செம்மொழி இலக்கியங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சீரழிவுகளையும், அதனைத் தடுக்கும் முறைகளையும், அதிலிருந்து மீண்ட முறைகள்
செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் வாழ்நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது. கடலோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, கடல்படு பொருள்கள் கொண்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை, கடல் வாழ்வின் சவால்களில் இருந்துத் தங்ளைத் தற்காத்துக் கொண்டமை முதலான பல வாழ்முறைகளைச் செம்மொழி இலக்கியங்கள் அறிவித்து நிற்கின்றன. தலைவன் தலைவியைச் சந்தித்துவிட்டுத் தேரேறிச் செல்கின்றான். அவ்வாறு அவன் தேரில் ஏறிச் செல்லும் காட்சி பெருங்கடற்பரப்பில் பரதவர்கள் கப்பல் ஏறிச் செல்வது போல இருந்தது என்று கடல்வழியையும், நில வழியையும் ஒருங்கு வைத்துக் காண்கிறது ஒரு அகநானூற்றுப்பாடல். சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த கடுசெலல் கொடுந்திமிழ்போல நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே! (அகநானூறு.330) என்ற இப்பாவடிகளில் "கடுசெலல் '' என்ற சொற்பகுதி பெருங்கடலில் செல்லும் பயணம் எளிய பயணம் அன்று கடுமை வாய்ந்த பயணம் என்பதை எடுத்துரைக்கின்றது. மேலும் தமிழன் கடற்பகுதிகளில் எவ்வெவ் தொழில்கள் செய்தான் என்பதைப் பின்...