சனி, 31 ஆகஸ்ட், 2013

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.சுடர்நிலை மாளிகைப் புலியூர்என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம். www.eegarai.net

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக