கண்ணகி
சிலப்பதிகாரத்தின் முதன்மைத் தலைவன் கோவலனே. முதன்மைத் தலைவி கண்ணகியே. இக்காப்பியம் இருவரின் குடும்ப வாழ்க்கையையே அலசுகிறது. குடும்ப வாழ்க்கை தொடங்கும்போது கோவலனின் வயது பதினாறை நெருங்கிக் கொண்டிருந்தது எனச் சிலம்பு பதிவு செய்கிறது. பதினாறு வயதிற்கு முந்திய இளமை வாழ்க்கையைச் சிலம்பு காட்டவில்லை. குடும்ப வாழ்க்கை தொடங்கி அவ்வப்போது நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகவே கோவலனின் இளமை வாழ்க்கையை, ஆய்ந்து பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்காப்பியம் வரலாறு கூறுவதால்தான் அதன் பிறப்புத் தொடங்கி, வளர்ப்புப் படிநிலைகளைச் சொல்ல வேண்டியதாக உள்ளது. சில உயர்ந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்தத் திட்டமிட்டுச் செய்த காப்பியம் இது. ஆதலால் நாடகப் பாங்கில் தொடங்கி, அறிவூட்டுவதற்கு வேண்டிய நிகழ்ச்சிகளை நிரல் படுத்தாமல் ஆர்வத்தைத் தூண்டுமாறு ஆங்காங்கே வளர்த்து இளங்கோவடிகள் பின்னியுள்ளார். எனவே நிகழ்ச்சிகளின் வழி அறியும் செய்திகளிலிருந்து கோவலன் & கண்ணகி இளமை வாழ்க்கையைப் பற்றி ஊகப்படுத்தியே அறிய வேண்டியுள்ளது. கி.பி. 2&ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் தோன்றிய காலம் என்று ஆராய்ச்சியாளர்களால் ...