சுனாமி-kumari


2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1jV3ZAJ5XV54JLODzC6vheu9fDI4nlZzOYQcq2wNMHp3hdBfcpl3zye9AOuGzOn1X0ky9ykPxp3HuHqWaSBk3ilWyMT3ykYb-gb8rXg2uBsB4deV27tUG9y0R9orVJMd42mzRsDjlf3g/s320/431386_301945466531779_100001489838270_836591_1021585544_n.jpg


இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்

கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த செனாசாயிக்என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான மயேசென்யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.

லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனைகோண்ட்வானாஎன்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ3XY-aL5CLRPMo9aH992D9VjEf_RtMznlqeWyvwL4NqOpUF0s-X0MNJ0P2O0HWxAL9RA8lt6P0k8db_tY9uXF1geXjKRH5hsZ8HS7HTkE76Uxs0hEMm93Eh3VIO9E4-wVStKLBJoiD5E/s320/Kumari_Kandam_map.png


இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.

அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் பாங்கியாவுக்கு அனைத்துலகுஎன்று பொருள்.

இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.




இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.

தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!

ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.
கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.

ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்குஎன்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.

“”
நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)

“”
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)

இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.

ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெரு
வள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.

தடநீர்க்குமரிஎன்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது.நதியும் பதியும்என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. நீர் மலிவான்என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.

லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது
நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை