நந்திகேசுரர்.
நந்திகேசுரர். சிலாதர் என்ற தவ முனிவர் இருந்தார். அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தது. இந்திரன் அவர் முன் தோன்றி சிவபெருமானை நோக்கித் தவம் புரியக் கூறினான். ஆனால் "கருவில் உதிக்காத குழந்தை வேண்டி தவம்புரி. கருவில் உதிப்பவர்கள் இறந்து விடுவார்கள். எல்லாவற்றையும் படைக்கும் கடவுள் பிரம்மன். ஹிரண்ய கர்ப்பன். அவர் கூட ஊழிக் காலத்தில் மறைந்து மீண்டும் மீண்டும் பிறக்கிறார். திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றிப் பிறகே படைப்புத் தொழிலைத் தொடர்கிறார். ஆதலின் கருவில் தோன்றுவோர் மறைவர்" என்று அறிவுரை வழங்கினான். சிலாதர் கருவில் உதிக்காத குழந்தை வேண்டிக் கடும் தவம் புரிந்தார். அவர் உடல் முழுதும் கரையான் புற்று மூடியது. பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவருடைய தசை இரையாகியது. வெறும் எலும்புக் கூடே எஞ்சியது. அவர் தவத்தை மெச்சி சிவபெருமான் வரம் அளித்தார். "சிலாத உன் வேண்டுகோளுக்கு இணங்கிக் கருவில் தோன்றாத குழந்தையை உணக்கு அளிக்கிறேன். அந்தக் குழந்தையாக நானே உனக்கு தோன்றுகிறேன்" என்று அருள் செய்து மறைந்தார். சிலாதர் யாக அங்கணத்துக்கு வந்தார். அங்கு...