து (புள்ளியெழுத்து) தொடங்கிய சில காலங்களிலேயே கணக்கெழுத்தாயும் (வளைவெழுத்தாயும்) புரிந்து கொள்ளப்பட்டது. இது சங்க காலத்திற் தொடங்கியது நக்கீரர் தந்தை பேரைப் பார்த்தாலே புரியும். வெறுமே கண்ணெழுத்து என்று புரிந்து கொள்ளப்பட்டது சங்ககாலத்திற்கும் முற்பட்ட காலமாய் இருக்கவேண்டும். சங்க காலம் முடிந்து களப்ரர் காலம் வரை ஓரளவு கண்ணெழுத்தே தொடர்ந்திருக்கிறது. அதில் வளைவுகள் குறைந்து நேர்கோடுகளே மிகுந்து இருந்திருக்கின்றன.

இனி கி.பி. 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் வளைவுகள் கூடக் கூட, குணக்கு வட்டமாகி, கணக்கெழுத்து வட்டெழுத்தாகியிருக்கிறது. இதற்கான சரியான சான்றாய் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சிக் கல்வெட்டைச் சொல்லவேண்டும். இது களப்ரர் காலத்தைச் சேர்ந்தது. [களப்ரர் என்பவர் யார்? - என்பது இன்னும் தெளிவான விடை தெரியாத கேள்வி. ஆனால் ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.]

வட்டெழுத்தின் இயலுமை பற்றிய செய்தியை இங்கு இடைவிலகாய்ப் பார்ப்போம். தமிழ், கிரந்தம், மலையாளம் போன்றவை பெரும்பாலும் கடிகைச் சுற்றில் (clockwise) எழுதுப்படுபவை (தமிழில் ட, , , , ழ ஆகிய ஐந்து வரிசை எழுத்துக்களே எதிர் கடிகைச்சுற்றில் (anti-clockwise) எழுதப் படுகின்றன. கிரந்தத்திலும், அதன் திரிவான மலையாளத்திலும் 9 வரிசை எழுத்துக்கள் மட்டுமே எதிர்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன.) நம்மூரைச் சேர்ந்த பழைய வட்டெழுத்துக்களும், இற்றைத் தெலுங்கெழுத்துக்களும், கன்னட எழுத்துக்களும் இந்தப் பழக்கத்திற்கு மாறானவை. இவை பெரும்பாலும் எதிர்க்கடிகைச்சுற்றில் எழுதப்படுகின்றன. பொதுவாக எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் கடிகைச் சுற்றிலும் எழுதும் போது உருவாகும் எழுத்துக்கள் நேர்கோடுகளும், கோணங்களும் அதிகமாய்ப் பெற்றிருக்கும். இதற்கு மாறாய் எழுத்துவரிகள் இடவலத்திலும், எழுத்துக்கள் எதிர்க்கடிகைச் சுற்றிலும் எழுதும்போது, எழுத்துக்கள் கூடுதல் வட்ட வடிவம் பெற்றிருக்கும். இது எழுதுவோரில் பெரும்பாலோர்க்கு வலதுகைப் பழக்கம் உள்ளதால் ஏற்படும் நிலையாகும்.[காண்க: பண்டைத் தமிழ் எழுத்துக்கள். தி.நா. சுப்பிரமணியன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 1996, பக்.7]

சாதவா கன்னர் சிதைவிற்குப் பின் நான்கு அரசுகள் தக்கணத்தில் எழுந்தது பற்றி மேலே சுட்டினோம் அல்லவா? அதில் வரும் ஆப்ரர் கதை சற்று நீளமானது. தென் மராட்டியத்திலும் வட கன்னடத்திலும் ஆண்ட ஆப்ரர்கள், அப்ரர் என்றுஞ் சொல்லப் பட்டிருக்கிறார். தக்கணம், தமிழகம் போன்றவற்றில் எழுத்தின் தொடக்க காலத்தில் இருந்த அகர, ஆகாரக் குழப்பத்தில் நெடில்/குறில் மாறிப் பலுக்கப்படுவது இயற்கையே. சாத வாகனருக்குப் பிறகு 67 ஆண்டுகள் 10 ஆப்ரர்கள் படித்தானத்தில் ஆண்டதாய் இந்து சமயப் புராணங்கள் கூறும். நாசிக்கில் எழுந்த கல்வெட்டு ஒன்று சிவதத்தனின் மகனும் மாதரிபுத்த ஈசுவரசேன என்ற பெயர் பெற்றவனுமான அரசனைக் குறிப்பிடும். நாகார்ச்சுன கொண்டாவில் எழுந்த கல்வெட்டொன்று வாசுசேனன் என்ற அரசனின் 30 ஆண்டு கால ஆட்சி பற்றிக் குறிப்பிடும்.

ஆப்ரர்களில் ஒரு பகுதியினர் சேதியரோடு பொருதிக் கலந்த பின்னால், கன்னடப் பகுதி வழியாகத் தமிழகத்தில் நுழைந்திருக்கிறார்கள். இவர் நுழைந்த காலம் பெரும்பாலும் கி.பி. 270 - 290 ஆக இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆப்ரரின் ஒருபகுதியானவர் தான் கள ஆப்ரர்>களப்ரர், களப்பாளர், கலியரசர் என்றெல்லாம் தமிழாவணங்களிற் பேசப் பட்டவராய் இருக்க வழியுண்டு. (பாண்டியரின் வேள்விக்குடிச் செப்பேட்டில்அளவரிய ஆதிராஜரை யகல நீக்கி யகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கிய பின்என்று பாண்டியன் கடுங்கோனைப் பற்றிய வரிகள் வரும். களப்ரர் பற்றி வேறொரு கட்டுரையில் விரிவாகப் பேசுவேன். இங்கு பேசினால் சொல்லவந்தது விலகிப் போகும்.)

களப்ரர் என்ற சொல்லை கள் + அப்ரர் என்று பிரித்தால் கருப்பு அப்ரர் என்று பொருள் கொள்ளலாம். கருப்பு என்பது அவர் நிறமா, அன்றிப் பூசிக் கொண்ட இனக்குழு அடையாள நிறமா என்பது இன்னொரு கேள்வி. சாதவா கன்னருக்கு கருப்பு நிறம் இனக்குழு அடையாளமாகியதைச்சிலம்பின் காலம்என்ற என் கட்டுரையிற் பேசியிருப்பேன். [சேரருக்கும் சந்தனமும், பாண்டியருக்குச் சாம்பலும், சோழருக்கு மஞ்சள்/குங்குமமும் இனக்குழு அடையாளமாய் இருந்ததை இங்கு எண்னிக் கொள்ளுங்கள்.] களப்ரர் என்ற குழுவினர் சேர, சோழ, பாண்டியரை வீழ்த்திக் கிட்டத்தட்ட முழுத் தமிழகத்தையும் கைப்பற்றி 250, 300 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார், அந்தக் காலத்திற் கிடைத்த ஒரு சில தனிப்பாடல்களும், சங்க காலத்திற்கும், பல்லவர்/பாண்டியர் காலத்திற்கும் இடைப்பட்ட கால வெளியும் இச் செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்த அரசர்களின் குலப்பெயராய் ஆயர்> ஆய்ச்சர்> ஆய்ச்சுதர்> அச்சுதர் என்ற பெயர் விளங்கியதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. (ஆய்ச்சி = இடைக்குல மடந்தை. ஆய்ச்சன் = இடைக்குல மாந்தன்.)

கி.பி. 220 க்குப் பின் எழுந்த அரசுப் போட்டிகள், குமுகாயக் குழப்பங்கள், பொருளியற் தடுமாற்றங்கள் எல்லாம் தமிழி/பெருமி ஆகிய எழுத்துக்களின் நிலைப்பைக் குலைத்துத் திரிவை உண்டாக்கியிருக்கின்றன. தமிழியில் இருந்து இற்றைக்காலத் தமிழெழுத்தும், வட்டெழுத்தும் உருவாகியிருக்கின்றன. சாதவா கன்னர் காலத்துப் பெருமியில் இருந்து அடுக்குக் கட்டெழுத்தான கிரந்தம் தென்புலத்திலும், நாகரி வடபுலத்திலும் இருவேறு வளர்ச்சியாய்த் தழைத்திருக்கின்றன.

கன்னட தேசம் வழியாக முதலில் கள ஆப்ரரும், பின் இராயல சீமை வழியாகப் பல்லவரும் தமிழகத்துள் நுழைந்து ஆட்சி செய்யாதிருந்தால் கிரந்தம் இங்கு கலந்திருக்காது.

கிரந்தம், நாகரி என்ற சொற்களின் சொற்பிறப்பை இங்கு சொல்லுவது பொருத்தமாய் இருக்கும். முதலிற் கிரந்தத்தைப் பார்ப்போம். கீரப்பட்ட எழுத்தே கிரந்தம் என்றே ஒரு காலத்தில் நான் எண்ணியிருந்தேன். பின்னால் என் ஆய்வு ஆழமானதன் விளைவால், குறிப்பாக எழுத்துமுறைகள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர், அந்தப் புரிதல் சரியில்லை என்ற கருத்திற்கு வந்தேன். புள்ளியெழுத்து, அடுக்குக் கட்டெழுத்து ஆகிய இருவேறு முறைகளை ஆழப் புரிந்து கொண்ட பிறகு, அடுக்கிக் கட்டப்பட்ட எழுத்தைக் கந்தெழுத்து என்று சொல்லுவதிற் தவறில்லை என்று உணர்ந்தேன். கந்து = கட்டுத் தறி. கோல். தூண், பற்றுக் கோடு, தும்பு. நூல். கந்தழி = பற்றுக்கோடில்லாதது, நெருப்பு. கந்தன் = தூணில் உள்ள இறைவன், முருகன், கந்திற் பாவை = தூணில் உள்ள தெய்வம், கள்>கந்து>கந்தம் = தொகுதி aggregate. கந்துகம் = நூற் பந்து, கந்து களம் = நெல்லும் பதரும் கலந்த களம். கந்தர கோளம் = எல்லாம் கலந்து குழம்பிக் கிடக்கும் கோளம். கந்து வட்டி = முன்னேயே பிடித்துக் கொள்ளப்படும் அதிக வட்டி. இத்தனை சொற்களுக்கும் பொதுவாய்க் கந்துதல் என்ற வினைச்சொல் கட்டுதற் பொருளில் இருந்திருக்க வேண்டும்.

கந்தெழுத்து என்ற சொல்லே வடமொழிப் பழக்கத்தில் ரகரத்தை உள்நுழைத்துக் க்ரந்தெழுத்து என்ற சொற்திரிவை ஆக்கிக் கொண்டது என்ற புரிதலுக்கு முடிவில் வந்தேன். கந்து என்ற சொல்லிற்கு நூல் என்ற பொருளிருப்பதாலும், அந்தக் காலத்து ஓலைச் சுவடிகள் நூலால் கட்டப்பட்டதாலும், நூல் என்ற சொல், சுவடிகளுக்கு ஆகுபெயராய் எழுந்தது. கிரந்தம் என்ற சொல்லும் பொத்தகம், நூல் என்ற பொருளைப் பெற்றது. சொல்லாய்வர் கு. அரசேந்திரனும் அவருடைய கல்என்ற நூற்தொகுதியில் க்ரந்தம் என்ற சொல்லிற்குப் பொத்தகம் என்ற பொருளை நிறுவுவார். நான் புரிந்த வரையில் பொத்தகம் என்ற பொருள் முதற் பொருளல்ல. அது வழிப்பொருளே. கந்தம் = கட்டப்பட்டது என்பதே அதன் அடிப்பொருளாகும்.

அடுத்து நகரி/நாகரி என்ற சொல்லைப் பார்ப்போம். இதை நகரம் (= town) என்ற சொல்லோடு பொருத்திநகரத்தில் எழுந்த எழுத்துஎன்று மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொற்பொருட் காரணம் சொல்லும். அது என்ன நகரத்தில் எழுந்த எழுத்து? பல்வேறு இரிடிகளும், முனிவர்களும், அறிஞர்களும் நகரத்திலா இருந்தார்கள்? அன்றி வணிகர்கள் உருவாக்கிய எழுத்தா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. ஆதிகால எழுத்துக்கள் கல்வெட்டுக்களிலேயே இருந்திருக்கின்றன என்ற பட்டறிவைப் பார்க்கும் போது, அவை நாட்டுப் புறத்திலேயே பெரும்பாலும் இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் நகரத்தையொட்டி அமைந்தன - என்ற புரிதல் நமக்குக் கிட்டும். நகரத்தைக் காரணங் காட்டிப் பொருள் சொல்லுவதைக் காட்டிலும் நகரி/நாகரி என்பதை வடமொழியினர் கடன் கொண்ட சொல்லாக்கி, தமிழ்மூலம் பார்ப்பது சிறப்பென்று தோன்றுகிறது. [தமிழ்மேல் உள்ள விருப்பினால் நான் இதைச் சொல்லவில்லை. வடமொழிச் சொற்களைக் கடன்வாங்கிய சொல்லாய் ஏனோ பலரும் பார்க்க மாட்டேம் என்கிறார்கள். அது ஏதோ கடனே வாங்காத மொழி போல எண்ணிக் கொண்டு விடுகிறார்கள்.]

எழுத்து வளர்ந்த முறையில் வடபுல அடுக்குக் கட்டுமுறை, தெற்குப் புள்ளிமுறை ஆகிய இரண்டுதான் தெளிவான குழப்பமில்லாத எழுத்து முறைகளாய் அமைந்தன என்று முன்னாற் பார்த்தோம். நகுதல் என்ற தமிழ் வினைச்சொல்லிற்கு விளங்குதல், விளங்கத் தோன்றுதல்என்ற பொருட்பாடுகள் உண்டு. நகுதலின் பெயர்ச்சொல் நகு>நாகு என்றமைந்து விளக்கம், தெளிவு என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். நகரம் என்ற தமிழ்ச்சொல்லிற்கும் கூட ஒளி விளங்கும், பொலிவுள்ள, இடம் (bright place) என்றே பொருள் உண்டு.

தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச் சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்) எழுத்தையே உணர்த்தும். ஒரு காலத்தில் செயினரின் தொடர்பால் தமிழ்நாட்டின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் அரி ஓம் நமோத்து சிந்தம்என்று சொல்லித்தான் பள்ளிப் பாடம் தொடங்குவார்கள். [என் பள்ளிப் பாடமும் அப்படித்தான் தொடங்கியது.] இது போன்ற பண்பாட்டு மிச்சங்களை நினைவு கூர்ந்தால் நாகு+அரி = நாகரி = விளக்க எழுத்து, தெளிவெழுத்து என்ற கருத்துப் புரியும். குழப்பமில்லாத எழுத்தை நாகரி என்று சொல்லுவதிற் தவறென்ன? இதை ஆரியர் என்னும் தேவர்வடபுலத்திற் பயன்படுத்திய காரணத்தால் தேவ நாகரி = தேவர்களின் தெளிவெழுத்து என்றாயிற்று (பார்ப்பனரின் ஒரு பகுதியினருக்கும், கோயிலுக்கும் கொடுத்த அறக்கொடைகளைத் தேவ தானம், பிரம தாயம் என்று பல்லவர் காலத்திற் சொன்னதை இங்கு நினைவிற் கொள்ளலாம்.) கன்னடப் பகுதியில் நந்தி நாகரி என்றொரு எழுத்து இருந்தது. (நாகரி என்றாலே போதும்; நாகரி எழுத்து என்பது கூறியது கூறல்.)

வடபுலத்து மொழிகளை எழுத நாகரியும், தமிழ் தவிர்த்த தென்புலத்து மொழிகளை எழுத கிரந்தமும் இந்தியத் துணைக்கண்டத்திற் போல்மங்களாயின. பல்வேறு இந்திய எழுத்துக்களும் இப்படித்தான் எழுந்தன. (தென்கிழக்கு ஆசியா எழுத்துக்களும் பல்லவர் தாக்கத்தால் கிரந்த எழுத்தையே தம் அடிப்படையாய்க் கொண்டன.) காட்டாக, மலையாளத்தார் தங்கள் மொழியில் வடமொழிச் சொற்களை அதிகமாகக் கலந்து மணிப்பவளமாகச் செய்த பின்னர், கிரந்தவெழுத்தைச் சிறிது மாற்றி ஆர்ய எழுத்துஎன்று பெயரிட்டு தங்கள் மொழிக்கு வாய்ப்பாய் அமைத்துக் கொண்டார்கள். துளு மொழியின் எழுத்தும் கிரந்தத்தில் இருந்து உண்டானதே. தெலுங்கு, கன்னட எழுத்துக்களின் தலைக்கட்டை எடுத்துவிட்டுப் பார்த்தால், அவற்றிலும் கிரந்தத்தின் சாயல் உள்ளிருப்பது புரியும். விசயநகர மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பின்னால் மராட்டியர் காலத்திலும் தான் நாகரி எழுத்து தக்கணத்தில் உள்நுழைந்து கிரந்தவெழுத்தை கொஞ்சங் கொஞ்சமாய் அகற்றியது.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் பெருமியில் இருந்து உருவாகிய கிரந்தம், தமிழியில் இருந்து உருவாகிய இற்றைத் தமிழெழுத்து, பண்டை வட்டெழுத்து ஆகியவற்றிடையே ஒரு தொடர்ச்சி இருந்தது. [இற்றைத் தமிழெழுத்து கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட முழுவுருவம் பெற்றுவிட்டது. கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இருந்த வடிவங்களுக்கும் இப்பொழுதைய வடிவங்களுக்கும் நம்மால் பெரிய வேறுபாடு காணமுடியாது.] கிரந்தமும், இற்றைத் தமிழெழுத்தும் அரசவை, அரசாணை எழுத்துக்களாய் அமைந்திருந்தன. [கல்வெட்டு, செப்பேடு போன்றவற்றில் வளைவுகளைக் குறைத்து, நேர்கோடுகளை மிகுதியாக அமைக்கமுடியும். பல்லவ கிரந்தத்தின் இரட்டைக் கட்ட நேர்கோட்டழகை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்.] வட்டெழுத்தோ, மக்கள் பெரிதும் புழங்கும் எழுத்தாய் கி.பி. 970 வரை இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில், மக்கள் பயன்பாட்டில், ஓலை-எழுத்தாணியின் தாக்கத்தில், வட்ட வளைவுகள் கூடிப் போய், வட்ட எழுத்துக்களின் வேறுபாடுகள் காணுவது குறைந்து, வட்டெழுத்துப் புழங்குவதிற் சிக்கலாகிப் போனது.

கிட்டத்தட்ட கி.பி. 1000 க்கு அருகில் வட தமிழ்நாட்டில் வட்டெழுத்து அருகிவிட்டது. அதற்கு அப்புறம் இற்றைப் போற் தோற்றமளிக்கும் தமிழெழுத்துக்கள் தான் எங்கும் காட்சியளித்தன. பல்லவரின் பள்ளங்கோவில் செப்பேடுகள் தான் (சிம்மவர்மன் III கி.பி.540-550) முதன் முதலில் இற்றைத் தமிழெழுத்து வடிவைப் பயன்படுத்தியதற்குச் சான்றாகும். (நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் செப்பேட்டுப் படி 7 ஆம் நூற்றாண்டில் மீண்டும் எழுதப்பட்ட படி என்ற கூற்றுமுண்டு.) கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வந்த பேரரசுச் சோழன் இராசராசனின் பெருமுனைப்பால் வட்டெழுத்தைப் பாண்டிநாட்டுப் புழக்கத்திலிருந்து விலக்கி இற்றைத் தமிழெழுத்தே தமிழகமெங்கும் பெரிதும் புழங்கத் தொடங்கிற்று. கி.பி.12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் வட்டெழுத்து முற்றிலும் மறைந்து போனது. புரியா வட்டம் என்றே கி.பி.1400 களில் பாண்டிநாட்டிற் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். [திருக்குற்றால நாதர் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு இந்தச் செய்தியைச் சொல்கிறது.]

இனி வட்டெழுத்தில் எழுதப்பட்ட பூலாங்குறிச்சிக் கல்வெட்டிற்கு வருவோம். இந்தக் கல்வெட்டின் காலம் 192 என்று அதிற் சொல்லப்பட்டிருக்கும். இது அரசரின் ஆட்சிக் காலமாய் ஆக முடியாது. இந்த எண் ஏதோவொரு முற்றையாண்டைக் குறிக்கிறது. ஆப்ரருக்கென்று தொடங்கி, படித்தானத்திற்கு அருகில் வழக்கத்தில் இருந்த முற்றையாண்டான கி.பி.248 யை களப்ரருக்கும் பொருத்தமே என்று கருதி, மேலே சொன்ன 192 -ஓடு கூட்டினால், பூலாங்குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி.440 என்றாகும். இதற்கு 100, 150 ஆண்டுகள் முன்னேயே வட்டெழுத்து தோன்றிவிட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடைத்திருக்கின்றன. உண்மையிற் பார்த்தால் அரச்சலூரைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டிலேயே வட்டெழுத்துக் கூறுகள் தொடங்கி விட்டன.

கி.பி. 270-290 களில் தமிழகத்தை ஆட்கொண்ட கள ஆப்ரர் அரசு வழியாக கல்வெட்டுக்கள் மிக அரிதே தான் கிடைத்துள்ளன. கிடைத்திருக்கும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டும் வட்டெழுத்தில் உள்ளது. இந்தக் காலத்துப் பொதுமக்கள், குறுநிலத் தலைவர் ஆகியோரின் நடுகற்களும் வட்டெழுத்துக் கொண்டே எழுதப் பட்டிருக்கின்றன. அதே பொழுது படித்தானத்தில் இருந்த ஆப்ர அரசு வடவெழுத்து முறையே பின்பற்றியிருக்கிறது. பின்னால் தெற்கே கள ஆப்ரர் அரசை முடிவுக்குக் கொண்டுவந்த பல்லவர் வட தமிழகத்தில் கிரந்த எழுத்தையும், இற்றைத் தமிழெழுத்தையும் விழைந்து பயன்படுத்தினார்கள்.

கள ஆப்ரரின் தென்பாற் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட இடைக்காலப் பாண்டியர் (கி.பி.550-910) வட்டெழுத்தையே விரும்பிப் பயன்படுத்தினர். (கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகமெங்கும் ஒரு மொழி, ஈரெழுத்து (இற்றைத் தமிழெழுத்து, வட்டெழுத்து) என்ற நிலை தொடர்ந்தது. இராசராசச் சோழன், பாண்டியர் அரசைத் தொலைத்து, அதைத் தான் ஆளும் மண்டலமாக ஆக்கிய பின்பே வட்டெழுத்துப் புழக்கம் வலிந்து குறைக்கப்பட்டது. ஒரு மொழி, ஓரெழுத்து என்ற நிலை அதற்கு அப்புறம் தான் வந்து சேர்ந்தது. ஆக, ஆழ்ந்து பார்த்தால், இற்றைத் தமிழெழுத்து தமிழ்நாடெங்கும் பரவியது சோழ அரசாணை கொண்டுவந்த அடிதடி மாற்றமாகும். [அரசாணைகளுக்கு அவ்வளவு வலிமையுண்டு.]

ஆனாலும் வட்டெழுத்தின் மிச்ச சொச்சம் கேரளத்தில் நெடுநாள் இருந்தது. வட்டெழுத்தை தென் கேரளத்தில்மலையாண்மஎன்றும், ’தெக்கன் மலையாளம்என்றும், வட கேரளத்தில்கோலெழுத்துஎன்றும் அழைத்தனர். வட்டெழுத்து 18 ஆம் நூற்றாண்டு வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேரளத்தில் நிலைத்தது. பெரும் அளவு சங்கதம் புழங்காத நம்பூதியல்லாதோரிடம் வட்டெழுத்து தொடர்ந்து இருந்தது. கேரளத் தொல்லியற் துறையினரிடம் சில ஆயிரம் வட்டெழுத்து ஓலைச்சுவடிகள் இன்னும் படிக்கப் படாமல் இருப்பதாக சேரநாட்டில் வட்டெழுத்துஎன்ற நூலெழுதிய இரா. கிருஷ்ணமூர்த்தி சொல்லுவார். 18 ஆம் நூற்றாண்டு முடிவில் கேரளத்தில், வட்டெழுத்து முற்றிலும் அழிந்தது. அதே பொழுது, திருவாங்கூர் அரசில் 19 ஆம் நூற்றாண்டு சுவாதித் திருநாள் காலம் வரையிலும் அரண்மனைக் கணக்கு (பண்டாரக் களஞ்சியம் - நிதித்துறை) வட்டெழுத்தில் எழுதப்பட்டதாய் ஒரு செய்தியுண்டு.

வட்டெழுத்து மாறிக் கிரந்தவெழுத்தின் அடிப்படையில் மலையாள எழுத்து உருவாகிய செய்தி தமிழராகிய நமக்கு ஒரு முகன்மையான எழுதருகையைத் (எச்சரிக்கையைத்) தரவேண்டும். 14 ஆம் நூற்றாண்டில் தான் கேரளத்தின் பொதுவழக்கில் வட்டெழுத்து மாறி ஆர்ய எழுத்தைப் புழங்கத் தொடங்கினர். [அதற்கு முன் வட்டெழுத்தே புழங்கியது.] தொடக்கத்தில் மலையாள மொழியில் கிரந்த எழுத்துக்கள் வட்டெழுத்துள் வெறுமே கடன் வாங்கப் பட்டன. பின்னால் பேச்சுவழக்கில் பிறமொழி ஒலிகள் கூடிப்போய் கிரந்தத்தில் இருந்து புது எழுத்தே உருவாக்கும் நிலை ஏற்பட்டது. பண்பாட்டுத் தளத்துச் சிக்கல் எழுத்துத் தளத்துள் புகுந்து அடிப்படைக்கே குந்தம் விளைவித்துப் பெருத்த ஊறு விளைவித்தது. தமிழக ஒற்றுமையில் இருந்து கேரளம் முற்றிலும் விலகியது. எழுத்துப் பிறந்தது தனித் தேசிய இனம் பிறக்க வழி செய்தது. தனியெழுத்துப் பிறக்காது இருந்தால் அதுவும் இன்று தமிழ்நாட்டின் ஒருவட்டாரமாய்த் தான் அறியப் பட்டிருக்கும்.

மலையாளத்தில் நடந்தது 21 ஆம் நூற்றாண்டுத் தமிழெழுத்திற்கும் நடக்கலாம். கிரந்த எழுத்துக்களைத் தமிழெழுத்துள் கொண்டு வந்து கேடு செய்வதற்குத் தமிழரில் ஒரு சிலரே முனைப்புடன் வேலைசெய்கிறார்கள். இதை அறியாது, குழம்பி, பொதுக்கை வாதம் பேசிக் கொண்டு நாம் தடுமாறிக் கிடக்கிறோம். தமிழ் ஒருங்குறியில் வரமுறையின்றி கிரந்த எழுத்துக்களை நாம் கடன் வாங்கத் தொடங்கினால் மலையாளம் விருத்து 2.0 (version 2.0) என்ற நிலை உறுதியாக நமக்கு ஏற்படும் என்றே தமிழுணர்வுள்ள பலரும் இன்று எண்ணுகின்றனர். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது, தமிழர் பிளவு படக் கூடாது, புதுத் தேசிய இனம் எழக் கூடாது, என்ற அச்சவுணர்வு நமக்குள் இன்றும் எழுகிறது.

நம்முடைய கவனமும், முனைப்புமே நம்மைக் காப்பாற்றும். உணர்வு பூர்வமான, பொதுக்கை வாதஞ் சார்ந்த, வெற்று அரசியற் முழக்கங்கள் எந்தப் பயனுந் தராது. ஒருங்குறி பற்றிய நுட்பியற் புலங்களை நாம் ஆழ்ந்து பயிலவேண்டும். அறிவியல் சார்ந்த, நுட்பியல் சார்ந்த முறைப்பாடுகளை அரசினர், ஒருங்குறி நுட்பியற்குழு போன்றவர்களிடம் முன்வைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக