அய்யனார் யார்? – 2


அய்யனார் யார்? – 2

http://ramanans.files.wordpress.com/2011/06/dharmasastha.jpg?w=300&h=155
தர்ம சாஸ்தா
சங்கம் மருவிய கால இலக்கியமான சிலம்பில் சாஸ்தாவைப் பற்றி பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.
மாலதி என்னும் அந்தணப் பெண்ணினால் ஒரு குழந்தை இறந்து பட, அவள் பாசாண்ட சாத்தனை வேண்ட, அவள் துயர் துடைக்க அச்சாத்தன் குழந்தையாக அவதரித்து, பின் அந்தணச் சிறுவனாக வளர்ந்து, பின் கண்ணகியின் தோழியான தேவந்தி என்பாளை மணந்து அவளுக்கு மட்டும் தன் மூவா இளநலம் காட்டிஎன் கோவிலுக்கு நாள்தோறும் வா என்றுகூறித் தீர்த்த யாத்திரை செல்வது போல நீங்கியது பற்றிய செய்திகள் சிலம்பில் காணக் கிடைக்கின்றன.
http://ramanans.files.wordpress.com/2011/06/karuppanna-samy.jpg?w=300&h=225
கருப்பண்ணசாமி
மேலும் சிலம்பில், “தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைஎனக் குறிக்கப்பட்டிருப்பது சாஸ்தாவா அல்லது அவரது பரிவார தேவதையான கருப்பண்ணசாமியா? என்பது ஆராய வேண்டியிருக்கிறது. அந்த பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக் கொள்வதாகவும் சிலம்பு கூறுகின்றது. மேலும் மறக்குலத்தினர் அந்த பூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. (அய்யனார் மற்றும் சாஸ்தாவிற்கு பெரும்பாலும் சைவப் படையலே. கருப்பண்ணசாமிக்கே இரத்த பலி உண்டு. அதுபோல சாம்பிராணிப் புகையும், பலியும் கருப்பண்ணசாமிக்கே சிறப்பாக உரித்தானது. அவரைப் போன்ற வேறு சில சிறுதெய்வங்களுக்கும் இதே வகை வழிபாடு உண்டு)
http://ramanans.files.wordpress.com/2011/06/karuppusamy.jpg?w=199&h=300
கருப்பர்
மேலும் வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அதே போன்று சாம்பிராணி தூபம் போட்டே வழிபாடுகள் நடக்கின்றது.
http://ramanans.files.wordpress.com/2011/06/karups-vazipadu.jpg?w=658
வழிபாடு
மேற்கொண்ட தகவல்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத இடமுள்ளது. அதாவது இந்திர வழிபாடே அய்யனார் வழிபாடாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருத இடமுள்ளது.
http://ramanans.files.wordpress.com/2011/06/yanai.jpg?w=225&h=300
யானை வாகனம்
மற்றுமொரு முக்கியமான விஷயம் கிராமங்களில் இப்போதும் அய்யனாருக்காக நடத்தப்படும் புரவி எடுப்பு விழாவில் கண்டிப்பாக மழை பெய்யாமல் இருக்காது. விழா நாளனறு மேகம் இருண்டு காற்றும் தூறலும் வீசுதல் என்பது பெரும்பாலும் நடக்கும் சம்பவம். மழைக்கடவுள் இந்திரன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
http://ramanans.files.wordpress.com/2011/06/ayyanar-temple-ilangudi.jpg?w=300&h=225
புரவிகள்
அப்படியானால் இந்திர வழிபாடே பிற்காலத்தில் அய்யனார் வழிபாடாக மாறியுள்ளதா? அப்படியானால் அய்யப்பன் யார்? அய்யப்ப வழிபாடு பற்றி பண்டை இலக்கியங்கள் ஏதும் கூறவில்லையே ஏன்? அவ்வழிபாடு எப்போது தோற்றம் பெற்றிருக்கும்? அதற்கும் அய்யனார் வழிபாட்டிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா?
கயிலையில் சேரமான் இறைவனை கண்டு மகிழ்ந்து பாட அவர் பாடிய பாடல்களை சாஸ்தாவிடம் கொடுத்து  பூவுலகில் வெளியிடுமாறு சொல்லி, சேரமான் வந்த வெள்ளை நிறக் குதிரையில் பூமிக்கு இறைவன் அனுப்பி வைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில், வெள்ளானைச் சருக்கத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் ஆணையை ஏற்று சேரமான் சென்ற வெள்ளைக் குதிரையில் வந்திறங்கிய சாத்தன், சேரமானின் பாடல் தொகுப்பை எழுதி வெளியிட்டார் அந்த நூல்தான் திருக்கயிலாய ஞான உலா. இது பன்னிரு திருமுறைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
http://ramanans.files.wordpress.com/2011/06/ayyanar-temple-ilankudi.jpg?w=300&h=249
இளங்குடி ஐயனார்
திருப்பிடவூர் என்று குறிப்பிடப்படும் அந்த ஊர் இன்றைய திருப்பட்டூர். இதற்கு திருப்படையூர் என்றும் பெயருண்டு. இன்றும் திருப்பட்டூரில் ஒரு மிகப் பெரிய ஆலயம் பராமரிப்பின்றி உள்ளது (நான் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தைச் சொல்லவில்லை. அது செல்லும் வழியில் முன்னாலேயே உள்ளது. வாயிலில் மிகப் பெரிய கல் யானை வாகனமாகக் காணப்படுகிறது. அதை பெரியய்யா கோயில் என்றும் பெரிய சாமி கோயில், எழுத்தச்சன், அரங்கேற்றியான் கோயில், அரங்கேற்றிய ஐயன் கோயில் என்றும் கூறுகின்றனர். (இந்தக் கட்டுரை உருவாகவே அந்த ஆலயம் தான் காரணம்.)
http://ramanans.files.wordpress.com/2011/06/tanjore_periyakoil_ayyanar.jpg?w=300&h=174
தஞ்சை ஐயனார்
இந்த ஐயனார் ஆலயம் மிகப் பெரிய கற் கோயிலாக உள்ளது. பொதுவாக ஐயனார் ஆலயங்கள் கிராமத்தின் எல்லைப் புறத்தில் காடு, கண்மாய், ஏரிக் கரை ஓரத்தில், பெரும்பாலும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஐயனார் மிகப் பெரிய கற் கோயிலில் எழுந்தருளியுள்ளார். பெரிய புராணம் கூறிய வரலாற்றுக்குச் சான்றாக இத்தலத்தில் உள்ள சாஸ்தா ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார். பூரண, புஷ்களா சமேதராக ஒரு காலை மடித்து மறுகையில் சுவடியும் ஐயனார் மிக அழகாகக் காட்சியளிக்கின்றார்.
பூரணை, புட்கலை பற்றி கச்சியப்பர்,
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
என்கிறார்.
http://ramanans.files.wordpress.com/2011/06/purna-pushkala-sametha-ayyanar2.jpg?w=300&h=207
இந்த ஊரைச் சேர்ந்தவரே சாத்தனார் என்ற புலவர் என்ற கருத்து உண்டு.
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
என்ற புறப்பாடல் வரிகள், (பாடல் தலைப்பு அவிழ் நெல்லின் அரியல். பாடியவர்: மதுரை நக்கீரர். பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன். திணை: பாடாண். துறை: கடைநிலை புறம். 394) இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன.
இன்றும் ஒவ்வொரு வருடமும் ஆடி சுவாதி தினத்தன்று திருக்கயிலாய ஞானஉலா விழா சிறப்பாகக் கொண்டாடபடுகிறது. அன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
 http://ramanans.files.wordpress.com/2011/06/ayyan-new.jpg?w=263&h=300
மேற்கண்ட கருத்துகள் மூலம் அய்யனார் தமிழகத்து தொன்மைக் கடவுள் என்பதும். ஐயனார் சாஸ்தா வழிபாடு என்பது பண்டைத் தமிழர் வழிபாடு என்பதும் உறுதியாகிறது. ஆனாலும் சில சந்தேகங்கள் எழவும் செய்கின்றன.
கந்த புராணம் கூறும் சாஸ்தாவைப் பற்றிய தகவல்கள் இதனுடன் பொருந்தவில்லை.
சிலப்பதிகாரம் கூறும் சாத்தன் வரலாறு இதற்கு மாறானதாக இருக்கிறது.
ஐயப்பன் பற்றிய வரலாறு இதோடு தொடர்புடையதாய் இல்லை.
http://ramanans.files.wordpress.com/2011/06/ayyappan-1.jpg?w=300&h=225
ஐய[ப்பன்
ஏனென்றால் சிவபெருமானுக்கும் மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன். பந்தள மகராஜனது மகவாகத் தோன்றி இவர் செய்த அற்புதங்கள் தமிழகத்து பண்டைய ஐயனார் வழிபாட்டோடு ஒத்து வரவில்லை. இருவருக்கும் பெயர் வடிவில் ஒற்றுமை இருந்தாலும் அவதார வடிவில் ஒப்புமை இல்லை. மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்பதும், யோக நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பவர் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. ஐயனார் பெரும்பாலும் பூரணா, புஷ்கலா சமேத தம்பதியராகக் கணப்படுகிறார். சில இடங்களில் தனது பரிவார தெய்வங்களுடன் தனித்தும் இருக்கிறார். எங்கு இருந்தாலும் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அவர் அமர்ந்திருக்கிறார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
http://ramanans.files.wordpress.com/2011/06/sastha1.jpg?w=272&h=300
சாஸ்தா
ஆக, மேற்கண்ட ஆய்வுகளின் படி அய்யனார் என்ற தெய்வம் வேறு அய்யப்பன் என்ற தெய்வம் வேறு என்ற முடிவிற்கே வர முடிகிறது. இது பற்றிய ஆய்வுகள் இன்னமும் விரிவான அளவில் மேற்கொண்டால் இன்னும் புதிய பற்பல அரிய தகவல்கள் தெரிய வரும் என்பதே இந்த ஆய்வின் இறுதி முடிவு.

கருத்துகள்

  1. Dear Sir,
    We are From Tuticorin Dt, Our Temple is "SREE iLLANGUDI SASTHA"..
    Now Temple Renovation ongoing.

    We want Small Dtls about Sastha,

    We need "ALL Sastha's Names and Photos" . If u Have Please Help me...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்,
      நான் விருதுநகர் --ஊரைச்சார்ந்தவன்.மேலப்புதுக்குடியில் எழுந்தருளியிருக்கும் அய்யனார் குலதெய்வத்தைப் போற்றும் வகையினைச் சார்ந்தவர்கள்.இணையத்தில் ஐயனார் குலவரலாறு, கதைப்பாடல் இது குறித்து நிறைய கிடைக்கிறது. புத்தக வடிவில் முனைவர் தசரதன் அவர்களிடம் கிடைக்கும்.(சென்னை)

      நீக்கு
  2. அய்யனார் பற்றி முனைவர் நெடுஞ்செழியன் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். It's very important. If u want more about ayyanaar. You can get from youtube and books... Aasivagam

    பதிலளிநீக்கு
  3. அய்யனார் கருப்்பசாமியும் ஒருவரா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை