தமிழில் திணை


தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை.

தொல்காப்பியத்தில் குறிப்பிட்டுள்ள படி,


·         மொழியியல் திணைகள், உயர்திணை மற்றும் அஃறிணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
·         பொருளியல் திணைகள், அகத்திணை மற்றும் புறத்திணைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmv-xrWqx_455sbE5f71QGv-KQXJgZX-J7SQwz6JHCbdz5kCdKdbrZW9mfSzgNs5bQTMQVuuw1CETUoKekejSXSEXTxfk6TuBX0dqhScqJDFEpm7U2zfdLJJt_mNYUEDSzkOR7bGw1SKzs/s320/olai2.jpg

பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை எனும் இரு வகைகளுக்குள் அடங்குகின்றன.

     
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். பாட்டுக்கு உரிய தலைவர்களின் ஒழுக்கத்தை பாடல் பொருளாக பாடுவதை திணை என்றார்கள். 

புறத்திணை - அகத்திணை:
  
புறத்திணை - பழந் தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறத்திணை என வழங்கப்படுகின்றது

அகத்திணை - ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.


ஐந்நிலம்

பண்டைத்தமிழகத்தில் நிலப்பரப்புகள் 5 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.   

    
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த நிலமும்

    
முல்லை - காடும் காடு சார்ந்த நிலமும்
 

     மருதம் - வயலும் வயல் சார்ந்த நிலமும்
 

     நெய்தல் - கடலும் கடல் சார்ந்த நிலமும்
 

     பாலை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற‌ நிலம்

ஐந்து ஒழுக்கங்கள்:

    
குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) 

     முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்)
 

     மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
 

     நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ( வருந்துதல்) 

     பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

ஐந்திணை:

    
வகைப்படுத்தப்பட்ட நிலம் 5, வகைப்படுத்தப்பட்ட ஒழுக்கம் 5, - ஆகியவற்றின் திணிவுகளை ஐந்திணை என்கிறோம்.

அகத்திணைப் பிரிவுகள்:


1.        குறிஞ்சித் திணை
2.        முல்லைத் திணை
3.        மருதத் திணை
4.        நெய்தல் திணை
5.        பாலைத் திணை
6.        பெருந்திணை
7.        கைக்கிளைத் திணை
   இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை.

     
ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம்.

குறிஞ்சித்திணை:


·         குறிஞ்சியாவது, 'மலையும் மலைசார்ந்த இடங்களும்', இயற்கை அழகும், வளங்களும் நிறைந்தனவாக, இளம் பருவத்தாரிடையே 'புணர்தலும் புணர்தல் நிமித்தமும்' செல்லவும், இவைபற்றி எல்லாம் நினைக்கவும், அணுக்கரிடையே (தமக்கு நெருக்கமானவர்) தம் உணர்வை எடுத்து கூறவும் பொருந்துவனவாக அமைந்திருக்கும் நிலப்பகுதிகள். 
·         எனவே, தனித்து வேட்டை மேல் செல்லும் இளைஞனும், புனம் காத்து நிற்கும் கன்னியும் ஒருவரை ஒருவர் கண்டு காதலுற்று ஒன்றுபடுவதற்கு ஏற்ற நிலைக்களமாகி, இந்த துணிவு நிகழ்வதற்கு ஏற்ற வாழ்வியல் அமைந்தது குறிஞ்சி ஆகும்
·         குறிஞ்சித்திணைக்கு கூதிர்காலம் மற்றும் முன்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும் யாமம் சிறுபொழுதாகவும் அமையும்.
·         குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"

முல்லைத்திணை:


·         முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். 
·          ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர்.
·         முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்
·         முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

மருதத்திணை:


·         மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும். இவை வளமான செந்நெல் விளையும் பகுதி என்பதால், இங்கே உழுவித்து உண்ணும் பெரும் செல்வர் வாழ்வது இயல்பு. இவர்கள் தம் வளமையால் காமத்தில் எளியராகி பரத்தமை மேற்கொள்ளுதல் நிகழ்வதாகும். 


·         இதனால் தலைவியர்க்கு 'ஊடலும் ஊடல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சுக்களும் இயல்பாகும். இது குறித்தே ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதத்திணைக்கு உரித்தாக்கினார்கள். 


·         மருதத்திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் விடியல் சிறுபொழுதாகவும் அமையும்.
·         மருதத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பரத்தையின் பிரிந்து வந்த தலைமகனுக்கு கிழத்தி சொல்லியது"

நெய்தல்திணை:


·         கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. 


·         நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.
·         நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"

பாலைத்திணை:


·         பாலைக்கு என்று தனி நிலம் இல்லை. ஆனால் முல்லயும் குறிஞ்சியும் முறை முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என்பது ஆகும். இதனால், காதலர் இடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் பாலைக்கு உரிமை படுத்தினர். 


·         ஆறலை கள்வரும், கொலையும் துன்பமும் வெம்மையும் இந்நிலத்துக்கு உரிய தன்மைகள். 


·         பாலைத்திணைக்கு வேனில் காலம், மற்றும் பின்பனி காலம் பெரும்பொழுதுகளாகவும், நண்பகல் சிறுபொழுதாகவும் அமையும்.
·         பாலைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பொருள்வயின் பிரிவு கடைக்கூடிய தலைவன் நெஞ்சுக்கு சொல்லியது"
இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும்.

புறத்திணைப் பிரிவுகள்:


1.        வெட்சித் திணை
2.        வஞ்சித் திணை
3.        உழிஞைத் திணை
4.        தும்பைத் திணை
5.        வாகைத் திணை
6.        காஞ்சித் திணை
7.        பாடாண் திணை

புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல்:

      "
வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்
     
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
     
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
     
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
     
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
     
செரு வென்றது வாகையாம்"

வெட்சித் திணை:

·         ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந் நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை

வஞ்சித் திணை:

·         மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது.

உழிஞைத் திணை:


·         படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக் கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது.
 
தும்பைத் திணை:


·         படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது.

வாகைத் திணை:


·         மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது

காஞ்சித் திணை:


·         உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை 

பாடாண் திணை:

·         பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை