Friday, 25 January 2013

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முடங்கும் அபாயம்!அரிய சுவடிகள், மதிப்புமிக்க நூல்களைக் கொண்ட    தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் முடங்கும் அபாயம்!
ஆர்.தங்கராஜு 
உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் முழுநேர இயக்குநர் பணியிடம் கடந்த 17 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.
மேலும், நூலகத்தில் சில முக்கியப் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இதனால், இந்த நூலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடுமோ என்ற அச்சம் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நூலக நிர்வாகக் குழுவின் உறுப்பினர் -செயலரான மாவட்ட ஆட்சியர்தான் இப்போதும் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். இவரது பிற பணிகள் காரணமாக நூலக விஷயத்தில் அவரால் முழுக் கவனத்தைச் செலுத்த முடிவதில்லை.
சரஸ்வதி மகால் நூலகம் கடந்த 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 5 உறுப்பினர் நிர்வாகக் குழு நூலகத்தை நடத்தி வந்தது.
நூலகத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெறுவதை எளிமையாக்குவதற்காக நூலகத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அப்போதைய மத்திய கல்வி ஆலோசகர் கபிலவாத்ஸ்யாயன் பரிந்துரைத்தார். அதன்பேரில் 1983-ம் ஆண்டு சரஸ்வதி மகால் நூலகம் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நூலகத்தை நிர்வகிக்க மாநிலக் கல்வித் துறை அமைச்சரின் தலைமையின் கீழ் மத்திய கலாசாரத் துறைச் செயலர், மாநில பள்ளிக் கல்வித் துறைச் செயலர், கோல்கத்தா தேசிய நூலக இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய 14 பேர் கொண்ட ஆளுமைக் குழு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர் செயலர் நூலக இயக்குநராவார்.
1991-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த நூலகத்தின் முழு நேர இயக்குநர் பணியிடம் நிரப்பப்படவே இல்லை. கடந்த 2006-ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முழு நேர இயக்குநர் பதவிக்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
நூலகத்தில் சுவடிகளைப் படித்து எழுதி அச்சுக்கு கொடுக்க வேண்டிய சம்ஸ்கிருதம், தமிழ், மராட்டி, தெலுங்குப் பண்டிதர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே காலியாக உள்ளன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயராய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்டு முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில், இங்கு அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய மொழியியல் வல்லுநர்கள் யாரும் இல்லை.
இந்த நூலகத்தின் நிரந்தரப் பணியாளர்களின் பணியிடங்கள் 46 உள்ளன. அவற்றில் ஏறத்தாழ பாதிப் பேர் ஓய்வு பெற்று விட்டதால், பணியிடங்கள் காலியாகவே உள்ளன. குறிப்பாக தமிழ், தெலுங்கு, மராட்டி போன்ற மொழியியல் துறைகளில் யாருமே இல்லாமல் அத்துறைகள் முடங்கிப் போய் உள்ளன.
இதுபோல வெளியீட்டு மேலாளர், காப்பாளர், போன்ற முக்கியப் பணியிடங்களுக்கும் நூல் வெளியீட்டுப் பிரிவு நூல் கட்டுமானப் பிரிவு போன்ற துறைகளிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் நூலகப் பணிகள் அனைத்துமே முடங்கி போய் உள்ளன.
"அரிய சுவடிகள், மதிப்புமிக்க நூல்களைக் கொண்ட இந்த நூலகத்தைப் பாதுகாத்து, பொது மக்கள் பயன்பெறும் வகையில் மொழியியல் வல்லுநர்களை முழுநேர இயக்குநராக உடனே நியமிக்க வேண்டும்.
நூலகத்தை சென்னையில் இயங்கும் கீழ்த் திசை சுவடிகள் நிறுவனத்தின் கிளை நிறுவனமோ அல்லது மத்திய பண்பாட்டுத் துறையின் கீழோ எடுத்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது.
2007-08-ம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்றும், தற்போது நிர்வாக அலுவலராக உள்ள ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரியை நீக்கிவிட்டு விதிமுறைப்படி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பொறுப்பு வகிக்கும் ஆட்சியர் எம்.எஸ். சண்முகத்திடம் கேட்டபோது, " விரைவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டி, முழுநேர இயக்குநர் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
   
நூலகத்திலுள்ள சுவடிகளை மின்னணுப் பதிவு (டிஜிடலைசேஷன்) செய்வதற்காக மத்திய அரசு நிறுவனமான சி-டாக் உடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாமல் நின்று விட்டது.
தற்போது திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு, பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் எந்தத் தனியார் நிறுவனத்தின் தொடர்பும் இல்லாமல் நூலகப் பணியாளர்களே இந்தப் பணியை எளிதில் செய்து விடலாம் என்கின்றனர். தனியாரிடம் அந்தப் பொறுப்பை அளிப்பதில் இருக்கும் ஆபத்தையும் அவர்கள் விளக்கினார்கள்.
இவ்வாறு தமிழகம் கடந்து வெளி மாநில தனியார் நிறுவனம் மூலம் இப்பணி செய்யும் போது விலை மதிக்க முடியாத பல அறிய சுவடிகள் வெளிநாடுகளுக்கு சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நூலகம் உரிய காப்புரிமையை இழக்க நேரிடும்.
""எம்ஜிஆர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் ஆந்திர அரசிடம் கிருஷ்ணா நீர் கேட்டபோது, இந்த நூலகத்தில் உள்ள தெலுங்குச் சுவடிகளை கொடுங்கள் என்று ஆந்திர அரசு கேட்டது. அப்போது அவர் அதற்கு மறுத்துவிட்டார். தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமாக தெலுங்குச் சுவடிகளை கைப்பற்றும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் துணை போவதாகத் தெரிகிறது. இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று'' என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
 
தமிழகத்தில் நிலத்தடி நீர்  குடிக்கும் தரம் எழந்து வருகிறது ! நைட்ரேட் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு--ஏ.சுகுமாரன்

 தமிழகம், ஆந்திரம், குஜராத், கேரளம் உள்ளிட்ட 13 மாநிலங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. அந்த நீரில் ரசாயனப் பொருளான நைட்ரேட் உப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை மக்களவையில் நீர்வளத் துறை இணை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாட்டின் பல பகுதிகளில் காணப்படும் நிலத்தடி நீர் மாசு பிரச்னையை தீர்க்க மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீரில் காணப்படும் நைட்ரேட் உப்பு குறித்த பிரச்னையை தீர்க்க வெளிநாட்டு நிபுணர்களை அரசு நியமிக்கவில்லை.
ஒரு ஆளுக்கு சராசரியாக 1820 கன மீட்டர் தண்ணீர்: 2001ம் ஆண்டு கணக்குப் படி நாட்டில் ஒரு ஆளுக்கு சராசரியாக 1820 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. 1951ம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். 1951-ம் ஆண்டில் சராசரியாக ஒருவருக்கு கிடைத்த தண்ணீரின் அளவு 5177 கனமீட்டர்.
இந்த ஆய்வு மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்படவில்லை. நாட்டில் ஒரு ஆண்டில் சராசரியாக கிடைக்கும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 86 ஆயிரத்து 900 கோடி கன மீட்டர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பல்வேறு துறைகளில் நீர்வளப் பயன்பாட்டை அதிகரிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஏரிகள், குளங்கள், குட்டைகளை பாதுகாப்பது, மழைநீர் சேகரிப்பு போன்றவை இவற்றில் அடங்கும்.
குறைந்து வரும் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்த ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் 16 கிராமங்களை உள்ளடக்கி புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக ரூ.1.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயப்பிரகாஷ்.
 
தொழில்நுட்பத் திறனை தமிழில் கற்க வேண்டும்: -----தா.பாண்டியன்--ஏ.சுகுமாரன்
 :தொழில்நுட்பத் திறன்களை தமிழில் கற்க முயற்சிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு பொதுச்செயலர் தா.பாண்டியன் வலியுறுத்தினார். கோவை சன்மார்க்க சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது: நம் நாட்டில் தமிழை பேசவே கூச்சப்படுகிறோம். கம்ப்யூட்டர் துறையில் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் தமிழ் மொழி மங்கிவிட்டது.
ஆங்கிலம் பேசுவதில் இந்தியர்கள் சிறந்தவர்கள் என அந் நாட்டினரே நம்மை புகழ்ந்துள்ளனர். மற்ற மொழியை நன்கு பேசும் நாம், ஏன் தமிழை முறையாக கற்கவில்லை. தமிழகத்தில் தமிழ் அழிந்து வருகிறது என்றார்.
செய்திகள் தினமணி, தினத்தந்தி ,தினகரன் போன்ற செய்தி இதழ்களில் இருந்து
திரட்ட படுகின்றன .தலைப்புகள் நடை முதலியன  மட்டும் மாற்றப்பட்டுள்ளன
அவைகளுக்கு நன்றி )
 


--
A.Sugumaran Amirtham Intl PONDICHERRY INDIA MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com www.puduvaitamilsonline.com

No comments:

Post a Comment