சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?


  • சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?
  • -முனைவர்.சே.கல்பனா.
  • சங்கப் பாக்களில் புறநாறூற்றுப் பாக்களைப் படிக்கும் பொழுது, சங்க புவலர்கள் தங்களது வாழ்க்கையை எவ்வளவு பெருமித்துடன் வாழ்ந்துள்ளனர் எனபதை அறியலாம். பரிசு கொடுப்பவர் மன்னராக இருந்தாலும் அவர்கள் உள்ளன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசினைப் பெறாது அதனை மறுக்கும் துணிவு அப்பொழுது இருந்துள்ளது. புறநானுற்று 159 பாடலில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனை அணுகி, வறுமைத் துயரால் தன்னைப் பெற்ற வயது முதிர்ந்த தாயும், அன்பான மனைவியும், மக்கள் செல்வங்களும் உடல் தளர்ந்து,மேனி வாடி கிடப்பதைக் கூறி, பொருள் பெற வந்திருப்பதாகக் கூறுகின்றார். அவ்வாறு நீ தரும் பரிசு மனமகிழ்வோடு வழங்கியதாக இருக்க வேண்டும். நீ உள்ளன்பு இல்லாமல் களிறு முதலிய பெருஞ் செல்வம் வழங்குவதைக் காட்டிலும், மனம் விரும்பி சிறிய குன்றிமணி அளவில் பொருள் வழங்கினால் அதனை மனமகிழ்வோடு எடுத்துச் செல்வேன் என்று கூறுகின்றார்.

    உயர்ந்துஏந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
    தவிர்ந்துவிடு பரிசிலின் கொள்ளலென்; உவந்துநீ
    இன்புற விடுதி யாயின், சிறிது
    குன்றியும் கொள்வல்; கூர்வேல் குமண!

    ஒரு முறை பெருஞ்சித்திரனார் வெளிமான் என்னும் கொடைவள்ளலை அணுகி தன் வறுமையை நிலையைக் கூறி, பொருள் நல்குமாறு வேண்டினார். வெளிமான் தன்பால் வரும் புவலர்களின் தரமறிந்து பரிசில் வழங்க கூடியவன், பெருஞ்சித்திரனார் வரும் போது வேறு வேலையில் ஈடுபட்டிருந்தமையால், தன் தம்பியாகிய இளவெளிமானை அழைத்துப் பரிசு நல்குமாறு கூறுகிறான். அவன் தம்பி விரிந்த மனமும், புலவர்கள் வரிசை அறிந்து பரிசினை வழங்கும் திறமில்லாதவன். அதனால் பெருஞ்சித்திரனாருக்கு மிக குறைந்த பொருளே கொடுக்கின்றான். இதனை ஏற்க விரும்பாத பெருஞ்சித்திரனார், குமணன் வழங்கிய களிற்றினைக் காவல் மரத்தில் வெளியில் கட்டி விட்டு, நேராக வெளிமானிடம் சென்று, அவன் நாணுமாறு நீ இரவலர் பலரையும் புரப்பவன் அல்லை; இரவலரைப் புரப்பவர் இல்லாமலும் இல்லை. இரவலர் உண்மையும் என்னையும், வள்ளல் குமணனையும் பார்த்து அறிந்து கொள்ளக. நின் ஊரிடத்து காவல் மரத்தில் கட்டிய உயர்ந்த நல்ல யானையை உமக்கு பரிசாக தருகிறேன் எடுத்துக்கொள் என்று கூறுகின்றார்.

    இரவலர் புரவலை நீயும் அல்லை;
    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
    இரவலர் உண்மையும் காண்இனி;நின்னூர்க்
    கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த
    நெடுநல் யானைஎம் பரிசு
  • இதே புலவர் இளவெளிமானின் செருக்கையும் அறிவின்மையும், புலவர்கள் வரிசையறிந்து போற்றத் திறத்தையும் எண்ணி,

    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    தகுதியுடையவர்களுக்கு உலகம் விரிந்தது, 
    காப்பவர் பலர் உள்ளனர் 
    உன் பொருள் தேவையில்லை
  • - எனக் கூறி செல்கின்றார்.
  • பெருஞ்சித்திரனார் ஒருமுறை கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமானைக் காணச் செல்லுகின்றார். அதியமான் புவலர்களைப் போற்ற கூடியவன், அவர்கள் வரிசை அறிந்து பரிசு வழங்க கூடியவன் என்றாலும், புவலவர் சென்ற நேரத்தில் வேறு வேலையின் நிமித்தம் காரணமாக அப்புவலரைச் சந்திக்காமல், அவரது சிறப்பினைப் பெருமையினை அறிந்து வேறு ஒருவர் மூலமாக பரிசினை வழங்குகின்றான். அதனை விரும்பாத அப்புலவர், என்னை வந்து என் தகுதியைக் காணாமல் தந்த இப்பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு யான் ஒரு வணிகவழிப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வருக என எதிர்கொண்டு, என் புலமை கண்டு, பின் எனக்கு நல்கும் பரிசு மிக சிறிதாயினும், எனக்கு அது மிக இன்பம் தருவதாக இருக்கும் என்று கூறி பரிசிலை வாங்க மறுக்கின்றார்.
  • காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன்;பேணித்
    தினையனைத் தாயினும் இனிதவர்
    துணையள வறிந்து நல்கினர் விடினே

    ஒருமுறை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைக் காணச் செல்லுகின்றார். அவனோ இவரது பெருமை அறியாது, செல்வச் செருக்கால் கண்மூடியிருந்த வளவன் தான் தரவிருந்த பரிசிலை, அப்புலவரிடத்து நீட்டினான். இதனைக் கண்டு வருந்திய அப்புலவர், யாம் மிகப் பெரும் துன்பம் உற்றாலும் சிறிதும் அறிவுணர்ச்சி இல்லாதவருடைய செல்வம் பயன்படாது; ஆகையால் யாம் அச்செல்வத்தை நினைக்க மாட்டோம்; நல்ல அறிவுணர்ச்சி உடையோரின் வறுமையாயினும்; பயன்படும் ஆதலால் யாம் அவ்வறுமையை உவந்து மிகப்பெரியாக நினைப்போம் என அவனது செறுக்கை சுட்டிக்காட்டி பரிசிலை மறுக்கின்றார்.

    மிகப்பேர் எவ்வம் உறினும் ,எனைத்தும்
    உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
    நல்லறி வுடையோர் நல்குரவு
    உள்ளுதும் பெருமயாம் உவந்துநனி பெரிதே
  • பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஒருமுறை கொடைவள்ளல் கடியநெடுவேட்டுனைக் காண செல்கின்றார், அவனோ இவரது புலமை திறத்தை எண்ணி, தன்னோடு இருக்க வேண்டும் என்ற விருப்பினால், பரிசிலை வழங்காமல் காலம் நீட்டிக்கின்றான். பரிசில் கொடுக்காமல் காலம் நீட்டிப்பதை விரும்பாத அப்புலவர் பெருமகனார், மூவேந்தர்களிடம் சென்றால் கொடையில் விருப்பின்றி, பரிசில் வேண்டி வரும் பரிசிலர்களுக்கு நீட்டித்து வழங்குவது இயல்பு. இதனை அறிந்தே எம்போலும் பரிசிலர் விருப்பின்றி வழங்குவதை விரும்புவது இல்லை. ஆகையால் விரைந்து தருவாயாக.
  • முற்றிய திருவின் மூவர் ஆயினும்
    பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே

    உறையூர் ஐணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், ஆய்ஆண்டிரனைக் காணச் செல்கின்றார். அவரின் சிறப்பினை அறிந்த ஆய், அவருக்கு வேண்டிய செல்வத்தினை நல்கினான். அதனால் மகிழ்ந்த அப்புலவர், அவன் கொடைத்திறத்தைப் போற்றி, நீ இல்லாத நாள் ஒன்று வருமானால், அப்பொழுது இவ்வுலகு வறுமையுறும்; அந்தாளில் புலவர் இல்லாது ஒழிவர்கள்; ஒருகால் இருந்தால் புலவர்களின் பெருமையறியாத மன்னர்களை நாடிச் செல்லமாட்டர்க்ள.

    நின்றின்று வறுவிதாகிய உலகத்து,
    நிலவன் மாரோ புலவர்; துன்னிப்
    பெரிய ஓதினும் சிறிய உணராப்
    பீடின்று பெருகிய திருவிற்
    பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே

    -
    இப் பாடல்களை நோக்கும் போது சங்க காலப் புலவர்கள் தங்களை மதித்து, தங்களது பெருமையினை உணர்ந்த வள்ளல்களிடம் மட்டுமே பரிசிலைப் பெற்று வாழ்ந்துள்ளனர். அவர்கள் தங்களது வாழ்வினைப் பெருமிதத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதைக் காண முடிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை