திங்கள், 16 ஏப்ரல், 2012

சங்க இலக்கியம் -ராமர்

ராமர் பாதம் பதித்த ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் பரவி உள்ளதை முந்தைய இதழ் ஒன்றில் படித்தோம். தமிழ் நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டே ராமர் வாழ்ந்தது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவோருக்கு தமிழ் இலக்கியம் என்ன பதில் தருகிறது? உலக இலக்கியங்களில் சங்க இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று பெரும் சங்கங்கள் தமிழ் இலக்கிய வளத்தின் செழுமைக்குத் தக்க சான்று! ராமர் ஒரு புனைகதைப் பாத்திரமா அல்லது ஜீவனுள்ள ஒரு உண்மை நாயகனா என்பதற்கு சங்க இலக்கியம் அற்புதமான பதிலைத் தருகிறது. புறநானூறின் 378ம் பாடல் தென் பரதவர் மிடல் சாய, வட வடுகர் வாள் ஓட்டிய தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின், நற்றார்க் கள்ளின், சோழன் கோயில், புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப், பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி, எஞ்சா மரபின் வஞ்சி பாட, எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு. இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல், விரல்செறி மரபின செவித் தொடக் குநரும், செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு, அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமை எய்தி, அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு: தென் பரதவரின் குறும்புகள் அடங்க, வட வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க, அவரை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்! இச் சோழனின் நெடு நகரிலே, வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினனான சோழனின் வஞ்சிச் சிறப்பைப் போற்றிப் பாடினேன். எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு ஏராளமாக அளித்தான். அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன். அவர்கள் கண்டு திகைத்தனர்! விரலில் அணிவன செவியிலும், செவியில் அணிவன விரலிலும், அரைக்குரியன கழுத்திலும், கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்! அவரது செயலைக் கண்டவர் கைகொட்டி நகைத்தனர். 'சீதையின் அணிகளை கண்ட குரங்கினம் அணிந்ததென' இராமாயணத்தில் சொல்லப்படும் தன்மை போலிருந்தது அந்தக் காட்சி! என் சுற்றத்தின் வறுமையும் தொலைந்தது! அவர் முகத்தில் நகையும் அரும்பிற்று. பழமையான சங்க இலக்கியம் வழக்கில் இருந்து வரும் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டி நகைச்சுவையுடன் 'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்' என்று கூறுவது பொருள் பொதிந்த ஒன்று. அகநானூறு 70ம் பாடல் வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை) இராமன் அரக்கரை வெல்லுதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச் செய்தியை வானர வீரர்களோடு ஆராய்தற்பொருட்டுக் கோடிக்கரையில் பல விழுதுகளுடைய ஆலமரத்தின் கண் பறவைகள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கைகவித்து அவித்தனன் என்பது மேற்கண்ட பாடல் தரும் அற்புதச் செய்தி. நடந்திருந்தாலன்றி இப்படிப்பட்ட புனைகதைகள் வழக்கில் வர முடியாது; அதிலும் பாடலில் மேற்கோளாக இடம் பெற முடியாது. தனுஷ்கோடியை 'தொன் முது கோடி' என்று பாடல் கூறுவது மிகவும் ஆழ்ந்த பொருளைத் தருவதாகும். 'காலம் காலமாக இருந்து வரும் கோடி' என்ற அர்த்தத்தை உற்று நோக்கினால் எல்லையில் காலம் முன்னர் நடந்த அரிய சம்பவமும் அது சார்ந்த இடமும் நமக்குப் புலனாகும். கலித்தொகை தரும் இராவணன் பற்றிய தகவல் இது தவிர கலித்தொகை பாடல் 139ல் 33 முதல் 37 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்: "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல" இந்த வரிகள் அரக்கர் கோமானான பத்துத் தலை இராவணன் இமய மலையை எடுத்ததை அழகுறக் கூறுகிறது. ஆக, இப்படி இராவணன் இமைய மலை எடுத்தது, இராமன் தனுஷ்கோடியில் ஆலோசனை செய்தது, குரங்குகள் சீதையின் ஆபரணங்களை இடம் மாறி அணிந்தது போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் அழகுற ஆங்காங்கே தக்க இடத்தில் அமைந்துள்ளன. இராமன் வாழ்ந்தாரா என்ற் கேள்விக்குச் சங்க இலக்கியம் தரும் பதில் இது! . சேது என்ற சொல்லின் பொருள் சேது என்பது ஒரு பழமையான வடமொழிச் சொல். இதன் பொருள் அணை என்பதாகும். இதை 'ஸஹ இதும் கந்தும் ஷக்யதே அனேனேதி ஸேது:' என்ற பழமையான சொற்றொடரால் அறியலாம். இதுவே கரைகளை உடைத்து நீர் வெளிவராமல் இருக்கும் கரைக்கும் உரித்த சொல்லாக ஆகிறது. ஆகவேதான், 'நிஸ்ஸேது' என்ற சொல் சமூக மற்றும் கௌரவத்திற்குரிய சட்டங்களை உடைப்பவனையும் குறிக்கும் சொல்லாக ஆனது. இமயம் முதல் சேது வரை ஒரே பாரதம்! ராமர் அமைத்த சேதுவைக் காக்கும் உரிமை தமிழக மன்னர் குலமான சேதுபதிகளுக்கு உண்டு. அவர்களின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது; மரியாதைக்குரியது. ராமர் ஸ்தாபித்த சேது சமஸ்தானத்தின் முதல் சேதுபதி முதல் இன்றைய சேதுபதி வரை ராமர் பாலத்தை அவர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். கி.பி.1605ம் ஆண்டிலிருந்து சேதுபதி வம்சத்தின் ஆதாரபூர்வமான வரலாறு நமக்கு இன்று கிடைக்கிறது. இந்தக் குறுகிய சுமார் 400 ஆண்டுகள் வரலாறை அலசி ஆராய்ந்து பார்த்தாலும் முழு பாரத தேசமே சேதுவின் மீது கொண்ட பக்தி எவ்வளவு என்பதை விளக்கும். சங்க இலக்கியம் இமயமலையை எடுத்த ராவணனையும் குறித்தது. கோடிக்கரையில் ராமனின் சேது பற்றிய ஆலோசனையையும் குறிக்கிறது. தமிழின் சங்க இலக்கியத்தைத் தவிர, "ஆ ஸேது ஹிமாசல" - இமயம் முதல் சேது வரை என்ற சொற்றொடரை - ஒரே பாரதம் என்ற ஒற்றுமைத் தொடரை - வேறு எந்தப் பழமையான இலக்கியத்தால்தான் நிரூபிக்க முடியும்!? (நன்றி : ஆதிப்பிரான்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக