சங்க இலக்கியச் சாரல்
சங்க இலக்கியச் சாரல்
-முனைவர் வி.தேன்மொழி.
ஒரு இனத்தின் வரலாற்றுப் பதிவு இலக்கியம் ஆகும். இவ்விலக்கியம் அந்த இனத்தின் பண்பாடு, பழக்கவழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். அவ்வகையில் அக்காலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கும் பெட்டகமாக சங்க இலக்கியத்தினைக் குறிப்பிடலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனப்படும் இருபெரும் பிரிவினுள் குறுந்தொகை எட்டுத்தொகையினுள் அடங்கும். மிகக் குறைவான அடிவரையறையும் பொருளாழமும் மிக்க பாடலாக இலக்கிய ஆர்வலர்களால் குறுந்தொகை குறிப்பிடப்படுகிறது.
குறுந்தொகையில் நானூறு பாடல்கள் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலேயே மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல் குறுந்தொகைப் பாடலாகும். இருபத்து ஒன்பது உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்றுச் செய்திகளும் வாழ்வியல் செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கீழ்வரும் பாடல் ஒரு பெண்ணின் உள்ளத்தினை மிக அழகாக சொற்களால் படம் பிடித்துக் காட்டுகிறது.
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. - (குறுந்தொகை – 49) அம்மூவனார்.
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. - (குறுந்தொகை – 49) அம்மூவனார்.
பாடற் கருத்து
காண்பதற்கு அணிலின் பல்லினை ஒத்திருக்கின்ற தாது முதிர்ந்த முள்ளிச் செடி இருக்கின்ற நிலத்தினை உடையவனும் நீலமணியின் நிறத்தினை ஒத்திருக்கின்ற கடல்நீரினைக் கொண்ட கடற்கரைக்கு உரிமையுடையவனுமாகிய தலைவனே! இப்பிறப்பு மாறி மறு பிறவி வந்தாலும் நீயே என் கணவனாக இருப்பாயாக! நானே நீ விரும்பும் மனைவியாக இருப்பேனாக! என்று தலைவி கூறுவதாகப் பாடலின் கருத்து அமையப் பெற்றுள்ளது.
பொருள் நயம்
வெளிப்படையான கருத்து அமையப்பெற்றிருந்தாலும் ஆழ்ந்து சிந்திக்கும்போது இலக்கிய நயமுடைய சிறந்த பொருளினை உள்ளடக்கிக் கற்பவரின் சிந்தனைக்கு விருந்தளிப்பது கவிதையின் இயல்பாகும். அவ்வகையில் இக்குறுந்தொகைப் பாடல் இலக்கிய நயம் பாராட்டுபவர்களால் குறிப்பிடப்படும் உள்ளுறை, உவமம் ஆகியவற்றை உள்ளடக்கியதாய் அமைந்துள்ளது.
“அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
... ... ... ... ... மாநீர்ச் சேர்ப்ப”
... ... ... ... ... மாநீர்ச் சேர்ப்ப”
என்னும் பாடலடிகள் தலைவன் வாழ்கின்ற நிலப் பகுதியில் உள்ள முள்ளிச் செடியினை வருணிப்பதாக அமையப் பெற்றிருந்தாலும் அது தலைவனின் பண்பு நலனை விளக்குவதாய் அமைந்துள்ளது. முள்ளிச்செடி வெளியில் காண்பதற்கு கூர்மையான முட்களைக் கொண்டிருந்தாலும் அது தாது முதிர்ந்து இனிமையான மணம் பரப்புவது போல் தலைவன் வேறு மகளிரை நாடிச் சென்ற செயல் வெளியில் பார்ப்பதற்கு நம் மீது அன்பு இல்லாதது போல் தெரிந்தாலும் உட்புறத்து நம்மீது குறையாத அன்பு கொண்டவன் என்பதைக் குறிப்பிடுவதாய் அமைந்துள்ள இப்பாடலின் கருத்துச் சிறப்புக் குறிப்பிடத்தகுந்ததாகும்.
“நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே”
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே”
என்னும் பாடலடிகளில் மறுபிறவியிலும் நானே உன் மனைவியாக அமைவேனாக என்னும் கருத்து வெளிப்படையான பொருளைத் தருவதாக அமைந்திருக்கின்றது ஆனால், தலைவி கூறுவதாக அமையப்பெற்றுள்ள சூழலை ஆழ்ந்து நோக்கும் போது “நெஞ்சு நேர்பவள்” என்னும் தொடர் இப்பிறவியில் தலைவன் வேறொரு பெண்ணை (பரத்தை) நாடிச் சென்றமையால் தலைவன் விரும்பும் மனைவியாக அடுத்த பிறவியிலாவது வாழ வேண்டும் என்னும் பெண்ணின் ஆழமான உள்ளுணர்வினை விளக்குவதாய் இப்பாடலடிகள் அமைந்துள்ளது.
இத்தகைய கருத்து,
“செம்புலப் பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” குறுந்தொகை – 40:5
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” குறுந்தொகை – 40:5
என்னும் குறுந்தொகைப் பாடலின் காதற் சிறப்பினை ஒத்ததாய் அமைந்துள்ளது. இங்ஙனம் கற்போருக்கு இன்பம் தருவதாய் அமைந்துள்ள குறுந்தொகையின் இலக்கிய நயமும் சிறப்பும் என்றும் போற்றுதற்குரியதாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக