மனித மொழி-தமிழ் மொழி

67. தமிழ் மொழியின் முந்தைய பெயர் -1




தமிழ் மொழியின் ஆதி பெயரை பாரதியும் சொல்லியுள்ளார்,  
பாரதி தாசனும் சொல்லியுள்ளார்.
 
தமிழ் மொழிக்கு மதுரம் என்ற பெயர் இருந்தது,  
அதனால் மதுரத் தேமொழி என்றாரா?




மதுரத் தமிழ் என்றாரே பாரதியார், அதில் உள்ளமதுரம்என்ற சொல் மட்டும்  
முறை ராமாயணத்தில் வந்துள்ளது.

அதுவும் எப்படி வந்துள்ளது?

அனுமன், சீதையிடம் சாதாரண மக்கள் பேசும் மானுஷ பாஷையில் பேசலாம் என்று முடிவு செய்து பேசுகிறானே 


அந்த விவரங்கள் சுந்தர காண்டத்தில் 
அசோக வனத்தில் சிறையிருக்கும் சீதையுடன்,  
அனுமன் பேசும் இடங்களில் வருகின்றன.  
ராமாயணத்தில் சொல்லப்பட்ட மனித பாஷை என்பது 
தமிழாக இருக்க்கூடும் என்னும் கருத்தை முதலில் 
நிலை நாட்டியவர் திரு நாராயண ஐயங்கார் என்பவர்.

Narayana+iyengar

மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 
செந்தமிழ்என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணி புரிந்த இவர்வான்மீகரும், தமிழும் என்னும் தொடரை  
1938 ஆம் ஆண்டு எழுதினார்.  
அதில் ராமாயணம் எழுதிய வால்மீகியே 
தமிழில் புறநானூற்றுச் செய்யுளையும் எழுதினார் என்பதையும்,  
அனுமன் பேசிய மனித பாஷை தமிழ் என்பதையும்,  
அதற்கு ஆதாரமாக வால்மீகி ராமாயணத்தில் வரும் 
ஒரு பழமொழியையும் காட்டுகிறார்.  

முதலில் மதுரம் என்ற சொல் 8  இடங்களில் எப்படி வருகிறது (1)  மனித பாஷையில் பேசலாம் என்று அனுமன் நிச்சயித்த போது 
உண்மை பொருந்திய,  
அதாவது அவிததம் பொருந்திய 
மனித பாஷையைப் பேசலாம் என்று முடிவு செய்தான் 
அந்த அவிதத்தைப் பற்றிப் பேசும் போது

மதுரம் அவிததம் ஜகாத வாக்யம்(5-30-44) என்கிறான்.

பொய்யில்லாத, உண்மையான மதுரம் வாக்கியத்தை பேசலாம் என்று நினைக்கிறான். 

மதுரம் என்றால் இனிமை என்று பொருள். 
பொய்யில்லாத, உண்மையான, இனிமையான வாக்கியம் 
என்று எல்லோரும் அர்த்தம் சொல்கிறார்கள். 
ஆனால் இங்கு வாக்கியம் என்பது ஒருமையில் வந்துள்ளது. 
அதனால் மதுரம் வாக்கியம் என்பதில் உள்ள வாக்கியம் 
என்பது மொழி என்ற பொருளில் வந்துள்ளது 
என்கிறார் நாராயண ஐயங்கார் அவர்கள். 
அதாவது பொய்யில்லாத மதுர மொழியில் பேசலாம்  
என்று அனுமன் நினைத்தான்.

 
நாராயண ஐயங்கார் எடுத்துக் காட்டியுள்ள இந்த இடத்தைத் தவிர 
பிற இடங்களிலும், மதுரம் என்ற பிரயோகம் வருகிறது. 
வால்மீகி காண்டம் முழுவதிலும் என்று பார்க்கையில்,  
பல இடங்களிலும், பேச்சு என்பதற்கு 
ஏதேனும் ஒரு அடைமொழி கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. 
ஹிதமாகப் பேசினான்,  
தர்மயுகத்மாகப் பேசினான்,  
சாதுர்யமாகப் பேசினான்,  
விளக்கமாகப் பேசினான் 
என்று பலவாறு வர்ணனை வந்தாலும்
மதுரமாகப்பேசினான்' என்பது சுந்தர காண்டத்தில் 
அனுமன் சீதை சம்பாஷணையில் மட்டும் வருகிறது. 
மதுரம் என்பதைஇனிமையாகப் பேசினான் என்ற 
அர்த்த்தில் எடுத்துக் கொண்டால் எல்லா இடங்களிலும் 
அது பொருத்தமாக இல்லை.


(2)  எப்படியெல்லாம் அவளிடம் பேச வேண்டும் என்று முதலிலேயே அனுமன் நிச்சயித்துக் கொள்கிறான்.
 
சுபானி, தர்மயுக்தானி, வசனானி சமர்ப்பயன்
ச்ராவயிஷ்யாமி சர்வாணி மதுரம் ப்ரப்ருவன் கிரம் (5-30-42 &43)
என்கிறான்.

சுபமான, தர்மயுக்தமான வசனங்களைச் சமர்ப்பிப்பேன்.  
புரிந்து கொள்ளச் செய்வேன். 
எல்லாவற்றையும் மதுரம் நிறைந்த சொற்களால் 
வெளிக்கொணர்ந்து பேசுவேன் என்கிறான்.


இங்கு மதுரம் என்பதைப் பொதுவாக 
இனிமை என்று பொருள் கொள்ளலாம். 
ஆனால் வசனானி, சர்வாணி என்று பன்மையில் சொல்லி வந்து,  
மதுரம் கிரம்என்றும் சொல்லப்படவே
மதுரம் என்பது ஒரு பெயர்ச் சொல்லாக வருகிறது. 
இனிமையைக் குறிப்பதாக வரவில்லை. 
மதுரம் கிரம் என்பதை மதுர மொழி என்று பொருள் கொள்ளலாம்.


(3சீதையிடம் பேச ஆரம்பிக்கும் போது 
அவள் காதில் மட்டும் விழும்படி  
மதுரம் வாக்கியம் பேசினான் (5-31-1) என்று வருகிறது. 
காதில் விழும்படி மென்மையாகப் பேசினான் என்பது அல்லவா பொருத்தமாக இருக்கும்?  
அங்கு மதுரம் எதற்கு?

Hanuman-+Sita+-2

(4)  ராமனது பெருமையைச் சுருக்கமாக 
மதுரம் வாக்கியத்தில் சொல்லிவிட்டு,  
மரத்திலிருந்து கீழே இறங்குகிறான் அனுமன். 

பிறகு கை கூப்பினபடியே சீதையை நோக்கி வந்து  
பேச ஆரம்பிக்கும் போதும்  

மதுரயா கிரா” – மதுரமாகப் பேசலானான் என்று வருகிறது (5-33-2)

Hanuman-+Sita+-1

(5) அடுத்து நாம் சொல்லப்போவது மிகவும் ஆச்சரியமான ஒரு வரி. அனுமன் ராமனை வர்ணிக்கிறான். 
அப்பொழுது
ஸத்யவாதி, மதுர வாக்தேவோ வாசஸ்பதி யதா என்கிறான்.

ராமன் சத்யம் பேசுபவன். 
வாக்கின் தேவனான வாசஸ்பதியைப் போல 
மதுரமாகப் பேசுபவன் (அ) மதுர மொழி பேசுபவன் – 
என்பது இதன் பொருள். 
ராமன் உண்மையைப் பேசுபவன் என்று சொல்லியாகி விட்டது. 
அதுவே ஒரு மாபெரும் சிறப்பு. 
அதற்குப் பிறகு இனிமையாகப் பேசுபவன் 
என்று ஏன் சொல்ல வேண்டும்?


ஆனால் இங்கு இனிமையைக் குறிக்கவில்லை. 
வாக்தேவனான வாசஸ்பதியைப் போல 
மதுரம் பேசுபவன் என்று வருகிறது. 
யார் இந்த வாசஸ்பதி என்று பார்த்தால்
வாக்குக்கு அல்லது பேச்சுக்கு அதிபதி வாசஸ்பதியாவான். 
தேவ பாஷையான சமஸ்க்ருத்த்துக்கு ஒரு தேவன் அல்லது அதிபதி தேவையில்லை. 
ஆனால் மனிதர்கள் பேசும் பேச்சுக்கு ஒரு அதிபதி தேவை. 
அவன் இந்த வாசஸ்பதி. 
இந்த வாசஸ்பதியைப் பற்றி வாக் என்னும் தலைப்பில்  
ரிக் வேதத்தில் ஒரு பாடல் இருக்கிறது (10-125). 
வாசஸ்பதியே சொல்வது போல அமைந்துள்ளது அந்தப் பாடல். 
அதில்
 என் வார்த்தைகளை 
தேவர்களும், மனிதர்களும் வரவேற்கிறார்கள். 
நான் மனிதர்களுக்கு வலிமையூட்டுகிறேன். 
நான் விரும்பும் மனிதனை ரிஷியாக ஆக்குகிறேன்
ப்ரம்மமாக (கடவுள்) ஆக்குகிறேன், என்று சொல்லப்பட்டுள்ளது. 

இதனால் மனிதர்கள் பேசும் மொழிக்கு 
இந்த வாசஸ்பதியே அதிபதி என்று தெரிகிறது. 
அந்த வாசஸ்பதியைப் போல ராமனும் பேசுகிறான் 
என்று சொல்ல வேண்டுமென்றால்
சிறந்த வாக்கினைப் பேசுகிறான் என்று சொல்வதுதானே 
பொருத்தமாக இருக்கும்
மதுரமாகப் பேசுகிறான் என்று சொல்ல அவசியமில்லையே
வாக் தேவன் அருளால் சிறந்த வாக்கு கிடைக்குமா 
அல்லது மதுர வாக்கு கிடைக்குமா
மதுரம் என்று சொல்லியுள்ளதால்
அது இனிமை என்பதை விட மதுர மொழி என்று 
ஒரு மொழியைச் சொல்கிறது என்பதுதான் பொருத்தமாக இருக்கும். 

அதிலும், வாக் தேவன் மனித வாக்குக்கு அதிபதி
அதாவது மனித பாஷைக்கு அதிபதி என்றாவதால்
அந்த பாஷை மதுர பாஷை அல்லது 
மதுர மொழி என்று அழைக்கப்பட்டது   
என்பதே பொருத்தமாக இருக்கும். 

மனித பாஷையை அனுமன் பேசுகிறான்
சீதை பேசுகிறாள். 
அப்படி இருக்க ராமன் அந்த பாஷையில் 
பாண்டித்தியம் பெற்றவனாக இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும்? அந்த பாஷையில் தான் குகனுடன் பேசியிருக்க முடியும். 
அந்த பாஷையில்தானே தன்நாட்டு மக்களுடன் பேசியிருக்க முடியும்? வாக் தேவனிடமிருந்து அவன் பெற்ற பேச்சுத் திறமை 
மதுர மொழியில் இருந்தது 
என்பதுதானே இந்த வரிக்குப் பொருத்தமாக இருக்கும்?


(6) அனுமன் சீதையை நெருங்கி பேச ஆரம்பித்தபோது 
அவன் ராவணனோ என்று சீதை சந்தேகிக்கிறாள். 
அவனைப் பார்த்து பயந்து விடுகிறாள். அதனால் ஓரமாக உட்கார்ந்து முகத்தைத் திரும்பிக் கொண்டு விடுகிறாள். 
ஆனாலும், அனுமான் வணங்கியபடியே பணிவாக நிற்கிறான். 
அதை கண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டு சீதை பேச ஆரம்பிக்கிறாள். 
நீ வேடதாரியான ராவணனாக இருந்தால் 
எனக்கு இன்னும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். 
இது நல்லதல்ல, என்கிறாள். 

இந்த வரிகளை ஒரு கவிஞன் எழுதும் போது எப்படி வர்ணிப்பான்? வருத்த்துடன் சொன்னாள் என்றோ 
அல்லது கோபமாகச் சொன்னாள் என்றோதானே வர்ணிப்பான்
ஆனால் வால்மீகி எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா
மதுர ஸ்வராவில் சொன்னாள் சீதை என்கிறார். 

அப்ரவீத் தீர்க்கம் உச்ச்வஸ்ய வானரம் மதுர ஸ்வரா (5-34-13)
ஆழ்ந்த பெருமூச்சு விட்டு
வானரத்திடம் மதுர மொழியில் சொன்னாள் – 
என்பது இதன் பொருள்.

பெருமூச்சு விட்டுக் கொண்டு
(முந்தின ஸ்லோகத்தில்) துக்கத்துடனும், பயத்துடனும் இருந்த அவள்
நீ செய்வது நல்லதல்ல என்பதை 
மதுரமான ஸ்வரத்தில் சொன்னாள் என்று யாராவது எழுதுவார்களா? அல்லது எழுத முடியுமா
அங்கு இனிமையான ஸ்வரத்தில் சொல்ல அவசியமில்லை, பொருத்தமாகவும் இல்லை. 
மதுர ஸ்வரம் என்பது,
மதுரம் என்ற பெயர் கொண்ட மொழியாக இருந்தால் மட்டுமே 
அப்படிச் சொல்ல முடியும்.

(7) பிறகு அனுமன் மீது நம்பிக்கை வந்தாலும்
அவன் உண்மையாகவே ராமனைப் பார்த்திருக்கிறானா 
என்று தெரிந்து கொள்ள சீதை ஒரு பரிட்சை வைக்கிறாள் சீதை. 
ராமன் பார்ப்பதற்கு எப்படி இருப்பான்
அவன் குணாதிசயங்கள் என்ன என்று கேட்கிறாள். 
இதை சாந்தமான வசனங்களால் கேட்கிறாள். 
ஆனால கூடவே மதுரம் வந்து விடுகிறது.

உவாச வசனம் சாந்த்வம் இதம் மதுரயா கிரா (5-35-1)
இதன் மொழிபெயர்ப்பு,  
இந்த வசனத்தை சாந்தமாகக் கூறுகிறாள்
மதுரமாகக் கூறுகிறாள்.”  என்பதாகும்.

சாந்தமாகக் கூறுகிறாள் (உவாச) என்று சொல்லிவிட்டு
உடன் மதுரமாகக் கூறுகிறாள் (கிரா) என்று எப்படி வரும்
கிரா என்பதை மொழி என்று எடுத்துக்கொண்டால் 
மதுர மொழியில் சாந்தமாக இதைக் கூறுகிறாள்  
என்பது பொருத்தமாக இருக்கும். 
மதுரம் என்பது மொழியின் பெயர் என்று சொல்லும் வண்ணமே 
மீண்டும் மீண்டும் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. 


(8) ராமனைப் பற்றி அனுமன் வர்ணித்தவுடன் 
சீதைக்கு அவன் மீது நம்பிக்கை உண்டாகிறது. 
அதனால் அவள் தன்னைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறாள். 
முதலில் ராமனைக் குசலம் விசாரிக்கிறாள். 
விசாரித்து விட்டு, அனுமன் சொல்லப் போகும் பதிலுக்காக்க் காத்திருந்தாள் என்று சொல்லுமிடத்திலும்
மதுரம் வருகிறது.

hanuman+-+Sita+-3

இதி இவ தேவி வசனம் மஹார்த்தம்
தம் வானரேந்த்ரம் மதுர அர்த்தம் உக்த்வா”(5-36-31)

 இதற்கு இவ்வாறு அனுமனிடம் சீதையானவள் 
பெரும் அர்த்தங்கள் பொருந்தின வசனங்களைச் சொல்லிவிட்டு
மதுரமான அர்த்த்தைச் சொல்லிவிட்டு என்பது பொருள். 

மஹார்த்தம் என்றும், மதுர அர்த்தம் என்றும் மீண்டும் வருகிறது. 
இது குழப்பம் தருவதாக இருப்பதால்
இந்த வரியை மொழிபெயர்த்த எவருமே
மதுரமான (இனிமையான)   
பெரும் அர்த்தம் பொதிந்த வசனங்கள் 
என்றே எழுதியுள்ளனர். 
ஆனால் மதுரம் என்பது ஒரு மொழியின் பெயராக இருந்தால்
மஹார்த்தம் பொருந்திய வசனங்களை 
மதுர மொழியில் சொன்னாள் 
என்பது பொருத்தமாக இருக்கும். 

தமிழுக்கு மதுரம் என்ற பெயர் இருந்தது என்பதை 
நாமே மறந்து விட்டோம். 
அப்படி இருக்க, ராமாயண மொழி பெயர்ப்பு செய்த மற்ற மொழியாளர்களுக்கு
இங்கு சொல்லப்பட்டுள்ள மதுரம் என்பதற்கு 
இனிமை என்பதைத் தவிர 
வேறு விதமாக மொழி பெயர்க்க வழியில்லை. 
அந்த மதுரம் என்னும் சொல் 
சில இடங்களில் பொருந்தி வரவில்லை என்பது புரிந்தாலும்
அவர்கள் அதைப் பற்றி விளக்க ஆதாரம் இல்லை. 
ஆனால் மதுரம் என்பது அனுமன் பேசிய மனித பாஷையின் பெயர் 
என்ற கோணத்தில் சிந்தித்தால்
அதிலிருந்து தமிழுக்குள்ள தொடர்பை நிரூபிக்கலாம்.


இவ்வாறு மனித பாஷையில் பேசினார்கள் 
என்று சொல்லப்படும் இடங்களில் 
மொத்தம் 8 முறை மதுரம் வாக்கியத்தில் பேசினார்கள் 
என்று சொல்லப்பட்டுள்ளது. 
இந்த மதுரம் ராமாயணத்தில் மட்டும் சொல்லப்படவில்லை. 
எங்கோ தென் மதுரையில் சோம சுந்தரேஸ்வர்ர் 
தமிழை வளர்த்தார் என்று சொல்லியுள்ள இடங்களிலும் 
வந்து விடுகிறது.
66. மனித பாஷை என்னும் தமிழ் மொழி!


வால்மீகியும் தமிழில் பேசியிருக்கிறார்.  
அவர் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டு மக்களும் 
தமிழ் பேசியிருக்கின்றனர் என்று எண்ணும் வண்ணம் 

ஒரு முக்கியக் குறிப்பு சுந்தர காண்டத்தில் வருகிறது


சுந்தர காண்டத்தில் அசோக வனத்தில் அனுமன் சீதையைப் பார்க்கிறான். அவளுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்கிறான்.  
ஆனால் எந்த மொழியில் பேசுவது என்று யோசிக்கிறான்
தனக்கு சமஸ்க்ருதமும் தெரியும்,  
மனித பாஷையும் தெரியும்,  
இந்த இரண்டு பாஷைகளில் சீதையிடம் 
எந்த பாஷையில் பேசலாம் என்று கொஞ்சம் 
சிந்தனையை ஓட விடுகிறான்.

சமஸ்க்ருதம் என்று எந்த பாஷையைச் சொல்கிறான்  
என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் மனித பாஷை என்கிறானே,  
அது என்ன மனித பாஷை?

மனிதர்களால் பேசப்பட்டதால் அது மனித பாஷை எனப்பட்டதா?

அப்படியென்றால் பல மனித பாஷைகள் இருக்க வேண்டுமே?  
இன்றைக்கு அப்படித்தானே இருக்கிறது.
அனுமனுக்குத் தெரிந்த மனித பாஷை,  
சீதைக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?
அயோத்தியில் உள்ளவர்கள் ஒருவித மனித பாஷையைப் பேசியிருப்பார்கள்

அனுமன் வாழ்ந்த கிஷ்கிந்தையில் இருந்தவர்கள் வேறு ஒரு மனித பாஷையைப் பேசி இருப்பார்கள்

இலங்கையில் இருந்தவர்கள் வேறு ஒரு மனித பாஷையைப் பேசி இருப்பார்கள்

இவற்றுள் எந்த இடத்து மனித பாஷையை அனுமன் அறிந்திருந்தான்  
என்ற கேள்வி வருகிறது.

ஆனால் அந்த மனித பாஷையில் அவர் பேசி,  
அதை சீதையும் புரிந்துக் கொண்டு,  
அதே பாஷையில் பதிலும் அளித்ததால்,  
அந்த மனித பாஷை ஓரிடம் என்றோ, ஓரினம் என்றோ 
 ஒரு தனி வட்டத்துக்குள் புழங்கிய பாஷை அல்ல 
 என்று தெரிகிறது.  
பாரதம் முழுவதும் இருந்த மனிதர்கள் அனைவருக்குமே  
பொதுவாக ஒரு பாஷையாக இருந்தது என்றும் தெரிகிறது.

இது சாத்தியாமா என்று கேட்டால்,  
நம்மைச் சுற்றி உள்ள ஜீவ ராசிகளைப் பார்த்தால்  
சில உண்மைகள் விளங்கும்.


பறவைகளுக்கும் பாஷை இருக்கிறது.  
அவை எழுப்பும் ஒலியில் அர்த்தங்கள் எதுவும் இல்லாதது போல  
நமக்குத் தோன்றுகிறது.  
ஆனால் பறவைகளுக்கு அது புரியக்கூடியது.  
அந்த பாஷை அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுத்து வந்ததல்ல. இயற்கையிலேயே அவற்றுக்கென இருப்பது


பறவைகளைப் போல மிருகங்களுக்கும் இயல்பாகவே பாஷை இருக்கிறது. மிருகங்களை விட பறவைகள் அதிகம் சத்தமிடுவதால்
அவற்றின் பாஷை நன்கு விரிவாக இருக்க வேண்டும்.  
அவற்றின் பாஷைகளைக் கூட ஒரு காலத்தில் 
நம் பாரத நாட்டவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை
பல பழங்கதைகள் மூலம் அறிகிறோம்


பறவை பாஷை, மிருக பாஷை என்பது போல 
மனிதர்களுக்கும் இயல்பாகவே ஒரு பாஷை இருந்திருக்க வேண்டும்.  
அதாவது ஆதியில் ஓரிடத்தில் வாழ்ந்து,  
பிறகு பல இடங்களுக்கும் பிரிந்திருந்தால்,  
ஒரே ஒரு மனித பாஷை இருந்திருக்க சாத்தியமாகிறது.  
இன்றைய பாரத நாட்டில் வாழ்ந்த மக்கள்  
ஆதியில் சாகதீவில் வாழ்ந்திருந்து,  
அதிலிருந்து ஒரு பிரிவு,  

வைவஸ்வத மனுவுடன் சரஸ்வதி நதியில் நுழைந்து,  
வட இந்தியா முழுவதும் பரவினார்கள் என்றால்,
அல்லது அதே சாகத்தீவிலிருந்து இந்தியாவுக்கு நேர்த் தெற்கு வழியாக தென்னிந்தியாவில் மக்கள் குடியேறி இருந்தார்கள் என்றால்,
அல்லது  சாகத்தீவு இருந்த இடத்தில்  
பின்னாளில் தென்னன் ஆட்சி வந்து,  
அந்த மக்கள் தென்னிந்தியாவில் பரவி இருந்தார்கள் என்றால்,  
அவர்கள் அனைவரும் பேசியது  
ஒரே மனித பாஷையாக  
பாரத நாடெங்கிலும் இருந்திருக்க முடியும்

அப்படி ஒரே ஒரு பாஷை இருந்திருந்தால்தான்
அதை அனுமன் மனித பாஷை என்று அழைத்திருக்க முடியும்.
அதைமானுஷீம் வாசம் என்றும், (வால்மீகி ராமாயணம்- 5-30-17).
மானுஷம் வாக்யம்என்றும் குறிப்பிடுகிறான்அனுமன்
(வால்மீகி ராமாயணம்- 5-30-19).

சமஸ்க்ருத்தில் பேசினால் என்ன என்று முதலில் அனுமன் யோசிக்கிறான். ஒரு வானரத்துக்கு சமஸ்க்ருதம் எப்படித் தெரியும் 
என்று சீதை நினைப்பாள்.  
ராவணனே வானர வேடம் பூண்டு 
தன்னுடன் சமஸ்க்ருதத்தில் பேசுகிறான் என்று நினைப்பாள்.  
அதனால் மனித பாஷையிலேயே பேசலாம் 
என்று முடிவு செய்கிறான்
சாதாரண மக்கள் பேசிய மனித பாஷை,  
வானரனான அனுமனுக்கும் தெரிந்திருக்கிறது.

அதைச் சொல்லுமிடத்தில்
மானுஷம் வாக்யம் அர்த்தவத்(5-30-19) என்கிறான்.  
அதாவது 
அர்த்தங்கள் அடங்கிய மனித வாக்கியம் என்கிறான்

இதைப் படிக்கும் போது 
அர்த்தங்கள் இல்லாத மனித வாக்கியம்,  
அர்த்தங்கள் அடங்கிய மனித வாக்கியம் 
என்று இரண்டு விதம் இருந்ததா என்ற சந்தேகம் வருகிறது

மனித பாஷை என்பது ஒரு ஒலிக் குறிப்பு என்பதாக மட்டும் இல்லாமல், ஏதோ ஆழ்ந்த அர்த்தங்களைத் தெரிவிப்பதாகவும் இருந்திருக்கிறது.
மனித பாஷையைப் பற்றிச் சொல்லும் 
மூன்று இடங்களில் இதே கருத்தைக் காண்கிறோம்.

(1)  அர்த்தவத் (அர்த்தங்கள் நிரம்பியது) (5-30-19)
(2)  ச்ராவயிஷ்யாமி (புரிந்து கொள்ளச் செய்கிறேன்) (5-30-43)
(3)  அவிததம் (பொய்யில்லாத மொழி / உண்மையானது) (5-30-44)

ஒரு பாஷை என்றால் அது அர்த்தங்கள் நிரம்பியது 
என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.  
இதில் என்ன புதிதாக இருக்கிறது என்று நினைக்கத்தோன்றும்.  
ஆனால் சீதைக்கு நம்பிக்கையையும்
தேறுதலையும் சொல்லத்தக்க அளவுக்கு சிறப்புச் சொற்களும்,  
அர்த்தமும், உண்மையும் கொண்டதாக 
அந்த பாஷை இருக்க வேண்டும்.

  • ·         அனுமன் அந்த மனித பாஷையில் பேசின பேச்சால், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சீதை அந்த எண்ணத்தைக் கை விட்டாள்.

  • ·         வந்தவன் ராம தூதன் தான் என்ற நம்பிக்கையை அந்த மொழியின் சொற்கள் ஏற்படுத்தின.

  • ·         ராமனது அழகை சமஸ்க்ருதத்தில் சொல்லப்படுவது போல சாமுத்திரிகா லக்ஷணமாகத் திருத்தமாகச் சொல்ல அந்த மொழி உதவியது.

  • ·         அந்த மொழியில்தான் சீதை தன் சோகத்தை எடுத்துரைத்தாள்.

  • ·         அந்த மொழியின் வாயிலாகத்தான் அனுமன் அவளது சோகத்தைப் போக்கி மன அமைதி உருவாகச் செய்தான்

  • ·         இவையெல்லாம் செய்த அந்த மொழியை கிசு கிசுப்பாக மெல்லிய குரலில், ஒருவருக்கொருவரது காதில் மட்டும் விழும் வண்ணம் பேசியிருக்கிறார்கள்.

  • ·         இன்னும் இருள் பிரியாத விடிகாலைப் பொழுதில், ஒருவரை ஒருவர் சரிவரப் பார்த்துக் கொள்ள முடியாத இருளில், இந்த மொழியின் வார்த்தைகளால் மட்டுமே ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்றம் நடந்திருக்கிறது.

  • ·         அதில் ஒரு வார்த்தை கூட அநாவசியமாகப் பேசப்படவில்லை.

  • ·         ஒரு வார்த்தை கூடத் தவறான அர்த்தத்தையோ அல்லது ஒன்று சொல்ல, ஒன்றைப் புரிந்து கொள்கிறாற் போலவோ சொல்லப்படவில்லை.

  • ·         அதில் ஒரு வார்த்தை கூட உண்மையல்லாதைக் காட்டவில்லை.

·         சீதையுடம் மனித பாஷையில் பேசலாம் என்று அனுமன் முடிவு செய்த்தும் அவன் (அந்த அத்தியாய முடிவில்) சொல்வதுஅவிததம் ஜகாத வாக்கியம்” – பொய்யில்லாத உண்மையான வார்த்தைகளைப் பேசுவேன் என்கிறார்

அது என்ன அவிததம் - உண்மையான வாக்கியம்
உண்மையைச் சொன்னால் அது உண்மையான வாக்கியம் அல்லவா 
என்று நாம் நினைப்போம்.  
உண்மையைச் சொல்லுதல் என்றால் 
சொல்லப்படும் கருத்து உண்மை என்று பொருள்படும்
ஆனால் சொல்லே உண்மையானால்?  
அதைச் சாந்தோக்கிய உபநிஷத்து சொல்கிறது.

வார்த்தைக்கு உண்மை சக்தி உண்டு 
என்று சாந்தோக்கிய உபநிஷத்தில் வரும் ஒரு விவரம் வருகிறது. வார்த்தைகளுக்கு உயிர் உண்டு
சக்தி உண்டு என்கிறது அந்த உபநிஷத்து

தண்ணீர்என்று காய்ந்து போன கட்டையிடம் 
சொன்னால் மட்டும் போதும்,  
அதில் கிளைகள் முளைத்து, இலைகள் தளிக்கும் 
என்றார் ஜாபால ஸத்யகாமர். (சா-- 5-2.3) 

அதாவது தண்ணீர் என்ற சொல் அர்த்தம் நிரம்பியதாக
உண்மையானதாக, தவறில்லாததாகச் சொல்லப்பட்டால்,  
அது சொன்னவுடன் தாகம் தணியும்.  
அது போல 
உணவுஎன்று சொன்னால்,  
வயிறு நிரம்ப வேண்டும்.  
அப்படித்தான் பிராணன் இயங்குகிறது என்கிறது இந்த உபநிஷத்து. (5-19.1)


சொல்லுக்கு அந்த சக்தி உண்டு.  
நினைத்ததைச் சொன்னால் 
அந்தச் சொல்லின் மூலம்,  
நினைப்பு உண்மையாக ஆகக்கூடிய சக்தி தேவ பாஷைக்கு உண்டு.

தேவ பாஷை என்று சமஸ்க்ருதத்தைச் சொல்வார்கள்.
மனிதர்கள் பேசுவது மனித பாஷை என்பது போல,
தேவர்கள் பேசுவது தேவ பாஷை ஆகும்

தேவர்களா

என்ன கட்டுக் கதை என்று யாரேனும் நினைப்பதற்கு முன்னால் தொல்காப்பியர் சொல்வதை நினைவு கூற வேண்டும்.
அவர் மனிதர்களையும், தேவர்களையும் மட்டுமே 
உயர் திணைகளாகச் சொல்கிறார்
அதாவது தேவர்கள் என்பவர்களைத் தொல்காப்பியம் ஏற்றுக் கொள்கிறது. 

தேவன் என்பவனும், தெய்வம் என்பவனும் உண்மையல்ல
அவை வெறும் நம்பிக்கைகளே என்று 
மேலை நாட்டு ஆராய்ச்சி மனப்பான்மையில் இருப்பவர்கள் சொல்வார்கள்.
அவர்கள் கண்ணோட்டத்திலேயே சொல்வதென்றால்,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்ன
சமன்பாடான E = mc2 என்பதே
தேவன் என்பதற்கான சூத்திரம் எனலாம்.


தேவர்கள் அல்லது தெய்வங்கள் திடீரென்று தோன்றுவார்கள்.
தோன்றின வேகத்தில் மறைந்தும் விடுவார்கள்.
அவ்வப்பொழுது தெய்வங்கள் காட்சி கொடுத்ததாகப் 
பல சம்பவங்கள் தமிழ் நாட்டிலேயே நடந்திருக்கின்றன.


அந்த தேவன், சக்தி ரூபமாக (ENERGY) இருக்கும் போது 
கண்ணுக்குத் தெரிவதில்லை

ஆனால் அது உருவமாகத் தெரியும் போது (MASS)
அந்த உருவம் சாதாரண உருவம் இல்லை

கூடவே C – SQUARED என்னும் ஒளியின் வீச்சையும் 
அது கொண்டிருக்கிறது.  
ஒளியின் வேகத்திலும் அது தோன்றி மறைகிறது.

அந்த ஒளி எங்கிருந்து வருகிறது?
இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது
இந்தப் பிரபஞ்சத்தில் ஒளியின் ஆதாரம் நட்சத்திரங்கள் ஆகும்.  
அந்த நக்ஷத்திரங்கள் மூலமாகத்தான் படைப்பும்,  
உயிர்கள் தோற்றமும் சாத்தியமாகின்றன 

அவையே தேவனின் ரூபம் ஆகும். (நக்ஷத்ராணி ரூபம்’ - புருஷ சூக்தம்).
அதனால் தெய்வம் ஒளி ரூபமானது என்றும் சொல்கிறோம்
அந்தத் தெய்வம் ஒரு உருவமாகத் தோன்ற வேண்டும் என்றால்,  
அந்த ஒளியும் அதனுடன் ஒட்டி நிற்கும்.

ஐன்ஸ்டீனின் சமன்பாட்டில் சக்திக்கும்,  
உருவத்துக்கும் உள்ள வித்தியாசம் 
இந்த ஒளி வீச்சில் இருக்கிறது.  
யுரேனியம் போன்ற அணுக்களில் 
இந்த வித்தியாசம் மிக மிக அபரிதமானது.  
அணுக்களைத்தாண்டி அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் 
தெய்வம் என்ற அதீத சக்தியைச் சார்ந்த ஒளிச் சக்தியை 
நம்மால் அளவிட முடியாது


ஐன்ஸ்டீன் சமன்பாட்டைப் புருஷன்-பிரக்ருதி 
என்னும் கருத்திலும் சொல்லலாம்.
உருவம் என்பது பிரக்ருதி, சக்தி என்பது புருஷன்.
இவை இரண்டும் சேர்ந்ததுதான் உயிர்கள் உண்டாகின்றன.
நம்மிலும் புருஷன் இருக்கிறான்.
நமது உடலே பிரக்ருதியும், புருஷனும் சேர்ந்தது ஆகும்.
ஆனால் தெய்வம் என்பது 
புருஷன் என்னும் ஒரு ரூபத்தில் மட்டும் இருக்கிறது.
அது புருஷர்களில் உத்தமன், அதாவது புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறது.
அது விரும்பும் போது உருவமாகத் தோன்றும் –  
ஐன்ஸ்டீன் சமன்பாடு சொல்வது போல.

அப்படிப்பட்ட ஒரு அபரிதமான தேவ நிலையை  
வால்மீகியார் அடைந்த பொழுது 
ராமாயணம் இயற்றப்பட்டது.  
அவ்வாறு ராமாயணம் உண்டான விவரத்தை வால்மீகியே சொல்கிறார்.


வால்மீகி நாரதர் மூலம் ராமனது சரித்திரத்தைக் கேட்கிறார்
நாரதர் சென்ற பிறகு ராமனது கதையை யோசித்தவாறே 
ஆற்றங்கரைக்குக் குளிக்கச் செல்கிறார்.  
தண்ணீரில் இறங்கும்முன் சுற்று முற்றும் பார்க்கையில் 
அழகான க்ரௌஞ்சப் பட்சி ஜோடி ஒன்றைக் காண்கிறார்.  
அவை இனிமையாக சப்த்தித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. அப்பொழுது எங்கிருந்தோ ஒரு வேடன் எய்த அம்பு 
அந்த ஜோடியில் இருந்த ஆண் பறவையை வீழ்த்தியது.  
அதைக் கண்ட பெண் பறவை கதறியது

அதைக் கண்ட வால்மீகியின் மனதில் காருண்யம் பீறிட்டு எழுந்தது.
இப்படி ஆகி விட்டதே

சந்தோஷமாகப் பேசித்திரிந்த பறவைகளில் ஒன்றை, மோஹத்தால் வீழ்த்தின வேடனே, நீ செய்த இந்தச் செயல் என்றைக்கும் மறையாது என்று தன்னை மறந்த நிலையில் சொன்னார்.



அப்படிச் சொன்ன வார்த்தைகள் சமஸ்க்ருத பாஷையில்,
மிகவும் திருத்தமாக,
கவி நயத்துடன்
ஒரு ஸ்லோகமாக அமைந்திருந்தது.
அப்படிச் சொன்ன பிறகுதான்,
தான் அப்படி சிறந்த கவித்துவம் வாய்ந்த வரிகளைச் சொன்னோம்
என்று வால்மீகிக்குப் புரிந்தது

அதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்பொழுதுதான் நாரதரிடமிருந்து கேட்ட ராமன் கதைக்கும் இந்த வரிகள் பொருத்தமாக அமைந்திருந்தன

மா நிஷாத என்று தொடங்கும் இந்த வரிகளுக்கு,
தாயாரான லக்ஷ்மியின் வாசஸ்தலமாக இருப்பவனே
 மோகத்தால் சீதையைக் கவர்ந்த ராவணனைத் 
தன்னுடைய ஜோடியிடமிருந்து (மண்டோதரி)  
பிரித்துக் கொன்றதால்,  
வரப்போகும் காலமெல்லாம் நீ தெய்வமாகப் போற்றப்படுவாய் 
என்றும் அர்த்தம் அமைகிறது.

அதுவரை வால்மீகிக்குக் கவி இயற்றத் தெரியாது.
சமஸ்க்ருத இலக்கணங்களும் தெரியாது.
ராம காவியத்தை நினைத்துக் கொண்டே இருந்த போது,
க்ரௌஞ்சப் பட்சிக்கு நேர்ந்த கதியைக் கண்டவுடன்,
அவரிடம் உண்டான காருண்யம்
அவரை தெய்வ நிலையில் அப்பொழுது வைத்தது.
அந்த நிலையில் அவரை அறியாமல் தேவ பாஷை வாயில் வந்த்து.
மனித முயற்சியால் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல அவை. மனிதனுக்கு அப்பாற்பட்ட நிலைக்கு ஒருவன் உயரும் போது தெய்வத்துக்கு உரிய சக்திகள் ஒருவனை ஆட்கொள்கின்றன.
அந்த நிலையில் மடை திறந்த வெள்ளம் போல
வாயில் வருவது தேவ பாஷை


அப்படிப்பட்ட நிலையில் ரிஷிகளது வாயில் புறப்பட்டவைதான்
வேதங்கள் என்பவை.
அவற்றை மனித யத்தனத்தால் யாரும் உருவாக்குவதில்லை.
உருவாக்க முடியாது.
வேறு ஒரு அலை வரிசையில் செல்லும் போது தானாகவே உருவாவது அது

அந்த வேத பாஷை சந்தோ பாஷை எனப்பட்டது.
சந்தோ பாஷை என்றால் ஒலி ரூபத்தில் இருப்பது.
அதை எழுதிப் படிக்க முடியாது,
படித்துப் பொருள் கூற முடியாது.
ஆனால் அப்படிச் செய்து தப்பும் தவறுமாகப் பொருள் கண்டார்கள் மெக்காலே போன்றவர்கள் என்பதை முன்பே கண்டோம்


தன் வாயில் புறப்பட்டச் சொற்களை எண்ணி 
ஆச்சரியம் அடைந்த வால்மீகிக்கு முன்  
நான்முகப் பிரமன் தோன்றுகிறார்.  
அந்தச் சொற்கள் தெய்வ நிலையில் சொல்லப்பட்ட சொற்களே என்றும், அந்த வரிகளை முதலாகக் கொண்டு 
ராமாயணம் முழுவதும் எழுதுமாறும் வால்மீகியைப் பணித்தார்.  



அதன் படி அவர் எழுதிய ராமாயணம் முழுவதுமே மடை திறந்த வெள்ளமாக, ஒரு உயர்ந்த தேவ நிலையில் அவரிடமிருந்து வெளிப்பட்டது.

அதனால் வால்மீகி ராமாயணத்தை வேத மாதாவின் அவதாரம் என்பார்கள்.
வேதம் எப்பொழுதும் வேத புருஷனைப் பற்றியே பேசும்.
அந்த வேத புருஷன் ராமனாக அவதரித்த போது,
வேத மாதாவும் ப்ராசேதஸ் என்னும் வால்மீகியிடம் 
ராமாயணமாகப் பிறந்து
அந்த ராமனைப் பற்றியே பேசினாள்.
இந்தக் கருத்தைக் கொண்ட ஸ்லோகத்தைச் சொல்லி விட்டுத்தான் ராமாயண பாராயணத்தை இன்றும் பக்தர்கள் செய்கிறார்கள்.

தேவ நிலையை ஒருவன் அடையும் போது,  
அவன் நாவில் சரஸ்வதி அமர்கிறாள் என்பதற்கு 
வால்மீகியின் வாழ்வில் நடந்த இந்த சம்பவமே ஒரு உதாரணம்.
பிரமன் என்னும் தெய்வமே வேதத்துக்கு ஆதாரம்.

வேதமானது வாக்கில் வெளிப்படும்போது, அது சரஸ்வதி ஆகும்.
எனவே பிரமனுக்கு மனைவி சரஸ்வதி என்று கதை எழுந்தது.


  • ·         வெள்ளத்தில் தப்பி, புது வாழ்வு ஆரம்பித்த வைவஸ்வத மனுவும் மற்றவர்களும், தங்களுக்கு வாழ்வளித்த நதியை சரஸ்வதி என்றே அழைத்தார்கள். தங்கள் தவ நிலையில் ரிக் வேதம் வெளிப்பட்டதாலும், அந்த நதியை சரஸ்வதி என்று அழைத்திருக்கலாம்

இது சமஸ்க்ருத மொழிக்கு மட்டும் பொருந்துவதல்ல.
தமிழ் மொழிக்கும் பொருந்துவது என்பதுதான்
நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தி

  • ·         2-ஆம் ஊழி கண்ட பிறகு பாண்டியனும் அவன் மக்களும் கபாடபுரத்தைத் தலைநகரமாக்க் கொண்டு, புது வாழ்வு துவக்கின போதும், அங்கு சரஸ்வதியின் அவதாரமென 48 புலவர்களைக் கொண்டு 2-ஆம் தமிழ்ச் சங்கம் கண்டனர். (பகுதி44).

  • ·         ஒரு ஊழிக்குப் பிறகு மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் போது மொழி வாயிலாக இறைவனைப் போற்றும் வழக்கம் சரஸ்வதி நதி தீரத்திலும் நடந்திருக்கிறது.

  • ·         தென்னன் தேசத்திலும் அது நடந்திருக்கிறது.

  • ·         சரஸ்வதி நதிக் கரையில் அது வேதம் என சமஸ்க்ருதத்தில் வெளிப்பட்டது.

  • ·         தென்னன் தேசத்தில் தமிழ்ச் சங்கம் என தமிழ் மொழியில் வெளிப்பட்டது.
தேவ பாஷை எனப்பட்ட சமஸ்க்ருத மொழிக்கு ஒப்பாக,  
வேறொரு மொழி இருந்த்தென்றால் அது தமிழ் மொழி மட்டுமே

முன்பு சாந்தோக்கிய உபநிஷத்து சொன்னதாகக் கண்டோமே
அப்படிப் பட்ட பிராண சக்தி வார்த்தைக்கு உண்டு.
அது சமஸ்க்ருதத்துக்கு உண்டு.
சமஸ்க்ருதம் தவிர வேறு ஒரு பாஷை என்றால்
அது தமிழ் மட்டுமே.
அந்தத் தமிழுக்கு மட்டுமே அப்படிப்பட்ட சக்தி இருக்கிறது.

  • ·         தெய்வ நிலையை எய்தினவர்கள் வாயில் வந்த சொல் தாகத்தைத் தீர்த்தது என்பதைப் போல, தெய்வ நிலையில் இருந்த நாயன்மார்களால் சொல்லப்பட்ட சொல், மூடின கதவைத் திறந்தது.

  • ·         அப்படிப்பட்ட நிலையில் இருந்த திருஞான சம்பந்தரது வாயில் எழுந்த சொற்களால், இறந்த பெண்ணுக்கு உயிர் வந்தது.

  • ·         அப்படிப்பட்ட நிலையில் இருந்த அபிராமி பட்டர்பௌர்ணமிஎன்று சொன்னால் அது பொய்யாகாது. பௌர்ணமி நிலவு தோன்றி விடும்.

  • ·         அப்படிப்பட்ட்துதான் அனுமன் சொல்லும் அவிததம்

பொய்யில்லாதஅவிததம்நிரம்பிய சொல் மனித மொழியில் இருந்தது. எனவே அதில் பேசுவேன் என்று அனுமன் முடிவெடுக்கிறார்.
இதுவரை மனித குலம் கண்டமொழிகளில் சமஸ்க்ருதம் அல்லாமல், உண்மையான சொல்லாக விளங்கியது தமிழ் மொழி மட்டுமே.
இந்த கருத்துடன் தொல்காப்பியத்தின்  
பெயரியல் சூத்திரத்தைப் படித்தால் 
அர்த்தமுள்ள ஆழ்ந்த பொருள் கிடைக்கும்.

பெயரியல் இப்படி ஆரம்பிக்கிறது:-
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
பொருண்மை தெரிதலும்
சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”.

எல்லா மொழியிலும் உள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் பொருண்மை உண்டு.
அதாவது ஒரு பொருந்திய உண்மை உண்டு என்கிறார்.
உண்மை என்றாலேஉள்ளதானதுஎன்று பொருள்.
பொருண்மை என்றால் அதனுள் பொருந்தி,  
உள்ளிருக்கும் உண்மை என்பதாகும்.
வெறுமனே பொருள் உண்டு என்று சொல்லாமல் பொருண்மை உண்டு என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பதை மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் விளக்குகின்றன.

அந்தப் பொருண்மை தமிழுக்கு எங்கிருந்து வந்தது?

பறவைகள் பாஷை பற்றி ஆரம்பத்தில் பேசினோம்
அந்தப் பறவைகளில் கிளியைப் பாருங்கள்.  
அது கிளி பாஷையில் பேசினாலும்
அதற்கு நாம் பேசும் மொழியைச் சொல்லிக் கொடுத்தால் 
அதையும் பேசும். ஆதி சங்கரருடன் வாதிட்ட  
மண்டனமிஸ்ரர் என்பவரது வீட்டு வாயிலில் இருந்த கிளிகளும் 
வேதம் பற்றிப் பேசின என்று நூல்கள் தெரிவிக்கின்றன.  
கிளியின் பாஷையை செம்மைப்படுத்தினால் இது சாத்தியமாகிறது.

இயல்பான செம்மையுடன் சமஸ்க்ருதம் இருக்கிறது.
இன்றைக்கு அறிவியலார் அதன் செம்மைப் பாங்கைக் கண்டு வியக்கிறார்கள்.

செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது - ஒரு கிளியின் பாஷையை செம்மைப்படுத்தினது போல,

ஆதி மனிதனாக இருக்கும் போது இயல்பாக உண்டான மனித மொழியை, ஆதி சிவனும், அகத்தியனும் செம்மைப்படுத்தினார்கள் என்பதே 
மீண்டும் மீண்டும் நாம் பழந்தமிழ் நூல்களில் காணும் செய்தி

ஆதி சிவன் பெற்று விட்டான்என்னை
   ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தேநிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
என்று பாரதியார் சொன்னாரே அந்தக் கருத்துதான்
100 ஆண்டுகள் முன் வரை
நம் தெய்வத் தமிழ் நாட்டினில் வழங்கி வந்த்து.

அதை மறக்கடித்த பெருமை திராவிடவாதிகளுக்கே சாரும்.

அவர்கள் மறக்கடித்தாலும்,
அழியா ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில்
8 இடங்களில் ஒரு பெயருடன் இந்த மனித மொழி சொல்லப்பட்டுள்ளது

அதே பெயர் குமர குருபரர் எழுதியுள்ளமதுரைக் கலம்பகத்திலும் காணப்படுகிறது

அதே பெயரை மகாகவி பாரதியாரும் தமிழைப் பற்றிச் சொல்லுமிடத்தே குறிக்கிறார்.

கருத்துகள்

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ சபமய

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை