Monday, 6 February 2012

ப்ராணாயாமம்-யோகா முறை

ganesan ஒருவனுக்கு எதில் ஆழ்ந்த ஆர்வம் உண்டோ, எதில் அதிகத் தேடல் உண்டோ அதற்குத் தகுந்த மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் கண்டிப்பாகத் தன் வாழ்க்கையில் அவன் காண்கிறான். பால் ப்ரண்டன் அமானுஷ்ய சக்தி படைத்தவர்களையும், அவர்களில் உண்மையான ஒரு யோகியையும் கண்டுவிட வேண்டும் என்றும் கடல் கடந்து இந்தியாவுக்கு வந்தது வீண் போகவில்லை. பல அற்புத மனிதர்களைக் கண்டார். அவர்களில் ஒருவர் ப்ரம்மா என்ற இளைஞர். சென்னைக்கு அருகே அவரைச் சந்தித்தவுடன் ஏதோ ஒரு விசேஷ சக்தி அவரிடம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பால் ப்ரண்டன் அவரிடம் வலிய சென்று பேசினார். ஆரம்பத்தில் ப்ரம்மா அவர் வந்து பேசியதை அவ்வளவாக விரும்பவில்லை. ஹத யோகியான ப்ரம்மா அவரை ஒரு இடைஞ்சலாகவே நினைத்தார். ஆனால் பால் ப்ரண்டனுடைய உண்மையான ஆர்வத்தையும், அவர் இந்தியா வந்த காரணத்தையும் அறிந்த பின் ப்ரம்மா அவரிடம் யோகாவைப் பற்றிப் பேசினார். பால் ப்ரண்டன் அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்பினார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதில் என்ன நஷ்டம்?" ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...." பால் ப்ரண்டனுக்கு ப்ரம்மா சொன்னது வித்தியாசமாக தெரிந்தாலும் உண்மை என்றே தோன்றியது. (இன்று தகுதியில்லாதவர்கள் பெற்ற விஞ்ஞான ஞானம் எத்தனை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைப் பார்க்கும் போது நம் முன்னோர்களின் சிந்தனை சரியென்றே நமக்கும் தோன்றுகின்றன அல்லவா). தன்னுடைய ஆர்வம் வெறும் பொழுது போகாதவனின் தற்காலிக ஆர்வம் அல்ல என்று மீண்டும் வலியுறுத்தினார் பால் ப்ரண்டன். ப்ரம்மா அவருடைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்குப் பல யோக நுணுக்கங்களை விவரித்தார். முக்கியமாக ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி இந்தியர்களின் யோகா முறையில் எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் அது ஏன் என்பதையும் விளக்கினார். ".... இயற்கை மனிதனுக்கு ஒரு நாளுக்கு 21600 மூச்சுகளை அளந்து தந்திருக்கிறது. அதை அவசரமாகவும், தவறான முறையுடனும் பயன்படுத்துகிறவன் அந்த அளவையும் கடந்து மூச்சுக்களை உபயோகித்து தன் ஆரோக்கியத்தையும், வாழ்நாளையும் குறைத்துக் கொள்கிறான். ஆனால் நிதானமாக, ஆழமாக, தாளலயத்துடன் மூச்சு விடும் மனிதன் அந்த மூச்சால் ஆரோக்கியத்தை வளப்படுத்திக் கொள்வதோடு வாழ்நாளையும் அதிகப்படுத்திக் கொள்கிறான்" பின் ஒரு நாள் ப்ரம்மா பால் ப்ரண்டனுக்குத் தான் கற்றிருந்த வித்தைகளைக் காண்பிக்க ஒப்புக் கொண்டார். ப்ரம்மா பால் ப்ரண்டனிடம் தன் நெஞ்சில் கை வைத்து இதயத் துடிப்பைக் கண்காணிக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். ப்ரம்மாவின் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. கடைசியில் ஏழு நிமிடங்கள் ப்ரம்மாவின் இதயத்துடிப்பே நின்று போனது. பால் ப்ரண்டன் பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். அவர் அறிவின்படி இது மரணமே. அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ப்ரம்மா சிறிது நேரம் மூச்சு விடுவதையே நிறுத்திக் காட்டினார். பால் ப்ரண்டன் வியப்பு அதிகமாகிக் கொண்டே போனாலும் பால் ப்ரண்டனுக்கு இது நிஜம் தானா என்ற சந்தேகம் வந்து விட்டது. அங்கிருந்த கண்ணாடி ஒன்றைக் கொண்டு வந்து ப்ரம்மாவின் மூக்கருகே வைத்துப் பார்த்தார். ஒருவேளை லேசாகவாவது மூச்சு விட்டால் கண்ணாடியில் ஆவி படியும் அல்லவா? ஆனால் என்ன ஆச்சரியம். கண்ணாடியிலும் மூச்சுக் காற்று படியும் தடயம் இல்லை. சிறிது நேரம் கழித்து ப்ரம்மாவின் இதயம் மறுபடி துடிக்க ஆரம்பித்தது. ப்ரம்மா இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தார். பால் ப்ரண்டன் இது எப்படி சாத்தியம் என்று ப்ரம்மாவிடம் கேட்டார். இது இயற்கைக்கு எதிர்மாறாக இருக்கிறதே என்ற சந்தேகம் அந்த ஆங்கிலேயர் மனதில் பிரதானமாக இருந்தது. ப்ரம்மா சொன்னார். "இமயமலையில் சில வௌவால்கள் இருக்கின்றன. அவை பனிக்காலத்தில் இமயமலையில் உள்ள குகைகளில் தொடர்ந்து சில காலம் அடைந்து கிடக்க நேரிடும். அப்போது பனித்தூக்கம் என்றழைக்கப்படும் உறக்கத்தில் ஆழ்ந்து விடும் அந்த வௌவால்கள் அந்த உறக்க காலத்தில் மூச்சு விடுவதை நிறுத்தி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அவை விழிப்பது வெளியே போகக் கூடிய அளவு சீதோஷ்ணம் மாறுகையில் தான். அவை மூச்சு விட ஆரம்பிப்பதும் அப்போது தான். அதே போல் இமயமலையின் பனிக்கரடிகள் அதிக பனிக்காலத்தில் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று விடுகின்றன. அப்போது அந்தப் பனிக்கரடிகள் உயிரற்ற சடலங்களாகவே காட்சியளிப்பனவாக இருக்கும். அதே போல் சில வகைப் பனிநாய்கள் உறைபனிக்காலங்களில் உணவு கிடைக்காத நிலை ஏற்படும் போது பதுங்குகுழிகளில் மாதக்கணக்கில் உறங்குவனவாக இருக்கின்றன. அப்போது அவை மூச்சு விடுவதில்லை அல்லது நீண்ட இடைவேளைக்கு ஒரு முறை மூச்சு என்று விடுகின்றன். அப்படி அந்த விலங்குகள் கூட மூச்சு விடுவதைச் சில காலம் நிறுத்தி வைக்க முடியும் போது மனிதனால் ஏன் முடியக் கூடாது?" இமயமலையில் வாழும் விலங்குகளுக்கு அந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இயற்கை அளித்த அந்த வரப்பிரசாதம் அந்த மூச்சு விடாமல் இருக்கும் காலம். ஆனால் மனிதன் விஷயம் அப்படியில்லையல்லவா? ஆனால் உண்மையில் முன்பொரு காலத்தில் லாகூரில் பக்கிரி ஒருவர் மகாராஜா ரஞ்சித் சிங் முன்னிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் ஒரு சமாதிக்குள் இருந்து பின் உயிர்த்து வந்தது அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றும் ப்ரம்மா தெரிவித்தார். பால் ப்ரண்டன் விசாரித்ததில் அந்தச் செய்தி உண்மை என்று தெரிந்தது. 1837 ஆம் ஆண்டு அந்தப் பக்கிரி உயிரோடு சமாதி ஆக ஒப்புக் கொண்டார். லாகூரில் மகாராஜா ரஞ்சித் சிங், சர் க்ளாட் வேட், டாக்டர் ஹோனிக்பெர்ஜர் போன்ற முக்கியமான சாட்சிகள் மற்றும் பலர் முன்னிலையில் உயிரோடு சமாதி செய்யப்பட்டார். மஹாராஜா ரஞ்சித் சிங் ஏமாற்று வேலை எதுவும் இதில் நடந்து விடக்கூடாது என்பதற்காக சீக்கிய சிப்பாய்கள்கள் மாறி மாறி ஒருவராவது அந்த சமாதியில் இரவும் பகலும் காவல் காக்குமாறு பார்த்துக் கொண்டார். நாற்பது நாட்கள் கழிந்து சமாதியைத் தோண்டிய போது அந்தப் பக்கிரி உயிரோடு வெளிவந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். இது சில ஆதாரபூர்வ களஞ்சியங்களில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. முழு விவரங்கள் கல்கத்தாவில் உள்ள வரலாற்றுக் களஞ்சியத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது.

No comments:

Post a Comment