சங்க நூல்கள்

ந.விசாலாட்சி

சங்க நூல்கள்

                        
தமிழின் தனிப்பெருஞ்செல்வமாக விளங்குவது சங்க இலக்கியமாகும். தொன்மைவாய்ந்த இவ்விலக்கியங்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்னரேஅச்சுருவம் பெற்றுத் தமிழ் ஆர்வலர்க்குப் பெருவிருந்தாய்க் கிடைத்தன.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களின் பதிப்பு முயற்சிகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.

முதற் பதிப்புகள்

                           கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையை முதன் முதலில் பதிப்பித்தவர் தமிழ்த்தந்தை எனப் பல்லோராலும் அழைக்கபெறும் இராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை ஆவார். 1887-ஆம் ஆண்டில் முதற்பதிப்பாகக் கலித்தொகை, தமிழ் உலகிற்கு அறிமுகமானது.அவருடைய பதிப்புப் பணிக்குப்பின் தமிழ்த்தாத்தா என அழைக்கப்பெறும் மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாதையரவர்களுடைய முதற்பதிப்பாகிய பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும் 1889-இல் வெளிவந்தது.இப்பதிப்பிற்குப்பின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றினை 1894-இல் பதிப்பித்தார். 1903-ல் ஐங்குறுநூற்றினைப் பதிப்பித்தார்.1904-இல் பதிறுப்பத்தினை வெளியிட்டார். நற்றிணை பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் எழுதிய உரையுடன் சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலையில் 1915 இல் வெளியிடப்பெற்றது.இவருடைய பதிப்புப்பணியைப் பின் தொடர்ந்து சௌரிப் பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை அழகிய முறையில் பதிப்பித்து 1915 இல் வெளியிட்டார். 1918 இல் வெளியிட்ட பரிபாடலானது உ. வே. சாவின் முதற்பதிப்பாக வெளிவந்தது. ரா. ராகவையங்கார் (பதிப்பாசிரியர்) அவர்கள் அகநானூற்றினை முதற்பதிப்பாக 1920 இல் கம்பர் விலாசம் இராஜகோபாலய்யங்கார் மூலம் வெளியிட்டார்.

பத்துப்பாட்டின் பிற பதிப்புகள்

                            
இதுகாறும் பத்துப்பாட்டு , எட்டுத்தொகை நூல்களுக்கு ஏராளமான பதிப்பு நூல்கள் தோன்றியுள்ளன. ஆய்வுப்பதிப்பு, மூலப்பதிப்பு, மலிவுப்பதிப்பு எனப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. இனி ஒவ்வொரு பதிப்பாசிரியர்களுடைய நூல்களையும் தனித்தனியாகக் காணலாம். பொ.வே. சோமசுந்தரனார் அவர்கள் பத்துப்பாட்டினை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார். அவருடைய மறுபதிப்பு விவரம் வருமாறு: முதற்பதிப்பு 1956, 1962, 1966, 1968, 1971.

                              1961
ஆம் ஆண்டில் வை. மு. கோபால கிருஷ்ணமாசாரியாருடைய பத்துப்பாட்டுப் பதிப்பு வெளிவந்துள்ளது. மலிவுப்பதிப்பாக மர்ரே பதிப்பு 1957 இல் முதற்பதிப்பாகவும், 1981 இல் (என்.சி.பி.எச் வெளியீடு) இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.

திருமுருகாற்றுப்படை

                            
பத்துப்பாட்டில் தனித்தனியாகவும் சில நூல்களை உரையாசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். திருமுருகாற்றுப்படையினை வெளியிட்ட பல்வேறு உரையாசிரியர்களுடைய காலநிரல் வருமாறு: 1902 இல் திருமுருகாற்றுப்படையினைத் திரு சரவணப்பெருமாளையர் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். பின்னர் 1917 இல் முதற்பதிப்பாக வெளியிட்ட ஆறுமுக நாவலர் 1947 இல் 16 ஆம் பதிப்பாகவும் வெள்யிட்டார். திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும்என்ற தலைப்பில் 1924 இல் மகாதேவ செட்டியார் அவர்கள் பதிப்பித்து வெளியிட்டார். 1927 இல் திருமுருகாற்றுப்படைச் சிற்றாராய்ச்சி என்ற பதிப்பு நூலினைத் திரு. எம். ஆறுமுகப்பிள்ளை அவர்கள் வெளியிட்டார். திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரையினை 1937 இல் பண்டிதர் சு. அருணம்பலம் அவர்கள் வெளியிட்டார். 1937 இல் திருமுருகாற்றுப்படை மூலமும் பொருட்சுருக்கமும் பதவுரையும் குறிப்பும்என்ற தலைப்பில் தை.ஆ. கனகசபாபதி முதலியார் அவர்கள் பதிப்பித்தார். 1945 இல் வை.மு.கோ. பதிப்பும் வெளிவந்தது. ஏறத்தாழ திருமுருகாற்றுப்படைக்கு மட்டும் பதினைந்து உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர்.

பொருநராற்றுப்படை

                         
பொருநராற்றுப்படைக்கு இரு உரையாசிரியர் உரை எழுதியுள்ளனர். (மகாதேவ முதலியார், பொ. வெ. சோமசுந்தரனார்.)

சிறுபாணாற்றுப்படை

                         
சிறுபாணாறுப்படைக்கு நான்கு உரையாசிரியர்கள் உரை எழுதிப் பதிப்பித்துள்ளனர். ( வை.மு.கோ., வி. கந்தசாமி முதலியார், மு. பி. பாலசுப்பிரமணியன், பொ. வே. சோமசுந்தரனார்)

பெரும்பாணாற்றுப்படை

                            
வை. மு. கோபாலகிருஷ்ணமாசாரியார், ரா. ராகவையங்கார், பொ. வே. சோமசுந்தரனார், சு. அருணம்பலம் முதலான உரையாசிரியப் பெருமக்களும் உரை எழுதிப் பதிப்பித்துள்ளனர்.

முல்லைப் பாட்டு

                            (1927)
முல்லைப்பாட்டிற்கு மட்டும் உ. வே. சா. அவர்கள் உரை எழுதியுள்ளார். 1903 இல் மறைமலையடிகள் அவர்களுடைய முதற்பதிப்பாக முல்லைப்பாட்டு வெளிவந்துள்ளது. தவிர வை. மு. கோ. கனகசபாபதி முதலியார், க.ப.சந்தோஷம், பொ. வே. சோமசுந்தரனார், முதலானோர் எழுதிய உரைகளும் வெளிவந்துள்ளன.

மதுரைக்காஞ்சி

                          
மதுரைக்காஞ்சிக்கு பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் எழுதிய உரை மட்டும் கழ வெளியீடாக வெளிவந்துள்ளது.(முதற்பதிப்பு 1956)

நெடுநல்வாடை 

                         
நெடுநல்வாடைக்கு வை. மு. கோபாபாலகிருஷ்ணமாசாரியார் பதிப்பும் (1931) பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள் எழுதிய கழக வெளீயீடும் வந்துள்ளன.

குறிஞ்சிப்பாட்டு

                          
கழக வெளியீடான பொ. வே. சோமசுந்தரனார் உரை மட்டும் (1956) வந்துள்ளது.

பட்டினப்பாலை 

                          
பட்டினப்பாலைக்கு வை.மு.கோ (1933, 1938) உரையும், மறைமலையடிகள் எழுதிய கழக உரையும் (1956), ரா. ராகவையங்காரின் முதற்பதிப்பு1951 இலும், சாமி. சிதம்பரனாரின் முதற்பதிப்பு 1967 இலும், பொ. வே. சோமசுந்தரனார் உரை என இதுகாறும் ஐந்து உரையாசிரியர்களுடைய பதிப்புகள் வெளிவந்துள்ளன.

மலைபடுகடாம்

                      
மலைபடுகடாத்திற்கு பொ.வே.சோமசுந்தரனார் உரைமட்டும் கழக வெளியீடாக வந்துள்ளது.

எட்டுத்தொகை நூல்களின் பிற பதிப்புகள் - நற்றிணை

                      
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரின் முதற்பதிப்பிற்குப்பின் வெளிவந்த மறுபதிப்புகள் பற்றிய விவரம்.
                      
 
                     
முதற்பதிப்பு 1952 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடாக (சென்னை) பின்னத்தூரார் வெளியிட்டார். அடுத்த பதிப்பினை 1956 இல் வெளியிடார். இவரேநற்றிணை நானூறுஎன்ற பதிப்பு நூலினைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீட்டில் மூன்றாம் பதிப்பாக 1962 இல் வெளியிட்டார். இவருடைய பதிப்புக்குப்பின் நற்றிணை மூலம்”  என்ற நூலினை எஸ். ராஜம் அவர்கள் (என்.சி.பி.எச் வெளியீடு) மர்ரே பதிப்பாக 1957 இல்வெளியிட்டார். இப்பதிவுக்குப்பின் இரண்டாம் பதிப்பாக 1981 இல் வெளிவந்தது. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் நற்றிணைப் பதிப்புகளை இருபகுதிகளாக 1966 இல் அருணா பப்ளிகேஷன்ஸ் மூலம் சென்னையில் வெளியிட்டார். அடுத்து எளிய பதிப்புரையான புலியூர்கேசிகனின் நற்றிணைத் தெளிவுரை” (பாரி நிலையம், சென்னை) முதற்பதிப்பாக 1967 இல் வெளிவந்தது.

குறுந்தொகை

                     
திரு. சௌரிப்பெருமாள் அரங்கனாரின் உரைக்குப்பின் எண்ணிலடங்கா உரையாசிரியர்களும் உரை எழுதியுள்ளனர். அடுத்து 1920 இல் கா. ரா, நமச்சிவாய முதலியார் பதிப்பு வெளிவந்தது. 1930 இல் முதற்பதிப்பாக இராமரத்தினம் ஐயர் பதிப்பும், 1933 இல் சோ. அருணாசல தேசிகரின் குறுந்தொகை மூலமும் வெளிவந்துள்ளன.

உ. வே. சா. அவர்கள், தமது முதிர்ந்த அனுபவத்தின் கனியாக 1937 இல் பதிப்பித்த குறுந்தொகைப் பதிப்பும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. மறுப்பதிப்பாக (ஆறாம் பதிப்பு)1962 இல் வெளிவந்துள்ளது. பொ. வே. சோமசுந்தரனாரின் உரை, கழக வெளியீட்டில் முதற்பதிப்பாக 1955 இலும், அடுத்து 1965, 1972 இலும் வெளிவந்துள்ளது. 1957 இல் மர்ரே பதிப்பு என்.சி.பி.எச் மூலம் வெளிவந்துள்ளது. குறுந்தொகைக்காட்சிகள் மூலமும் விளக்கமும்என்ற நூலினை 1958 இல் சக்திதாசன்சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அதே ஆண்டில் (1958) மூன்றாம் பதிப்பாக மு. ராகவையங்கார் அவர்கள் குறுந்தொகை விளக்கத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட்டுள்ளார்.இறுதியாக 1985 இல் மூன்று உரையாசிரியர்களுடைய உரைகளும் பல்கின. இப்பதிப்புப்பற்றிய விவரத்தினையும் பதிப்பாசிரியர்களைப்பற்றியும் சங்க இலக்கியப்பட்டியல்வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஐங்குறுநூறு

                   
உ. வே. சாவின் முதற்பதிப்புக்குப்பின் இரண்டாம் பதிப்பாக 1920 இல் வெளிவந்தது. இவருடைய பதிப்புக்குப்பின் இரண்டாம் பதிப்பாக 1920 இல் வெளிவந்தது. இவருடைய பதிப்புக்குப்பின் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பானது மூன்று தொகுதிகளாக 1957 இல் வெளிவந்தது. இம்மூன்று தொகுதிகளுக்கு முன் 1938 இல் ஐங்குறுநூற்றின் முதல் நூறு பாடல்கள் வெளிவந்துள்ளன. இறுதியில் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் எல்லாவற்றையும் ஒருசேரத் தொகுத்து 1958 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வெளியிட்டுள்ளார். அடுத்து சொ வே. சோமசுந்தரனாரின் கழக உரை 1961, 1966 ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளது. மூலப்பதிப்புகளாக (என்.சி.பி.எச் வெளியீடு) 1957, 1981 இல் மர்ரே பதிப்பாக வெளிவந்துள்ளது.புலியூர்த்தேசிகனின் தெளிவுரையும் சில தொகுதிகளாக வெவ்வேறு ஆண்டுகளில் வெளிவந்துள்ளது.

பதிற்றுப்பத்து

                   
உ. வே. சாவின் முதற்பதிப்புக்குப்பின் வந்த மறு பதிப்புகள் 1920, 1941, 1945, 1949, 1957 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. இவருடைய பதிப்பினை அடுத்து ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களுடைய பதிப்புகள் 1950, 1955, 1958, 1963, 1968 இல் வெளிவந்துள்ளன. உரையின்றி மூலப்பதிப்பாக 1957, 1981 இல் மர்ரே பதிப்பகத்தார் என்.சி.பி.எச். வெளியீடாக வெளியிட்டுள்ளனர். பழைய உரை குறிப்புரையாக பதிற்றுப்பத்துக்கு யாழ்பாணம் பண்டிதர் சு. அருணம்பலவனார் வகுத்த ஆராய்ய்ச்சி உரையுடன் அமைந்த பதிப்பு 1960 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பெற்றது. அடுத்து இவரே இரண்டாம் பாகமாக 1963 இல் வெளியிட்டுள்ளார். புலியூர்க்கேசிகனின் தெளிவுரையும் 1974 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

பரிபாடல்

                   
டாக்டர். உ. வே.சாவின் மறுபதிப்பு  1935 இலும் வெளிவந்துள்ளது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக (1957, 1964, 1969 ) பொ. வே. சோமசுந்தரனார் உரை வெளிவந்துள்ளது. 1971 இல் புலியூர்த் தேசிகனின் தெளிவுரையைச் சென்னைப்பாரி நிலையத்தார் வெளியிட்டுள்ளனர். அடுத்து மர்ரேபதிப்பு 1957, 1981 இல் வெளிவந்துள்ளது.

கலித்தொகை

                  
எட்டுத்தொகை வரிசை நூல்களுள் முதன் முதல் பதிப்பிக்கப் பெற்ற நூல் கலித்தொகையேயாகும். சி. வ. தாமோதரனார் அவர்களுடைய பதிப்பில் நச்சினார்க்கினியர் உரையும் உள்ளது.இவருடைய பதிப்பினைத் தொடர்ந்து இ. வை அனந்தராமையரவருடைய பதிப்பு (1925) மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளது. முதல் தொகுதியில் பாலைக்கலியும், குறிஞ்சிக்கலியும் (1925) இரண்டாம் தொகுதியில் மருதக்கலியும், முல்லைக்கலியும் (1925) என இரு தொகுதிகளாக வெளியிட்டார். நெய்தற்கலியை மட்டும் 1931 இல் தனியாகப் பதிப்பித்து வெளியிட்ட இவர் 1930 இல் மூலத்தையும் பதிப்பித்துள்ளார். இவருடைய பதிப்பினை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தார் 1984 இல் வெளியிட்டுள்ளனர். இவருடைய பதிப்பில் மூலமும் உரையும் காணப்படுகின்றன. மேலும் ஐயரவர்கள் அடிக்குறிப்பாக காட்டியுள்ளார். இவ்வடிக்குறிப்புகள் புலவர்க்கு விருந்தாகவும், பயில்வோர்க்கும் அறிஞ்சர்க்கும் கைவிளக்காகவும் அமைந்துள்ளன. காழி. சிவ. கண்ணுசாமி, தமிழ்மலை இளவழகனாரின் முதற்பதிப்பு 1938 இல் பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் வெளியீடாக வெளிவந்துள்ளது. இவருடைய மறுபதிப்புகள் பின்வரும் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.1943, 1949, 1955, 1958, 1962, 1967. 1937 இல் கை. ஆ. கனகசபாபதி முதலியார் அவர்கள் பாலைக்கலியினை வெளியிட்டுள்ளார். 1958 இல் கலித்தொகை மூலமும் விளக்கமும்என்கிற உரையினை திரு. சக்திதாசன் அவர்கள் பதிப்பித்து வெள்யிட்டுள்ளார். பின்னர் மலிவுபதிப்புகளும் வெளிவந்துள்ளன. சைவசித்தாந்தக் கழக வெளியீட்டில் பொ. வே. சோமசுந்தரனாரின் உரை 1969, 1970 இலும் வெளிவந்துள்ளது.
                      
 
அகநானூறு

                 
ரா.ராகவையங்கார் அவர்கள் அகநானூற்றினைப் பதிப்பிக்கவேண்டுமென்ற அவாவுடன், பலஏடுகளைப் பரிசோதித்து மயிலாப்பூர் கம்பர் விலாசம், இராஜகோபாலய்யங்கார் மூலம் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்.அகநானூற்றின் ஒரு கூறாகிய களிற்றியானைநிரையை உரையுடன் 1926 இல் பதிப்பித்தார். இவருடைய பதிப்பிற்குப்பின் உரையாசிரியர்களாகிய ந. மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தை கவியரசு வேங்கடாசலம்பிள்ளை ஆகிய இருவரும் அகநானூற்றினை களிற்றியானைநிரை (1943), மணிமிடைபவளம், நித்திலக்கோவை (1944) எனும் ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தமிழ் வெளியீட்டுக்கழகம் மூலம் பதிப்பித்துள்ளனர். கடைசியாகப் புலியூர் கேசிகனின் எளிய தெளிவுரையும் மூன்று தொகுதிகளாக வெவ்வேறு ஆண்டுகளில் பதிக்கப்பெற்றுள்ளது. அவற்றின் பதிப்பு விவரம் வருமாறு:
                   (1)
அகநானூறு - களிற்றியானைநிரை தெளிவுரை - 1960, 1963, 1971.
                   (2)
அகநானூறு - மணிமிடைப்பவளம் தெளிவுரை - 1960, 1964,1970.    
                   (3)
அகநானூறு - நித்திலக்கோவை தெளிவுரை - 1962, 1970. (இவை மூன்றும் சென்னைப் பாரி நிலையத்தாரின் வெளியீடுகளாகும்)

புறநானூறு 

                 
உ. வே. சா. அவர்களுடைய புறநானூற்றின் மறுபதிப்புகள் வருமாறு: 1923, 1935, 1950, 1956, 1963, 1971. புறநானூற்றினை உரையுடன் வழங்கிய இவர் 1936 இல் மூலம் மட்டும் வெளியிட்டுள்ளார். ஔவ. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் புறநானூற்றினை இருபகுதிகளாக 1947 இல் பதிப்பித்துள்ளார். இவருடைய மறுபதிப்பு 1952 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலாக வெளிவந்துள்ளது. பொ. வே. சோமசுந்தரனாரின் கழக உரை 1955 இலும், புலியூர்க்கேசிகனின் எளிய உரை 1958, 1959 இலும், மர்ரே பதிப்பாக 1958, 1981ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளது.

                     
இதுகாறும் சங்க இலக்கியத்துக்கு எழுந்த பல்வேறுப் பதிப்புகளைப் பார்த்தோம். பதிப்பாசிரியர் அனைவருடைய பதிப்புநெறிகளையும் தொகுத்து ஆராயும்போது பழம்பதிப்புகளின் கூறுகளை உணரமுடியும். விரிவஞ்சியும், காலச்சுருக்கத்தைக் கருதியும் இங்கு ஒரு சில பதிப்பாசிரியர்களுடைய நெறிமுறைகள் ஆராயப் பெறுகின்றன.நற்றிணையின் பதிப்புகள் குறித்து ஆராய்ந்துவரும் த. கோ. ப. அவர்கள் நற்றிணையில் அமைந்துள்ள பதிப்பு நெறிகளாகப் பின்வரும் 11 நெறிகளைக் குறிப்பிடுவர்.
                        (1)
தலைப்பு : பாட்டு எண் : திணை-கூற்று.
                        (2)
மூலம்:
                        (3)
ஆசிரியர்பெயர்:
                        (4)
பழங்குறிப்பு *-------------------*ஆசிரியர் பெயர்.
                        (5)
பொருள்கோள்முறை :
                        (6)
மரபு தழுவிய பொழிப்புரை :
                        (7)
கருத்துரை
                        (8)
அருஞ்சொற்பொருள் :
                        (9)
சிறப்புக்குறிப்பு : இறைச்சி, உள்ளுறை, பாடத்தேர்வுக் குறிப்புகள்:
                       (10)
மேற்கோளாட்சி :
                       (11)
ஒப்புமை:

நற்றிணை      

                   
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915) அவர்கள் எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை உரை, அகநானூறு போன்ற நூல்களை வெளிப்படுத்த வேண்டுமென்று பெருமுயற்சி எடுத்தார். ஆனால் நற்றிணை ஒன்றுதான் அவரால் பதிப்பிக்க முடைந்தது.பதிப்பிக்கும் பொழுது பல தமிழறிஞர்களுடைய உதவியும் நாடினார். அவருக்குக் கிடைத்த ஏட்டுப்பிரதிகளில் 234 வது பாடலும், 385 வது பாடலின் பின் குறிப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.

குறுந்தொகை 

                   
சௌரிப் பெருமாளரங்கன் (1915) குறுந்தொகையைப் பதிப்பிக்கும் பொழுது, தமக்குத் துணையாக அருந்தொகையுதவிய பெருஞ்செல்வர்கள் பற்றித் தம்நூலின் கண் உதவியுரைத்தல்என்னும் தலைப்பின்கீழ் மிக விரிவாகக் கூறியுள்ளார். இந்நூலுள் பலமாறுபாடுகளும் செய்துள்ளார். அவற்றையெல்லாம் எஞ்சியவைகளும் பிறவும்என்னும் தலைப்பின்கீழ்த் தெரிவித்துள்ளார். அவற்றுள் இடக்கர்ச் சொல்லாகிய குஃறொடரன் மொழி இந்நூலில் ஒன்பது இடங்களில் வருவதைக்குறிப்பிட்டு அவற்றை நீக்கி வேறு பாடங்களில் பதிப்பித்துள்ளார்.

                  
முதற்பதிப்பாக விளங்கும் இவருடைய பதிப்பிலும் குறுந்தொகைப் பாடல்கள், இறையனார் அகப்பொருள் உரையிலும், தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும் எங்கெல்லாம் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன என்கின்ற விரிவானப் பட்டியலையும், பதிப்பாசிரியர் தொகுத்து தருவது பிற்கால ஆய்வாளருக்கும் பெரும்பயனாய் அமைகின்றது. டாக்டர். உ. வே. சா, பதிப்புகளுக்கு முன்னரே சிறந்த பதிப்பிற்குரிய சிறப்புகள் பலவற்றை இப்பதிப்புப் பெற்று விளங்குவது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

உ. வே. சா. 

                
பொதுவாக உ. வே. சா. அவர்கள் விசேட உரையில் அரிய சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருதல், உரையாசிரியர் தரும் பொருள்விளக்கங்களை எடுத்துரைத்தல், பதவுரையில் விளக்கம் பெறாத செய்யுள் விகாரங்களை எடுத்துரைத்தல், உவமைகள், அடைகள், பிரதிபேதங்கள் முதலானவற்றை விசேட உரையில் எடுத்து உரைத்துள்ளார். அவர் விசேட உரையில் கையாண்ட ஒரு சிலவற்றை மட்டும் இங்கு காண்போம். 

                
சான்றாக கருவி மாமழை’(குறுந் 42 ) என்ற தொடரில் அமையும் கருவிஎன்ற சொல்லிற்குத் தொகுதிஎன்ற பொருள் பதவுரையில் தரப் பெற்றுளது.இத் தொடரை விசேடவுரையில் குறிப்பிடும்போது (கருவிமாமழை) மின், இடி முதலாகிய தொகுதியை உடைய பெரிய மழை என்று விளக்குகிறார். இது புறநானூற்று உரையை (159 : 19) ஒட்டி அமைந்தது.
                
கெட்டிடத்து - கெட்ட இடம் கெட்டிடமாயிற்று - : தொகுத்தல் விகாரம் (குறுந். வி.ரை) பக்கம் 97 1          

பாடபேதம்

                      ’
பலர்புகு வாயில்டைப்பக் கடவுநர்குறுந்(118-3அடி)அடையக் கடவுநர் (பி.பேதம்) எனப் பிரதி பேதமாக வருவதையும் விசேடவுரையில் சுட்டிக் காட்டியுள்ளார். வாயில் அடையக்கடவுநர் என்பது பாடமாயின் வாயிலின்கண் உள்ளாரை ஒருவர் விடாமல் முற்றவும் ஆராய்வாராய் வருபவர்கள் உளீரோஎன்று கேட்பவும் தலைவர் வந்திலரென்று பொருள் கொள்கஎன்று உரைத்துள்ளார். (பக்.240) 2

                      
உ. வே. சாவின் முதற் பதிப்பில் இடம் பெற்றுப் பிற்பதிப்பில் இடம் பெறாதவை:
                      
குறுந். 129 . மாக்கடல் நடுவன் எலுவசிறாஅர்எனும்பாடல் முழுவதும் தலைவன் பாங்கற்குரைத்ததுகோப்பெருஞ்சோழன் பாடியது. (பக்.258) 3
                       
ஐங்குறுநூறு

                    
உ. வே. சாவின் மறுபதிப்பு 1920ல் வெளிவந்தது. முதற்பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் ஒரு சில வேறுகள்தான் காணப்படுகின்றன. பதிப்புப்பற்றிய செய்திகளை உ. வே. சா. அவர்கள் நூலின் முகவுரையிலே அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம். பழைய கையெழுத்துப் பிரதிகளில் அறிந்த பிரதிபேதங்களும், அரும்பதவகராதியில் பழைய நூலாராய்ச்சிக்கு இன்றியமையாத சில குறிப்புகளும் இப்பதிப்பிற் சேர்க்கப்பெற்றுள்ளன. சிலசில இடத்து மூலம் மட்டும் தனியேயுள்ள பிரதிகளின் பாடம் வேறாகவும் இந்நூற் பழைய உரையாசிரியர் கொண்ட பாடம் வேறாகவும், மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கும் நச்சினார்க்கினியார் முதலியோர் கொண்ட பாடம் வேறாகவும், அவ்வப் பிரதிகளில் காணப்பட்டன. அவற்றையெல்லாம் ஒருங்கே தொகுத்துப் பிரதிபேதமாக அவ்வப் பக்கங்களின் இறுதியிற் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பிரதிகளிலுள்ளவாறே பதிப்பித்தமையால் அவற்றுட் சில பாடபேதங்களுக்குப் பொருள்கள் புலப்படவில்லை. 

ஔவை சு. துரைசாமிப்பிள்ளை

                   
அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பாகிய இவருடைய பதிப்பில் ஒவ்வொரு திணைக்குரிய ஆசிரியர் வரலாறும், சிறப்பிடம் பெற்ற கருப்பொருள்களைப் பற்றிய உலகியல் விஞ்ஞாணம், தத்துவம் முதலிய கூறுகளோடு விரவிய ஆராய்ச்சியும் ஆங்காங்கு இந்நூலின்கண் சேர்த்துள்ளார். மெலும் அவ்வப் பாடல்களின்கீழ் பழைய உரை, உள்ளுறை உவமம், பாடவேறுபாடு என முறையாக அமைத்துள்ளார். எடுத்தாண்ட மேற்கோள் செய்யுளின் விவரத்தைப்பற்றி அந்தந்த பக்கத்தின்கீழே குறித்துக்காட்டியுள்ளார். உ. வே. சா. அவர்கள் சுட்டிக்காட்டிய பாட வேறுபாட்டினையே தம் நூலிலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

                   
மொத்தத்தில் உ.வே.சா. பதிப்பிற்குப் பின் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பானது செம்மைப்பதிப்பாகவும், திருத்திய பதிப்பாகவும் காணப்படுகிறது. மேலும் சங்க இலக்கியத்தை ஆராய விழைவோருக்கு இவருடைய பதிப்பு ஒருகை விளக்காக அமையும். உ. வே. சா. அவர்களுடைய பதிப்பில் 490 ஆம் பாடலில் விடுபட்ட இரண்டு மூன்று வரிகள் யாவும் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களுடைய பதிப்பிலும், கழக வெளியீட்டிலும் முழுமை பெற்றுள்ளன.

கழக வெளியீடு :- பொ. வே. சோமசுந்தரனார்

                   
இவருடைய பதிப்பு முறையை நோக்கும் போது துறைகளுக்குச் சிறந்த விளக்கமும், பழைய உரையின் கீழ்த் தெளிவான சொற்பொருளும், இவற்றை விளக்கும் விரிந்த விளக்க உரையும், இலக்கணக் குறிப்புகளும் காணலாம்.

பாடவேறுபாடு

பாடல் வரி                 உ. வே. சா. பதிப்பு                கழக பதிப்பு
 
36:5                             பயலை                                  பசலை
37:2                            
பயந்து                                   பசந்து
38:2                           
தன்சொலுணர்ந்தோர்           தன்சொல்லுணர்ந்தோர்
70:5                           
பேஎ, யனையமியாஞ்           பேஎயனையமியாஞ்சேய்
                                  
சேய் பயந்தனமே.                பயந்தனமே.
                                  (
பா.பே) பே எயனை             (பா.பே)பே எயனையம்
                                   
யம் யாஞ்சே                        யாஞ் சேய்
                                  
பயந்தனை சென்மே           பயந்தனைசென்மே
68:1                          
கணைக்காலாம்ப                  கணைக்காலாம்பல்
83                               
வரைந்த அணுமைக்          வரைந்தணிமைக்கண்ணே
                                 
கண்ணே      
85:3                         
முரநி                                        --------------------
                                 (
பா.பே)ஊரநின்                      (பா.பே)மூரநின்
90:2                           
மாண்குன                              மாண்குணம்
93:1                          
நல்லேற்றின மேயல் 
                               
நல்லேறின மேயல்(பா.பே)   நல்லநின்மேயல்
96:1                         
அணிநடையெருமை                ---------------------
                               
அணிநிறவெருமை                அணிநிறவெருமை
97:4                            
பொய்கைப்பூவினு                பொய்கைப் பூவினும்
 

எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

நற்றிணை


1
நற்றிணை உரையுடன்
பின்னத்தூர்அ.நாராயணசாமிஐயர்
பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர்,  I , 1945
2
நற்றிணை உரையுடன்
பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சென்னை, I 1952, II 1956
3
நற்றிணை நானூறு
பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சென்னை, III, 1962
4
நற்றிணை
பொ.வே.சோமசுந்தரனார் ஆய்வுரை
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் சென்னை, மறுபதிப்பு IV, 1967
5
நற்றிணை (இருபகுதிகள்) 
ஔவை. சு.துரைசாமிப்பிள்ளை
அருணா பப்ளிகேஷ்ன்ஸ், சென்னை, 1966
6
நற்றிணை மூலம்
எஸ்.ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி,சென்னை I 1957, II 1981
7
நற்றிணை தெளிவுரை
புலியூர் கேசிகன்
பாரி நிலையம், சென்னை, I 1967





 

எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

குறுந்தொகை


1
குறுந்தொகை
சௌரிப்பெருமாளரங்கன்
வித்தியாரத்திநாகரம் பிரஸ்,I , 1915
2
குறுந்தொகை
கா.ரா.நமச்சிவாய முதலியார்
குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் I, 1920
3
குறுந்தொகை
இராமரத்தின ஐயர்
கலாநிலையம், புரசவாக்கம், I, 1930
4
குறுந்தொகை மூலம்
சோ.அருணாசலதேசிகர்
சோ.அருணாசலதேசிகர், 1933
5
குறுந்தொகை உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர்.உ.வே.சாமிநாதையர்
டாக்டர்.சாமிநாதையர் I 1937, II 1947, IV 1962
6
குறுந்தொகை உரையுடன்
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம் சென்னை, I 1955, மறுபதிப்பு, 1955, 1972
7
குறுந்தொகை மூலம்
எஸ்.ராஜம் 
மர்ரேஅண்டுகம்பெனி, சென்னை,I 1957, II 1981
 8
 குறுந்தொகை விளக்கம்
 ரா.இராகவையங்கார்
 அண்ணாமலைப்பல்க்லைக்கழகம் III 1958
9
குறுந்தொகை தெளிவுரை
புலியூர் கேசிகன்
பாரிநிலையம், சென்னை, I 1965
10
எளிய சொற்களில் இனிய குறுந்தொகை
மு.ரா.பெருமாள்முதலியார்
பழநியப்பாபிரதர்ஸ், II 1970
11
குறுந்தொகை மூலமும்
மு.சண்முகம்பிள்ளை
தமிழ்ப்பல்கலைக்கழகம், I 1985
12
குறுந்தொகைப் பெருஞ்செல்வம்
சாமி.சிதம்பரனார் 
இலக்கியநிலையம்,சௌராஷ்டிராநகர்சென்னை, I 1985
13
குறுந்தொகைக்காட்சிகள் மூலமும் விளக்கமும்
சக்திதாசன் சுப்பிரமணியன்
தமிழகம், சென்னை, I 1958

எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

பதிற்றுப்பத்து


1
பதிற்றுப்பத்து பழைய உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் I 1904
2
பதிற்றுப்பத்து பழைய உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் II 1920, III 1941, IV 1945, V 1949, VI 1957
3
பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும்
ஔவை. சு.துரைசாமிப்பிள்ளை
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1957, II 1981
4
பதிற்றுப்பத்து மூலம்
பண்டிதர் சு.அருளம்பலம்
யாழ்ப்பாணத்துக் காரை நகர் அ.சிவானந்தநாதன் வெளியீடு I 1960
5
பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை 
பண்டிதர் சு.அருளம்பலம்
யாழ்ப்பாணத்துக் காரை நகர் அ.சிவானந்தநாதன் வெளியீடு I 1963
6
பதிற்றுப்பத்து ஆராய்ச்சி உரை இரண்டாம் பாகம்
புலியூர்க்கேசிகன்
பாரி நிலையம், சென்னை I 1974


எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

பரிபாடல்


1
பரிபாடல் பரிமேலழகர் உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் I 1918, மறுபதிப்பு 1935, IV 1956
2
பரிபாடல் மூலமும் உரையும்
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1957, மறுபதிப்பு 1964, 1969
3
பரிபாடல் மூலம்
எஸ். ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1957, II 1981
4
பரிபாடல் தெளிவுரை
புலியூர்க்கேசிகன்
பாரி நிலையம், சென்னை I 1971


எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

கலித்தொகை


1
கலித்தொகை (உரையுடன்)
ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை
ராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை I 1887
2
கலித்தொகை (இருதொகுதி)
1.
பாலைக்கலி, குறிஞ்சிக்கலி
மருதக்கலி, முல்லைக்கலி
இ.வை.அனந்தராமையர்
இ.வை.அனந்தராமையர் I 1925
இ.வை.அனந்தராமையர் I 1925
3
மருதக்கலி, நெய்தற்கலி
இ.வை.அனந்தராமையர்
இ.வை.அனந்தராமையர் I 1931
4
கலித்தொகை மூலம்
இ.வை.அனந்தராமையர்
இ.வை.அனந்தராமையர் I 1930
5
கலித்தொகை உரையுடன்
காழி.சிவ.கண்ணுசாமி, தமிழ்மலை இளவழகனார்
பன்னூற்கழகம், குயப்பேட்டை, சென்னை, 1937
6
பாலைக்கலி
தை.ஆ.கனகசபாபதி முதலியார்
காசி.விசுவநாதன் செட்டியார் பாகனேரி I 1938, மறுபதிப்பு 1943, III 1949, IV 1955, V 1958, VI 1962, VII 1967
7
கலித்தொகை மூலமும் விளக்கமும்
சக்திதாசன் சுப்பிரமணியன்
ரமா பப்ளிகேஷன்ஸ்சென்னை 1958
 8
கலித்தொகை
டாக்டர் மா.இராசமாணிக்கனார்
வள்ளுவர் பண்ணை 1958
9
கலித்தொகை மூலம்
எஸ். ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1957, II 1981
10
கலித்தொகை விளக்கவுரை
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1969, II 1970
11
கலித்தொகை தெளிவுரை
புலியூர்க்கேசிகன்
தேனருவிப் பதிப்பகம் சென்னை I 1958, II 1965
பாரி நிலையம் III 1971
12
கலித்தொகை (முழுமையுடன்) மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
இ.வை.அனந்தராமையர்
தமிழ்ப்பல்கலைக் கழகம் தஞ்சாவூர், மறுபதிப்பு 1984

எண்
நூற்பெயர்
பதிப்பாசிரியர்
வெளியீட்டகம்/பதிப்பகம்/அச்சகம்/ பதிப்பு /ஆண்டு

அகநானூறு


1
அகநானூறு
சேதுசமஸ்தானம் மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ரா.இராகவையங்கார்
கம்பர்விலாசம் இராஜகோபாலய்யங்கார் I 1920, II 1923, III 1933
2
அகநானூறு - களிற்றி யானை நிரை
கம்பர்விலாசம் இராஜகோபாலய்யங்கார்
கம்பர்விலாசம் இராஜகோபாலய்யங்கார் 1926

3
அகநானூறு - களிற்றி யானை நிரை
உரையாசிரியர் : ந.மு.வெங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை
தமிழ் வெளியீட்டுக்கழகம், I 1943
4
அகநானூறு - மணிமிடை பவளம்
உரையாசிரியர் : ந.மு.வெங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை
தமிழ் வெளியீட்டுக்கழகம், I 1944, மறுபதிப்பு 1959, V 1964
5
அகநானூறு - நித்திலக் கோவை
உரையாசிரியர் : ந.மு.வெங்கடசாமி நாட்டார் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை
தமிழ் வெளியீட்டுக்கழகம், I 1944, V 1963
6
அகநானூறு மூலம்
எஸ்.ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1958, II 1981
7
அகநானூறு களிற்றியானை தெளிவுரை
புலியூர்க்கேசிகன்
பாரி நிலையம் சென்னை, I 1960, II 1963, III 1971
 8
அகநானூறு - மணிமிடை பவளம்
புலியூர்க்கேசிகன்
பாரி நிலையம் சென்னை, I 1960, II 1964, III 1970
9
அகநானூறு - நித்திலக் கோவை
புலியூர்க்கேசிகன்
பாரி நிலையம் சென்னை, I 1961, II 1970
10
அகநானூறு உரையுடன்
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1970
11
அகநானூறு - களிற்றி யானை 1-50
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1966

12
அகநானூறு 121 - 300
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1970

  


புறநானூறு


1
புறநானூறு பழைய உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் I 1894, II 1923, III 1935, IV 1950, V 1956

புறநானூறு பழைய உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் , IV 1963 VI 1971
2
புறநானூறு உரையுடன் (இருபகுதி 1 -200)
ஔவை. சு.துரைசாமிப்பிள்ளை
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1947 maRupathippu 1952 1967
3
புறநானூறு உரையுடன் (இருபகுதி 201 -400)
ஔவை. சு.துரைசாமிப்பிள்ளை
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1962
4
புறநானூறு மூலம்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
3618, மறுபதிப்பு 1935, IV 1956
5
புறநானூறு
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1955
6
புறநானூறு மூலம்
எம்.ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1958, II 1981
7
புறநானூறு தெளிவுரை
புலியூர்க்கேசிகன்
கேசிகன் பதிப்பகம்சென்னை I 1958மறுபதிப்பு 1950



பத்துப்பாட்டு

1
பத்துப்பாட்டு (முழுமையுடன்) நச்சினார்க்கினியார் உரையுடன்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் I 1889, II 1918, III 1931 1958
2
பத்துப்பாட்டு மூலம்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் சாமிநாதையர் I 1931
3
பத்துப்பாட்டு உரையுடன் (இறுபகுதி)
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1966  மறுபதிப்பு 1962, 1966, 1968, 1971
4
பத்துப்பாட்டு உரையுடன் 
வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்
வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் ம்பெனி சென்னை-5 1961
5
பத்துப்பாட்டு மூலம்
எம்.ராஜம்
மர்ரே அண்டு கம்பெனி, சென்னை I 1957, II 1981
6
Pathuppattu Ten Tamil Idylls
T.V.Chelliah
S.S.W.P.S. Madras (கழகம்) I 1946 II 1962



திருமுருகாற்றுப்படை

1
திருமுருகாற்றுப்படை
சு.அருளம்பலவானர்
யாழ்ப்பாணம் 1937
2
திருமுருகாற்றுப்படை
ஆறுமுகநாவலர்
விக்டோரியா அச்சுக்கூடம்1917, மறுபதிப்பு 1947
3
திருமுருகாற்றுப்படை மூலம்
அ.மகாதேவ செட்டியார்
ஸ்ரீசாது இரத்தினசற்குரு புஸ்தகசாலை சென்னை1924
4
திருமுருகாற்றுப்படை மூலமும் பொருட்சுருக்கமும் பதவுரையும் குறிப்பும்
தை.ஆ. கனகசபாபதி முதலியார்
கே. பழனியாண்டிப்பிள்ளை கம்பெனி சென்னை 1 1937
5
திருமுருகாற்றுப்படை
சரவணப்பெருமாளையர்
விக்டோரியா அச்சுக்கூடம் சென்னை 1902
6
திருமுருகாற்றுப்படை
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை, I 1955
7
திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, IV 1946
8
திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரையுடன்
வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்
ஆனந்த பார்வதி அச்சகம்,சென்னை 1951
9
திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து
தொகுப்பு கே.எம். வேங்கடராமைய்யா
திருப்பனந்தாள் காசிமடம், I 1959
10
திருமுருகாற்றுப்படை சிற்றாராய்ச்சி
எம்.ஆறுமுகம்பிள்ளை
1927
11
திருமுருகாற்றுப்படை (வழிகாட்டி)
கி.வா.ஜகந்நாதன்
அல்லயன்ஸ் கம்பெனி சென்னை, 1947
12
திருமுருகாற்றுப்படை
சுப்பராய முதலியார்
பாரதி விலாச அச்சுக்கூடம், பரிதாபி
13
திருமுருகாற்றுப்படை
மு.ரா.சாமி
மூவர் பதிப்பகம்,காரைக்குடி, 1966
14
திருமுருகாற்றுப்படை மூலமும் தெளிவுரையும்
இரா. இராதாகிருஷ்ணன்
வள்ளலார் ஞானசபை,புதுக்கோட்டை IND
15
உதயசூரியன்
புலியூர்க்கேசிகன்
மல்லிகைப் பதிப்பகம்,தியாகராய நகர்,சென்னை, I 1960
16
திருமுருகாற்றுப்படை விளக்கம்
கி.வா.ஜகந்நாதன்
அமுத நிலையம்,சென்னை, 1970




பொருநராற்றுப்படை


1
பொருநராற்றுப்படை
மகாதேவ முதலியார்
லோகநாதன் & பிரதர்ஸ், I 1907
2
பொருநராற்றுப்படை
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்சென்னை, I 1955


சிறுபாணாற்றுப்படை


1
சிறுபாணாற்றுப்படை விளக்கம்
வி.கந்தசுவாமி முதலியார்
ஒற்றுமை ஆபீஸ்சென்னை, 1947
2
சிறுபாணாற்றுப்படை விளக்கம்
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், 1932
3
சிறுபாணாற்றுப்படை விளக்கம்
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்சென்னை, I 1955
4
சிறுபாணாற்றுப்படை விளக்கம்
மு.பி.பாலசுப்பிரமணியன்
முத்து நிலையம்அய்யாபுரம்,நெல்லை, I 1964



பெரும்பாணாற்றுப்படை


1
பெரும்பாணாற்றுப்படை
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
2
பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சி
ரா.இராகவையங்கார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,சிதம்பரம், I 1949
3
பெரும்பாணாற்றுப்படை
அருளம்பலம்
யாழ்ப்பாணம், 1937
4
பெரும்பாணாற்றுப்படை
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை, I 1955



முல்லைப்பாட்டு


1
முல்லைப்பாட்டு
மறைமலையடிகள்
மறைமலையடிகள் பல்லாவரம், I 1903, IV 1931
2
முல்லைப்பாட்டு மூலமும் உரையும்
உ.வே.சா.
கேசரி அச்சுக்கூடம், I 1927
3
முல்லைப்பாட்டு
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார், I 1929
4
முல்லைப்பாட்டு நச்சினார்க்கினியர் உரையுடன்
க.ப.சந்தோஷம் நடராஜபிள்ளை
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை, I 1930, மறுபதிப்பு 1947
5
முல்லைப்பாட்டு
இளவழகனார்
இளவழகனார், வாலாஜாபேட்டை, 1939
6
முல்லைப்பாட்டு மூலமும் பொருட்சுருக்கமும்
தை.ஆ.கனகசபாபதி முதலியார்
தை.ஆ.கனகசபாபதி முதலியார், 1943
7
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை, I 1955



மதுரைக்காஞ்சி


1
மதுரைக்காஞ்சி
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, I 1956


நெடுநல்வாடை


1
நெடுநல்வாடை
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், 1931
2
நெடுநல்வாடை
பொ.வே. சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, I 1956



குறிஞ்சிப்பாட்டு


1
குறிஞ்சிப்பாட்டு
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, I 1956


பட்டினப்பாலை


1
பட்டினப்பாலை ஆராய்ச்சி
மறைமலையடிகள்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை, I 1906, II 1919, மறுபதிப்பு - 1930, 1956, 1957
2
பட்டினப்பாலை
வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார்
வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார், I 1933, மறுபதிப்பு 1938
3
பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும்
ரா.இராகவையங்கார்
அண்ணாமலை நகர், I 1951
4
பட்டினப்பாலை
பொ.வே.சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை, I 1930
5
பட்டினப்பாலை
சாமி சிதம்பரனார்
இலக்கிய நிலையம், சௌராஷ்டிர நகர், சென்னை, I 1967



மலைபடுகடாம்


1
மலைபடுகடாம்
பொ.வே. சோமசுந்தரனார்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, I 1956

1.
உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை. பக்கம்-97
2.
உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை. பக்கம் - 240.
3.
உ. வே. சாமிநாதையர், குறுந்தொகை. பக்கம் - 258.
4.
உ. வே. சாமிநாதையர், ஐங்குறுநூறு. பக்கம் - 5  


தட்டச்சு உதவு - திரு.வடிவேலு கன்னியப்பன், கிருமி, சுபாஷினி  ட்ரெம்மல்
Last Updated ( Saturday, 17 July 2010 14:13 )

இணைப்புகள்
·         முகப்பு- Home
·         Disclaimer Notice
முதுசொம் வளங்கள்
·         கலைகள்
·         வரலாறு
·         THF Ebook List
பிற வளங்கள்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை