BODHI DHARMA
போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ ப்ரக்யதாரா ’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘ அறத்துப்பால் ’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு , சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ ச்சான் ’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ ஜென் ’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி! புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் , ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான ந...