ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.

 

jayasree

 ராமாயணம் விவரிக்கும் குமரிக் கண்டம்.



வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடும் பொருட்டு
அனுமன் முதலான வானரப்படைகளை பாரதவர்ஷத்தின் தென் புறத்திற்கு சுக்ரீவன் அனுப்பிகிறான்.
விந்திய மலை தொடங்கி, தென் துருவப்பகுதியை அடையும் வரை பார்க்ககூடிய
நிலம், மலை, நாடுகள், கடல் போன்ற நீர்நிலை ஆகிய அனைத்தையும் சுக்ரீவன் வர்ணிக்கிறான்.

அதைத் தொடர்ந்தும் சுக்ரீவன் சில நிலப்பகுதிகளை வர்ணிக்கிறான்.
அவ்வாறு அவன் வர்ணிக்கும் இடங்களில் இன்று இந்தியப் பெருங்கடலே உள்ளது.
மாலத்தீவுகளைத் தவிர சொல்லிக் கொள்கிறபடி ஒரு நிலப் பாகமும் இல்லை.
ஆனால் சுக்ரீவன் அங்கெல்லாம் காணக்கூடிய பகுதிகளை விவரிக்கவே,
ராமாயண காலத்திலும்,
அதற்கு முற்பட்டும்,
இந்தியக் கடலில் கண்ணுக்குத் தென்படும்படியாக நிலங்கள் இருந்தன என்பது புலனாகிறது.
இந்தப் பகுதியில் குமரிக் கண்டம் இருந்தது என்று சங்க நூல்கள் மூலமாக நாம் அறியவே,
சுக்ரீவனது வர்ணனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன்னால் ராமாயணம் நிகழந்தது  
எனவே சுக்ரீவன் விவரிக்கும் பகுதிகள்
இந்தியப் பெருங்கடலில் 7000 ஆண்டுகளுக்கு முன்வரை
கடல் மட்டத்துக்கு மேலே இருந்தன என்பது ருசுவாகிறது.

ராமாயண வர்ணனைகளுடன்,
செயற்கைக் கோள் மூலமும்,
பல ஆழ் கடல் ஆராய்ச்சிகள் முலமும்
நமக்குக் கிடைத்து வரும் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்
கடல் கொண்ட பண்டைய பாண்டியன் நிலங்களின் அமைப்பை அறிந்து கொள்ளலாம்.
அந்த அமைப்புகளைத் தேடும் முயற்சியில்,

மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பாகத்தில் உள்ள மலய பர்வதம் பகுதியில் கொல்லம் உள்ளது.
அங்கிருந்து தென்புறம் சென்றால் பாண்டிய நகரமான கவாடபுரத்துக்குச் செல்லலாம் என்று சுக்ரீவன் கூறினான் என்பதை முன் பகுதியிலேயே கண்டோம்.
கொல்லம் குமரி என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் சொல்லவே,
கொல்லம் பகுதி இருக்கும் மேற்குக் கரை ஓரமாக, கொல்லத்துக்குத் தெற்கே கவாடமும்,
கொல்லத்தை ஒட்டிச் செல்லும் நீண்ட மலைத் தொடர் குமரி மலையாகவும் இருக்க வேண்டும்.
ஆழ்கடலில் இந்த மலை செல்வதை இந்தப் படத்தில் நன்கு காணலாம்.




இந்த மலைத் தொடர் ராஜஸ்தானத்தில் உள்ள ஆரவல்லி மலையின் தொடர்ச்சியாகும்.
அது தற்போதைய இந்தியாவின் மேற்குக் கடலில் (அரபிக் கடல்) இந்தியாவை ஒட்டியும்,
இந்தியப் பெருங்கடலில் நீண்டும் செல்வதைக் காணலாம்.
இந்த மலைத் தொடர், ஆஃப்ரிக்காக் கண்டத்தின் கிழக்கில் உள்ள மடகாஸ்கர் தீவை ஒட்டிச் செல்கிறது.
இப்படி நீண்டிருக்கும் மலைத்தொடரின் அரேபியக் கடல் பகுதிகளில் கடல் மட்டத்துக்கு மேல் இருப்பதே லட்சத் தீவுகள் ஆகும். இந்தியாவின் தென் பகுதியில் இதே தொடரில் வெளியில் தெரியும் பகுதிகள் மாலத்தீவுகள் ஆகும். 


அதாவது இந்தத்தீவுகள் கடலில் மூழ்கியுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளன.
அதனால் இந்ததீவுகளை ஒட்டி ஆழம் அதிகம் இல்லை.
இது தெரியாமல் முன்னாளில் பல கப்பல்கள் தரை தட்டி மூழ்கி விட்டன என்பது
ஆழ் கடல் ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடல் மட்டம் குறைவாக இருந்த காலத்தில்,
இந்ததிதீவுகள் அளவில் பெரிதாகவும், அல்லது
பெரும் நிலப்பரப்புகளாகவும் இருந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் மேற்கு, தென் மேற்கில் அமைந்துள்ள லட்சத்தீவுகளை ஒட்டி பிற மலைத்தொடர்களும் உள்ளன.
இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மலய மலைத்தொடரும்,
அதற்கும் உள்ளடங்கி மஹேந்திர மலைத் தொடரும் உள்ளன.
இவை எல்லாம் தொடர்ச்சியான பக்கவாட்டு மலைகளாக இருந்தன.

ராமாயணத்தில் சுக்ரீவன் விவரித்துக் கொண்டு வருகையில்,
மஹேந்திர மலையின் அடிவாரத்தில் இலங்கை இருப்பதாகச் சொல்கிறான்.
ஆழ்கடல் அமைப்பில் மஹேந்திர மலை இலங்கை வரை செல்வதைக் காணலாம்.

மேலும் ஒரு விவரத்தை சுக்ரீவன் சொல்கிறான்.
இந்த மஹேந்திர மலையின் ஒரு பகுதியை,
ஒரு சமயம் அகஸ்திய முனிவர் கடலுக்குள் அழுத்தி விட்டார் என்கிறான்.
அவர் அழுத்தியது போக மீதித் தெரிவது மஹேந்திர மலை என்கிறான்.
அதாவது ராமாயணம் நடந்த 7000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை
சுக்ரீவன் நினைவு கூர்ந்திருக்கிறான்.

மஹேந்திர மலைக்கும், அகஸ்தியருக்கும் தொடர்பு உண்டு.
இன்றைக்கும் மஹேந்திர மலை என்று சொல்லப்படும் மலையை ஒட்டியே
அகஸ்திய மலை என்னும் மலையும்,
பொதிகை மலையும் உள்ளன.




கைலாச மலையில் பார்வதி- பரமசிவன் திருமணம் நடந்தபோது அந்தத் திருமணத்திற்காக வந்த கூட்டத்தினால்,
பாரதத்தின் வடக்குப் பகுதி தாழ்ந்தது, தெற்குப் பகுதி உயர்ந்தது.
இதைச் சமன் செய்ய அகஸ்தியர் பொதிகை மலைக்கு வந்தார்.
அவர் கொடுத்த அழுத்ததால் வடக்கிலும், தெற்கிலும் நிலப்பகுதி சமனாயிற்று என்று பல புராணங்களும் தெரிவிக்கின்றன.
இது ஒரு கட்டுக் கதை அல்ல என்று தெரிவிக்கும் வண்ணம்,
சுக்ரீவன் தரும் விவரமும், பாரதவர்ஷம் இருக்கும் டெக்டானிக் தட்டும் அமைந்துள்ளன.


இதைப் புரிந்து கொள்ள, நாம் டெக்டானிக் தட்டுகளைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்..
நாம் காணும் நிலப்பகுதிகளும், அவற்றின் அருகில் உள்ள கடல்களும் வேறு வேறாகத் தெரிகின்றன.
ஆனால் உண்மையில் அவை பலவும் ஒரே அடிவாரத்தில் இருக்கின்றன.
நமது உலகம் முழுவதிலும், மொத்தம் 7 பெரும் அடிவாரங்கள் உள்ளன.
அவற்றை டெக்டானிக் ப்ளேட்டுகள் அல்லது பூமித்தட்டுகள் என்கின்றனர்.
நிலப் பகுதிகளும், கடல் பகுதிகளும் சேர்ந்து ஒரே பூமித்தட்டில் அமைந்துள்ளன.
இந்த பூமித்தட்டுகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அவை ஒன்றன் மீது ஒன்று இடிக்கும் போதோ, அல்லது உராயும் போதோ, நில நடுக்கம் ஏற்படுகிறது.
சில சமயங்களில், ஒரு தட்டு மற்றொரு பூமித்தட்டின் கீழ் இறங்கிவிடவும் கூடும்.
அதனால் கடல் மட்டம் உயர்ந்து அருகிலுள்ள நிலப்பகுதிகள் மூழ்கி விடலாம்.





இந்தப் படத்தில் நாமிருக்கும் பூமித்தட்டில் இந்திய நாடும்,
இந்தியக் கடலின் பெரும் பகுதியும் உள்ளதைக் காணலாம்.
இந்த இந்திய பூமித்தட்டு இமயமலைப் பகுதியில் ஆசியத்தட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இது ஆசியத்தட்டை இடிக்கவே இமய மலை உருவானது.
அதனால் உருவான இமய மலையை மடிப்பு மலை என்பார்கள்.
இதை இப்படி விளக்கலாம்:
ஒரு பக்கம் உறுதியாக ஒரு துணீயை வைத்துக் கொண்டு, அதன் மறு பக்கம் ஒரு துணியை நகர்த்திக் கொண்டே வந்து, முதல் துணியின் மீது நிதானமாக மோதிக் கொண்டே இருந்தால், மோதும் இடத்தில் துணி சுருங்கி, மடிப்பு மடிப்பாக எழும்பும்.
இரண்டு பூமித்தட்டுகள் மோதும் போதும் இப்படி நில பாகங்கள் உயரக்கூடும்.
அப்படி உயர்ந்ததுதான் இமயமலை.
7 கோடி வருடங்களுக்கு முன் இப்படி உருவாக ஆரம்பித்த இமய மலை இன்னும் எழும்பிக் கொண்டு இருக்கிறது.


இப்படி நடக்கும் மோதலில், இந்தியத்தட்டு ஆசியத்தட்டின் கீழும் இறங்கி விடலாம்.
அப்படிப் பட்ட சாத்தியக் கூறுகள் உண்டு.
பார்வதி -பரமசிவன் திருமணத்தின் போது வடக்கு தாழ்ந்தது என்று சொன்னது,
உண்மையில் இந்தியத்தட்டு அந்தப் பகுதியில் இறங்கி விட்ட ஒரு நிகழ்ச்சியை விவரிப்பதாக இருக்கலாம்.
கைலாச மலையில் அழுத்தம் அதிகரிக்கவே,
இந்தியத் தட்டு அப்பகுதியில் ஆசியத் தட்டின் கீழ் இறங்கி இருக்க வேண்டும் (SUBDUCTION).
அப்பொழுது, இந்தியத் தட்டின் மறு பகுதி தூக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
இப்படி டெக்டானிக் தட்டுகளின் உராய்ந்ததைக் கதை ரூபமாக,
வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்று சொல்லியிருக்கலாம்.
 
இந்தியத் தட்டின் முழு அமைப்பையும் பார்த்தால், வடக்கில்,
அதாவது தற்பொழுது கண்ணுக்குத் தெரியும் இந்திய நிலப்பகுதியைவிட,
இந்தியக் கடலில் உள்ள மலைப்பகுதிகள் டெக்டானிக் தட்டின் மீது அதிக அழுத்தம் கொடுப்பவை.
இந்தியப் பெருங்கடலில் மூன்று இடங்களில், இந்தியத் தட்டு இடைவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தப் படத்தில் அழுத்தும் இடங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.


நாம் சொன்ன குமரி மலைத் தொடர் ஆஃப்ரிக்கா கண்டம் இருக்கும் பூமித்தட்டின் மீது அழுத்தம் கொண்டிருக்கிறது.
அழுத்தத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலத்தடி சலனத்தால், இந்த மலைத் தொடரே உண்டானது.
இதை சென்ட்ரல் இந்தியன் ரிட்ஜ் என்கிறார்கள்.
Y  என்பதைக் கவிழ்த்துப் போட்டாற்போன்ற அமைப்பில், இந்திய பூமித்தட்டின் எல்லைகளில் மலைத் தொடர் செல்கிறது.



கைலாசமலைப் பகுதியில் இந்தியத்தட்டு சரிவடைந்தபோது,
அதன் விளைவாகத் தென்பகுதி உயர்ந்தது என்னும் போது,
இந்தியப் பெருங்கடலில் பல இடங்களில் இந்தத் தொடரும், அதைப் போன்ற பிற மலைதொடர்களும் 
கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்திருக்க வேண்டும்.


பொதிகை மலைக்கு அகஸ்தியர் சென்றவுடன்,
உயர்ந்த பகுதிகள் சமன் அடைந்தன என்று சொல்லப்படவே,
உயர்ந்த பகுதிகளில் சில கடலுக்குள் அமிழ்ந்திருக்க வேண்டும்.
அப்படி அமிழ்ந்த ஒரு பகுதி மஹேந்திர மலையின் ஒரு பகுதி என்கிறான் சுக்ரீவன்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மற்றொரு விவரம் இருக்கிறது.

மஹாபாரதத்தில் மஹேந்திர மலையின் ஒரு பகுதி ஒரு சமயம் கடலுக்குள் மூழ்கி இருந்தது என்றும்,
அதைப் பரசுராமர் மீட்டார் என்றும் ஒரு வர்ணனை வருகிறது. (மஹாபாரதம், துரோண பர்வம் 68).
க்ஷத்திரியர்களை அழித்தபின், பிராயச்சித்தமாக பரசுராமர் பல வேள்விகளைச் செய்தார்.
அதன் முடிவில் பல தானங்களைச் செய்தார்.
அப்பொழுது கஸ்யப முனிவருக்குத் தான் அடைந்த நிலங்களையும், ஏழு தீவுகளையும் தானமாகக் கொடுத்தார்.
அதன் பிறகு கடலில் மூழ்கியிருந்த பகுதிகளை மீட்டு, மஹேந்திர மலையில் தங்கிவிட்டார் என்கிறது மஹாபாரதம்.
அவ்வாறு அவர் மீட்ட பகுதிகள் கோகர்ணம், துளு போன்றவை.




பரசுராமர், ராமர் வாழ்ந்த காலத்தில் இருந்தார்.
எனவே அவர் மேற்கிந்தியக் கடலோரப்பகுதிகளில் நிலத்தை மீட்டது
7000 வருடங்களுக்கு முந்தின சம்பவம் என்று சொல்லலாம்.

இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தில்,
மேற்குப் பகுதியில் கடலுக்குள் மூழ்கிய நிலங்களைக் காணலாம்.
இளம் நீல நிறத்தில் மேற்குக் கரையை ஒட்டிச் செல்லும் பகுதி, நிலப் பகுதியாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கருகிறார்கள்.
அந்தப்பகுதியில் தென்னிந்தியாவில் மஹேந்திரமலை,
அதற்கு மேற்கில் மலய மலை,
அதற்கும் மேற்கில் குமரி மலை
என்று அடுத்தடுத்து மலைதொடர்கள் செல்கின்றன.




இவற்றுள், மஹேந்திர மலைப் பகுதியில் அகஸ்தியர் வாசம் செய்த இடம் இருக்கிறது.
அதற்கு நேர் மேற்கே இன்றும் கடலுக்குள் லட்சத் தீவுப் பகுதிகள் உள்ளன.
அங்குள்ள ஒரு முக்கிய இடம் அகட்டி எனப்படுகிறது.
இது அகத்தி (அகத்தியர்) என்பதை ஒட்டி அமைந்துள்ளது.
இந்தப் பெயர் தற்செயலாக அமைந்த பெயர் என்று எண்ணத் தோன்றவில்லை.
இந்த இடத்தில் குந்தத்துப் பள்ளி என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சியில் மக்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த சுவடுகள் கண்டுபிடிகக்ப்பட்டுள்ளன.
இந்த இடம் குன்றத்துப் பள்ளி என்பதாகவும் இருக்கலாம்.
அல்லது, பகுதி இல் குந்தலம், குண்டலம் போன்ற இடங்களை சஞ்சயன் தென்னிந்தியப் பகுதில் சொன்னதைப் பார்த்தோமே, அவையாகவும் இருக்கலாம்.
லட்சத்தீவின் பிற தீவுகளிலும், 3500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பல பெயர்களும், தமிழ்ப் பெயராக உள்ளன.
காலனி ஆதிக்கம் வந்தவுடன், பழைய பெயர்கள் மாறிவிட்டன.
ஆனால் முனைப்புடன் தேடினால், 3500 ஆண்டுகளுக்கு முன் லட்சத்தீவு இருக்கும் மலைப் பகுதி இன்று இருப்பதை விட பரந்து இருந்திருப்பதைக் காண முடியும்.
3500 என்பது நம் தொடரில் ஒரு முக்கிய காலக்கட்டம்.
போகப் போக அதை அறியலாம்.


லட்சத்தீவின் தலை நகரத்தின் பெயர் கவராட்டி.
இதை முற்காலத்தில் காவடித்தீவு என்று அழைத்து வந்தனர்.
கோவா பகுதியை ஆண்ட கடம்ப அரசனான சாஸ்ததேவன் என்பவன் காவடித்தீவை வென்றான் என்ற கல்வெட்டு கிடைத்துள்ளது. காவடித் தீவு என்பது கவராட்டி என்று மருவியிருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
காவடி என்பது முருகனுடன் தொடர்பு கொண்டது.
முருகனது திருவிளையாடல் பலவும் பாண்டிய நாட்டில் நடந்தது என்பதற்கு ஆற்றுப்படை நூல்கள் சான்றாக உள்ளன.
இந்தத் தீவுகள் எல்லாம் தமிழ் வளர்த்த பாண்டியனது நாட்டின் பகுதிகளாக ஒரு காலத்தில் இருந்தன என்று சொல்லத்தக்க வகையில், இந்தத் தீவுகளின் பெயர்கள் அமைந்துள்ளன. 
 
பாண்டியன் ஆண்ட பகுதிகளில் முதலில் சிவபெருமான் குடி கொண்டிருந்ததாகவும்,
சிவனது மகனார் முருகன் அந்த நிலத்தைக் காத்தார் என்றும்,
அவரால் தமிழ் வளர்ந்தது என்றும் உரையாசிரியர்கள் பலரும் கூறியுள்ளனர்.
திருக்குற்றாலத்தல புராணத்திலும் இவ்வாறே சொல்லப்பட்டுள்ளது.
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும்,
குன்றமெறிந்த குமர வேளும்,
அகத்தியனாரும்  முதல் சங்கத்தை அலங்கரித்தனர்.
அவற்றை நினவுறுத்தும்படி லட்சத்தீவின் பெயர்கள் உள்ளன.
இதனால், லட்சத்தீவு தொடங்கி, அரபிக் கடலிலிருந்து
இந்தியப் பெருங்கடலுக்குள் செல்லும் நீண்ட மலைத் தொடர்
கடல் கொண்ட குமரித் தொடராக இருக்கக் கூடும் என்பது சாத்தியமாகிறது.
கொல்லம் குமரி என்று அடியார்க்கு நல்லார் கூறுவதும்,
மலய பர்வதத்திலிருந்து கபாடபுரம் செல்ல வேண்டும் என்று ராமாயணம் கூறுவதும்,
இந்தப் பகுதியின் காவலனாகப் பாண்டியன் இருந்ததால் அவன் மலயத்துவஜன் என்னும் பட்டப் பெயரும் பெற்றிருந்ததான் என்பதும்
இந்தக் கருத்துக்கு வலுவூட்டுகின்றன


அது மட்டுமல்ல.
பாண்டவர்களது பரம எதிரியான
துரியோதனனுக்குக் கொல்லம் மாவட்டத்தில்
மலநாடு என்னும் இடத்தில் ஒரு கோயில் உள்ளது.
வட இந்தியாவில் இருந்த துரியோதனனுக்குத் தென் முனையில் கொல்லத்தில் என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது.
கோயில் தல புராணத்தின்படி, பாண்டவர்கள் வன வாசம் இருந்த பொழுது
அவர்கள் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள துரியோதனன் பல இடங்களிலும் தேடி இருக்கிறான்.
அப்படித் தேடிக் கொண்டு அவன் வந்த இடம் கொல்லம்.
அவனை வரவேற்று உபசரித்த அந்த இடத்துக் குறவர்கள் அவன் பெயரால் கோயில் எழுப்பியிருக்கின்றனர்.


   இப்படி ஏதெனும் ஒரு காரணத்தைக் காட்டி, பிற்காலத்தில் 
   இந்தக் கோயில் எழும்பி இருக்கலாம் என்று
   எளிதாகக் கூறிவிட முடியாதபடி ஒரு தொடர்பு இங்கு இருக்கிறது.
   பாண்டவர்களும், பாண்டியர்களும் நட்பு பாராட்டி வந்தவர்கள்.
   அந்த நட்பின் காரணமாக, க்ருஷ்ணன் மீது சொந்தப் பகை இருந்தாலும்,
   பாண்டவர்களுக்கு ஊறு விளைவிக்ககூடாது என்று சாரங்கத்துவஜ பாண்டியன்
   பாண்டவர் பக்கம் நின்று போர் புரிந்தான் என்று பார்த்தோம் (பகுதி 39)
   அவர்களை நட்பை அறிந்த துரியோதனன்,
   பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தின் போது,
   பாண்டிய நாட்டில் மறைந்திருந்தார்களோ என்று சந்தேகித்து,
   கொல்லம் பகுதிக்கு வந்திருக்கலாம்.
   அங்கு அவனைச் சந்தித்தவர்கள் அவனுக்குக் கோயில் கட்டி கும்பிட்டிருக்கிறார்கள். 
   மேலும் விவரங்கள இங்கே படிக்கலாம் :-

  http://malanada.com/pooja.htm



இதன் மூலமும் பாண்டியன் நாடும்,
அவன் தலை நகரமான கவாடமும்,
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீட்சியில் அமைந்திருந்தது என்னும் கருத்து வலுப் பெறுகிறது.
அது மட்டுமல்ல, மற்றொரு புதிரும் விடுபடுகிறது.
பாண்டவர்களால் ஒரு பாண்டிய மன்னன் குருக்ஷேத்திரப் போரில் கொல்லப்பட்டான் என்று மஹாபாரதம் கூறுகிறது (பகுதி 39)
துரியோதனன் கொல்லம் பகுதிக்கு வந்தது உண்மையானால்,
அவன் சந்தித்த மக்களில்,
அந்தப் பகுதியை ஆண்ட பாண்டியக் குறுநில மன்னனும் அவனுக்கு ஆதரவு தந்திருக்கக் கூடும்.
அவனை குரு‌ஷேத்திரப் போரில் பாண்டவர்கள் வென்றதை மஹாபாரதம் குறிப்பிட்டது என்று கொள்ளலாம். (ம-பா-9-2)
இப்படிப் பல செய்திகள் மூலம், கபாடபுரமும், குமரி மலைத் தொடரும் உண்மையே என்பதை அறிய முடிகிரது.


இனி சுக்ரீவன் மேலும் அளிக்கும் விவரங்களைப் பார்ப்போம்.
முதலில் காவிரியின் புறத்தே அகஸ்தியர் இருந்தார் என்றான்.
பிறகு மஹேந்திர மலைக்கு அகஸ்தியர் வந்து,
அந்த மலைத் தொடரின் ஒரு பகுதியைக் கடலுக்குள் அமிழ்த்தினார் என்றான்.
இதற்கும் மேல் அகஸ்தியர் குடி கொண்ட இடம் என்று ஒரு இடத்தைச் சுட்டுகிறான்.
அந்த இடத்தில் இன்று இருப்பது கடல்!!





மஹேந்திர மலையில் ஆயிரம் கண்ணுடைய இந்திரன் பருவம்தோறும் வந்துவிட்டுச் செல்வான் என்கிறான்.
பருவம் தப்பாமல் அம்மலயில் மழை பொழியும் என்பதை இது குறிக்கும்.
இது தவிர வேறு ஒரு அர்த்தமும் உண்டு.



மஹேந்திர மலையிலிருந்து 100 யோஜனை தூரத்தில் இலங்கை இருந்தது.
அதாவது இப்பொழுது நாம் கிழக்குத் திசை நோக்கித் திரும்புகிறோம்.
இலங்கையைத் தாண்டி 100 யோஜனை தூரம் சென்றால்
கடலின் நடுவே புஷ்பிதக மலை என்னும் மலை இருக்கும் என்கிறான்.
இந்தப் பகுதியில் வடக்கு- தெற்காகச் செல்லும் ஒரு மலைத் தொடரை கடலுக்குள் காணலாம்.
அது பெங்கால் பகுதியில் நிலத்தடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
வங்கக் கடலிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியா வரை 5000 கி.மீ நீளம் செல்கிறது.
இந்த மலையின் முகடுகளில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளன.




இலங்கையிலிருந்து 100 யோஜனை (1 யோஜனை = 8 மைல்) தொலைவில்
அந்த நாளில் மக்கள் வசிக்கத்தக்கதாக புஷ்பிதக மலை இருந்திருக்கிறது.
ஏனென்றால் அங்கும் சீதையைத் தேடச் சொல்கிறான்.
அந்த மலையிலிருந்து 14 யோஜனை தொலைவில் சூரியவான்; என்னும் மலை இருந்தது.
அங்கும் தேடச் சொல்லவே அந்த மலைப் பகுதியும் மக்கள் வசிக்கத்தக்கதாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது.
இந்த மலைகளை ஆழ் கடல் வரைபடத்தில் தேடுவோம்.





இந்தப் படத்தின் குறுக்கே செல்லும் சிவப்புக் கோடு பூமத்திய ரேகை ஆகும். 
புஷ்பிதக மலை, மற்றும் சூர்யவான் மலைகளை, சூரியன் பெயரால் சுக்ரீவன் உயர்வாகச் சொல்கிறான்.
இலங்கையில் ஆரம்பித்து நாம் செல்லும் இந்த இடங்கள் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பது கவனிக்கத்தக்கது.
அந்தப் பகுதியில் என்றும் சூரியன் தன் கிரணங்களை அளித்துக் கொண்டிருப்பான்.
அதனால் சூர்யவான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.


அந்த மலையைத் தாண்டிச் சென்றால் வருவது வைத்யுத மலை. 
வைத்யுதம் என்றால் பளீறென்று மின்னல் போல ஒளி வீசுதல் என்று அர்த்தம். 
இந்தத் தொடரின் பின் பகுதியில், இந்த மலைத் தொடரில் வைடூர்ய மலை என்ற பெயரில் ஒரு மலை இருந்தது என்று படிப்போம். ரத்தினங்கள் கிடைக்கும் மலையாக இருக்கலாம். ஒளி வீசும் ரத்தினங்கள் பாறைகளில் கலந்திருந்தால், சூரிய ஒளியில் பளீறென்று ஒளி வீசவே சமஸ்க்ருதத்தில் வைத்யுதமலை என்ற பெயர் பெற்றிருக்கலாம்.
வைத்யுத மலைக்கு அப்பால் இருப்பது குஞ்சர மலை.

குஞ்சரம் என்றால் யானை என்பது பொருள்.
ஆனைமலை போல யானை வடிவில் அதன் சிகரம் இருந்திருக்கலாம்.
மலைகளாகவே சுக்ரீவன் விவரிப்பதால்,
இவை அனைத்தும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் புறத்தில் உள்ள் மலைத்தொடரில் இருக்க வேண்டும்.


குஞ்சர மலையைப் பற்றி சுக்ரீவன் சொல்லும் விவரம்தான் ஆச்சரியமானது.
அந்தக் குஞ்சர மலையில் அகஸ்தியரது இருப்பிடம் இருக்கிறது என்கிறான்!!
அவரது இருப்பிடத்தை விஸ்வகர்மா நிர்மாணித்தான் என்கிறான்.
அவரது இருப்பிடம் தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டு,
ஒரு யோஜனை அகலமும், 10 யோஜனை உயரமும் கொண்டதாக இருந்தது என்கிறான்!!




அகஸ்தியரது இருப்பிடங்களாக இதுவரை சொல்லப்பட்ட இடங்கள்
காவிரி ஆரம்பிக்கும் குடகும் (பிரம்மகிரி மலை),
பொதிகையும் ஆகும்.
இவை நாம் நன்கு அறிந்தவை.
நாம் பார்க்காத ஆனால் சங்க நூல் உரை ஆசிரியர்களால் சொல்லப்பட்ட ஒரு இடம்
அகஸ்தியருக்கு உண்டு.
அது முதல் சங்கம் நடந்த தென்மதுரை ஆகும்.
கடல் கொண்டு விட்ட தென் மதுரையில் 4,440 வருடங்கள் முதல் சங்கம் நடந்திருக்கிறது.
அதை முன்னின்று நடத்தியவர்கள் சிவனும், முருகனும், அகஸ்தியரும் ஆவர்.
அந்த சங்கத்துக்கு அகஸ்தியர் இலக்கண நூல் ஆக்கினார்.

நூல் ஆக்கிக் கொடுத்து,
தென் மதுரையில் முதற் சங்கத்தை நடத்திய அகஸ்தியர்,
எங்கு தங்கியிருக்ககூடும்?
தென் மதுரையில்தானே?
அந்தத தென் மதுரையைக் கடல் கொண்டு விட்டது என்பதே தமிழ் நூல்கள் தரும் செய்தி.

அதனால்
தென்கடலில்,
தொலைவில் ஒரு இடத்தைக் காட்டி,
அங்குதான் அகஸ்தியர் வாழ்ந்தார் என்று சுக்ரீவன் சொல்வது,
தென்குமரியும்,
தென் மதுரையும்,
அதை ஆண்ட முற்காலப்பாண்டியர்களும்,
முதல் சங்கமும்,
அதில் தமிழ் வளர்ந்ததும்,
அந்தத் தமிழை அகஸ்தியர் வளர்த்ததும்
உண்மையே என்று பறை சாற்றுகிறது. 


தென் மதுரை என்று சுக்ரீவன் கூறவில்லை.
அது அவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
மேலும், பாண்டியனது கவாடம் என்று முதலிலேயே சொல்லவே,
அவன் காலத்தில் அதாவது
ராமாயண காலத்தில் கபாடபுரம்தான் தலைநகரமாக இருந்திருக்கிறது.
முதல் சங்கம் நடந்த தென் மதுரை அழிந்து விட்டிருக்கிறது.
எனினும், அங்கு அக்ஸ்தியர் வாழ்ந்த மலைச் சிகரம் மட்டும் கடல் நீரூக்கு மேல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.
அதை சுக்ரீவன் சுட்டிக் காட்டி இருக்கிறான்.


அகஸ்தியர் வாழ்ந்த இடமாக இருக்கவே
அந்த மலையும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும்,
ஒரு காலத்தில் நிலமாக, மக்கள் வசிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்க வேண்டும்.
அந்த மலைப் பகுதிகளில் குமரி ஆறு ஆரம்பித்திருக்க வேண்டும்.
அந்தமான் தொடங்கிச் செல்லும் அம்மலைப் பகுதி ஆங்காங்கே கடலுக்கு மேல் இருந்திருக்க வேண்டும்.
இன்று அவை முழுவதுமே கடலுக்குள் முழுகி விட்டன.


மேலும் விவரங்களைப் பாருங்கள்.
அகஸ்திய மலையைத் தாண்டி போகவதி என்னும் நகரம் வருகிறது.
அது நாகர்கள் வசிக்கும் இடம்.
அதையும் தாண்டினால் வருவது ரிஷப மலை!
அது சிறந்த எருது (ரிஷபம்) உருவில் இருக்கிறது என்கிறான் சுக்ரீவன்.
அதை உயர்வாக வர்ணிக்கிறான்.


இங்கு நமக்கு ஆச்சரியம் தரும் செய்திகள் பல மறைந்துள்ளன.
மஹாபாரதத்தில் பாண்டிய நாட்டில் ரிஷப மலை என்னும் ஒரு மலை இருந்தது என்று சொல்லப்படுகிறது. (3-85)
இன்றைக்கு இருக்கும் தமிழ் நாட்டுப் பகுதியில் அந்த பெயரில் மலை இல்லை.
பாண்டியனைத் தொடர்புபடுத்தி அப்படி ஒரு மலை இல்லை.
ஆனால் ராமாயண, மஹாபாரத காலத்தில் சிறப்புடன் கோலோச்சி வந்த பாண்டியர்களை
ரிஷப மலையுடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.
அதுவே பாண்டியனது தொனமையைப் பறை சாற்றுகிறது.


தமிழ் வளர்த்த பாண்டியன், இதிஹாச காலத்திலேயே, பாரத மன்னர்களால் பேசப்பட்டவனாக இருந்திருக்கிறான்.
ராமனது தாத்தா கலந்து கொண்ட சுயம்வரத்தில் பாண்டிய அரசனும் கலந்து கொண்டான் (பகுதி -14)
அதில் அவனை விவரிக்கும் காளிதாசர்,
அகஸ்தியர் எந்நாளும் அவனுக்காகச் செய்த ஹோமங்களால்,
அவன் உடலில் ஹோம நீர் வாசனையே எப்பொழுதும் இருந்தது என்கிறார்.
அகஸ்தியர் என்றால் பாண்டியன் நினைவுக்கு வருகிறாற்போலவே
அகஸ்தியருக்கும், பாண்டியனுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.


அது போல ரிஷபத்துக்கும், பாண்டியர்களுக்கும் தொடர்பு உண்டு.
ரிஷபம் என்பது சிவனது வாகனம்.
சிவனே பண்டியர்களது தெய்வம்.
ரிஷப மலை என்று சொல்வதால்,
அந்த மலையில் நிழ்ழயமாக சிவனுக்குக் கோயில் இருந்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல,
பாண்டி அல்லது பாண்டியம் என்றால்
எருது அல்லது உழவு என்பதே பொருளாகும். (செந்தமிழ் அகராதி)
ரிஷப மலைப் பகுதியை ஆண்டதால்,
எருது என்னும் பொருளில்,
பாண்டியன் என்னும் பெயரை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.


சுக்ரீவன் வர்ணனையில், ரிஷப மலை எங்கே இருந்தது என்று ஆழ் கடல் வரைபடத்தைப் பார்க்கலாம்.
இந்தியாவின் இரண்டு பக்கங்களிலும், இரண்டு கால்கள் போல இரண்டு மலைதொடர்கள் செல்கின்றன.
கிழக்கில் செல்லும் மலைதொடரில் சுக்ரீவன் விவரிக்கும் இடங்கள் வருகின்றன.
அவன் விவரித்த இடங்கள் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


5000 கி-மீ நீளமுள்ள கிழக்குப் பகுதி மலையின் முடிவில் ரிஷப மலை இருகக்கூடும்.
அதுவே பாண்டியர் ஆண்ட தென்மதுரையாக இருந்தால்,
அது முதல், கவாடம் இருந்த பகுதிவரை 700 காத தூரம் இருக்க வேண்டும்.
இது சுமார் 7,600 கி.மீ தூரம் ஆகும்.
இது தற்போதைய இந்தியாவின் நீளத்தைப் போல இரண்டு மடங்காகும்.
படத்தில் அந்த தூரம் சிவப்புக் கோட்டால் காட்டப்பட்டுள்ளது.
இந்தத்தூரம் இரண்டு இந்திய நீளத்துக்குச் சமமாகத் தெரிகிறது.


அடியார்க்கு நல்லார் விளக்கும் ஏழேழ் நாடுகளில் (பகுதி 39)
கடல் சார்ந்த நாடுகள் அதிகம் என்பதை நினைவு கூற வேண்டும்.
தெங்க நாடும், குறும்பனை நாடும், கடலோர நாடுகள்.
தென்னையும் குறும்பனையும் கடலோரத்தில் விளைபவை.
குன்ற நாடு என்பது மலைப் பகுதியைச் சார்ந்தது.
குணகரை நாடு என்பது கிழக்குக் கரையைச் சார்ந்த நாடுகள்.
மேலே கூறப்பட்ட மலைப் பகுதிகளைச் சார்ந்து குணகரை நாடுகள் இருக்க வேண்டும்.
மதுரை நாடுகள் நிலப்பகுதிகளாகும்.
மேலே காணப்படும் வரைபடத்தில்
நிலப்பகுதிகளும் கடலுக்கு மேலே இருந்திருக்க வேண்டும்.
அங்கு உழவுத் தொழிலைப் பாண்டியன் நிறுவி இருப்பான்.
அதனாலும் பாண்டியன் என்னும் பெயர் அவனுக்கு வந்திருக்கலாம்.


தென்மதுரையும், கவாடமும், கடலோர நகரங்கள்.
பெரும்பாலும் மலை நாடுகளையும், கடலோரப்பகுதிகளையும் பாண்டியன் கொண்டிருந்திருக்கிறான்.
அவன் நாட்டில்
அகஸ்திய தீர்த்தமும்,
வருண தீர்த்தமும்,
குமரி தீர்த்தமும்
இருந்தன என்று மஹாபாரதம் கூறுகிறது (3-88)

இவை மூன்றும் இருந்த தன்மையை சங்கம் தெரிவிக்கும் செய்திகள் மூலம் அறியலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகச் செம்மொழி

முப்புரம் எரித்த வரலாறு

ஆண்டாளின் பக்திநிலை