சோழர் கையாண்ட பாய்மரக் கப்பல் ஓட்டு முறை
....பா. அருணாசலம்....
பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்தே பெருகி வந்த தமிழ்நாட்டுக் கடல் வாணிபம் பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஆயினும் வங்கக் கடலில் பாரசிகர், அரபியர், சீனர்களின் வாணிபப் போட்டியால் தமிழ் நாட்டு வணிகர் சங்கங்கள் கடும் போட்டியை சமாளிக்க வேண்டிய நிலை 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டது.
இந்நிலையையும் தமிழர் கடல் வாணிபத்தையும் காக்க வேண்டி இராசேந்திர சோழன் கி.பி.1022 இல் பலகலங்கள் செலுத்தி தென்கிழக்கு ஆசிய நாடுகளான சுமத்திரா, மலேயா போன்ற பிரதேசங்களில் ஆட்சியில் இருந்த சிறிவிஜயா, மலையூர், பண்ணை, கடாரம், மதமலிங்கம், இலங்கசோகம், மயூரிடங்கம், தலை தக்கோலம், மாயாபள்ளம், இலமூரியதேசம் போன்ற ஆட்சிகளை போரில் வென்று, சோழரின் முதன்மையை நிலை நாட்டினான். ஆயினும், அந்தச் சோழ மன்னன் ஓர் ஆட்சியையும் கைப்பற்ற வில்லை.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடநத் இந்தச் சோழர் கடற்படை வெற்றி மிக மகத்தானதாகும். இது பற்றி இராசேந்திர சோழன் காலத்திய பல்வேறு கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங்களும், மெய்கீர்த்தியில் பறை சாற்றுகின்றன. அந்தக் கடற்படை பயன்படுத்திய கடல்வழி முறை பற்றிய சான்றுகள் எவையும் குறிப்பிடப் படவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நடத்திய ஆராய்ச்சி மூலம், கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர் பாட்டுகள், கைப்பிரதிகள், செவிவழிச் செய்திகள் ஆகியவற்றை அறிவிக்கும் உண்மைகள் பல புதிய செய்திகளைத் தெரியப்படுத்துகின்றன. இத்தகைய மீனவர் கைப்பிரதிகள் தெளிய தமிழில் எழுதப்படவில்லை. அவை இஸ்லாமிய தமிழ், அரபித் தமிழ், அரபி மலையாளம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும் 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட அராபியக் கடல் குறிப்புகள், சோழர் கடல் பயணமுறையை பெரிதும் புகழ்ந்து, அவற்றைப் பற்றியும். சோழர்கள் பயன்படுத்திய கடல், ஆகாய பார்வைத் திறன்கள், எளிய கை கருவிகள், கப்பல் செலுத்தப் பயனுறும் வெள்ளி அறியும் முறை பற்றியும் பல செய்திகளைக் கூறுகின்றன. சோழர் காலத்தில் பாய்மரக் கப்பல்களே கடலில் காற்றின் விசையால் நீரோட்டங்களின் உதவியுடன் விரைந்து ஓடின. அக்கால கப்பல்களில் சுக்கான் பொருத்தப்பட வில்லை. பாய்களும் சதுர, நீள் சதுர வடிவங்களில் அமைந்திருந்தன. அப்படிப்பட்ட பாய்மரக் கப்பல்கள் இன்று எங்குமே இயங்குவதில்லை.
நேர் கடல் வழி மார்க்கத்திற்கு வான்நிலை உதவும் வகையில் இருக்க வேண்டும். புயல்களும், கனத்த மழையும், அதிவிரைவான காற்றும் எதிரிகள். அதனால் கடல் பயணம் ஏற்ற பருவத்தில் தான் அமைய வேண்டும். அந்நேரங்களில் ஆகாயம் மேக மறைவின்றி நட்சத்திரங்கள் நன்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும். கப்பல் ஓட்டும் மீகான்கள் விண்நோக்கி அறிந்த நட்சத்திரங்களை அடையாளம் காண வேண்டும்,
இதற்காக இந்திய கப்பல் ஓட்டுநர் பயன்படுத்தும் வெள்ளிகள் (நட்சத்திரங்கள்) 56 மட்டும்தான். அவற்றிலும் பூமத்திய ரேகையை அடுத்த குறைந்த அட்சாம்சங்களில் பயனுள்ளவை 8 முதல் 10 எண்ணிக்கையே.
சோழர் அப்படி வங்கக் கடலில் உபயோகித்த வெள்ளிகள் திருவாதிரை, மார்க்கசீரம், கார்த்திகை, ரோகிணி, பூசம், திருவோணம் ஆகியவையே.
சோழர்கள் பயன்படுத்திய கப்பல் ஓட்டு முறையையும் அவர்கள் கண்டறிந்த வழிகளையும் ஆராய்ந்தறிய, அவர்கள் செய்த முறைகளை மறுபடியும் ஒரு பிரதிபலிப்பாக, அதே வகையில் நடைமுறையில் நடத்திக் காட்டினால், சோழர் கப்பல் நெடுங்கடலில் ஓட்டு முறைகளை நிலைநிறுத்த முடியும். இதற்காகவே, மும்பை பல்கலைக்கழக இளைப்பாறிய பேராசிரியர் பா.அருணாசலத்தின் மேற்பார்வையிலும், தலைமையிலும், மும்பை Maritime History Society முழு ஆதரவுடனும், இந்திய கடற்படையின் மேற்கு, தெற்கு பிரிவுகளின் உதவியுடனும், ஜ.என்.எஸ்.தரங்கிணி என்ற பாய்மரக்கப்பல், பிரதிபலிப்புப் பயணம் ஒன்று, சோழர் கப்பல் ஓட்டு முறைகளை சோதித்துப் பார்த்தது.
இராசேந்திரனின் கடற்படை 1022 இல் நாகப்பட்டினம் துறையிலிருந்து கிளம்பி, கடற்கரையை சார்ந்து தெற்கு நோக்கிச் சென்று, தென்நோக்கி ஓடும் நீரோட்டத்தின் உதவியாலும், வன்னி ஒழினி காற்றால் உந்தப் பட்டும் இலங்கையின் வடகரையை அடைந்து, பருத்தித் தீவு அல்லது பாதீவு தெற்குநோக்கிச் சென்று, முல்லைத் தீவு, திரிகோணமலை, கல்முனை, அக்கரைப்பட்டி, திருக்கோயில் துறையை அடைந்து, அதன் பின் நேர் கிழக்காகச் சற்றேரக்குறைய இணையாகவே கப்பலை ஓட்டி, சுமித்திரா தீவின் மேற்குக் கரையை அடைந்து பின்னர் கடற்கரை ஓரமாகவே தெற்கே சென்று, சுண்டா நீர் நிலையைக் கடந்து, சுமித்திராவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள சிறி விஜயா ஆட்சி செய்த பாலம் பாங் என்ற துறையை அடைந்தது. பின்னர் முன் கூறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக வென்றது.
இந்தச் சோழர் கடற்படையெடுப்பிற்குத் தக்க காலம் வங்கக்கடலில் வட கிழக்குக் காற்று ஓயும் காலம். இக்கால நிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பம் ஆகும். அப்போது, வங்கக்கடல் புயல்கள் முடிந்து, கடல் காற்றோட்டம், கடல்நிலை அனுமதி நிலையை அடைந்திருக்கும். பாய்மரக் கப்பல் ஓட்டுநர் விரைவில் அறிய, தமிழர்கள் இந்தக் கப்பல் பயண பருவத்தைக் குறிக்க, கீழ் கடற்கரை சிவன் கோயில்களில் மார்கழி மாத பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை தரிசன விழாவை பயன்படுத்துகின்றனர்.
சோழர் காலத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில், கௌவெள்ளி பலகை என்ற இராப்பலகை, டப்புப் பலகை ஆகியவையும் ஓரளவிற்குப் பயன்படுத்தப் பட்டன. இவற்றால் அறிந்த அளவுகள் தற்கால நுண் கருவிகளின் அளவுகளை ஒத்திருந்தன.
- கட்டுரை ஆசிரியர் - மும்பை பல்கலைக் கழக (இளைப்பாறிய) பேராசிரியர்,
நன்றி : தமிழ் இலெமூரியா இதழ் - நவம்பர் 2008 |
|
கருத்துகள்
கருத்துரையிடுக