பழங்காலத்தில் போர்
பண்டைக் காலத்தில் புகழ், மண், பெண் ஆகியவற்றின் காரணமாக தமிழக மன்னர்களிடையே போர் ஏற்பட்டது. போர் தொடுப்பதற்கு ஏதேனும் காரணமில்லா விட்டாலும் தங்களுடைய போர்த் தினவினைப் போக்கிக் கொள்வதற்காகவும் போர் ஏற்பட்டது. இருப்பினும் பெண் காரணமாக பழங்காலத்தில் பல போர்கள் ஏற்பட்டன. இவ்வாறு பெண் காரணமாக நிகழ்ந்த போர்களைக் குறிப்பிடும் புறத்திணைத் துறையாக மகட்பாற் காஞ்சித் துறை விளங்குகின்றது. வணிகரும், வேளாளரும் தமது மகளை மன்னர்களுக்குக் கொடுப்பதற்கு அஞ்சினர். அதனாலேயே போர்கள் மூண்டன எனலாம்.
மகட்பாற் காஞ்சி
பெண் கேட்டு வந்த வேந்தனை இழித்துரைத்து, அவனுக்குத் தன்னுடைய மகளைப் பெண் கொடுக்க மறுக்கின்றான் ஒரு பெண்ணிணுடைய தந்தை. இத்தகைய நிலையைக் கண்ட வேந்தன் சினமுற்று போர் தொடுப்பதும், பொருத்தமின்றி தனது மகளை விரும்பிய மன்னன் மீது ஒருவன் மாறுகொண்டு போர் செய்ய எத்தனிப்பதும் மகட்பாற் காஞ்சி என்னும் துறையாகும். இம்மகட்பாற் காஞ்சி குறித்து,
‘‘நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்’’ (தொல் - புறம்., 1025- நச்ச.24)
மகட்பா டஞ்சிய மகட்பா லானும்’’ (தொல் - புறம்., 1025- நச்ச.24)
- என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது.
‘பெண்கோள் ஒழுக்கத்தினொத்து மறுத்தல் பற்றிப் பகைவனாக வலிந்து கோடற்கு எடுத்து வந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்ததற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியாகும்’ என்பது நச்சினார்க்கினியர் கூறும் விளக்கமாகும்.
‘ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குவந்து உள்ள மக்கட்கொடை அஞ்சிய மகட்பாற் காஞ்சியும்’ என்பது இளம்பூரணர் விளக்கம். (தொல் - புறம் - இளம் - பக்கம். 131)
‘‘ஏந்திழையான் தருகென்னும்
வேந்தனொடு வேறு நின்றன்று’’ (புறப்-காஞ்சிப்படலம்,கொளு24)
வேந்தனொடு வேறு நின்றன்று’’ (புறப்-காஞ்சிப்படலம்,கொளு24)
- என்பது புறப்பொருள் வெண்பாமாலை. ஒருவன் தன் மகளை விரும்பும் அரசனோடே மாறுபட்டு நின்றது மகட்பாற் காஞ்சி என்னும் துறையாம் என்பது கருத்தாகும்.
மன்னர்களது ஆட்சிக்காலம் சிறந்த நிலையை அடைதற்கு முன், சிறந்த குடியில் பிறந்த ஒரு பெண்ணை நாடாளும் தலைவருக்குக் கொடுக்க மறுத்திருக்க வேண்டும். எனவே, அரசர்களின் ஆட்சி தொடங்கிய காலத்துப் போர்காலத்தில் உயிருக்கு அஞ்சாது போரிடுவதால் அவர்களின் வாழ்க்கை நிலையெண்ணி அவர்கள் விரும்பிக் கேட்ட பெண்ணைப் பெண்ணின் பெற்றோர்கள் தர மறுத்திருத்தல் வேண்டும். அவ்வாறில்லையெனில், தன் கருத்திற்கு ஒவ்வாத அரசர்களுக்குப் பெண் கொடுப்பதற்கு மறுத்திருத்தல் வேண்டும். இதனை அறிந்த புலவர்கள் பெண்ணால் ஏற்படும் அழிவின் நிலை எண்ணிக் கூறுதவதால் இத்துறை காஞ்சித்திணையுள் ஒன்றாக உள்ளது.
தொல் மறக்குடியில் பிறந்த ஒரு மறக்குலப் பெண்ணை எண்வகை குணமும் பொருந்திய ஒருவனுக்கே அக்காலத்து பெண் கொடுத்தல் மரபாக இருந்துள்ளது என்பதை,
‘‘இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்
வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும்
தேசத் தமையதியும் மாசில் சூழ்ச்சியோ
டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட் கொடை நேரார் மதியோர்’’
வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும்
தேசத் தமையதியும் மாசில் சூழ்ச்சியோ
டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட் கொடை நேரார் மதியோர்’’
- என்ற பெருங்கதையின் கூற்றால் நினைவு கொள்ளச் செய்கிறது. தொல்காப்பியத்தில் இக்கருத்தைப் பின்வருமாறு மெய்ப்பாட்டியலுள் தொல்காப்பியர்,
‘‘பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’’
‘‘பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’’
- எனக் கூறியுள்ளார்.
மேற்கூறிய எண் குணமில்லோருக்குப் பெண் கொடுப்பதில்லை என்ற கருத்தினை இந்நூற்பா தெளிவுறுத்துகிறது. மேலும்,
‘‘முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்’’
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்’’
- என்று சிலப்பதிகாரம் தெளிவுறுத்துகிறது.
புறநானூற்றில் மகட்பாற் காஞ்சித்துறை
புறநானூற்றில் மகட்பாற் காஞ்சியாக இருபத்தியோரு பாடல்கள் உள்ளன. இருபது பாடல்கள் முழுமையாகவும் 355 - ஆம் பாடல் பிற்பகுதி சிதைந்த நிலையிலும் அமைந்துள்ளன. (336-இல் தொடங்கி இடையில் வேறு திணை, துறை கலவாது 356 வரை ஒரே திணையின் ஒரே துறையாக அமைக்கப்பட்டுள்ளது) இருப்பினும் 356ஆவது பாடல் காடு வாழ்த்து என்னும் துறைக்குப் பொருந்துவதாக அமைந்துள்ளதை நாம் நன்கறியலாம்.
காடு வாழ்த்து
‘‘மலர்தலை உலகத்து மரபுநன்கு அறியப்
பலர்செலச் செல்லாக் காடுவாழ்த் தொடு’’ (தொல் - புறம் - நச்சர்.24)
பலர்செலச் செல்லாக் காடுவாழ்த் தொடு’’ (தொல் - புறம் - நச்சர்.24)
-என்பது தொல்காப்பியம். ‘அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதும் வருந்துபடியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்து போகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலாலும்’ என்பது நச்சினார்க்கினியர் தரும் விளக்கமாகும்.
‘இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும்’ என்பது இளம்பூரணர் கருத்தாகும். (தொல் - புறம் - இளம் - பக்கம் - 134)
புறப்பொருள் வெண்பா மாலையார் காஞ்சித் திணையுள் காடு வாழ்த்துக் கூறாது யாவருக்கும் பொதுமையான பொதுவியற்பாலுள் அத்துறையைக் கூறியுள்ளார்.
‘‘பல்லவர்க் கிரங்கும் பாடிமிழ் நெய்தல்
கொல்லென ஒழிக்கும் காடுவாழ்த் தின்று’’ (புறப் - பொதுவியற் படலம் - கொளு 35)
கொல்லென ஒழிக்கும் காடுவாழ்த் தின்று’’ (புறப் - பொதுவியற் படலம் - கொளு 35)
- என்பது புறப்பொருள் வெண்பாமாலை. எஞ்சியோர் பலரும் உணரும் பொருட்டு முழங்கும் பெரிய முழக்கத்தையுடைய சாப்பறை கல்லென்று முழங்கா நின்ற சுடுகாட்டை வாழ்த்தியது என்பது விளக்கவுரையார் கூற்றாகும்.
உலகினது நிலையாமை கூறச் சுடுகாட்டின் நிலைமைத் தன்மையை உணர்த்துவது காடு வாழ்த்து என்னும் துறையெனலாம்.
‘‘களரி பரந்து கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீது அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே’’
பகலும் கூஉம் கூகையொடு பிறழ்பல்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீது அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே’’
- என்பது (புறம் : 356) அப்பாடல். களரிநிலம் பரந்து, கள்ளிகள் மிகுந்து, பகலிலும் கூகைகள் கூவுமாறு இருள் அடர்ந்து, பிளந்த வாயையுடைய பேய்மகனும் ஈமத்தீயும் நிறைந்து, புகை படர்ந்த இம் முதுகாடு மனங்கலந்த காதலர்கள் அழுது அழுது பெருக்கிய கண்ணீரால் சுடலையிலே வெந்து நீரான சாம்பலை அளிக்கவுமாக விளங்குகிறது. தன்னை எதிர்த்த எல்லாரையும் வெற்றி கண்டு, உலக உயிர;களுக்கு எல்லாம் தானே முடிவிடமாய் விளங்குவது; தன்னைப் புறங்கண்டு மீள்வோரை என்றும் கண்டறியாதது அது என்பது இப்பாடல் கருத்து.
இப்பாடலானது மகட்பாற் காஞ்சித் துறைக் கருத்தின்றி, காடு வாழ்த்துத் துறையே அமையப் பெற்றுள்ளது என்பது பொருத்தமாகிறது. தொல்காப்பிய உரைகாரர்களாகிய இளம்புரணரும், நச்சினார்க்கினியரும் அத்துறைக்கு இப்பாடலை எடுத்துக் காட்டியுள்ளதன் மூலமாக இப்பாடல் காடுவாழ்த்துத் துறையென்பது சரியெனப் படுகின்றது. இப்பாடலை எழுதியவர் கதையங் கண்ணனார். இவரைத் தாயங் கண்ணனார் என்றும் கூறுவர். இப்பாடலிலுள்ள,
‘‘நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீது அவிப்ப’’
என்புபடு சுடலை வெண்ணீது அவிப்ப’’
- என்ற வரிகளின் கருத்தும் புறப்பொருள் வெண்பாமாலையில் காடு வாழ்த்துத் துறைக்குரிய வெண்பாவில் உள்ள,
‘‘அன்பில்
அமுதகண் ணீர்விடுத்த ஆறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்கும் காடு’’
அமுதகண் ணீர்விடுத்த ஆறாடிக் கூகை
கழுதார்ந் திரவழங்கும் காடு’’
- என்ற கருத்தும் ஒப்பு நோக்கத் தக்கது. யார் யாரை வென்றாலும் சுடுகாட்டை யாரும் புறங் கண்டாரில்லை என்பதைச் சுட்டிக் கூறி உலகின் நிலையாமையைக் கூறுவதே காடுவாழ்த்து என்னும் துறையாகும். இப்பாடலும் அத்துறைக் கருத்தையே பாடுபொருளாகக் கொண்டு திகழ்கிறது. இது மகட்பாற் காஞ்சித்துறை எனில் பொருந்தாது எனலாம்.
மகட்பாற் காஞ்சித்துறைப் பாடல்கள்
மகள் மறுத்தலால் ஏற்படும் அழிவை எண்ணிப் பரணர் மிகவும் வருத்தம் அடைகின்றார். இவர் பாடலாக மட்டும் ஆறு பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
வேந்தன் முதுகுடியினரிடம் பெண் கேட்கின்றான், தர மறுக்கின்றனர். எனவே, வேந்தன் பெரும்படையோடு வந்துள்ளான். அதனால் இருவருக்கும் போர் நிகழ இருப்பதைக் கண்ட பரணர் அப்பெண்ணின் தாயைச் சீண்டிக் கூறுகின்றார்.
‘‘முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையொடு
பகைவளர்த் திருந்த ளிப்பண்பில் தாயே’’
தகைவளர்த்து எடுத்த நகையொடு
பகைவளர்த் திருந்த ளிப்பண்பில் தாயே’’
இதன்மூலம் ஆசிரியர், தாயாவது இப்போர் வாராது தடுத்திருக்கலாமே? அதுவல்லாமல் போரிட்டு அழிதலை விரும்பினளாகிய இவள் ஒரு பண்பில்லாதவளே என்கிறார். மேலும், இவளை இவள் தாய் பெறாதிருக்கக் கூடாதா? பகைவர் புகுந்து பாழ் படுத்தும் நிலை இவளாலன்றோ இவ்வூருக்கு ஏற்பட்டது என அவலத்தின் நிலைநின்று கூறுகின்றார் (புறம் - 336)
சங்கப்புலவர்கள் பெண் காரணமாகப் போரிட்டழிவதைப் பெருமிதமாகக் கொள்ளவில்லை. பெண் காரணமாகப் போரிட்டு அழிவது வருந்தத்தக்கது என்றே கருதினார். இதனை அவர் தம் பாடல்களே சான்று காட்டும்.
இளைஞன் ஒருவன் ஓர் அரச கன்னியைக் கண்டு காதல் கொண்டான். அதனை அறிந்த அரிசில் கிழார், ‘அவருக்காகப் போரிட்டு அவள் அண்ணன்மாரிடம் தோற்றவர் பலராவார்கள். அவளையோ நீயும் விரும்பினை’ என அவனுக்கு அறிவுரை கூறுகின்றார். (புறம் - 342)
‘‘ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’’
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்’’
உடைய இவள் யார்? என ‘வெல்போர் அண்ணல்’ வினவக் கேட்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணார். அவள் அண்ணன்மார்,
‘‘கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்’’ களாவும் பல போர்க்களம் கண்டு ‘அஞ்சுதகவு உடையர்’ களாகவும் உள்ளனர். எனவே, அவளைப் பெறுதல் அரிதென அறிவுறுத்திக் கூறுகின்றார். (புறம் - 353)
பஞ்சியும் களையாப் புண்ணர்’’ களாவும் பல போர்க்களம் கண்டு ‘அஞ்சுதகவு உடையர்’ களாகவும் உள்ளனர். எனவே, அவளைப் பெறுதல் அரிதென அறிவுறுத்திக் கூறுகின்றார். (புறம் - 353)
இது மட்டுமல்லாது அவளும் ‘மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித்தோ’ளாக இருப்பதாக ஒரு புலவர் பாடியுள்ளார். (புறம் - 339)
இனியாவது பரிசப் பொருளைப் பெற்று இவளை மண வேள்வியில் தருவதனால் இவ்வூர்வளம் பெறுமோ? அல்லது இவள் தந்தை மறுத்தலாலே இன்னும் போர்க்களமாகித்தான் தொல்லையுறுமோ? என்று இரங்கிக் கூறுகின்றார் அண்டர் நடுங்கல்லினார் (புறம் - 344)
எழில் பொருந்திய இவள் இருப்பதால் இவ்வூரானது தினம் போர்க்களமாகித் துன்புற்று மிகவும் தொல்லையுறுவதாகச் சில பாடல்களில் புலவர்கள் தங்கள் தங்கள் போக்கில் வருந்திக் கூறுகின்றார்.
சுணங்கனி வனமுலையாளாகிய பூவளை வேட்டு வந்து பெண் கேட்ட ஓர் அரசகுலத்து இளைஞனுக்கு அவளைத் தர மறுக்கவே அவன் போர்க்களம் புகுந்தான். அதைக் கண்ட பரணர் அவன் போரில் வென்று இவளை மணப்பானோ? இல்லை போரிலே மடிந்து வாரா உலகம் புகுவானோ? என்றும் வளமிக்க இவ்வூரானது நாளைத்தன் பெருங்களின் இழப்பதாகுமே! என்றும் மனங் கலங்கிக் கூறுகின்றார். (புறம் - 341)
இவள் தமையன்மார் செல்வத்தையும் வேண்டாது நின்றனர். மேலும், ‘நிரல் அல்லோர்க்குத்தரலோ இல்’ எனப் போர் வேட்டு வஞ்சினம் கூறிக் காத்திருக்கின்றனர். இனி இவ்வூர்தான் என்னவாகுமோ? எனக் கூறுவதன் மூலம் மற்றோர் புலவரின் மன வருத்தம் புலப்படுகிறது. (புறம் 345)
இவ்வாறே பரணரும், மதுரைப் படை மங்க மன்னியாரும் மனம் பொறாது இரங்குவாராயினர். (புறம் - 351) மகள் மறுக்கவே வேந்தர் வந்து ஊரை முற்றினர்.
‘‘வினைநவில் யானை பினிப்ப
வேர்துளங் கினநம் ஊருள் மரனே’’
இனி இவ்வூர் என்னவாகுமோ? என்கிறார் கபிலர் (புறம் - 347)
வேர்துளங் கினநம் ஊருள் மரனே’’
இனி இவ்வூர் என்னவாகுமோ? என்கிறார் கபிலர் (புறம் - 347)
‘வடிவேல் எஃகிற் சிவந்த உண்கண் உடையாளை ஒருவன் கேட்க, தர மறுத்தனர். எனவே, ‘தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில், சினந்த இஞ்சிக் கதுவாய் மூதூர், யாங்காவது கொல்தானே’ என்கிறார். மதுரை மேலைக்கடை கண்ணம் புகுந்தராயத்தனார். (புறம் - 349) (இவ்வாசிரியரை மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தராயத்தனார் என்று புலியூர்க்கேசிகனாருரையில் குறிப்பிட்டுள்ளார்).
‘‘சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பிணைத்தோள் மடந்தை
மான்பினை யன்ன மகிழ்மட நோக்கே?’’
இதனால் வளமிக்க இவ்வூரானது அழகு கெடப் போரும் வந்துவிடுமோ? என இரங்குவாராயினர் பரணர்(புறம் - 354)
வீங்குஇறைப் பிணைத்தோள் மடந்தை
மான்பினை யன்ன மகிழ்மட நோக்கே?’’
இதனால் வளமிக்க இவ்வூரானது அழகு கெடப் போரும் வந்துவிடுமோ? என இரங்குவாராயினர் பரணர்(புறம் - 354)
இவள் அழகு இவ்வூர் ஆடவர் பலரையும் அழித்தலால், நாட்டைக் காப்பவரே எவரும் இல்லாது போகப், பேணுவாரற்று வெறும் பாழிடமாகவே இதனை ஆக்கிவிடும் போலும்! என ‘இவள் நலன் பெரும் பாழ்’ செய்வதாகக் கூறுகின்றார் அண்டர் மகன் குறுவழுதி (புறம்- 346) இவள் தந்தை நெடிய அல்ல பணிந்த மொழியாலனாக இருக்க, இவள் ‘மரம்படு சிறுதீப்போல’ அணங்காயினள் தான்பிறந்த ஊருக்கே என்கிறார் மதுரை மருதனின்நாகனார். (புறம் - 349)
ஓரெயின் மன்னனது ஒரு மடமகளை மணம் பேசி வந்த பலரும் இசைவு பெறாது வறிதே திரும்பியது கண்டு அவளை மணப்பவர் யாவர்தானோ என இளமையது அருமை எண்ணி வருந்துவார் போலும்!(புறம் - 338) மகள் மறுத்துப் போர் ஒன்றையே செய்யும் இவள் தமையன்மார் இவளுக்கு ஏற்றவன்,
‘‘யாராகுவர்கொல் தாமே - நேரிழை
உருத்த பல்சுணங்குஅணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்குவோரே?’’
உருத்த பல்சுணங்குஅணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்குவோரே?’’
- என்கிறார் கபிலர். (புறம் - 337) இப்படிப் போரே செய்து கொண்டிருத்தலால் ‘கதிர்த்து ஒளிதிகழும் நுண்பல் சுணங்கின், மாக்கண் மலர்ந்த முலையா’ளாகிய இவளை மணப்பவர் யாவர் தானோ? என இரங்கிக் கூறுகின்றார் பரணர் (புறம்-352).
நாடகப் பாங்கு
மகட்பாற் காஞ்சியானது நாடகப் பாங்கினும் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த அணிகலன்களை அணிந்து வரும் இவளைக் காண்மின்! என்கின்றானொருவன். அதனை அறிந்து, அவனை நோக்கி அல்லூர் நன்முல்லையார், ‘அவன் தமையன்மார் படையெடுத்தால் எவரும் படையெடுக்க அஞ்சுவர். இவள் தந்தையோ ‘பெருந்தகை மன்ன’ருக்கு வரைந்திருந்தானே’’ என்று கூறி அவளை நீ எண்ணுதல் வேண்டாம் என அவனது எண்ணத்தை விலக்கிக் கூறுகின்றார் (புறம் - 340)
தம் குலத்துப் பெண்ணைப் பெறுவதற்காக எதிர்த்து வரும் வேந்தருக்குப் பெண் கொடுக்க மறுத்ததும் அதனால் உண்டாகும் விளைவுகளைக் கூறுவதும் மகட்பாற் காஞ்சி என்னும் துறையாகும். நிலையாமை கூறும் காஞ்சித்திணையுள் இத்துறை கூறப்பட்டுள்ளதைக் கூர்ந்து உணர வேண்டும். பழங்காலத்து மன்னர்களிடையே மண்ணாசை காரணமாகவும் போர் நிகழ்ந்தன; பெண்ணாசை காரணமாகவும் போர் நிகழ்ந்தன. இப்போர்களின் முடிவு அழிவே என்பதில் ஐயமில்லை! பெண் காரணமாக நடக்கும் போரினையும் அப்போரினால் ஏற்படும் அழிவினையும் எண்ணித் துன்புற்று வருந்துதலையே இத்துறையின் பாடுபொருளாக அமைத்துள்ளனர் எனலாம். இத்துறை சார்ந்த மேற்காட்டிய புறநானூற்றுப் பாடல்கள் யாவும் பெண் காரணமாக எழப் போகின்ற பேரழிவுகளை வெளிப்படையாகவும், குறிப்பாகவும் புலப்படுத்துகின்றன.
பழந்தமிழகத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விடப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனாலும் பெண்களை மணந்து கொள்வதற்கு அரசர்களுக்குள் அல்லது பெண் வேண்டுவோருக்குள் போட்டி ஏற்பட்டு போர் நிகழ்ந்திருக்கலாம் எனலாம். மேலும் ஏதேனும் போட்டி அல்லது வீரத்தைக் காட்டக் கூடிய நிகழ்வுகளை நிகழ்த்தி அதில் வென்றோருக்குப் பெண்களைக் கொடுத்தனர். ஏனெனில் வீரமுடையவனே தனது மனைவியை நன்கு பாதுகாப்பான் என்றொரு எண்ணத்தையும் இம்மகட்பாற் காஞ்சித் துறைப்பாடல்கள் நம்முள் எழுப்புகின்றன.
பழங்காலத்தில் பெண் காரணமாக எண்ணற்ற போர்கள் நடந்திருக்க வேண்டும் என்பதையே மேற்காட்டிய பாடல்கள் நன்கு உணர்த்துகின்றன. இப்போர்களின் விளைவுகளாக எண்ணற்ற மக்கள் அழிந்திருக்கவும் கூடும். இவ்வகை அழிவுகளைத் தடுத்தற்காகவே இத்துறையமைந்த பாடல்களைப் பாடியுள்ளதாகக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக