மோகனாங்கி
‘மோகனாங்கி’ முதல் தமிழ் வரலாற்று நாவல்
“ஈழத்துத்
தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால்
எழுதப்பட்டு 1885ம்
ஆண்டு வெளியிடப்பட்ட அஸன்பேயுடைய
கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. இந்நூல் சென்னையில் வெளியிடப்பட்டது.
அஸன்பேயுடைய கதை வெளிவந்து பத்து ஆண்டுகளின் பின்னர் 1895இல்
திருகோணமலையைச் சேர்ந்த த.சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘மோகனாங்கி‘ என்ற நூல் வெளியாயிற்று. இந்நூல் தஞ்சை
நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும்
ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்.” (“சி.மௌனகுரு, எம்.ஏ.நுஃமான்”).
இந்த ‘மோகனாங்கி’ நூலைப்பற்றி ‘முல்லைமணி’ அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர்
வீரகேசரி வாரஇதழில் எழுதிய கட்டுரையை கீழே தருகின்றேன்.
“இந்நாவலில்
வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம்பெற்ற போதும் சொக்கநாதன், மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல்
நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான
சூழ்ச்சிகளும் சீர்திருத்தக் கருத்துக்களும் மேலோங்கி
நிற்கின்றன. நாவல் என்ற
பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை.
ஆசிரியரால் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும்
காணப்பட்டாலும் நாவலிற் பெரும்பகுதி வாசகர்
எளிதிற் புரிந்து கொள்ள முடியாத கடின சந்தி விகாரங்களுடன்
கூடிய சிக்கல் நிறைந்த
நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகிறது” (கலாநிதி க.அருணாசலம்). புதியதொரு
துறையில் முதன் முதலாக ஈடுபடுபவர்களின்
ஆக்கங்களில் சிற்சில குறைபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாததே. பிரதாப முதலியார் சரித்திரமே
(1879) தமிழில்
முதலில் தோன்றிய சமூக
நாவலாகும். சரித்திரம் என்று குறிப்பிடுவதே தற்காலத்தில் உள்ள நாவலுக்குரிய
பண்புகளில் உணராத நிலையில் தோன்றிய முதல் நாவல் என்பதை மறுக்க எவரும்
துணிய மாட்டார்கள். ஓர் இலக்கிய ஆக்கத்தை விமர்சிப்பவர்கள் அது தோன்றிய
காலப்பின்னணியையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஆரம்பகால நாவலாசிரியர்களின் நாவல்களில்
காப்பியங்களின் செல்வாக்குப்
படிந்திருப்பதைக் கைலாசபதி அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார். மோகனாங்கியிலும்
தோன்றிய காலச் சூழ்நிலைக்கேற்ப குறைபாடுகள் இருக்கலாம். செந்தமிழ் வழக்கு மேலோங்கியிருந்த
காலத்தில் அவர் அதனைப் பயன்படுத்தினார்.
1895இலேயே நாவலின் இடையிடையே எளிமையான பேச்சுவழக்குச் சொற்களை அவர் பயன்படுத்தியுள்ளதை
அருணாசலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். வரலாற்றுச் சூழல் நாவலில் இடம்பெறுகின்றது. காதல்
நிகழ்ச்சிகளும், சூழ்ச்சிகளும் நாவலில்
இடப்பெறத்தகாதவை அல்ல. கல்கியின் நாவல்களிலும் இவை இடம்பெறத்தான் செய்கின்றன.
தமிழ் நாட்டு அறிஞர்களான இரா.
தண்டாயுதம், கி.வா.ஜெகநாதன், கோ.வி.மணிசேகரன் முதலானோர் கல்கியே
முதலில் சரித்திர நாவலை எழுதினார். அவரே
தமிழில் வரலாற்று நாவலின் தந்தை என்க் கூறுகின்றனர். இவர்கள்
மோகனாங்கி பற்றி
அறியாதிருக்கலாம். அல்லது புதிய இலக்கியவகையொன்றுக்கு ஈழத்தவர் முன்னோடியாகத்
திகழ்வதை ஏற்க விரும்பாமல் இருக்கலாம். தமிழ் நாட்டு அறிஞர்களைப் பொறுத்த அளவில் இது ஒன்றும்
புதிய விடயம் அன்று. ஆறுமுக
நாவலரையும், சி.வை.தாமோதரம்பிள்ளையையும்
புறந்தள்ளிவிட்டு உ.வே.சாமிநாதையர்
அவர்களே பதிப்புத்துறையின் முன்னோடி என உரத்துக் கூறும் அவர்கள் சரவணமுத்துப்பிள்ளைக்கு
கிடைக்கவேண்டிய நியாயமான புகழை
இருட்டடிப்புச் செய்ததில் வியப்பில்லை.
மோகனாங்கி நாவலை எழுதிய
தி.த.சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று
நாவல்துறைக்கு முன்னோடியாக விளங்கினார் எனச் சோ.சிவபாதசுந்தரம்
அழுத்திக் கூறுவது
பொருத்தமற்ற தெனக்கூறலாம்’ என
அருணாசலம் அவர்கள் சொல்வது
எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
‘கல்கியின்
வரலாற்று நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை மோகனாங்கி ஏற்படுத்தவில்லை என்கிறார் அருணாசலம்’. இது அகிலனின் பாவை விளக்கு ஏற்படுத்திய
தாக்கத்தை பிரதாப முதலியார் சரித்திரம் ஏற்படுத்தவில்லையென்றோ இன்றைய
திரையிசைப் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை திருக்குறள் ஏற்படுத்தவில்லை என்றோ கூறுவதை ஒத்தது.
எது தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தியது
என்பதல்ல பிரச்சினைஇ எது முன்னோடி என்பது கேள்வி.
மோகனாங்கி குறிப்பிட்டுக் கூறக்கூடிய
வரலாற்று நாவல் என ஒப்புக்
கொள்ளும் அருணாசலம் அவர்கள் அதனை முன்னோடி நாவல் எனவும் சரவணமுத்துப்பிள்ளையை
வரலாற்று நாவலின் தந்தை எனவும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
யார் எப்படிக் கூறினாலும் மோகனாங்கியே
தமிழில் முதல் வரலாற்று நாவல்
என்பது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மை”. இவ்வாறு கூறுகிறார் ‘முல்லைமணி’ அவர்கள் தமது கட்டுரையில்.
நன்றி - http://srinoolakam.blogspot.com இணையம்
கருத்துகள்
கருத்துரையிடுக