(மகாபாரதப் போர் - தமிழர்கள்)

ஐந்திணைகளும் ஐம்பூதங்களும்: தொல்தமிழகத்தில் முல்லை , குறிஞ்சி , மருதம் , நெய்தல் , பாலை என்ற ஐவகை நிலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். இயற்கையின் ஒப்பற்ற அமைப்புக்களாக விளங்கிய இந்த ஐந்துவகை திணைகளும் தொல்தமிழகத்திற்குக் கிடைத்த அரிய வரங்கள் என்றே கூறலாம். வடக்கே பனிமலையும் , கிழக்கே கடலும் , மேற்கே பாலைவனமும் இயற்கை அன்னை கொடுத்த பாதுகாப்பு அரண்களாக இருந்து தொல்தமிழகத்தைக் காத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையாகாது. அதுமட்டுமின்றி , இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம். முல்லைத் திணையில் இயற்கையின் முதல் பூதமான ஆகாயம் சிறப்புற விளங்கியது எனலாம். கார்காலத்தை தனது பெரும்பொழுதாகவும் மேகத்தையே (மாயோன்) தனது தெய்வமாகவும் கொண்டது முல்லைத் திணை ஆகும்....