நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்

நீதிநெறி விளக்கத்தில் தனி மனித ஆளுமைத்திறன்

சிற்றிலக்கிய வேந்தர் என்ற பாராட்டுக்கு உரியவர் குமரகுருபரர். இவர் கி.பி.17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

திமிரமது அகற்றுந் தெய்வக் கவிஞன்குமரகுருபரன் குரைகழல் வெல்க
என்ற தனிப்பாடல் வரிகளுக்கு ஏற்ப இவர் தமிழ்க் கவிஞராகவும் தெய்வக் கவிஞராகவும் மலர்ந்து மணம் வீசியவர். மக்களின் அறியாமை இருளை அகற்றி அறிவு புகட்டிய தமிழ்க் கவிஞர்களுள் இவருக்கென்று தனித்த இடம் தமிழிலக்கிய வரலாற்றில் உண்டு. இவர் பிற்காலத்தில் தோன்றிய மரபுக் கவிஞர்கள் முதல் பாரதிதாசன் வரை உள்ள வரிசையில் ஒருசேர வைத்து போற்றத்தக்கவர். இவர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமைத் திறன்களை எடுத்துரைக்கும் முகத்தான் இக்கட்டுரை அமைகிறது.
ஆளுமைத்திறன்

நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 75 பாடல்கள் தனி மனித ஆளுமைகளை எடுத்துரைக்கும் தன்மையில் அமைந்துள்ளன.(காண்க; ‘நீதிநெறி விளக்கத்தில் தனிமனித நீதிகள்’, குமரகுருபரர் ஆய்வு மாலை, தொகுதி 1, ப. 254.) அதாவது தனி மனிதனுக்குரிய நீதிகளை எடுத்துரைத்து அவர்களின் ஆளுமையை வளர்த்தெடுக்க இந்நூல் முயல்கிறது.
நிலையாமை

நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்காள் - என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று (நீ.நெ.வி. 1)

என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனி மனித ஆளுமைத்திறனை நன்கு எடுத்துரைக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

மனிதப் பிறவியும், இப்பிறவியில் சேர்க்கும் செல்வமும் நிலைத்து நிற்கக் கூடியது என்று மனிதர்கள் மிகவும் நம்புகிறார்கள்¢. இதனால் எப்பாடு பட்டாவது செல்வத்தைச் சேர்ப்¢பதில் முனைப்பாய் நிற்கிறார்கள். செல்வத்தைப் பெறுவதற்கு தீய வழியாய் இருந்தாலும் கூட கவலையின்றி அதனைச் செய்கிறார்கள். இதனால் தனி மனித நியாயங்கள் பறிக்கப்¢படுகின்றன. வலியவர் வாழ்வதும் எளியவர் வீழ்வதும் அன்றாடம் உலகில் அரங்கேறுகின்றன. இந்த எண்ணம் மனிதர்களிடையே
அகற்றப்பட்டு விட்டால் நாட்டில் அதர்மங்கள் பெருக வாய்ப்பில்லை. இதனை நன்கு உணர்ந்தவராக குமரகுருபரர் விளங்குகிறார்.

இதனால்தான் குமரகுருபரர், இளமைப் பருவம் நீர்க்குமிழி; மனிதனால் சேர்க்கப்¢படும் செல்வம் நீரில் எழுகின்ற அலை; மனித உடல் நீரில் எழுதப்¢படுகின்ற எழுத்து என்று தௌ¤வுபட எடுத்துரைக்கிறார். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் தனி மனித குணங்கள் மேம்படும். தனி மனித குணங்கள் மேம்பட்டால் அவன் சார்ந்த சமுதாயம் சிறப்படையும்.
கல்வி

தனி மனித ஆளுமை வளர்ச்சியில் மிகவும் இன்றியமையாத பங்கெடுப்¢பது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த குமரகுருபரர் கல்வியின் சிறப்பு, பயன், கல்லாமையின் இழிவு, கல்வியைக் காசாக்குவோர் நிலை ஆகியன பற்றி 25 பாடல்களில் விரிவாகப் பேசுகிறார். இதனால்தான் கல்வியைச் சிற்றுயிர்க்கு உற்ற துணை’ (நீ.நெ.வி. 2) என்றும், கற்புடைய மனைவி, செல்வப் புதல்வன் (நீ.நெ.வி. 4) என்றும் இவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் தம்முடைய கருத்தைப் பிறர்க்கு அஞ்சாது எடுத்துரைக்க வேண்டும். அதுபோல தம்மைவிட அறிவில் மிக்கார் கூடியுள்ள அவையில் ஒன்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் அதனைப் பற்றிப் பேசுவதற்கு அஞ்ச வேண்டும். அதாவது அஞ்சத் தகுவனவற்றிற்கு அஞ்சுதலும் அஞ்சத்தகாதனவற்றிற்கு அஞ்சாதும் வாழ்தல் வேண்டும். இத்திறம் நல்ல மனிதர்களுக்குரிய ஆளுமைப் பண்பாகும்.
இதனையே
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் (குறள்.428)
என்று வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.
செருக்கின்மை

ஒருவர் அனைத்திலும் தாமே மேலானவர் என்று செருக்குக் கொள்ளுதல் அழிவிற்கு வித்தாகும். எனவே வாழப் பிறந்த மனிதர்கள் செருக்கற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

நம்மைவிட செல்வத்தில் குறைந்தாரை நோக்கி நாம் அவர்களை விட மிகுந்த செல்வம் உடையேம் என்று மன நிறைவு கொள்ள வேண்டும். அதேவேளையில் நம்மைவிட கல்வியில் மிக்காரைப் பார்த்து நாம் கற்க வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எண்ணுதல் வேண்டும். இதனை விடுத்துத் தாமே செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுதல் செருக்காகும். செருக்குடையவர்கள் வாழ்வு சருக்கி விடும் என்பது குமரகுருபரரின் துணிபாகும். இதனை,

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
இவர்க்குநாம் என்று தாமே (நீ.நெ.வி. 15)
முயற்சி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்; விதியை மதியால் வெல்லலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த முதுமொழிகளாகும். இதனை வள்ளுவரும்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் (குறள்.620)

என்று குறிப்பிடுகின்றார். வாழ்க்கையில் ஒருவர் பெறும் உயர்வுகளுக்கு அவர்தம் முயற்சிகளே காரணமாகின்றன.

தாம் எண்ணியதை எண்ணியாங்கு எய்த நினைக்கும் ஒருவர் தம்முடைய உடல் துன்பம், உள்ளப் பசி, தூக்கம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று குமரகுருபரர் கருதுகிறார். இதனை,
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் .......................... ..................... ................... ........................ கருமமே கண்ணாயி னார் (நீ.நெ.வி.53)
என்று இவர் குறிப்பிடுகிறார்.

தெரிந்து முயலுதல்

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்றாலும்கூட ஒன்றைச் செய்ய முயல்வதற்கு முன்பு அச்செயலைச் செய்வதற்குரிய காலம், இடம், காரணம், பயன் ஆகியவற்றை ஆராய்ந்து ஈடுபடுதல் இன்றியமையாததாகும். அப்பொழுதுதான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற இயலும். இதனை,

காலம் அறிந்தாங்கு இடமறிந்து செய்வினையின்
மூலமறிந்து விளைவறிந்து - மேலும்தாம் சூழ்வன
சூழாது துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். (நீ.நெ.வி.53)

என்று நீதிநெறி விளக்கம் வுறுத்துகிறது. எனவே, தெரிந்து முயலுகின்ற ஆளுமைத்திறன் பெற்றவரால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பது புலனாகிறது.

வஞ்சகம் புரியாமை

மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றியும் வஞ்சித்தும் வாழத்தலைப்படுகின்றனர். இது மிகவும் கொடிய செயலாகும். இங்ஙனம் வஞ்சித்தொழுகுவாரை மதியற்றவர்கள் என்று குமரகுருபரர் சாடுகிறார். பிறரை வஞ்சித்து வாழ்கின்றவர்களுக்கு அப்பொழுது வேண்டுமானால் ஒருவரை வஞ்சித்து விட்டோம் என்ற உணர்வு மேலிடலாம். இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே ஆகும். ஒருவர் பிறரை ஏமாற்றுவதையும் வஞ்சிப்பதையும் கடவுள் பார்த்துக்கொண்டே இருக்கிறார். எனவே அதற்கான தண்டனைக் கிடைக்கப்பெற்றேத் தீரும் என்பதை,

வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கம் குலைவது அறிவு (நீ.நெ.வி.94)
என்னும் பாடலில் குமரகுருபரர் அறிவுறுத்துகிறார். ஆதலால் நல்ல மனிதர்களாக உலகை வலம் வர விரும்புகின்ற நல்லவர்கள் வஞ்சக எண்ணமில்லா ஆளுமைப்¢பண்பு நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சிற்றின்பம் நாடாமை

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது பழமொழி. இதன்பொருள் நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்களும் நல்லவர்காளாவர் என்பதாகும். பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பது மற்றொரு பழமொழி. இதன்பொருள் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்களும் தீயவர்காளாகி விடுவர் என்பதாகும்.

உலகில் தீயவர்களோடு சேர்ந்த நல்லவர்கள் கெடுவதைத்தாம் மிகுதியாகப் பார்க்கிறோம். நல்லவர்களோடு சேர்ந்த தீயவர்கள் திருந்துதல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. இதனைக் குமரகுருபரரும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. அப்பாடல் இதுதான்;
சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றினபம் யாவையும் கைவிடுவர் - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில் (நீ.நெ.வி.88)
அதாவது பேரின்பத்தை விரும்புகின்றவர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பத்தை விரும்பினார் மற்றின்பத்தை எல்லாம் கைவிடுவர்.
எனவே சிற்றின்பத்தை விரும்பாது வாழ்தல் என்பது தனி மனித ஆளுமைத் திறனாகக் கொள்ளலாம். இதனைத்தான் வள்ளுவரும் சிற்றினஞ்சேராமை என்று வலியுறுத்துகிறார்.
நயத்தகு நாகரிகம்
ஒருவன் தன்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்தல் வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும். சொல்வதைச் செய்தல் வேண்டும். ஆனால் சிலர் தன்னால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்று வாய்ச்சவடால் பேசுவர். செய்தற்கு அரிதினும் அரிதான காரியங்களைத் தான் செய்து முடிப்பேன் என்று கூறிவிட்டு அதனைச் செயலில் காட்டாமல் பேச்சளவில் மட்டுமே நிற்பர். இத்தகையோரை நாகரிகமற்றவர்கள் என்று நாகரிகமாகச் சாடுகிறார் குமரகுருபரர். எனவே, மனிதர்கள் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழும் நயத்தகு நாகரிகம் மிக்கவர்களாக இருத்தல் வேண்டும்.

பிறன்மனை நயவாமை
ஆண்மை என்றால் வீரம் என்று பொருள். பேராண்மை என்றால் பெரிய வீரம என்று பொருளாகும். பிறன் மனை நோக்காத் தன்மையே பேராண்மை என்பது வள்ளுவம். இதனை,

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள்.148)

என்னும் திருக்குறள் சுட்டுகிறது. இதனை நீதிநெறி விளக்கமும் வலியுறுத்துகிறது. பிறன்மனை விரும்பிச் செல்வான் உடலும் உள்ளமும் நடுக்கமுற்றுத் தீரா நோயுறுவான் என்று நீதிநெறி விளக்கம் (நீ.நெ.வி.77) எச்சரிக்கை செய்கிறது.

ஈகையும் இன்சொல்லும்
ஒருவர் தம்மிடமிருக்கும் பொருளை ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் தேவையறிந்து வழங்குதல் வேண்டும். அங்ஙனம் வழங்குதல் மிகுந்த இன்பத்தைத் தரவல்லது. பிறருக்கு வேண்டுவனவற்றை வழங்காமல் தம்மிடம் உள்ள பொருட்செல்வத்தை இழப்¢பவர்கள் அதனால் ஏற்படும் இன்பத்தை அறியாதவர்களாவர். இதனை,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)

என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இதனைக் குமரகுருபரர், ஈயாக் குணம் கொண்ட செல்வந்தரின் செல்வத்தைக் காட்டிலும் ஈயும் குணம் கொண்டவரின் வறுமை மேலானது என்று ஈகையின் பெருமையை எடுத்துரைக்கிறார். இதனை,
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலும் நனிநல்ல............ (நீ.நெ.வி.67)
எனனும் வரிகள் தௌ¤வுறுத்துகின்றன.

பிறருக்குப் பொருள் கொடுத்து உதவும்பொழுது இனிய சொற்களைக் கூறி அளித்திடல் வேண்டும். அதாவது முகமலர்ச்சியோடு வழங்குதல் வேண்டும். ஈகை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது இன்சொல் கூறுதலும் ஆகும். ஒருவேளை ஈகை செய்ய முடியாமல் போனால் இனிய சொற்களையாவது கூறுதல் வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில்,

ஈகை யரிதெனினும் இன்சொளினும் நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிதம்மா ...... (நீ.நெ.வி.68)
என்னும் பாடல் வரிகள் அமைந்துள்ளன. எனவே, ஈகையும், இன்சொல் கூறலும் தனி மனித ஆளுமை வளர்ச்சியில் இன்றியமையா இடத்தைப் பெறுகின்றன.

எனவே, குமரகுருபரர் நீதிநெறி விளக்கத்தில் தனிமனித ஆளுமைப் பண்புகளை மிகுதியும் எடுத்துரைத்துள்ளமையைக் காண முடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள தனி மனித ஆளுமை வளர்ச்சிக்கான கருத்தாக்கங்களைத் தொகுத்து நோக்குங்கால்அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்;

மனம், மொழி, மெய்களால் தீமை செய்யாதிருக்க வேண்டும்
தற்புகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்
பயன் சிறிதாயினும் விடா தொடர் முயற்சி செய்தல் வேண்டும்
எண்ணித் துணிதல் வேண்டும்
கருமமே கண்ணாயிருக்க வேண்டும்
பிறரின் சிறிய குணங்களை இகழாது அவர்களின் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டும்
நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
தன்மானத்தை விற்றுப் பொருள் ஈட்டாதிருக்க வேண்டும்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உண்மையாய் வாழ வேண்டும்
இவற்றைப் பின்பற்றி மானிட சமுதாயம் வாழத் தலைப்¢படுகின்ற பொழுது வீடும் நாடும் ஒருசேர உயரும் என்பது திண்ணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை