பண்டைத் தமிழ் எழுத்தின் காலம்


பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் நடன காசி நாதன்
இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் பண்டைத் தமிழ் எழுத்துஎன்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது தமிழ் பிராமிஎன்றும் தாமிழிஎன்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமிஎன்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள், குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கென ஒரு எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கமாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து. அதன் பழமை குறித்துப் பண்டைய வடிவத்தைப்பண்டைத் தமிழ் எழுத்துஎன்று அழைக்கிறோம்.
சற்றேறக்குறைய கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். சமவயங்க சுத்தஎன்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப் பெற்றுள்ளன. பம்பி”, ”தாமிழிஎன்ற எழுத்துகள் அவற்றில் காணப்படுகின்றன.பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும், ”தாமிழிஎன்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும் கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும் தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள் எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும், தமிழ் மொழியிலும் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பிராகிருத மொழியில் உள்ள அசோகன் கல்வெட்டுகள் பம்பிஎழுத்தில்தான் உள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் பம்பிஎழுத்தில் உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்குப்பிராமிஎன்ற பெயரை முதன் முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற மேல்நாட்டார்தான். அவ்வாறு அழைக்கப்பெற்றது சந்தேகத்திற்கு இடமானது என்றும், வேறு ஒரு புனிதமான எழுத்திற்கு பிராமிஎன்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம் என்றும் டி.பி. வர்மா கருதியுள்ளார்.
அசோகன் கல்வெட்டுகள் நிலையே அவ்வாறு இருக்கும்போது தென் இந்திய பண்டைக் கல்வெட்டுகள் தென்னிந்திய பிராமியிலேஎழுதப் பெற்றுள்ளன என்பதும், தமிழ்நாட்டுப் பண்டைய கல்வெட்டுகள் தமிழ் பிராமியில்எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதவை.
தமிழ் எழுத்துப் பிராகிருத மொழியில் தாமிழிஎன்று குறிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ஆங்கிலமொழி பேசுவோரால் ட்ராங்குபார்என்றழைப்பதுபோல், தமிழ்மொழி பேசும் நாம் தமிழ் எழுத்து என்றுதான் குறிப்பிடுதல் வேண்டும். இந்தியாவின் முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த கே.ஜி. கிருஷ்ணன் தமிழ் எழுத்து என்றே கூறிவந்தார்.
அசோகன் கல்வெட்டில்
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் உயிர்மெய்க்குறிலாகக் கொள்ளப்படும். உதாரணம் (க) ஆதலால் உயிர்மெய் எழுத்தில் பக்கக்கோடு இருக்காது.
2. உயிர்மெய் நெடிலைக் குறிக்க எழுத்தின் மேல் பகுதியில் வலப்பக்கம் ஒரு பக்கக் கோடு இடப்பட்டிருக்கும் (கா).
3. மெய் எழுத்துத் தனியாக இல்லை. கூட்டெழுத்தில் மெய் எழுத்துச் சேர்ந்து இருக்கும் (ய-க்ய) வாக்கியத்தின் இறுதியில் புள்ளி பெற்ற மெய்யெழுத்தைக் காண முடியாது.
ஆனால் தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானவற்றில் (மாங்குளம் கல்வெட்டு).
முதல் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் புள்ளி பெற்ற மெய்யெழுத்தாக மட்டுமே கொள்ளப்படும்.
2. மேலும் புள்ளியில்லா மெய்யெழுத்தில் பக்கக்கோடு இடப்பட்டிருந்தாலும். சில இடங்களில் அது புள்ளியைப் பெற்ற மெய்யெழுத்தாகவே கொண்டு, அதன் பக்கத்தில் உயிர் எழுத்து உயிர்மெய்யாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை அகர வரிசை முறை (Alphabetical) என்று அழைக்கப் பெறும் சில இடங்களில் உயிர்மெய்க் குறிலாகக் காணப்படுகின்றது.
இரண்டாம் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் புள்ளிபெற்ற மெய்யெழுத்தாக மட்டுமே கொள்ளப்படும். அசோகன் கல்வெட்டுக்களில் காணப்பெறுவது போன்று உயிர் ஏறிய உயிர் மெய்யெழுத்தாகக் கொள்ள முடியாது.
2. முதல்வகைக் கல்வெட்டில் புள்ளியில்லா மெய்யெழுத்தில் பக்கக் கோடு இடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் மெய்யாகக் கருதப்பட்டது போன்று அல்லாமல் உயிர்மெய்யாகவே கருதப்பட்டது.
3. புள்ளியில்லா மெய்யெழுத்தில் உள்ள பக்கக் கோடு சில இடங்களில் உயிர்மெய்க் குறிலையும், சில இடங்களில் உயிர்மெய் நெடிலையும் குறிக்கும். ஆனால் அசோகன் கல்வெட்டுகளில் உயிர்மெய் நெடிலை மட்டுமே குறிக்கும்.
மூன்றாம் வகை (பட்டிப்புரோலு கல்வெட்டு)
1. புள்ளியில்லா மெய்யெழுத்து புள்ளிபெற்ற மெய்யெழுத்தாகக் கையாளப்பட்டுள்ளது.
2. புள்ளியில்லா மெய்யெழுத்தின் மேல் பகுதியில் உள்ள பக்கக் கோட்டைத் தொடர்ந்து கீழ்நோக்கிக் காணப்பெறும் கோடு உயிர்மெய் நெடிலைக் குறிக்கும்.
3. இவ்வாறு காணப்பெறுவது ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் மட்டுமேயாகும்.
4. தென்னிந்தியாவில் பட்டிப்புரோலு கல்வெட்டுக்கு முன்பிருந்த வளர்ச்சியுடைய கல்வெட்டுக்களைக் காண முடியவில்லை. ஆதலால் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளின் வளர்ச்சியாக இது கொள்ளப்படுகிறது.
நான்காம் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்து புள்ளி பெற்ற மெய்யெழுத்தாகவோ அல்லது உயிர்மெய்க் குறிலைக் குறிக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
2. புள்ளியில்லா மெய்யெழுத்தில் உள்ள பக்கக் கோடு அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறுவதைப் போன்று உயிர்மெய் நெடிலை மட்டுமே குறிக்கும்.
3. இவ்வளர்ச்சிக்கு முன்பு தென்னிந்தியாவில் மூன்று கட்ட வளர்ச்சியும், தமிழ் நாட்டில் இரண்டு கட்ட வளர்ச்சியும் இருந்திருந்தல் தெரிய வருகிறது.
ஐந்தாம் வகை
1. மெய்யெழுத்துப் புள்ளி வைத்துக் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.
2. புள்ளியில்லா மெய்யெழுத்து உயிர் மெய்க் குறிலைக் காட்டும்.
3. புள்ளியில்லா மெய்யெழுத்தின் மேல் பகுதியில் காணப் பெறும் வலப்பக்கக் கோடு உயிர்மெய் நெடிலைக் குறிக்கும்.
4. எகர, ஒகரம் புள்ளி பெற்று விளங்கும்.
5. அசோகன் கல்வெட்டுக்களில் காணப்பெறுவது போன்று (எகர, ஒகரம் தவிர) உயிர், மெய் எழுத்துகள் உள்ளன.
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் நான்காம் வகைக் கல்வெட்டுக்கள் தான் அசோகன் கல்வெட்டுக்களின் எழுத்து முறையைப் போன்று காணப்படுகின்றன.
இதற்கு முன்பிருந்த மூன்று வகைக் கல்வெட்டுக்கும் தமிழ் எழுத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவ்வளர்ச்சி எவ்வளவு காலத்தில் நிகழ்ந்திருக்க முடியும் என்று ஊகித்தால் தமிழ் எழுத்தின் பழமையை உணர முடியும். அசோகன் கல்வெட்டுக்களுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் இருந்ததும், அவை முறையாக வளர்ச்சி அடைந்ததும் மேற்சுட்டிக்காட்டியதன் மூலம் புலனாகும்.
தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த தமிழ் எழுத்தைத்தான் அசோகன் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்தியிருக்கிறான் என்பதுதான் முற்றிலும் உண்மை.
அசோகன் கல்வெட்டைப் பார்த்துத் தமிழ்நாட்டில் கல்வெட்டுக்கள் எழுதப் பெற்றிருக்குமாயின் தொடக்கத்திலேயே அவன் கல்வெட்டுக்களில் உள்ளவாறு.
1. புள்ளியில்லா மெய்யெழுத்து உயிர் மெய்க்குறிலையே குறித்திருக்கும் (உம்+-க).
2. புள்ளியில்லா மெய்யெழுத்தில் காணப்பெறும் வலப்பக்கக்கோடு உயிர்மெய் நெடிலைக் காட்டியிருக்கும் (உம்; F கா).
3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களிலும் வருக்க எழுத்துகள் சரளமாகக் கையாளப்பட்டிருக்கும்.
4. கூட்டு எழுத்துகள் (சம்யுக்ஷரம்) மலிந்திருக்கும்.
5. ர்ரு, ள்ளு எழுத்துக்களையும் சேர்த்திருப்பர்.
6. எகர, ஒகர, எழுத்துகள் இருந்திரா.
7. தமிழுக்கே உரிய ழ, , , ன எழுத்துகள் தோன்றியிரா.
வழக்கிலிருக்கும் ஒரு எழுத்தைத் தங்களுக்குப் பயன்படுத்த விரும்புவர்கள் அவ்வெழுத்துக்களை அப்படியேதான் கொண்டிருப்பர். ஆதலால்தான் தமிழ் எழுத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் (தமிழுக்கே உரிய ழ, , , ன தவிர) அப்படியே அசோகன் தம் நாட்டில் பயன்படுத்தியிருக்கிறான். பிராகிருத மொழிக்கேற்ப வருக்க எழுத்துக்களையும், பிறவற்றையும் உருவாக்கிக் கொண்டான் என்று கொள்வதே பொருத்தமாகத்தோன்றுகிறது.
ஐ.மகாதேவன் தமிழ் எழுத்தின் காலத்தைக் கணிக்க அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த ஓடுகளின் காலத்தை ஆதாரமாகக் கொள்வதாக முன்னர்க் குறிப்பிட்டிருந்தார். அரிக்கமேட்டில் மார்ட்டிமர் வீலர் நடத்திய அகழாய்வில் முற்காலத்தில் பாள நிலையிலிருந்து பிற்காலத்திய சுடுமண் பொம்மைகளும், தேங்காய் நார்க்கயிறு போன்றவையும் கிடைத்திருக்கின்றன. ஆதலால் தற்பொழுது இலங்கைக் கல்வெட்டுக்கள், பானை ஓடு எழுத்துக்கள், சாதவாகனர் காசில் காணப்பெறும் எழுத்துப் போன்றவற்றைக் கொண்டு கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு முடிய தமிழகத்தில் பழமையான கல்வெட்டுகளின் காலமாகும் என்று வரையுறுத்துள்ளார்.
அண்மையில் டாக்டர் விமலா பெக்லி என்பவர் அரிக்கமேட்டில் நடத்திய அகழாய்வின் மூலம் கி.மு.250லிருந்து கி.பி.200 முடிய தமிழ் எழுத்துப் பொறித்த பானையோடுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார். கி.மு.3ஆம் நூற்றாண்டில் பானை ஒட்டில் தமிழ் எழுத்தை எழுத மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பது கண்கூடு. அவ்வாறு பழக்கமாவதற்குச் சில நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த தமிழ் எழுத்தே மிகப்பழமையானது என்பது இதன் மூலமும் புலனாகிறது.
கொடுமணல் அகழாய்வின் மூலம் இரு பண்பாட்டுக் காலம் தெரிய வருவதாகவும் முதல் பண்பாட்டுக் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 100 முடிய என்றும், இரண்டாம் பண்பாட்டுக்காலம் கி.பி. 100 முதல் கி.பி. 300 முடிய என்றும் தெரிவித்துவிட்டு, முதல் பண்பாட்டுக் காலம் முதலே தமிழ் எழுத்துப் பரவலாகப் பழக்கத்தில் வந்துவிட்டன என்றும் இராஜன் கூறியுள்ளார்.
இதிலிருந்து கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலேயே தமிழ் எழுத்து ஓடுகளில் எழுதப் பெற்றிருந்தன என்பதும், அவ்வெழுத்துப் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவை என்பதும் புலனாகிறது.
இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த பானை ஒட்டினை ரேடியோகார்பன் காலக்கணிப்பு மூலம் கி.மு. 600 லிருந்து 500 எனக் கணித்து உள்ளனர். இதன் மூலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவிலேயே ஒருவகை எழுத்து (அசோகன் காலத்து முந்தைய எழுத்து) இலங்கையில் பொதுமக்களிடையே வழக்கில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அது போன்றே தமிழ் நாட்டிலும் தமிழ் எழுத்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே வழக்கிலிருந்திருக்கலாம்.
கொற்கை அகழாய்வில் கிடைத்த கரித்துண்டைக் கார்பன் 14 மூலம் காலம் கணித்ததில் 2755 + 95 – கி.மு. 850 அல்லது 600 என்று தெரியவந்தது. அக்கரித்துண்டு பெருங்கற்காலப் நிலையில் கிடைத்தது. அவ்வகழ்வாய்வில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த கருப்புச் சிவப்பு பானையோட்டில் தமிழ் எழுத்துப் பொறிக்கப் பெற்றவை சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் குறைந்தது கி.மு. 660 அளவில் இருக்கலாம். அவ்வகழ்வாய்வின் அறிக்கை இன்னமும் வெளிக்கொணரப்படவில்லை.
அழகன் குளத்தில் நடைபெற்ற அகழாய்வில் 2ல் பல பாள நிலைகளிலிருந்து சேகரிக்கப்பெற்ற கரித்துண்டுகளை சி 14 காலக்கணிப்பு மூலம் காலகணிப்புச் செய்ததில் மூன்றாம் பாள நிலையில் சேகரிக்கப்பெற்றது. 2140+100 (155 மீட்டர் ஆழம்) அதே பாள நிலையில் (1.90 மீட்டர் ஆழத்தில்) 2240 + 130. ஐந்தாம் பாள நிலையில் (2.80 மீட்டர் ஆழத்தில்) 2260 + 100 சார்ந்தது என்று தெரியவந்துள்ளது. AGM 5,7,8 ஆகிய குழிகளிலிருந்து தமிழ் எழுத்துப் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் எஜிஎம் 5ல் 3 மீட்டரிலிருந்து 5.30 மீட்டர் ஆழத்தில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 4,3 ஆம் நூற்றாண்டு எனத் துணிந்து கூறலாம். கொடுமணல் மற்றும் அழகன் குளத்தில் கிடைத்துள்ள எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தைக் கி.மு. 2 ஆம் நூற்றாண்டினது என்று கூறலாம் என்று ஐ. மகாதேவன் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது போன்று கி.மு. 2ஆம் நூற்றாண்டில் சாதாரணக் குடிமகனும் தமிழ் எழுத்தை அறிந்திருக்கின்றான் என்றால் அவ்வெழுத்தின் தோற்றம் மிகவும் பழைய காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா.
அசோகனது இரண்டாம் கல்வெட்டில் தமிழ்நாட்டு மன்னர்கள் சேரர் சோழர் பாண்டியர் அதியமான் ஆகியோரும் 13 ஆம் கல்வெட்டில் சோழர் பாண்டியர் ஆகியோரும் பக்கத்து நாட்டு மன்னர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அசோகனின் சம காலத்திய மற்ற மன்னர்கள் தங்களுக்கென எழுத்தைப் பயன்படுத்தியிருக்கையில் அதே காலத்திய தமிழ் மன்னர்கள் மட்டும் தங்களுக்கென எழுத்தில்லாமல் இருந்தார்கள் என்று கூறுவது தருமமாகாது, என்று கே.ஜி. கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாங்குளக் கல்வெட்டில் பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் அலுவலரும் புகழியூர்க் கல்வெட்டில் சேர மன்னர்கள் கோ ஆதன் செல்லிரும்பொறை. பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகியோரும் ஜம்பைக் கல்வெட்டில் அதியன் நெடுமான் அஞ்சியும் குறிக்கப்படுகின்றனர். அவர்கள் அமைத்துத் தந்ததைத் தங்கள் நாட்டு எழுத்தான தமிழ் எழுத்தில் பொறித்திருக்கிறார்கள் என்பதுதான் சரியாகும்.
ஜம்பைக் கல்வெட்டின் எழுத்தமைதியும் அசோகன் கல்வெட்டின் எழுத்தமைதியும் ஒரே நிலையில் உள்ளன. மேலும் அதில் அதிய மன்னர், அசோகன் இரண்டாம் கல்வெட்டு ஸதியபுதோ என்று குறிப்பிடுவது போன்று ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி என்று எழுதப்பெற்றிருக்கிறது. ஆதலால் ஜம்பைக் கல்வெட்டின் காலத்தை அசோகன் கல்வெட்டுக்குச் சமகாலத்தியது, அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
அதேபோன்று பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் காணப்பெறும் ஆண்டைச் சக ஆண்டு என்று கொண்டு பார்த்தால் கி.பி. 270 அதாவது கி.பி. 3 ம் நூற்றாண்டு என ஆகிறது. எழுத்தமைதியில் தமிழ் எழுத்து வட்டெழுத்தாக வளரக் தொடங்கும் காலத்தை இது தெரிவிக்கிறது.
மேற்காணும் இரு கல்வெட்டுக்களின் எழுத்தமைதி அடிப்படையில் பார்த்தால் புகழியூர் கல்வெட்டு மற்றும் மாங்குளம் கல்வெட்டு ஆகியவை முறையே கி.மு. 4 மற்றும் கி.மு. 5ஆம் நூற்றண்டைச் சார்ந்தவை என்பதே சரியானதாகும். ஆதலால் தமிழ் நாட்டில் பரவலாக வழங்கி வந்த தமிழ் எழுத்தைத்தான் அசோகன் பயன்படுத்திக் கொண்டு பிராகிருதச் சொற்களின் ஒலிக்கேற்பச் சில புதிய எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியும், ஆறுமுக சீதாராமனும், பெருவழுதி என்று பண்டைத் தமிழ் எழுத்தில் எழுதப்பெற்ற செப்புக் காசுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ள நாணயத்தில் முன்புறம் குதிரையொன்று திரும்பி நிற்கும் உருவமும் அதைச் சுற்றிப் பெருவழுதி என்று எழுதப் பெற்றுமிருக்கிறது. பின்புறம் பாண்டியர்களின் குலச் சின்னமாகிய மீன் சின்னம் ஒன்று காணப்படுகிறது. இந்நாணயம் அசோகனின் எழுத்து முறை தக்கணத்தில் பரவுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று கல்வெட்டறிஞர் கே.ஜி. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதலால் இக்காசு கி.மு. 4 அல்லது கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். இதில் இருந்தும் பண்டைத் தமிழ் எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே வழக்கில் இருந்தது என்பது உறுதியாகிறது.
இலங்கை நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சதுர வடிவான செப்பு முத்திரையில் மேல் வரியில் ஹரப்பன் காலக் குறியீடுகளும் (திரு மகாதேவன் பெருங்கற்காலக் குறியீடுகள் என்கிறார்) கீழ் வரியில் எழுத்திலும் (பிராமி எழுத்து என்று திரு. மகாதேவன் எழுதியுள்ளார்) எழுதப்பட்டிருக்கின்றன. இம்முத்திரையைக் கண்டெடுத்து முதலில் கட்டுரை வெளியிட்ட யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் இந்திரபாலா கீழ் வரியைப் கோவேந்தஎன்று படித்து மேல்வரியில் உள்ள குறியீடுகளும் அதைத்தான் குறிப்பிடுகின்றன என்று கூறியிருந்தார். அவரது கூற்றுச் சரி எனத்தான் தோன்றுகிறது. ஆதலால் இலங்கையில் பெருங்கற்காலக் காலத்திலேயே தமிழ் எழுத்து மக்களிடையே நன்கு அறிமுகமாகியிருந்தது என்பது தேற்றம். திரு மகாதேவன் இரண்டாம் வரி பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இச்செப்பு முத்திரையின் காலம் கி.மு. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
திரு. கருணரத்னா (1960) திரு. பெர்ணந்தோ (1969) திரு. அபயசிங்கா (1975) ஆகியோர் கீழ்க்காணும் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.
அசோகன் பிராமி இலங்கையில் பரவுவதற்கு முன்பேயே பண்டைத் தமிழ் எழுத்து இலங்கையில் வழக்கில் இருந்துள்ளது என்பது அசோகன் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் பெருமளவில் கலந்திருப்பது சிறந்த சான்றாகும்.
மேலும் தமிழ்ப் பெயர்களான ஆய், வேள், பருமக(பெருமகன்), பருமகள்(பெருமகள்), மருமகன் சலஹ(சகலன்) பரத(பரதவர்) உதி, உதிய (உதியன்) போன்றவை இக்கல்வெட்டுக்களில் பிராகிருத மயப்படுத்தப்பட்டிருப்பதும் வலுவான ஆதாரங்களாகும். திரு. மகாதேவனும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இலங்கை பிராகிருதக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சிறப்பெழுத்துக்களான ழ, , , ஆகியவை காணப்படுகின்றன என ஒப்புக் கொள்கிறார்.
தென்னிலங்கையில் கிடைத்திருக்கும் ஈய நாணயங்களில் உதிரன் திஸபிடன் மஹாசாத்அன் கபதிகடல்அன் உதியன் போன்ற தமிழ்ப் பெயர்கள் எழுதப் பெற்றிருக்கின்றன இவை கி.மு. 3 அல்லது 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று திரு. புஷ்பறட்னம் தம் தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு என்னும் நூலில் எழுதியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ண மாவட்டம் பட்டிப்புரோலுவில் கிடைத்துள்ள கற்பேழை கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது வரலாற்றாய்வாளர்களின் முடிவு. இப்பேழை மீது எழுதப் பெற்றுள்ள எழுத்துத் தென்னிந்தியப் பிராமி அல்லது திராவிட பிராமி என்று கருதப்படுகிறது. இதன் கி.மு. முதல் நூற்றாண்டு என்று திரு. மகாதேவன் தெரிவித்திருக்கிறார். இவர் கூற்றுப்படியே எடுத்துக் கொண்டாலும் பட்டிப்புரோலு எழுத்து வகைக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் இரண்டு கட்ட வளர்ச்சி இருந்திருக்கிறது. அவ்விரண்டு கட்ட வளர்ச்சி ஏற்படுவதற்குக் குறைந்தது இரு நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும். அவ்வாறெனில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து மிகுந்த செல்வாக்கில் இருந்திருக்கிறது. என்பதற்குப் பட்டிப்புரோலு கல்வெட்டு மற்றுமொரு சான்றாகும்.
கே.ஜி கிருஷ்ணன் அவர்கள் 1997ல் ஈரோட்டில் நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழக எட்டாவது கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரையின் சில கருத்துக்களை நினைவு கூர்தல் இங்குப் பொருத்தமாக இருக்கும்.
தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. அடுத்த நிலையில் இவையே இந்தியா முழுவதும் முதலில் பரவி இருக்கலாம் என்று சொல்ல வாய்ப்புண்டு.
தமிழர் வடக்கிலிருந்து வந்த எழுத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று வாது செய்பவர்கள் ஒன்றை மறந்தார்கள். அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்து முறையில் தமிழ் மொழிச் செய்திகளையும் எழுத முடியும் என்பதே அது. ஆகையால் தமிழ் எழுத்துக்கள் மௌரியர் காலத்துக்கு முன்பே வழக்கிலிருந்திருக்க வேண்டும்.
பிறிதோரிடத்தில் தசரதன் மகள் தாசரதி என்ற வடசொல்லாக்க முறையை ஒட்டித் தமிழ் எழுதப் பயன்பட்ட எழுத்துத் தாமிழி என்று அந்நூலார் கருதினார்கள் போலும். எனவே தமிழ் நாட்டார் எதற்காகப் பிராமி என்று பெயர் வைக்க வேண்டும். அழகு உடையவள் அழகி, அருள் உடையவர் அருளி என்பதைப் போல, தமிழ் எழுதும் எழுத்து தமிழி என்றே கொள்ளலாம். அதிகம் சொல்வானேன். தமிழ் என்றே சொல்லலாம். தமிழ் எழுத்துக்களின் தனித்தன்மை இதனை உறுதி செய்கிறது.
நன்றி: தமிழ் எழுத்தியல் வரலாறு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை